வடை என்னும் அற்புதம்

ஏதோ கிறுக்கல் தானே என்று அவசரப்பட்டு மூடிவிட வேண்டாம். இந்த கவிதையின் அடியில் அருமையான ஒரு வடைசெய்குறிப்பு உங்களுக்கு கிடைக்கும்.

வடை உங்களுக்கு பிடிக்குமா? எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாசாரத்தை சீரழியாதபடி காப்பாற்றும் சிலவற்றுள் வடைக்கு ஒரு பெரிய இடம் உண்டு. வடை என்பது தமிழர் வாழ்வில் ஊறிய ஒரு உணவு வகை. என்னை பொறுத்தவரையில் நீரின்றி அமையாது உலகென சொல்வதுபோல் வடையின்றி அமையாது தமிழ்நாடு என்பேன்.

குடிப்பழக்கம் பெருகி வரும் நாட்டில் வடை உண்ணும் பழக்கம் அருகி வருகிறது. வடை என்பது பலவகைப்படும். சென்னையில் விற்கப்படும் எண்ணை ஊறிய குண்டு கல் வடை, மதுரையில் கிடைக்கும் எண்ணை கம்மியான மெதுவடை, நெல்லையில் கிடைக்கும் தாமிரபரணி தண்ணீரில் செய்த ஆமவடை என்று நிறைய வகைகள் உண்டு தமிழ்நாட்டில்.

வடை தின்றால் ஏப்பம் வரும். செரிக்காது. நெஞ்சு எரிச்சல் வருமென என்னை பயமுறுத்துவோருக்கு வடையின் அருமை பற்றி என்ன தெரிந்திருக்க போகிறது. அந்தோனி தே செயின்ட் எக்சுபெரி எழுதிய குட்டி இளவரசன் கதையில் வரும் ரோஜாவின் மேல் இளவரசன் கொண்ட காதல் போலவே என்னுடைய வடைக்காதலும் என்று தோன்றுகிறது. எனது வடைக்கு நானே பொறுப்பு. என் கையில் இருக்கும் இந்த வடை என்னால் உண்ணப்படுவதற்காகவே செய்யப்பட்டுள்ளது என்பது உண்மைதானே?

வேறோருவருடைய வடையை பிடுங்கி தின்னும் கொடூர மனம் படைத்த மனிதர்களை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் வடையை மட்டும் பிடுங்குவதில்லை. வடை தின்பதால் வரும் சந்தோஷம், ஏப்பம், மகிழ்ச்சி, தூக்கம், துக்கம், மற்றும் ஏனைய உணர்வுகளையும் சேர்த்தே பிடுங்கி விடுகிறார்கள். வடையுடன் அவர்கள் சில நேரம் துணைஉணவான பொங்கல் அல்லது இட்டிலியையும் சேர்த்து அபகரித்து கொள்கிறார்கள். நினைக்கும் போதே அழுகை வரும்.

வடையில் பல சிறப்பு உணவுகள் செய்யலாம். சாம்பார் வடை, தயிர் வடை, ரசவடை என்று  பல வடைகள் உண்டு. வடைகளின் உட்கட்டமைப்பே அதற்கு ஏற்றவாறு அமைந்து விடுகிறது. அதற்காக எல்லா வடையையும் இப்படி செய்ய முடியாது. ஆம வடை (மசால் வடை என்று அசிங்கமாக சென்னையில் அழைக்கப்படும்), கீரை வடை, முருங்கை கீரை வடை என்று சில வகை வடைகளை சட்னி அல்லது வடைக்கடையில் ஊற்றும் ஒருவிதமான குழம்பு தொட்டு சுவைத்தல் நலம்.

உங்களுக்கு தெரியுமா? உளுந்தை வைத்து செய்யும் வடைதான் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்று விளங்குகிறது. உளுந்தவடை அல்லது மெதுவடை என்பது எதற்குள் நாம் அதை போட்டாலும் அதன் சுவையையும் விட்டுக்கொடுக்காது தன் தனிச்சுவையையும் சேர்த்து வழங்கும். நாமும் இந்த உளுந்த வடை போலவே இருக்க வேண்டும். நமது தனித்தன்மை கெடாது நம்மை சுற்றி உள்ளவற்றில் இருந்து சேர்த்த விஷயங்களையும் சேர்த்து பல்கலை வித்தகராய் விளங்க வேண்டும் என்பதே இந்த மெதுவடை உணர்த்தும் நீதி.

நன்றாக யோசித்து பாருங்கள். எங்கேனும் சாம்பார் தோசை, தயிர் தோசை, ரச பூரி, ஆமஇட்லி போன்றவை உள்ளனவா? சீனிப்பாகில் ஊற வைக்கப்படும் குலாப் ஜாமூன் கூட சீனிப்பாகில் மட்டுமே ஊற வைக்கப்படுகிறது. தயிரிலோ இல்லை சாம்பாரிலோ அதை ஊற வைப்பதில்லை.

வடையில் ஏன் ஓட்டை போடுகிறார்கள் என்னும் கேள்விக்கு பதில் தேடி வந்தவர் யாரேனும் இருந்தால், பதில் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள். அந்த சிறப்பும் வடைக்கு மட்டுமே உண்டு. ஓட்டை தோசையோ, ஓட்டை இட்லியோ கண்டதுண்டா இவ்வுலகில்?

இவ்வளவு எழுதி விட்டு வடை படம் போடாவிட்டால் எப்படி. இதோ இன்னொரு வடை. வாழைப்பூ வடை. வாழைப்பூ இட்லி தோசை எல்லாம் தேடினாலும் கிடைக்காது. வடை மட்டும் தான் கிடைக்கும்.

462621_390504470961605_1769846112_o

வாழைப்பூ வடை செய் குறிப்பு –

தேவையானவை :

  • வாழைப்பூ – சிறியது ஒன்று
  • கடலை பருப்பு – ஒரு ஆழாக்கு
  • இஞ்சி – ஒரு சிறுத் துண்டு
  • பூண்டு – 3 பல்
  • பச்சை மிளகாய் – 2
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கு
  • எண்ணெய் – பொரித்தெடுக்க

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு மேசைக்கரண்டி கடலை பருப்பை தனியே எடுத்து வைத்து விட்டு, மீதி பருப்பை இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும்.

அரைத்த கடலைப்பருப்பு, முழு கடலைப்பருப்பு, நறுக்கிய வாழைப்பூ, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெயை வைத்து காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, தட்டி காய்ந்துள்ள எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

இரு பக்கங்களும் சிவந்ததும் எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்

மொறு மொறுப்பான வாழைப்பூ வடை தயார்.

வாழைப்பூவை மோரில் ஊற வைத்த பின் சமைத்தால் அதிலிருக்கும் சிறுங்கசப்பு நீங்கிவிடும். வாழைப்பூவின் வாசம் தான் இந்த வடையின் சிறப்பு. (நன்றி – யாழ் இணையம்)

வடை தான் தமிழ்நாட்டின் தேசிய உணவு. இவை வடைக்கு மட்டுமே உரித்தான தனிச்சிறப்புகள். வடை போல் வாழுங்கள். நன்றி.

11 thoughts on “வடை என்னும் அற்புதம்

  1. Alwarkurichi in Tirunelveli District is famous for Vadai. People who hire cabs and vans to go to Tiruchendur or some other place which I cannot recall, will make a stop here just to eat vadais. The taste doesnt differ from shop to shop but it actually differs a lot when we eat in other places

  2. ஆஹா! வடைக்கு இத்தனை சிறப்பா? படமும் செய்முறையும் கொடுத்து வடை தின்னும் ஆசையை கிளப்பிவிட்டுவிட்டீர்களே!

    இன்னிக்குத்தான் டயட் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்……!

    அற்புதம்! வடை என்னும் அற்புதத்தைப் பற்றிய அற்புதமான படைப்பு!
    (ஏதாவது கையேந்தி பவன் ஆரம்பிக்கும் ஆசையா?)

    • வணக்கம் அம்மா,

      வடைக்கு இன்னும் சிறப்பு நிறைய உண்டு. பாட்டி சுட்ட காலத்தில் இருந்து சுட்டுக் கொண்டே தானே இருக்கிறோம்.. 🙂

      கையேந்தி பவன் ஆரம்பிக்கும் எண்ணம் எதுவும் இல்லை அம்மா. இருக்கும் கையேந்தி பவன்களில் எல்லாம் சாப்பிடும் ஆசை மட்டும் உண்டு.

      வடை நல்ல உணவு. கவலை படாம சாப்பிடுங்க.

      இப்படிக்கு,
      மதுரக்காரன்.

    • இன்னொரு முக்கியமான விஷயம்.. மேல இருக்கும் படத்தில் இருக்கும் வடை என் மனைவி செய்தது. இது கண்டிப்பா சொல்லப்படவேண்டிய ஒரு தகவல்னு நெனைக்கிறேன். 😀

    • அண்ணே.

      வடைக்கும் கெட்டிசட்டினிக்கும் தானே நம்ம மதுர பேமஸ்..

      வதனம் இலக்கிய சந்திப்புக்கு வரீங்களா? வந்தா சந்திக்கலாமே. 🙂

Leave a reply to மதுரக்காரன் Cancel reply