கோலி சோடா – விமர்சனம்

Goli-Soda-Movie-Stills-8

சென்ற வாரம் நான் முதலில் பார்த்த படம் – ரம்மி. ஏண்டா போனேன் என்று யோசிக்க வைத்த படம். அந்த படம் உருவாக்கிய ரணத்தை ஆற்ற மற்றொரு நல்ல படம் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கோலி சோடா சென்றேன் நண்பன் உதயாவுடன்.

கோயம்பேடு மார்க்கெட். நான்கு யாருமற்ற சிறுவர்கள். அவர்களுக்கு அம்மா போல் ஒரு ஆச்சி. அந்த ஆச்சிக்கு ஒரு அழகிய மகள். இத்தகைய சூழ்நிலையோடு தொடங்கும் ஒரு வழக்கமான தமிழ் திரைப்படம் அந்த அழகிய பெண்ணை அந்த நான்கு இளைஞர்களில் ஒருவன் காதலித்து கைப்பிடிப்பதையே காட்டும். மாற்றி யோசித்த விஜய் மில்டனுக்கு வாழ்த்துக்கள்.

மூட்டை தூக்கி சம்பாதிக்கும் அந்த நான்கு விடலைகள் மனதில் எதிர்காலம் பற்றிய பயத்தை விதைக்கிறார் ஆச்சி. உதவியும் செய்கிறார். மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவராய் இருக்கும் நாயுடுவிடம் அழைத்துச் செல்கிறார். நாயுடுவும் கிடங்காய் போட்டு வைத்திருக்கும் தனது கடை ஒன்றை நான்கு பேருக்கு அளிக்கிறார்.

ஆச்சி மெஸ் ஆரம்பமாகிறது. ஆனால் கூடவே ஒரு சிக்கலும். நாயுடுவின் அடியாள் மயிலு ஒருநாள் அங்கு வருகிறான். வருபவன் அங்கே அமர்ந்து குடிக்கிறான். கூட்டம் சேர்க்கிறான். ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தி விடுகிறான். இது தெரிய வர, நான்கு பேருக்கும் மயிலுக்கும் கைகலப்பு ஏற்படுகிறது.

நான்கு பேரையும் அழைத்துக்கொண்டு ஆச்சி நாயுடுவை சந்திக்க செல்கிறார்.  அவர்களை சந்திக்கும் நாயுடு தான் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பதையும் அதற்கு மூலதனமே பயம் என்றும் தெரிவிக்கிறார். இந்த நான்கு பேரும் மயிலை அடித்ததால் அந்த பயம் போய்விடும் என்றும் அந்த சிறுவர்கள் மறுபடி சென்று கடையை திறக்க வேண்டும் என்றும் மயில் அங்கு வந்து அவர்களை அடிப்பான் என்று சொல்கிறார்.  சிறுவர்களில் யாரும் தப்பி ஓடாமல் இருக்க ஆச்சியை பணயமாக வீட்டில் வைத்து விட சொல்கிறார். நான்கு சிறுவர்களும் சென்று கடையை திறக்கிறார்கள். மயில் வருகிறான்.

அதன் பிறகு என்ன நடந்தது? மயில் என்ன செய்தான்? ஆச்சி எப்படி தப்பித்தார்? அந்த சிறுவர்கள் என்ன ஆனார்கள்? இதை அனைத்தையும் திரையில் காண்க. மேலே நான் சொன்னது முதல் பாதியின் பாதி மட்டுமே.

சிறப்பு:

நான்கு பேர் – பசங்க படத்தில் நடித்த அந்த நான்கு பேரும் வளர்ந்து விடலை பையன்கள் ஆகி விட்டார்கள். தேர்ந்த நடிப்பு. ஒருவரையும் குறை சொல்ல முடியாது.

goli-soda-tamil-movie-stills41384932869

ஆச்சி – அருமையான பாத்திர படைப்பு. மார்க்கட் ஆச்சிகள் என்றாலே பான்பராக் போட்டுக்கொண்டு ரவுடித்தனம் செய்யும் பெண்கள் ஆளும் தமிழ் சினிமாவில் முதல் முறையாய் கணவன் இல்லாது போனாலும் கண்ணியமாய் தொழில் செய்யும் தைரியமான பெண்ணாக இருக்கிறார் ஆச்சி. சுஜாதா சிவகுமாரின் திரைப்பயனத்தில் இது ஒரு மைல்கல்.

ATM – கண்ணாடி போட்டுக்கொண்டு அட்டு பீசு என்ற ரோலை ஏற்று நடிப்பது எத்தனை பேருக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் மிகவும் லாவகமாய் அந்த பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சீதா. பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

இமான் அண்ணாச்சி – பட்டாசு. பிரித்து மேய்கிறார். அதுவும் போலிஸ் ஸ்டேஷனில் நின்று கொண்டே வசனம் பேசும் இடத்தில் வசனமே சரியாய் கேட்கவில்லை. அவ்வளவு கைதட்டல்.

யூகிக்க முடியாத திரைக்கதை. இரண்டாம் பாதியில் சற்றே தோய்வடைந்தாலும் தடதடவென ஓடும் திரைக்கதையால் பார்வையாளர்களை கட்டி போடுகிறார். இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் சிறப்பாய் செயல்பட்டிருக்கிறார் விஜய் மில்டன். விடலை பையன்கள் கதை இந்நேரம் கஸ்தூரி ராஜா இல்லை செல்வராகவன் கையிலோ கிடைத்திருந்தால் இந்நேரம் நமக்கு மிகச்சிறந்த ஒரு செக்ஸ் படம் கிடைத்திருக்கும். அனைத்தையும் காட்ட வாய்ப்பிருந்தும் அந்த நான்கு பையன்களையும் மிகவும் கண்ணியமாய் காட்டியிருக்கிறார் விஜய் மில்டன்.  கேமரா, சண்டை காட்சிகள், பாடல்கள், இசை என தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் பணியை சிறப்பாய் செய்துள்ளார்கள்.

கேள்விகள்:

கருப்பாய் இருக்கும் பெண்ணை கறுப்பு பையன் தான் காதலிக்க வேண்டுமா சார்?

எங்கோ பிரிந்து செல்லும் நான்கு பேரும் தங்கள் சுயதேடலில் மீண்டு வருவதாய் காட்டியிருக்கலாம். அந்த பெண் அவர்கள் நான்கு பேரையும் தேதி செல்வதை தவிர்த்திருக்கலாம். தங்கள் அடையாளத்தை தொலைத்த வெறியில் நான்கு பேரும் மீண்டு வந்ததாய் காட்டியிருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.

இரண்டு மூன்று பாத்திரங்கள் அப்படியே தொடுப்பில் நின்று விடுகின்றன. அந்த பாத்திரங்களை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.

இவை எல்லாம் குறைகள் அல்ல. எனக்கு உண்டான கேள்விகள் தான்.

முடிவு:

யாருமே கெட்டவன் இல்லை. சூழல் தான் அவர்களை கெட்டவர்கள் ஆக்குகிறது என்று சொல்லும் சில காட்சிகள், சூழலையும் தாண்டி நாம் நல்லவர்களாய் வாழலாம் என்று சொல்லும் பல காட்சிகள் என வாழ்க்கையின் இரு பக்கங்களையும் அழகாய் சொல்கிறது. கண்டிப்பாய் ஒரு முறை பார்க்க வேண்டிய படம். மறுமுறை செல்ல ஆர்வமிருந்தால் பார்க்கலாம்.

One thought on “கோலி சோடா – விமர்சனம்

  1. தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஹிட்டடித்த படங்கள் அனைத்தும் எதிர்மறை எண்ணங்களோ, செயல்களோ கொண்ட படங்களே… இயக்குனர் பாண்டிராஜின் அடையாளம் நேர்மறை எண்ணங்களை பார்வையாளர்களின் ரசனையில் விதைப்பது… அவர் இயக்கம் படங்களில் மட்டுமல்ல, தயாரிப்பாளராய், விநியோகஸ்தராய், வசனகர்த்தாவாய் என ஏதாவது ஒருவகையில் அவர் இருக்கும் படங்களிலும்… அவரது வசனம் இந்த படத்தின் மிக முக்கியமான பலம்… படத்தின் ஆகச்சிறந்த கதாபாத்திரம் ATM… கோலிசோடா பார்வையாளர்களிடம் நேர்மறை எண்ணங்களை விதைக்கிறது… அலுப்பூட்டாமல் கமர்சியலாய்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s