இன்னீர் மன்றல் – நன்னீரை கொண்டாடும் பெருவிழா

IMG-20150810-WA0012IMG-20150810-WA0013

உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்

வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே!

உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்; அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள் இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர்; நெல் முதலாயவற்றை வித்தி மழையைப் பார்த்திருக்கும் புல்லிய நிலம் (புன்செய்) இடமகன்ற நிலத்தை உடைத்தாயினும் அது பொருந்தியாளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது; ஆதலால், கொல்லும் போரையுடைய செழிய! இதனைக் கடைப்பிடித்து விரைந்து நிலங் குழிந்தவிடத்தே நீர்நிலை மிகும் பரிசு தளைத்தோர், தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலாகிய மூன்றினையும் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத்தோராவார்; அந்நீரைத் தளையாதவர், இவ்வுலகத்துத் தம் பெயரைத் தளையாதோர்

– குடபுலவியனார் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனை பாடியது (புறநானூறு: பொதுவியல்; முதுமொழிக் காஞ்சி)

IMG-20150810-WA0007IMG-20150810-WA0011

நீர்நிலை அறிதல் அரிதாகி வரும் காலத்தே, நீர் மேலாண்மை குறித்த நமது அறிவை பெருக்கும் ஒரு முயற்சியாய் பசுமை நடையின் 50வது நடையை நீர் குறித்த ஒரு பெருவிழாவாய் கொண்டாட முடிவு செய்தோம். இதற்கு முன்பான 25வது நடையை விருட்சத் திருவிழாவாகவும் 40வது நடையை பாறைத் திருவிழாவாகவும் சிறப்பாக கொண்டாடிய பசுமை நடை, இந்த முறை சமூகத்தின் தேவையை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் உதவும் வண்ணம் நீரை உயர்த்திப் பிடித்துள்ளது.

1996ல் கடைசியாய் பெருகி ஓடிய நீரில் துண்டு போட்டு மீன் பிடித்த போது தான் வெள்ளம் வீட்டின் முன் சென்றதை நான் கண்டது. இருபதாண்டுகள் நிறைந்து போன இந்நேரத்தில் வீட்டில் ஆழ்துளை குழாயில் தண்ணீர் வற்றிப் போக காசு கொடுத்து தண்ணீர் வாங்கிய அவலத்தையும் நான் சந்திக்க நேர்ந்தது. மதுரை அண்ணா நகரில் குடியிருந்த காலத்தில் யானைக்குழாயை மூழ்கடித்து சென்ற மழை நீர் வண்டியூர் கண்மாய் உடைந்ததால் வந்தது என்பதறியாமல் மீன் பிடிக்க சென்ற கணத்தில், வீட்டின் உள்ளே நீர் வெள்ளமாய் வந்து அடித்துப் போனதில் வளர்த்து வந்த மீன்களை பறிகொடுத்தேன்.

இப்படி வாழ்ந்த நாம் இன்று அடுத்த வேளை தண்ணீருக்கு அல்லாட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? இந்த உலகத்தில் நீரைக்காக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நீர்நிலைகளை ஏன் பேண வேண்டும்? மழைநீர் சேகரிப்பு எதற்காக என்று பல கேள்விகள் நமக்கு இருக்கிறது.

IMG-20150810-WA0008IMG-20150810-WA0010

ஆகஸ்டு திங்கள் 16ஆம் நாள் மதுரை சமணமலை அடிவாரத்தில் கூடுகிறோம் இதை பற்றி பேச. நீர் காக்க நீங்கள் கலந்து கொள்ளலாம். நீர் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்க பசுமை நடையின் ஒரு சிறு முயற்சி இது. காலை உணவும் மதிய உணவும் பெருமரத்தடியில் பரிமாறப்படும். செவிக்குணவும் தீராது கிடைக்கும்..

குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9789730105.

Imitinef mercilet என்றோர் மருந்தேயில்லை!

கண்டிப்பாய் பகிர வேண்டிய தகவல். Please share.

அடையாறு கேன்சர் மருத்துவமனை "Imitinef Mercilet" என்ற கேன்சரை குணப்படுத்தும் மருந்தை இலவசமாய் தருகிறது என்றும் இதை பயன்படுத்தினால் அனைத்து வகை கேன்சரில் இருந்தும் விடுபடலாம் என்றும் ஒரு தகவல் இணையத்தில் புரையோடிக் கிடக்கிறது.

முதலில் ஒரு சிறு விளக்கம். அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரில் மருந்து ஒன்றுமே கிடையாது. அந்த மருந்தின் பெயர் "Imatinib Mesylate." இந்த மருந்து Chronic Myelogenous Leukemia (CML), சில வகையான வயிற்றுதசைகளில் வரும் கேன்சர்கள், மற்றும் சில குறிப்பிட்ட வகை கேன்சர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த மருந்தும் இந்த கேன்சர்களை குணப்படுத்துவதில்லை. கட்டுப்படுத்த மட்டுமே செய்கிறது. மருந்து போக அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் வேறு சில மருந்துகளோடு சேர்ந்து கேன்சரை கட்டுப்படுத்தலாம். ஆரம்பகட்ட நிலையிலேயே கேன்சர் இருப்பதை கண்டு கொண்டால் குணப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் இத்தகைய தப்பான தகவலை பயன்படுத்துவதால் என்னாகும்?

1. ஒரு கேன்சர் நோயாளிக்கு தவறான வழி காட்டப்படுகிறது. அதை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மை நிலை தெரிய வரும் போது அவர்களுக்கு மருத்துவர்கள் மேல், மருத்துவ சிகிச்சைகளின் மேல், இந்த செய்தியை பகிர்ந்து கொண்டவர்கள் மேல் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

2. மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவரும் நோயாளிக்கு நம்பிக்கையை தான் முதல் சிகிச்சையாய் வழங்குவார்கள். ஏனென்றால் மருந்துகள் 50% குணப்படுத்தும் என்றால் குணமாகும் என்ற நம்பிக்கை தான் மிச்சம் 50% குணப்படுத்தும். தவறான செய்தியால் உண்டாகும் அவநம்பிக்கை அந்த நோயாளி குணமடையும், மருத்துவத்துக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பிற்கு பெரிய தடங்கலை உண்டாக்குகிறது.

3. ஆரம்பகட்ட கேன்சரில் இருக்கும் ஒருவர் "அதுதான் மருந்து இருக்கிறதே" என்று ஏற்கனவே எடுத்துக் கொண்டு இருக்கும் மருந்தை, சிகிச்சையை மறுத்தால் என்னவாகும்? அவரது உயிர் போனால் நீங்கள் மருத்துவரை பழிசொல்வீர்களா அல்லது பகிர்ந்தவரை பழி சொல்வீர்களா?

4. அந்த மருத்துவமனையின் நிலையை யோசித்து பாருங்கள். எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் விளக்கிச் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாய் 20 அழைப்புகள் வருகின்றனவாம். இதற்கு பதில் சொல்வதா அந்த மருத்துவமனையின் வேலை.

5. அடையாறு கேன்சர் மருத்துவமனை ஏழை நோயாளிகளுக்கு இந்த மருந்தை இலவசமாகவே வழங்குகிறது. பிறர் மாதம் 8000 ரூபாய் செலுத்தி இந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த சிகிச்சையை அடையாறு மருத்துவமனை மட்டுமின்றி வேறு பல கேன்சர் சிகிச்சை மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

6. இது மட்டுமல்ல.. ஜான்சன் பேபி சோப் உபயோகித்தால் சரும நோய் வரும் என்று தாமரை மலரின் நடுப்பகுதியை ஒரு மனித உடலின் மேல் ஒட்டிய படத்தோடு கூடிய செய்தி, பொட்டாசியம் பெர்மாங்கநேட் உபயோகித்தால் பற்கள் வெண்மையாகும் என்ற செய்தி, வலது காதில் போன் பேசினால் பாதிப்புகள் என்ற செய்தி, லிப்ஸ்டிக்கில் இருக்கும் பொருளினால் கேன்சர் வரும் என்ற செய்தி போன்றவையும் போலியானவை தான்.

தயவு செய்து இதை பகிருங்கள். இல்லை இதுபோன்று தகவல்கள் எதுவும் வந்தால் கொஞ்சம் இணையத்தில் தேடிப்பார்த்து அது உண்மையா என்று கண்டறிந்து பகிருங்கள்.

அடையாறு கேன்சர் மருத்துவமனையின் விளக்கம் இந்த சுட்டியில் – http://cancerinstitutewia.in/ACI/news&events.php

Capture

பாம்பின் பிழையன்று தீண்டிப் போதல்!

சஞ்சிகை (sanjigai.wordpress.com) காட்டுயிர் சிறப்பிதழுக்காக எழுதிய கட்டுரை.

அவன் மடிமேல் வலந்தது பாம்பு;

பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;

பாம்பு பூண்; பாம்பு தலைமேலது;

பரிபாடல் 4 – திருமால்.

8007030158_2c1c6f468d_z

சங்க இலக்கியங்களில் பெரிதும் பாடப்பட்டுள்ளது பாம்பு. சோதிடக்கலையிலும் ராகு அல்லது கேதுவை பாம்பென்றே கருதி வந்துள்ளனர். தமிழர் மட்டுமன்றி உலக மக்கள் வாழ்வில் பெரும்பங்கு வகிப்பவை பாம்புகள். ஆயினும் பாம்புகள் குறித்த தவறான கருத்துக்கள், மூட நம்பிக்கைகள் நமது சமூகத்தின் வேர்களினூடே விரவிக் கிடக்கின்றன. இந்து வழிபாட்டு முறைகளில் பாம்புக்கு பெரியதோர் இடமுண்டு. நாக கன்னி, அரவான், உலுப்பி, சங்கன், புற்றீசர் என்று பலவகைகளில் நம் மக்கள் பாம்புகளை வழிபட்டு வந்துள்ளனர். இந்து மதம் மட்டுமன்றி பௌத்த மதத்திலும் சிந்து சமவெளி நாகரிகத்திலும் கூட நாக வழிபாடு காணப் படுகிறது.

காட்டுயிர்களில் பிரதானமான ஓரிடம் பாம்புகளுக்கு உண்டு. இருவகைப்பட்ட (நச்சு மற்றும் நச்சற்ற) பாம்புகளும் தற்போதைய சூழலியல் அமைப்பில் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இடைநிலை கொன்றுண்ணிகளாய் பாம்புகள் நமக்கு ஆற்றி வரும் பங்கை விளக்குதல் எளிதன்று.

பாம்பும் அவை சார்ந்த மூடநம்பிக்கைகளும்:

கல்வியறிவு நிறைந்த இந்த சமூகத்தில் பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

கொம்பேறி மூக்கன் – இந்த பாம்பு ஒருவரை தீண்டிவிட்டால் மரத்தின் உச்சியில் ஏறி நின்று அவர் எரிக்கப்பாடுகிறாரா என்று பார்க்குமாம். உண்மை என்னவென்றால், கொம்பேறி மூக்கன் நச்சற்ற பாம்பு. Bronzeback Treesnake என்று ஆங்கிலத்தில் அறியப்படுவது. இதை நான் கையில் வைத்து ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.

பாம்புக்கொலை: ஒரு பாம்பை கொன்றுவிட்டால் அந்த இணை கொன்றவரை தேடிச் சென்று பழிதீர்க்கும். உண்மை என்னவென்றால் ஒரு பாம்பு கொள்ளப்படும் போது அது மஸ்க் என்ற ஒரு திரவத்தை வெளியேற்றும். இனச்சேர்க்கைக்கு உதவும் அந்த மஸ்க்கால் ஈர்க்கப்பட்டு பிற பாம்புகள் அங்கு வரும்.

இசைக்கேற்ப நடனமாடும்: காற்றில் வரும் ஒலி அலைகளை முழுவதும் கிரகிக்கும் தன்மை பாம்புகளுக்கு கிடையாது. அவை நிலவழி அதிர்வுகளின் மூலமே தன்னை சுற்றி நடப்பவற்றை அறிந்து கொள்கின்றன. வாசனைகளின் மூலம் அறிந்து கொள்ளும் திறனும் பாம்புகளுக்கு வாய்த்திருக்கிறது. நாக்கை நீட்டி நீட்டி பாம்பு பார்ப்பது தீண்டுவதற்கு அன்று. நாக்கை உள்ளிழுத்த பின் மேலண்ணத்தில் இருக்கும் ஜேக்கப்சன் உறுப்பை நாக்கால் தொடும். இந்த ஜேக்கப்சன் உறுப்பே வாசனைகளை பிரித்தறிய உதவுகிறது. பாம்புகளுக்கு செவிப்பறைகள் கிடையாது. மகுடிக்கு பாம்புகள் ஆடுவதுண்டு. ஆனால் இசைக்கு அல்ல. அந்த மகுடிக்கு பதில் நீங்கள் ஒரு வெள்ளைத்துணியை ஆட்டினால் கூட அதற்கேற்ப பாம்பு அசையும்.

பாம்பு நடனம்: நாகமும் சாரையும் இணையும் என்று நம்புகிறார்கள். உண்மையில் இரு பாம்புகள் பின்னிப் பிணைவது ஒரு இனப்பெருக்க நிகழ்வே. உற்று நோக்கினால் இரண்டுமே சாரைப்பாம்புகள் என்று அறியலாம்.

பாம்புக்கடி:

பாம்புகள் தேவையின்றி யாரையும் கடிப்பதில்லை. தனது உயிருக்கு ஒரு ஆபத்து என்று அது கருதினால் ஒழிய அது உங்களை தீண்ட முயற்சிக்காது. அது வெளியேற ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்து விட்டால், அது தான் போக்கில் போய் விடும். மேலும் பல நேரங்களில் பாம்புகள் கடித்தாலும் நஞ்சை உள்செலுத்துவதில்லை. நஞ்சை செலுத்துதல் ஒரு இச்சைச்செயலாகும். அது அனிச்சை செயல் அல்ல. இதை ஆங்கிலத்தில் wet bite/dry bite என்பார்கள். எனினும் நஞ்சு உள்ளே சென்றிருக்கிறதா என்பதை பாம்பு மட்டுமே அறியும் என்பதால் அனைத்து பாம்புக்கடிகளும் wet bite ஆகவே கருதப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

பல் பிடுங்கிய பாம்புகளால் ஆபத்தில்லை என்பார்கள். முழுவதும் தவறான கருத்து இது. பாம்புகள் மனிதனை போல் அல்ல. அவற்றிக்கு வாழ்நாள் முழுவதும் பற்கள் விழுந்து முளைக்கும். இதை polyphodont என்பார்கள். மனிதன் Diphodont. ஆகையால் பாம்பின் பல் பிடுங்கப்பட்டு இருந்தாலும் அதன் பல் மறுபடி முளைத்து விடும். இதை அறியாமல் பல பாம்பாட்டிகள் கடிபட்டு மரணமடைந்திருக்கிரார்கள்.

8007031081_9c9117e661_z

சிகிச்சை:

பாம்பின் கடிக்கு சிகிச்சை மிகவும் அவசியம். கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினால் கடி பட்டவரை காப்பாற்றலாம்.

· அமைதி காக்க வேண்டும். கடி பட்டவரை பதற்றம் அடைய செய்ய கூடாது.

· சாதாரண மாத்திரை ஒன்று கொடுக்கலாம். அது கடிபட்டவருக்கு ஆறுதல் அளிக்கவே.

· கடிபட்ட இடத்தில் கட்டு எதுவும் போடக்கூடாது. மேலும் கத்தியால் கீறி விட்டு ரத்தத்தை உறிவதும் தவறான அணுகுமுறையாகும்.

· உடனே கடிபட்டவரை நச்சுமுறி மருந்து உள்ள ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வேறு எந்த சிகிச்சையும் அளிக்கத்தேவையில்லை.

நாட்டு மருந்துகள், மந்திரம் ஓதுதல், லெக்சின் (Lexin), திரியாக் (Thiriyaq) போன்ற பதிவு பெற்ற மருந்துகள், போன்ற வழிமுறைகளை தவிர்க்க வேண்டும்.

இருளர் சமுதாயம் பாம்புகளின் மூலமே வாழ்வாதாரத்தை பெறுவதால் காலங்காலமாய் செய்த வேலையின் மூலம் சில நச்சுமுறி மூலிகைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மூலிகைகளில் இருக்கும் மூலப்பொருள் பற்றி எந்தவித ஆராய்ச்சியும் இதுவரை நடந்ததில்லை.

முக்கியத்துவம்:

எலிகள் பெரும் கொறிவிலங்குகள். நம் நாட்டில் விளையும் தானியங்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை எலிகளால் பாழடிக்கப்படுகின்றன. இவற்றால் உண்டாகும் பொருளாதார சேதம் அதிகம். நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஆண்டிற்கு 5 லட்சங்கள் வரை எலிகளால் சேதாரம் ஏற்படுவதாக ரோமுலஸ் விட்டேகர் (இந்திய பாம்புகள்) குறிப்பிடுகிறார். வளைகளுள் பதுங்கும் எலிகளை பிடித்து உண்ண பாம்புகள் தேவை. ஆனால் தேயிலை தோட்டங்களுக்காக காடுகளை அழித்ததில் பாம்புகளின் வாழ் சூழல் கடுமையாய் பாதிக்கப்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் எலிகள் பெருகி தானிய உற்பத்தி கடுமையாய் பாதிக்கக்படக்கூடும். உணவு உற்பத்தி பெருக வேண்டுமாயின் நாம் பாம்புகள் வாழ எதுவாய் உள்ள இடங்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. இயற்கை வேளாண்மை முறைக்கு பாம்புகள் மிகவும் அவசியமானவை என்பதை இதன் மூலம் அறியலாம்.

பாம்புகளின் நஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மருத்துவத்துறையில் பல்வேறு சிகிச்சைகளுக்கு உதவுகின்றன. அதில் முக்கியமானவை நச்சுமுறி மருந்து தயாரிப்பு மற்றும் இருதய நோய்க்கான மருந்துகள். பாம்புக்கடிக்கான நச்சுமுறி மருந்து பாம்பும் நஞ்சில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. மேலும், மாரடைப்பு வந்தவர்கள் உட்கொள்ளும் எப்டிபிபடைட் (Eptifibatide) மற்றும் டிரோபிபான் (Tirofiban) போன்றவையும் குருதி உறையாமல் தடுக்கும் ரஸ்ஸல்ஸ் வைப்பர் வேனோம் போன்றவையும் மருத்துவத்துறைக்கு அத்தியாவசியமாய் இருக்கின்றன. சமீபகாலமாய், சில பாம்புகளின் நஞ்சில் இருந்து புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உடைய புரதங்களை எடுக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். மரத்துப் போகும் தன்மை கொண்ட நச்சுக்களில் இருந்து நரம்பியல் வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பாம்பு நம் வீட்டிற்குள் வருவதில்லை. நாம் தான் அதன் இருப்பிடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருகிறோம். அடுத்த முறை பாம்பு ஒன்று வீட்டினுள் நுழைந்தால் அதை அடிக்க கட்டையை தேடாமல் உங்கள் அருகில் இருக்கும் தீயணைப்புத் துறைக்கு அல்லது வனத்துறை அலுவலகத்துக்கோ தொடர்பு கொண்டு தகவல் சொல்லுங்கள். அவர்கள் அந்த பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் விட்டு விடுவார்கள்.

மேலும் படிக்க:

இந்திய பாம்புகள் – ரோமுலஸ் விட்டேகர் – நேஷனல் புக் ட்ரஸ்ட்

Snakes of India (Field guide) – Romulas Whittaker – Draco books

The snakes of India – CKG Gharpurvey – Asiatic publishing house

My husband and other animals – Janaki Lenin – Westland books

ஆன்ட்ராய்டில் தமிழ் EPUB படிக்க…

வணக்கம். நான் திசம்பர் திங்கள் கூகிளின் நெக்சஸ் 7 வாங்கினேன். வாங்கிய பின் EPUB என்ற மாய உலகிற்குள் பிரவேசித்தேன். EPUB என்பது International Digital Publishing Forum (IDPF) என்ற குழுமம் உருவாக்கிய மின்புத்தக வடிவமாகும்.

சரி. PDF உள்ளதே!! இது எதற்கு புதிதாக என்னும் கேள்வி எழலாம். விக்கிபீடியா இப்படி சொல்கிறது – Because the format is designed to reproduce page images, the text traditionally could not be re-flowed to fit the screen width or size. As a result, PDF files designed for printing on standard paper sizes were less easily viewed on screens with limited size or resolution, such as those found on mobile phones and e-book readers. Adobe has addressed this drawback by adding a reflow facility to its Acrobat Reader software.

என்னை பொறுத்தவரையில் PDF வடிவென்பது அதிக அளவை கொண்டது. நல்ல தரம் உடையது. ஆயினும் சிறு தொடுதிரை கணினியில் வாசிக்க மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது தான் EPUB என்னும் வகை என் கண்ணில் பட்டது.

சில ஆங்கில புத்தகங்களை பதிவிறக்கி வாசித்து பார்த்தேன். அந்த அனுபவம் அலாதியானது. நமக்கு தேவையான அளவு எழுத்துக்களை பெரிதாக்கவோ சிறிதாக்கவோ முடிந்தது. அளவும் குறைவானதே. நான்கு PDF சேமிக்கும் இடத்தில் நாற்பது EPUB சேமித்து விடலாம். பிறகு தமிழ் புத்தகங்கள் ஏதேனும் EPUB வடிவில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். Project Madurai வலைத்தளத்தில் சில புத்தகங்கள் கிடைத்தன. அவற்றை என் நெக்சஸ் 7ல் போட்டு படிக்க முயற்சித்தேன். அனைத்து எழுத்துக்களும் கட்டம் கட்டமாய் தெரிந்தன.

சிறிது நேர தேடலுக்கு பின் Moon+ reader என்ற மென்பொருள் மூலம் அவற்றை படிக்க முடியும் என்று அதையும் முயற்சித்தேன். Moon+ Reader மூலம் தமிழ் புத்தகங்களை திறந்து தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடிந்தது. ஆனாலும் திருப்திகரமாய் இல்லை. மேலும் தேடிய பின், Aldiko Reader மூலம் புத்தகங்களுக்கு தனிப்பயன் எழுத்துரு வகைகளை தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும் என்று தெரிந்தது.  (இங்கே சுட்டுக)

ஆயினும் அந்த எழுத்துக்கள் சரியானபடி தெரியவில்லை. பிறகு தமிழ் மின்னூல் ஒன்றை MS Wordல் தட்டச்சு செய்து  Unicode எழுத்துரு கொண்டு அதை HTMLஆக மாற்றினேன். இந்த HTMLஐ மறுபடி Calibre என்ற மின்பொருள் கொண்டு EPUB வடிவுக்கு மாற்றினேன். எந்த எழுத்துரு கொண்டு MS WORDல் தட்டச்சு செய்தேனோ, அதே எழுத்துருவை Aldiko எழுத்துரு கோப்புக்குள் சேமித்தேன்.

இப்போது படிக்க முடிகிறது தமிழை தமிழாய்.

இன்னொரு சிக்கல். அனைத்து தமிழ் நூல்களும் PDF வடிவத்தில் தான் இணையத்தில் கிடைக்கின்றன. TRUE TYPE PDF என்றால் எழுத்துருக்களை MS WORDல் பதிவு செய்ய முடியும். ஆனால் வருடிய படங்களுடைய PDF (Scanned pages) இருந்தால் அவற்றை அப்படியே EPUBஆக மாற்ற இயலவில்லை. எழுத்துருவை தரவிறக்க OCR என்ற MS WORD Add-on இருந்தாலும் கூட அது சரியாக பணி செய்யவில்லை. தற்போதுள்ள நிலையில் அனைத்து நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களையும் EPUB முறைக்கு மாற்ற கடும் உழைப்பு தேவைப்படுகிறது. உதவுவோர் உதவலாம்.