விமானம் வந்த கதை

மார்ச்சு மாசத்து வெயில் பட்டய கிளப்பிட்டு இருந்த ஒரு நாள். சும்மா ஜம்முன்னு ஊரு சுத்தி பாக்க ரொம்ப நல்ல கிளைமேட்டு. மைதானம் மொத்தமும் ஒரே கூட்டம். மொத்த ஊரும் அங்கதேன் கெடக்கொன்னு மலைக்க வக்கிற அளவுக்கு கூட்டம். ஏழை பணக்காரன், அறிவாளி முட்டாப்பய, எல்லாம் கூடிக்கேடந்தாய்ங்கே! ரெண்டாளு ஒசரத்துக்கு பனையோலை தட்டி போட்டு மூங்கிலால இறுக கட்டி மைதானம் மொத்தமும் மூடி வச்சிருந்தாய்ங்கே!

உள்ள போக ஏகப்பட்ட வாசல். ஒவ்வொரு வாசலுக்கும் ஒரு கட்டணம். ரெண்டு அணா கட்டுனா தர டிக்கெட்டு. அஞ்சு ரூவா குடுத்தா வெள்ளை கலர் நாக்காலி. வசதிகேத்த வாழ்க்கை. அந்தப்பக்கம் ஒரு பேண்டு வாத்திய கோஷ்டி ஏதோ மொழி பாட்டு வாசிச்சுட்டு இருக்கு. நம்மாளுங்க ஒருத்தனுக்கும் ஒரு பாட்டு கூட வெளங்கல.

ஆனாலும் நம்ம மக்கள் எல்லாரும் வச்ச கண்ணு வாங்காம எதையோ பாக்குறாய்ங்கே. அங்கிட்டு பாத்தா,  ரெண்டு பக்கமும் நீட்டிக்கிட்டு இருக்க ரெண்டு துணிப்போர்வை, தரைய தொட்டுட்டு நிக்கற ரெண்டு சின்ன சக்கரம், முன்னால ஒரு என்ஜின், ஒரு காத்தாடியோட பெரிய கழுகு மாதிரி ஒரு யந்திரம் நிக்கிது.

திடீர்னு பேண்டுகாரங்க மியூசிக்க மாத்திவாசிக்க ஆரம்பிச்சாங்க. நல்ல ஒசரமா ஒரு வெள்ளைக்காரன் அந்த யந்திரத்த நோக்கி போனாரு. அவர பாத்த ஒடனே மொத்த கூட்டமும் ஆர்ப்பரிக்குது. வெள்ளைகாரரும் எல்லாத்தையும் பாத்து கை ஆட்டிட்டு மெல்ல அந்த யந்திரத்த சுத்தி சுத்தி வந்தாரு. சுத்தி வந்த மனுஷன் திடீர்னு ஏறி அதுக்குள்ள இருந்த சீட்ல உட்காந்துட்டாரு. வெளிய இருந்து பாக்குறவனுக்கு அவரு தலை மட்டுமில்ல, அவரு என்ன என்ன செய்றாருன்னும் தெரியுது. ஒரு கண்ணாடிய எடுத்து மாட்டிக்கிட்டு எதையோ திருப்புன ஒடனே, என்ஜின் ஓட ஆரம்பிச்சுது.

ஓட ஆரம்பிச்ச அந்த யந்திரம் தரையவே ரெண்டு சுத்து சுத்தி வந்தது. எல்லாரும் அத ஒரு சுத்து பாத்த அப்பறம், அது கொஞ்சம் கொஞ்சமா வேகம் எடுக்க ஆரம்பிச்சுட்டு. ரெண்டு பர்லாங் தான் ஓடிருக்கும். ஓடிக்கிட்டே இருந்த யந்திரம் மெல்ல தரைய விட்டு எழும்பி காத்துல பறக்க ஆரம்பிச்சது. மொத்த கூட்டத்துக்கும் ஆச்சர்யம் தாங்கல.

ரெண்டு பனை ஒசரத்துக்கு ஏறின யந்திரம் அப்டியே மெல்ல மெல்ல கிழக்கு பக்கமா கடல நோக்கி போச்சு. ஒரு அரை நாழிகை எதுவுமே தெரியாம மக்கள் நின்னாங்க. மறுபடி அந்த யந்திரம் வந்தப்போ, அது ரொம்ப தாழ பறந்து வந்தது. தரைய தட்டுன யந்திரம் தரையிலேயே கொஞ்ச தூரம் ஓடுச்சு. மண்ணு புழுதிய எல்லாம் கிளப்பிட்டு, எங்க இருந்து கிளம்புச்சோ, அங்கேயே வந்து நின்னுடுச்சு.

வெள்ளைகாரரு மெல்ல எறங்கி வந்தாரு. கூட்டம் மொத்தமும் கத்துது. வெள்ளைக்காரர் கூட்டத்துக்கு பக்கத்துல வந்து கேட்டாரு – உங்கள்ல யாராச்சும் வாங்க.. நான் ஒரு ரவுண்டு கூட்டிட்டு போறேன்னாரு.

ஒரு சின்னப்பைய டப்புன்னு கைய தூக்கிபுட்டான். சுத்தி இருக்கவன் எல்லாம் –வேண்டாம்டா. செத்து போய்டுவன்னு மிரட்டுராய்ங்கே. பயபுள்ள அசரல. வெள்ளைகாரரும் அவன கூட்டிக்கிட்டு போய் உள்ள உக்கார வச்சு பெல்ட் எல்லாம் போட்டு விட்டாரு. மெல்ல யந்திரம் கெளம்பி போயிட்டு. கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடி வந்த யந்திரத்துல இருந்து அந்த சின்னப்பயல எறக்கி விட்டாரு. பய ரொம்ப சந்தோஷமா அவன் கூட்டாளிக கூட போய் சேந்துகிட்டான்.

அந்த யந்திரம் – ஒரு விமானம். அது பறக்கிறது அதிசயம் இல்ல. அதிசயம் என்னன்னா, அது மெட்ராஸ்ல செய்யப்பட்ட விமானம்.

அந்த நாள் – மார்ச்சு, 1910.

அந்த சின்னப்பைய வேற யாரும் இல்ல – பாரதியோட பால்ய நண்பன் பி.ஆர்.எஸ்.வாசன் தான். நெல்லைகாரரான வாசன் கோலார் தங்க வயல்ல வேலை பாத்து ரிடையர் ஆனாரு.

அந்த வெள்ளைகார தொரை யாரு தெரியுமா? டி’என்ஜெலிஸ்ன்னு ஒருத்தர். அவரு மெட்ராஸ்ல ஒரு பெரிய ஹோட்டல் வச்சிருந்தாரு. ஹோட்டல் பேரும் அவரு பேருதான். அப்பறம் அந்த ஹோட்டல் கை மாறி போசொட்டோ ஹோட்டல் ஆகி, இப்போ என்னவா இருக்குன்னு தெரியல.

image

டி’என்ஜெலிசோட சேந்து இந்த விமானத்த தயார் பண்ணது சிம்ப்சன்’ஸ் கோச் பில்டர்ஸ். பேருதான் இங்கிலீஷ் பேரு. உள்ள வேளை பாத்த ஆளுங்க எல்லாம் நம்ம ஆளுங்கதான்.

கடைசியா ஒரு துணுக்கு – அந்த விமானத்தோட மொத்த எடை 700 பவுண்டு.

– Translated from the work “How the Aeroplane came to Madras” by Jeff Evans.