உழந்தும் உழவே தலை

“அலகிலா மறைவிளங்கும் அந்தணர் ஆகுதி விளங்கும்

பலகலையான் தொகை விளங்கும் பாவலர்தம் பா விளங்கும்

மலர்குலாந்திரு விளங்கும், மழை விளங்கும், மனுவிளங்கும்

உலகெலாம் ஒளி விளங்கும் உழவருழும் உழவாலே”

10460462_901125583265883_8947365232916167700_n

உழவர்களை நாம் கொண்டாட மறந்து பல ஆண்டுகள் ஆகின்றன. உழவுத் தொழில் நசிந்து உணவு உற்பத்தி குறையும் நிலை பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உழவு பற்றிய அறிவை நம் மக்களுக்கு தெரியவைக்கவும் குழந்தைகளுக்கு நம் கலாசாரம் பற்றிய ஒரு அறிமுகத்தை அளிக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. 

ஆனால் இத்தகைய முயற்சிகள் எப்போதும் நடப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போதில் அதில் எப்படியேனும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம தலைதூக்கும். இந்த முறை ஒரு நிகழ்வை நடத்தும் வாய்ப்பே பசுமை நடை மூலம் கிடைத்தது. பசுமை நடை நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்ட ஒரு பெருவிழாவாய் இது அமைந்தது.

10897800_901128976598877_5309248992013963706_n

பசுமை நடையின் பொங்கல் விழா வடபழஞ்சி அருகேயுள்ள வெள்ளபாறைப்பட்டியில் இனிதே நடந்தது நேற்று. பின்தங்கிய ஒரு கிராமத்தில் நடந்த விழா பால்ய கால பொங்கல் கொண்டாடல்களை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. கிராமத்திற்கு சென்று கரும்பு கடித்து சக்கை மென்று துப்பி கிராமத்தெருக்கள் முழுவதும் கரும்புச்சக்கைகளால் நிரப்பிய பொழுதுகள் கண் முன் வந்து போனது. கிணற்றுத்தண்ணீர் குளியலும் அதிகாலை பொங்கலும் அளித்த ஆனந்தத்தை கொஞ்சமேனும் மீட்டுத் தந்தது இந்த திருவிழா.

நிகழ்விற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே நண்பர்கள் அதற்கான வேளைகளில் ஈடுபட தொடங்கியிருந்தார்கள். கிராம மக்களோடு இணைந்து என்ன வேலைகளை யார் செய்வது போன்ற ஏற்பாடுகள் செவ்வனே நடைபெற்று வந்தன. நேரமின்மையால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் முகநூல் வழி மேலதிக தகவல்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். நிகழ்விற்கு முந்தைய நாள் அனைவருக்குமான இரவு உணவை வாங்கிக் கொண்டு கிராமத்திற்கு போனேன்.

பெரும்பாலான ஏற்பாடுகள் முடிந்து போயிருந்தன. அனைவரும் பசியோடு இருந்ததால் உணவு உண்ண எத்தனித்தோம். ஒரு பெரிய மரத்தின் அடியில்  கூதற்காற்றின் வருடலில் இட்லிகளும் பரோட்டாகளும் உள்ளே சென்றது. பின்னர், வரும் நண்பர்களுக்கு வழி காட்ட தட்டிகள் கட்டவும் சாலைகளில் சுண்ணாம்புக் கரைசலால் குறியீடுகள் இடவும் வேண்டியிருந்தது. சரவணன், நான், ஹியூபர்ட், சித்திரவீதிக்காரன், செந்தில், கந்தவேல், மற்றும் மதுமலரன் அந்த வேலையை செய்து முடித்தோம்.

மறுபடி ஊருக்கு வந்து ஊருக்கு மத்தியில் இருக்கும் பாறைமேல் படுத்துக் கதைத்தோம். ஒரு ஊழிக்காலத்து வெள்ளத்தில் ஊர் மக்கள் அனைவரும் மூழ்கி மரணிக்க இருந்த வேளையில் இந்த பாறை மேல் ஏறி நின்றதாகவும் அந்த பாறை நீரில் மிதந்து அவர்களை காத்ததாகவும் ஊர் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதனால் இன்றளவும் அந்த பாறையை அவர்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். செருப்பணிந்து பாறை மேல் ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இரவு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். மெல்ல அனைவரையும் உறக்கம் தழுவ சிலர் வீடு நோக்கி புறப்பட்டார்கள். நான் எனது காரிலேயே உறங்கினேன்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். மனைவியும் மகனும் தயாராக பின் காரில் வெள்ளபாறைப்பட்டி நோக்கி புறப்பட்டோம். நாங்கள் சென்ற வேளையில் நன்றாக விடிந்து விட்டிருந்தது. பொங்கல் வைக்கும் ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. ஆட்டுக்குட்டிகளை பார்த்து குதியாளம் போட்டபடி காரிலிருந்து இறங்கி ஓடினான் ஆதன்.

IMG_9580-2

சற்று நேரத்தில் விழா தொடங்குவதாக முத்துகிருஷ்ணன் அறிவித்தார். பசுமை நடை உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஊர் முழுக்க சென்று கதவுகளை தட்டி ஊர் மக்களை விழாவில் கலந்து கொள்ளும்படி அழைத்தார்கள். மற்றொரு புறம் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியிருந்தன. கொரியாவில் இருந்து மதுரையின் ஒரு கல்லூரியில் படிக்க வந்திருக்கும் பெண்கள் சிலர் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல், பாட்டில் நிரப்புதல், இளவட்டக் கல் தூக்குதல் போன்ற விளையாட்டுகளில் மக்கள் பெரும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள்.

IMG_9826

10917376_901126069932501_8468682185633501560_n

10423279_901127949932313_3122283141044457700_n

10305042_901126563265785_7474851606855890293_n

விளையாட்டுக்கள் முடிந்த சற்று நேரத்தில் குலவை சத்தத்தோடு பொங்கல் பொங்கியது. காலை உணவு ஆரம்பமானது. ஊர் மக்கள் எல்லோரும் வரிசையில் நின்று உணவு வாங்க, பசுமை நடையின் ஆர்வலர்கள் பாசத்தோடு பரிமாற சுவையான சர்க்கரை பொங்கலும் சூடான வெண்பொங்கலும் பரிமாறப்பட்டது. ருசித்து சாப்பிட்ட மக்கள் அனைவரும் பாறை மேல் ஏறி அமர போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா ஆரம்பித்தது.

IMG_9600

IMG_9816

10151987_901130189932089_7268186705003793807_n

10923495_901130509932057_5758240078971602267_n

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அய்யா சாந்தலிங்கம் ஊர்த்தலைவரும் பரிசுகளை வழங்கினார்கள். சாந்தலிங்கம் அய்யாவின் பேச்சில் உழவுத்தொழிலின் தொன்மை குறித்த குறிப்புகள் அதிகம் இருந்தன. மேலும் அத்தகைய தொன்மை மிகுந்த தொழில் நசிந்து வருவதை குறித்த வருத்தமும் இழையோடி இருந்தது. பின்னர் நம் பசுமை நடை குழுவினருக்கு இந்த விழா நடக்க பெரிதும் உறுதுணையாய் இருந்த ராமசாமி அண்ணனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

IMG_9793

இந்த நிகழ்வின் பின்பு உறியடி திருவிழா ஆரம்பமானது. கட்டையை எடுத்துக் கொண்டு முதலில் கிளம்பிய ஹுயுபர்ட் அண்ணன் உறிக்கு நேரெதிர் திசையில் நடக்க விழா களை கட்டியது. ஏதோ ஞாபகத்தில் சட்டென்று உறி இருக்கும் திசைக்கு திரும்பி மிக அருகே சென்று விட்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் திசை மாறிப் போனார். பிறகு பசுமை நடை உறுப்பினர்கள் பலரும் முயற்சித்து வெற்றியடையாமல் திரும்பி வந்தார்கள். முடிவாய் வெள்ளபாறப்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உறியை அடிக்க விழா இனிதே நிறைவடைந்தது. மக்கள் அனைவரும் வீடடைய பசுமை நடை நண்பர்கள் அனைவரும் இணைந்து மதிய உணவு உண்டு விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

10553483_901132373265204_2227258840335530460_n

மதுரையில் இருந்து வெறுமனே 8 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமம் இப்படி பின்தங்கிய நிலையில் இருப்பது அதிர்ச்சியளித்தது. கிராமத்தை சுற்றி ஒரு பெருஞ்சுவர் ஒன்றும் காணப்பட்டது. அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மறந்து போனது. ஆனால் நண்பர் பாடுவாசி ரகுநாத்தின் பதிவில் அது குறித்த நீண்ட விளக்கம் இருக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் விளக்கம் அது (சுட்டி கீழே).

இரண்டு வயதில் நான் கொண்டாடிய கிராமத்து பொங்கல் என் மகனுக்கு வாய்க்காமலே போய் விடுமோ என்ற கவலையை போக்கி விட்டது இத்திருவிழா. அதிகாலை எழுவதே ஒரு சிரமம் என்று இருக்கும் ஒரு காலகட்டத்தில் நேற்று மட்டும் எப்படி அவன் விடிகாலை துயில் களைந்தான் என்று இப்போதும் ஆச்சர்யமாய் இருக்கிறது. ஊருக்கு சென்றதும் அங்கு கண்ட வெள்ளாட்டு குட்டிகளோடு விளையாடி கோழி பிடித்துக் களைத்தான். சுற்றி நின்ற ஒத்த உணர்வுடைய நண்பர்களோடு பேசித் திளைத்தான். தமிழர் திருவிழாவில் தமிழனாய் முளைத்தான். இரண்டு வயதில் அவனுக்கு கிட்டிய இப்படி ஓர் அனுபவம் நகரத்தின் கட்டிடக்காடுகளுக்குள் டிவி பார்த்து கொண்டாடும் பிள்ளைகளுக்கு கிட்டுவதில்லை என்பது நிச்சயம்.

IMG_9784

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பணம் கொடுப்பதோ அவர்கள் வசதியாய் வாழ வழி செய்து கொடுப்பதோ பெரிய விடயமில்லை. ஆனால் வாழ்வின் நுண்அற்புதங்களை, கிராமத்து வாழ்வின் அழகியலை, அவ்வூர் பிள்ளைகளின் விளையாட்டை, பலன் எதிர்பாரா நட்பை, அன்பை உங்கள் பிள்ளைகளுக்கு அனுபவமாய் கிடைக்க வழி செய்வது கண்டிப்பாய் பெரிய விஷயம் தான்.

இரண்டு வயதில் அவனுக்கு என்ன புரிந்திருக்கும் என்று யோசிக்கலாம். ஆழ்ந்து சிந்தித்தால், இரண்டு வயதில் அவனுக்கு என்ன புரிந்திருக்க வேண்டுமோ அது புரிந்திருக்கும்.

மேலும் இந்த விழா குறித்த பதிவுகள்:

பாடுவாசி ரகுநாத் – தை பிறக்கட்டும்; வெள்ளப்பாறைபட்டிக்கு வழி பிறக்கட்டும்.

வஹாப் ஷாஜஹான் – பொங்கல் விழா

படங்கள் உதவி – அருண் பாஸ் (JV fashion studios) மற்றும் ஹுபர்ட் அண்ணன் கேமிரா!

3 thoughts on “உழந்தும் உழவே தலை

  1. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பணம் கொடுப்பதோ அவர்கள் வசதியாய் வாழ வழி செய்து கொடுப்பதோ பெரிய விடயமில்லை. ஆனால் வாழ்வின் நுண்அற்புதங்களை, கிராமத்து வாழ்வின் அழகியலை, அவ்வூர் பிள்ளைகளின் விளையாட்டை, பலன் எதிர்பாரா நட்பை, அன்பை உங்கள் பிள்ளைகளுக்கு அனுபவமாய் கிடைக்க வழி செய்வது கண்டிப்பாய் பெரிய விஷயம் தான்…
    – Aadhan’s Father is a Boon to him…

  2. ஆதனைப் போல் என்னுடன் வந்த சிறுவனும் பொங்கல்விழாவில் ரொம்ப மகிழ்ச்சியாகயிருந்தான். இத்தனைக்கும் நாங்கள் கிராமத்தில் வசிப்பவர்கள். பெரும்பாலான கிராமங்களில் முன்னைப் போல் பொங்கல்விழாக்கள் கொண்டாடப்படுவதில்லை. நம் பசுமைநடைப் பொங்கல்விழா முடிந்து நானும் அவனும்(செந்தில்) சென்று கொண்டிருந்தபோது ‘அண்ணே அடுத்து இதுமாதிரி இன்னொரு ஊர்ல போய் தங்கணும்னே’ என சொன்னான். பொங்கல்விழாவிற்கு சென்ற அனுபவங்களை ஊரெல்லாம் தம்பட்டமடித்துக் கொண்டு திரிகிறான். ஞாபகங்களைக் கிளரும் நல்ல பதிவு.

Leave a comment