காடு – இதழ் அறிமுகம்

(காடு இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வில் பேசிய பேச்சின் விரிவான வடிவம்)

ஐவன வெண்ணெலும், அறைக் கண் கரும்பும்,
கொய் பூந் தினையும், கொழும் புன வரகும்,
காயமும், மஞ்சளும், ஆய் கொடிக் கவலையும்,
வாழையும், கமுகும், தாழ் குலைத் தெங்கும்,
மாவும், பலாவும், சூழ் அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்:

சிலப்பதிகாரத்தில் வரும் காடுகாண்காதையில் மதுரைக்கு செல்லும் வழி குறித்த விவரிப்பில் மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே இருக்கும் சிறுமலை குறித்த வர்ணனை இது. இயற்கையை கலைக்கண் கொண்டு ரசித்தவன் மனிதன். இன்று கலைக்கண் கொன்று அழிப்பவனும் மனிதன் தான்.

நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே என்று சங்க காலத்திலேயே பாடல் இயற்றிய எம்மக்களுக்கு இயற்கையை பாதுகாப்பது முக்கியம் என்ற கூற்று நன்றாகவே தெரியும். மரக்கிளைகளின் நுனிகளை கிழிப்பதை கூட அறமற்ற செயலாக கருதிய மனிதர்கள் பேராசையும் சுற்றுச்சூழல் பற்றும் அற்றுப் போய் தான் வன அழிப்பில் ஈடுபடுகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த காடழிப்பு நடந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த இருபது வருடங்களில் மட்டும் சுமார் 12000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அரசின் அனுமதியோடு இந்தியாவில் அழிக்கப்பட்டுள்ளன.

காடு குறித்த தனிமனிதனின் பார்வை மிகவும் குறுகலானது என்றே தைரியமாய் சொல்லலாம். அவனுக்கு தெரிந்ததெல்லாம் மலையொன்று கண்டவுடன் அதனருகில் ஒரு கோவில் கட்டுவது, ஓடையோன்று தெரிந்தால் அதனருகில் குடித்து குப்பியை உடைப்பது. ஒரு பொதுவிடத்தில் நன்னீர் ஆதாரம் ஒன்றை கண்ணாடி குப்பிகளால், நெகிழி குப்பைகளால் நிரப்புவதென்பது இயற்கை மீதான ஒரு தீவிரவாத தாக்குதலே ஆகும்.

தற்காலத்தில் பாலைவனங்கள் என்று அறியப்படும் மத்திய தரைக்கடல் பகுதிகளும் வடக்கு சீன மாகாணமும் ஒரு காலத்தில் உலகத்தின் உணவு உற்பத்தி கூடங்களாய் இருந்தது. காடு அழிப்பும் முறையற்ற விவசாயமும் விலங்குகளை மேய விடுதலும் இணைந்து இந்த உணவு கலயங்களை பாலைவனங்கள் ஆக்கி விட்டன. மேலும் அதே தவறை செய்து கொண்டே போகிறோம். சுழற்சி முறையில் பயிரிட்டால் அந்த நிலத்தின் வளம் பாதுகாக்கப்படும் என்று அறிந்து கொண்டே சுழற்சி முறை விவசாயத்தை நாம் தவிர்த்துக் கொண்டே இருக்கிறோம். தவிர்ப்பது மட்டும் ஒரு கவலை இல்லை. பல்கிப் பெருகும் மக்கள் தொகையின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்ய மேலும் காடுகளை அழித்து விவசாய நிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் சேர்த்துக் கொண்டே போகிறோம்.

இன்று இந்த உணவு உற்பத்தி என்னும் மேலமையான தொன்மையான விவசாயம் வியாபாரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்காவின் பெருவனங்களை அழித்து பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் விவசாய வியாபாரம் செய்யப்படுகிறது. இதில் பெரும் பங்கு இந்தியர்களை சாரும். நில அபகரிப்பு என்று நாம் குரல் எழுப்பும் காலத்தில் நம் கண்ணுக்கு தெரியாமலேயே நம் நிலவளங்கள் சுரண்டப்படுவது நமக்கு பெரும் அதிர்ச்சியை பிற்காலத்தில் உண்டாக்கும்.

காடு என்பது என்ன? காட்டை ஏன் நாம் பராமரிக்க வேண்டும்? இத்தகைய கேள்விகளுக்கு பதில் பள்ளி நூல்களில் கிடைக்கும். அனுபவரீதியாக காட்டின் உயிர்வளியை நுகர்ந்த பேரனுபவம் கிடைத்தவர்கள் சிலர் மட்டுமே. அடர்ந்த காட்டின் மரம் சூழ் சோலைகளில் இருக்கும் உயிர்வளியின் தாக்கம் மலைச்சாலையோர பேருந்துப் பயணங்களில் கிட்டுவதில்லை. காட்டுக்குள் பிரயாணிப்பது என்பது பெரியதோர் ஆபத்தும் அல்ல. வாகனங்கள் பறக்கும் சாலைகளில் நடக்கும் விபத்துகளோடு ஒப்பிடுகையில் காட்டில் இருக்கும் வனவிலங்குகளின் தாக்குதலோ, திடீர் வெள்ளமோ, தொலைந்து போதலோ பெரிய அபாயங்கள் இல்லை.

காடு என்பது சுற்றுலாவிற்கு நாம் செல்லும் ஒரு தலமல்ல. அது வனவிலங்குகளும் மலைவாழ் மனிதர்களும் மரங்களும் பூச்சிகளும் இணைந்து வாழும் ஒரு பல்லுயிரியம். விரிந்து கிடக்கும் காட்டின் உள்ளே பயணம் செய்வதென்பது உங்கள் உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி புத்துயிர் ஊட்டுவது. மலைப்பயணங்களோடு மழை சேர்ந்து கொள்ளும் தருணங்களில் குதிங்காலில் ஈரம் பட மெல்ல நடை போடுவது ஆனந்தம். வெள்ளி உருகி ஓடுவது போன்ற நீரோடை தரும் நீர்ச்சுவையை எந்த செயற்கை தண்ணீர் போத்தல் தந்து விடும்? இன்றைக்கும் அருவி கண்டால் அடியில் சென்று நின்று விடுகிறானே மனிதன். அந்த அனுபவமே சாலச்சுகம். அதுவே நிதர்சனம்.

நானோர் காடோடி அல்ல. நகர வாசி. மேலும் தெளிவாய் சொல்லின் நரக வாசி. நகரத்திலும் நரகத்திலும் இருப்பது ஒரே எழுத்துக்கள் தான். அமைந்திருக்கும் இடம் மட்டுமே வித்தியாசம். நகரில் இருக்கும் எனக்கு காடு குறித்த ஆர்வம் எப்படி வந்திருக்கும் என்ற கேள்வி எழக்கூடும். கேள்விக்கு பதில் எனக்கே தெரியாது என்பது தான் உண்மை. இயற்கையை ரசிக்கும் எவருக்கும் காடு தான் உச்சம். காட்டை தாண்டி வேறொன்றும் இல்லை. காடின்றி எதுவுமே இல்லை. காட்டுக்குள் தான் மனிதன் மனிதனானான். மரத்தில் இருந்து இறங்கி நிமிர்ந்து நின்ற முதல் மனிதன் பார்த்த முதல் உலகம் காடுகளால் சூழப்பட்டதுதான். பேபீஸ் என்ற பிரஞ்சு டாக்குமெண்டரியில் வாழ்க்கையின் முதல் வருடத்தை வெவ்வேறு இடங்களில் பிறந்த குழந்தைகள் எப்படி கழிக்கின்றன என்பதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதில் ஒரு சீனக் குழந்தையால் எழுந்து நிற்க இயலாது. கடும் முயற்சிக்கு பின் ஒரு பசும்புல்வெளியில் அந்த குழந்தை எழுந்து நின்று சிரிப்பதோடு அந்த படம் முடியும். அது போன்றதொரு உச்சத்தை எனக்கு என் முதல் காட்டுப் பயணம் தந்தது. தந்து கொண்டேயிருக்கிறது.

காடு நமக்கு தந்தது போதும். நாம் காட்டுக்கு என்ன தரப்போகிறோம் என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது. காடு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காடு என்ற பல்லுயிரியம் எவ்வாறு நமக்கு இன்று வரை சோறூட்டுகிறது என்று விளங்க வைக்கவும் ஒரு கருவி நமக்கு வேண்டியிருக்கிறது. இன்று தினமும் காட்டிற்குள் பிரயாணித்து மக்களை அழைத்து சென்று பேசும் நிலையில் நாம் இல்லை. ஆனால் காடு நம்முள் பிரயாணித்துக் கொண்டே தான் இருக்கிறது புத்தக வடிவில்.

390_thumb_1390_thumb_1 (1)

சுற்றுச்சூழலை பேண, வனநலன் காக்க பெரும் விழிப்புணர்வு உருவாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இன்று உள்ளது. வன உரிமை சட்டம் என்று தொல்குடிகள் உரிமைக்காக தனி சட்டம் இயற்ற வேண்டிய தேவை எதனால் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதற்கான பதிலில் அந்த காரணங்களுக்கான தீர்வை சொல்ல வேண்டிய தருணம் இது. இந்த சூழ்நிலையில் சுற்றுச்சூழலியல் குறித்த பத்திரிக்கை ஒன்று தொடர்ந்து வருவது அவசியம் என்றே நான் கருதுகிறேன். காடு அதற்கான தேவையை தக்க வைத்துக் கொள்ளும் என்று நான் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ரப்பர் தோட்ட தொழிலாளிகளுக்காக போராடிய பிரேசிலின் சிக்கோ மென்டிஸ் போலவோ, பாமாயில் வணிகத்தில் இருந்து சுமாத்ர வனங்களை காக்க போராடிய இந்தோனேசியாவின் ரூடி புத்ராவை போலவோ, தனி ஒருவனாய் ஒரு காட்டையே உருவாக்கிய ஜாதவ் பாயேங் போலவோ இன்னொரு இயற்கை விரும்பி தானாக உருவாகப்போவதில்லை. ஆனால் காடு போன்ற இதழ்கள் மூலம் ஊட்டப்படும் தொடர் விழிப்புணர்வின் மூலம் நம்மால் இன்னொரு சிக்கோ மென்டிசையோ ரூடி புத்ராவையோ உருவாக்க முடியும்.

காடு இதழ் ஒரு புள்ளியை நோக்கி பயணிப்பது போல் எனக்கு தோன்றவில்லை. வன பாதுகாப்பு மட்டுமல்லாமல் பழங்குடி மக்கள், வன உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் என்று பல தளங்களில் ஒரு விசாலமான பார்வையோடு ஒரு தெளிவான நோக்கத்தோடு பயணிப்பது சிறப்பு. “காடுகாட்டை போலவே எந்த குறுக்கீடும் தடங்கலும் இன்றி சுதந்திரமாய் வளர, பல மொழிகளிலும் விரிவுற்று பயணிக்க, எனது வாழ்த்துகள். நன்றி.

காடு இதழ் பெற:

இங்கே சுட்டவும்

ஒரு வருடம் – ரூபாய் 300

இரண்டு வருடங்கள்  – ரூபாய் 600.

மேலும் தொடர்புக்கு:

Thadagam Publications

1st Floor, Venkateshwara Complex,
112 Thiruvalluvar Salai
Thiruvanmiyur, TN. IN 600 041

91.44 4310.0442 (main number)
91.8939967179 (mobile number)

One thought on “காடு – இதழ் அறிமுகம்

Leave a comment