தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு

தலப்பாகட்டி பிரியாணி தெரியுமா? இது அதுவல்ல. இது தாலாட்டு பற்றியது. தாலாட்டு என்றால் குழந்தையையோ குழந்தை மனமுடைய என்னைப் போன்ற பெரிய குழந்தையையோ தூங்க வைக்க அம்மாக்களோ இல்லை என்னை போன்ற அப்பாக்களோ பாடும் ஒரு பாடல். தமிழ் விக்கிஷனரியில் பார்த்து சரியான விளக்கம் அளிக்க மனம் ஒப்பவில்லை. ஏனெனில் நீங்கள் எப்படியும் நான் எழுதிய மேற்கூறிய விளக்கத்தை கூகிளில் சரி பார்ப்பீர்கள் அல்லவா?

தாலாட்டு பாடுவது ஒரு கலை. எல்லாரும் தாலாட்டு பாடிவிட முடியாது. தாலாட்டு பாட மிக முக்கியமான தகுதி ஒன்று உண்டு. நீங்கள் அப்பாவாகவோ இல்லை அம்மாவாகவோ இருக்க வேண்டும் என்பதல்ல. உங்கள் காந்தக்குரலில் சிக்குண்டு அந்த குழந்தை உறங்க வேண்டும். கட்டைக்குரலில் தாலாட்டுப் பாடி குழந்தை தொட்டிலில் இருந்து இறங்கி ஓடுமாறு செய்தீர்களானால் தாலாட்டு பாடும் தகுதியை நீங்கள் இழந்தவர் ஆவீர்கள்.

நான் உயிர் வாழ்வதற்கு கோழிக்குழம்பு எவ்வளவு அவசியமாகிறதோ அவ்வளவு அவசியம் குழந்தையின் தூக்கத்திற்கு தாலாட்டு. கோழிக்குழம்பின் ருசி அறிந்து அடங்கும் பசி போல இனிமையான தாலாட்டு கேட்டு அடங்கும் குழந்தையின் அழுகை. தாலாட்டு பாடினால் குழந்தை மட்டும் தான் தூங்கும் என்பதல்ல. நானும் தூங்குவேன். நீங்கதான் சார் அந்த குழந்தையே என்று வியப்போர்க்கு – நான் குழந்தையல்ல.

பிறந்த குழந்தைக்கு தாலாட்டு பாடி உறங்க வைக்கும் பழக்கம் இன்று சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. எனக்கு என் அம்மா பாடிய தாலாட்டு ஞாபகம் இல்லை. அவ்வளவு சிறிய பிள்ளையாக இருக்கும் போது அதை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். இன்று என் பிள்ளைக்கு தாலாட்டு பாட வேண்டும் என்று ஆசை. ஆனால் நான் தகுதி இழந்தவன் ஆகிறேன். என் கட்டைக்குரல் கேட்டால் குழந்தை என்னை கட்டையால் அடித்து விரட்டியே விடுவான்.

அவன் அம்மாவை (என் மனைவி) பாட சொன்னேன். அவளுக்கு தாலாட்டு பாட தெரியவில்லை. சிறுத்தை படத்தில் வரும் ஆராரோ ஆரிரரோ என்னும் தாலாட்டை அவளது அலைபேசியில் ஓட விட்டு தூங்க வைக்கிறாள் குழந்தையை. அவ்வளவு செய்கிறாளே. மகிழ்ச்சி. அவள் அந்த பாட்டை பாட விட்டால் முதலில் தூங்குவது நானே. இவ்வளவு கஷ்டப்படுகிறாளே என்று கூகிளில் தாலாட்டு என்று தேடித் பார்த்தேன். அனைத்தும் சினிமா பாடல்களே. சில இடங்களில் சில கிடைத்தாலும் அந்த ஆராரோ ஆரிராரோ கேட்டால் தான் தூங்குகிறான் பிள்ளை.

தாலாட்டு ரொம்ப முக்கியம். நாம் அதை ஒரு வலைப்பதிவில் சேர்த்து வைக்க வேண்டும். வருங்கால அப்பன்களுக்கு அது ரொம்பவும் தேவைப்படும். தாலாட்டு பாடல்கள் கிடைக்காமல் நான் தவித்த தவிப்பு வேறு எந்த அப்பனுக்கும் வரக் கூடாது என்று நான் அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். என்னைப்போல் கஷ்டம் அறிந்த அப்பன்கள் இதற்கு முன் இதை செய்திருக்கலாம். செய்யாமல் போய் விட்டனர். தாலாட்டுப் பாடல்களின் சிறப்பை பல இடங்களில் சிறப்பாக புரிய வைத்துள்ளனர் சான்றோர். கீழ்க்காணும் கவிதையில் அதன் சிறப்பை தெளிவாய் காணலாம்.

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு – நம்
தாய் போலே இங்கு வேறாரு

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை

ஆவாரங் காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா பொன்னாரம் கேட்டானா
சோறுக்கு வேண்டி நிக்கும் பேரு
பொன் மின்ன வெள்ளி மின்ன வைரங்கள் மின்ன
தொழிலாளி கைகள் படத்தான் வேண்டும்
தாய் உண்ண சேய்யும் உண்ண நாமென்றும் உண்ண
விவசாயி தான் உழைக்க வேண்டும்
ஏழை அவர் பாடு அது காற்றோடு போயாச்சு

ஏரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு
சோற்கேட்டு போவானே அவன் பாடும் பாட்டு
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை….

நாடாலும் பேரென்ன மாடோட்டும் பேரென்ன
யாராரு உன்னை பெத்ததாரு
விஞ்ஞானி ஆனாலும் மெஞ்ஞானி ஆனாலும்
தாய்தானே பெத்து போட்டா கூறு
பகலென்ன இரவும் என்ன என்றென்றும் இங்கே
ஆணுக்கு பெண்ணின் துணை வேணும்
வெயிலென்ன மழையும் என்ன காலங்கள் தோறும்
அன்புக்கு தாயும் இங்கு வேணும்
தாய்தான் படும் பாடு அதை உணர்வாயே கண்மணி

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு – நம்
தாய் போலே இங்கு வேறாரு.

பின்குறிப்பு: உங்களுக்கு வட நாட்டு பாடல்கள் வேண்டுமெனில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய வாத்சல்யம் என்னும் ஆல்பம் இணையத்தில் கிடைக்கிறது. மேலும் ஆங்கில குழந்தையாய் உங்கள் குழந்தையை வளர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நீங்கள் உட்பட்டிருப்பின் கூகிளில் “Lullaby” என்று தேடவும். நிறைய தரவிறக்கலாம்.

மழை பெய்யும் நேரம்

இன்றும் மழை பெய்தது. நான் என் குழந்தையின் பீத்துணிகளை அலசி முடிக்கையில் வெளியே கேட்ட பேரிரைச்சல் கேட்காமல் இருக்க முடியவில்லை. மதியம் மூன்று மணி இருக்கும். துணிகள் குவிந்து கிடந்தன. இல்லை. அலசுவதோ துவைப்பதோ அசிங்கமில்லை. நான் அதை பற்றி கவலைப்பட்டு அதை செய்யாமல் இருப்பவன் அல்ல.

நான் என் குழந்தையின் துணிகளை அலசுவதை பெருமையாகவே கருதுகிறேன். என் தாயும் தந்தையும் எனக்கு செய்ததை நான் என் பிள்ளைக்கு செய்வது கடமை தானே? கடமை செய்தற்கு பெருமை எதற்கு என்று கேட்காதீர்கள். காலம் மாறிப் போச்சு. கடமையை ஒழுங்காய் செய்தாலே நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். திருட்டை, கொள்ளையை, கொலையை செய்துவிட்டு பெருமையாய் பேசும் ஈனர்கள் உலவும் நாட்டில் கடமையின் பெருமையை பேசுவதில் தவறொன்றுமில்லை.

மழை பெய்ததென சொன்னேன் அல்லவா. அது இன்று மட்டுமல்ல. நான் துணி அலச ஆரம்பித்த நாளில் இருந்து பெய்கிறது. எனக்கு மழை பிடிக்கும். மழைக்கும் என்னை பிடிக்கும். எங்கள் இருவருக்கும் உள்ள சொந்தம் சுமார் முப்பதாண்டு காலம் எந்த ஊடலுமின்றி சீராக இருந்து வந்துள்ளது. நான் திடீரென உழைப்பதை பார்த்து வானம் விட்ட கண்ணீரே மழையோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது. மழை என்னை அவ்விதம் அவமானப்படுத்தாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

காப்பி குடிக்க வேண்டும் போலிருந்தது. மழை பெய்யும் நேரம் காப்பி குடித்ததுண்டா நீங்கள்? சூடான வடிகாப்பியோடு.. இல்லை காப்பியை காப்பி என்று அழைக்கவே எனக்கு விருப்பம். குளம்பி என்பது எனக்கு பிடிக்கவில்லை. மொழியின் வரையறைக்குட்பட்டு நான் எழுதுவதில்லை. ஆக, சூடான வடிகாப்பியோடு இளஞ்சூட்டில் வேக வைத்த பச்சைப்பயரையோ தட்டாம்பயரையோ அருந்தி உண்டால் வரும் சுகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா?

அத்தை மாமா ஊரில் இல்லை. மனைவி தூங்கி விட்டாள். காப்பிக்கு வழி இல்லை. துவைத்து குளித்து விட்டு வெளியே வந்தேன். துணியை வீட்டின் முதல் மாடியில் (ஆனால் கட்டிடத்தின் இரண்டாம் மாடி) காய போட்டேன். அப்போது தான் ஞாபகம் வந்தது. சட்டென மொட்டை மாடிக்கு ஓடினேன். அங்கு காய போட்டிருந்த வளர்ந்தவர்கள் அணிந்த உடைகள் எல்லாமும் மழையில் நனைந்திருந்தன. மெல்ல தலை உயர்த்தி மேலே பார்த்தேன். வானம் மேகமற்று இருந்தது. ஆனால் மழை பெய்தது. பக்கத்தில் ஒரு வானவில் தெரிந்தது.

வானவில் உண்மையில் ஒரு அதிசயம். நீங்கள் வானவில்லை ரசித்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன? யோசித்து பாருங்கள். சென்னையில் நான் இருந்த காலம் மொத்தமும் நான் வானவில்லை கண்டிருந்தாலும் ரசித்ததில்லை. இன்று எனக்கு பிடிக்காத துணி துவைக்கும் வேலையை செய்து விட்டு அலுப்போடு வெளியே வந்த போதும் எனக்கு அந்த ரசிக்கும் மனநிலை இருந்தது. இது இருப்பிடம் சார்ந்ததா? இல்லை என் மனநிலை சார்ந்ததா? தெரியவில்லை.

நனைந்த துணிகளை அப்படியே விட்டு விட்டு நான் கீழே வந்தேன். வரும் வழியில் முதல் மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை காய வைக்க காற்றாடியை ஓடச்செய்து விட்டு வந்தேன். ஏனெனில் முதல் மாடியில் மழை பெய்யாது. வெயில் அடிக்காது. வானவில் வராது. நானும் துணிகளும் மட்டுமே.

கீழே வந்து குழந்தையை போய் பார்த்தேன். முழித்துப் பார்த்தான். மெல்ல தூக்கியவுடன் சிரித்தான். பிறகு இன்னொரு பீத்துணி சேர்ந்தது நாளை துவைக்க! நாளைக்கு மழை பெய்யுமா?

ஒரு பாட்டில் டொரினோ

சரியாக, மிகச்சரியாக இருபத்து மூன்று நாட்களுக்கு முன்னே, நான் ஒரு வெயில் கொளுத்திய மதிய வேளையில் குளிர்பானம் தேடி அலைந்தேன். வீடு காலி செய்யும் வேலை நடந்து கொண்டிருந்தது. வீடு ஏன் காலி செய்யப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழும். வீடு காலி செய்யப்படும் நேரம் ஆகி விட்டதன் காரணத்தால் அது காலி செய்யப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்.

குளிர்பானம் எனக்கு பிடிக்காது. இருந்தாலும், வெயில் கிளப்பிய சூட்டின் காரணமாக வழிந்த வியர்வையினால் உண்டான தாகத்தினை தணிக்கும் பொருட்டு எப்போதேனும் சிறிது அருந்துவதுண்டு. சில நேரங்களில் மது அருந்தும் பொருட்டு குளிர்பானம் அதனுடன் சேர்த்து அருந்தியதுண்டு. ஆயினும் குளிர்பானம் எனக்கு பிடித்ததில்லை.

எனக்கு குளிர்பானங்கள் பிடித்த காலம் ஒன்று இருந்தது. மறவோனாய், திறவோனாய், விடலையாய், காளையாய் திரிந்த பருவம் அது. அப்போது குளிர்பானம் குடிப்பது மதிப்பிற்குரிய ஒரு பழக்கமாக எனக்கு தோன்றியதுண்டு. அதன் காரணமாகவே நான் அவற்றை அருந்த ஆரம்பித்தேன். அதற்கு முன் குளிர்பானங்களோடு எனக்கு இருந்த ஒரே தொடர்பு எங்கள் வீட்டிற்கு உறவினர் வரும் போது அதை வாங்கி வந்து அவர்கள் பருகுவதை உற்று நோக்கி சப்புக்கொட்டுவதே ஆகும். மிகவும் அதிர்ஷ்டமான சில நேரங்களில் எனக்கும் சில கோப்பைகள் பருகக் கிடைத்ததுண்டு.

கல்லூரி வந்த காலத்தில் எங்களுக்கு கலவைக்கு கிடைத்தவை பெப்சியும் கோக்குமே. அப்போதெல்லாம் எனக்கு சந்தேகம் ஒன்று வந்ததுண்டு.. இவை எல்லாம் கிடைப்பதற்கு முன் நம் மக்கள் சாராயத்தை எதனுடன் கலந்து உண்டு வந்தனர் என்று. இன்று யோசித்து பார்த்தால் தெரிகிறது – ஏன் நமது அரசு உலகமயமாக்கலை தொடர்ந்து ஆதரித்து வந்ததென்று. அப்படியே குடித்த சாராயத்தை கூட கலந்து குடிப்பதற்கு வந்தேறிகள் வழிவந்த பானங்களை நாம் உபயோகிக்கும் நிலை வந்து விட்டதே.

அந்த உறவினர் வரும் காலத்தே கிடைத்து வந்த குளிர்பானங்கள் யாவுமே இன்று காணக்கூட கிடைப்பதில்லை. குடிப்பது இரண்டாம்பட்சமே. இன்றும் உறவினர் வந்தால் ஓடிப்போய் குளிர்பானம் வாங்கி வரும் கிராமத்து பண்பாடு மாறவில்லை என் வீட்டில். ஆனால் வாங்கி வரும் குளிர்பானம் மட்டும் மாறிப்போனது. அழகான ஆரஞ்சு நிறத்தில் கிடைத்து வந்த டொரினோவும் கோல்ட் ஸ்பாட்டும் காணமல் போனது. காளிமார்க் மட்டுமே இன்றைய கடும் போட்டியில் போவோண்டோ மூலமும் பன்னீர் சோடா மூலமும் மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கிறது.

டொரினோ அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த காலத்தில் அதை பற்றிய அருமை தெரியாமல் கோக்கும் பெப்சியுமான விஷங்களை அருந்திக்கொண்டிருந்த எனது மடமை எப்போது என்னை விட்டொழிந்து போனது என்றெனக்கு தெரியவில்லை. ஆயினும் கல்லூரி முடித்த காலத்தில் இருந்து எனது முதன்மையான பானம் போவோண்டோவாகிப் போனது. டொரினோ கிடைக்கவில்லை அப்போது. கோல்ட் ஸ்பாட் மாயமாய் மறைந்து போனது. இன்று முதுமகனாய் தேடி பார்க்கிறேன். இவையெல்லாம் எளிதாய் கிடைப்பதில்லை.

இன்று இவைகள் அழிவின் விளிம்பில் தத்தளித்தாலும் அது மீண்டு வரும் என்ற நம்பிக்கை உண்டு.  இரண்டு மாதங்களுக்கு முன்பு என் தங்கை எனக்கு ஒரு டொரினோ பாட்டில் பரிசளித்தாள். என் நண்பர்கள் எனக்கு வழங்கிய க்லேன்லிவட் 21 வருடங்கள் வாற்றப்பட்ட ஸ்காட்ச்சை விட பெரிய பரிசாக அந்த டொரினோ பாட்டில் எனக்கு தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன், திருநெல்வேலியில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அதில் வந்த ஒரு அலைவரிசையில், அந்த பழைய டொரினோ விளம்பரம் புது பொலிவுடன் ஓடிக்கொண்டிருந்தது. இளமையான விக்ரம் நடித்த விளம்பரப்படம் அது.

இன்றும் எனக்கு சில கேள்விகள் எழுவதுண்டு. நமது மக்கள் தயாரித்த அந்த பானங்களில் இல்லாத எந்த சுவையை நாம் இந்த வந்தேறிகள் கொடுத்த அக்காமாலாவிலும் கப்சியிலும் கண்டு விட்டோம்? நாக்கில் பட்டதும் ஜிவ்வென்று அன்னத்தை குளிர்வித்து இரைப்பையில் இறங்கும் வரை குளிர் தெரியும் டொரினோவையோ போவோண்டோவையோ இவைகள் மிஞ்சி விட்டனவா? இயற்கையான சர்க்கரை சேர்த்து காற்றின் அழுத்தம் ஏற்றி வந்த பன்னீர் சோடாவின் சுவையையோ சீரணிக்கும் ஆற்றலையோ 7 அப்போ மவுன்ட்டன் டியூவோ தருமா?

எதன் பின்னால் நாம் இப்படி அலைகிறோம்?

இன்றும் போவோண்டோவை மட்டுமே குளிர்பானமாய் கருதும் நண்பர்கள் எனக்குண்டு. மதுரை சென்றால் ஜிகர்தண்டாவும் பிற ஊர்களுக்கு சென்றால் கிடைக்கும் சர்பத்தும், இதர சில பானங்களும் நமக்கு வேறெங்கும் கிடைப்பதில்லை.

முடிவாய் ஒன்று சொல்கிறேன். இவை அழிவதற்கு முன் இவற்றை ருசித்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் வாழ்வில் நீங்கள் ஒரு முக்கியமான சுவையை அறியாதவராகி விடுவீர்கள்.

அது சரி. எனது தேடல் என்னவானது என்றதற்கு பதில் உங்களுக்கு இப்போது தேவை இல்லாததாகி விட்டது. ஆயினும் சொல்கிறேன்.. எனக்கு கிடைத்தது ஒரு பாட்டில் டொரினோ. முழு பாட்டிலையும் குடித்து விட்டு குப்புற கவிழ்ந்தேன்.

கொண்டக்கடலை சமோசாவும் ஒரு கப் ரோஸ்மில்க்கும்

நெல்லை கடைவீதியில் இருட்டு கடை அல்வா கடைக்கு மிக அருகில் உள்ள இருட்டான சந்தில் எதுவுமில்லை. அதற்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் சிறு பிள்ளைகள் படிக்கின்றனர். சிறு பிள்ளைகள் இடைவேளையில் அல்வா வாங்கி சாப்பிடுவதில்லை. அவர்களும் மாங்காயும், பிங்கர் அப்பளமும், கடுக்காயும், இலந்தைப்பழமும், கம்மர்கட்டும், மற்றும் சிலவும் கிடைத்தாலும் அவர்கள் அல்வா வாங்குவதில்லை. நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் வெளியூர் பிரயாணிகள் கம்மர்கட்டையும், கடுக்காயையும் கண்டு கொள்ளாமல் அல்வா வாங்கி தின்பதிலேயே என் முழு கவனம் உள்ளது. நான் பள்ளிச்சிறார்களை கண்டு கொல்வதில்லை. ஏனெனில் என் மனம் முழுதும் சமோசாவும் ரோஸ்மில்க்குமே உள்ளது.

கொண்டக்கடலை போட்டு சமோசா செய்வது வெங்காயமும் சேர்த்து. வெங்காயம் இன்றி செய்யப்பட்ட சமோசா விலை போனாலும், அது விலை அதிகம் என கருதப்படும். வெங்காயம் விலை குறைப்பிற்கான ஒரு காரணமாயினும் அது சமோசாவின் சுவையை அதிகரிக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. வெங்காயம் அற்ற கொண்டக்கடலையை மட்டும் உள்ளடக்கிய வெள்ளை சமோசா சுவைக்கும் போது சுவையற்று மாவை சவைப்பது போலும் இருப்பது இயற்கையின் திருவிளையாடல் அன்றி வேறென்ன?

ரோஸ்மில்க் குடிப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா என்று கேள்வி எழுப்பினால், முன் வரிசையில் நின்று நல்லதே என்று உரக்க கத்தும் கூட்டத்தில் உள்ள இருவர் ரோஸ்மில்க்கே குடித்ததில்லை. அதேபோல் கெட்டதே என்று கத்தும் கூட்டத்துள் இருக்கும் மூவர், யாரும் காணாத போது திருட்டுத்தனமாய் ரோஸ்மில்க் குடிக்கும் சுவை அறிந்தவர்களாய் இருக்கலாம். இது உண்மையில் ரோஸ்மில்க் பற்றிய ஒரு பதிவே. ஆனாலும் வெங்காயமும் கொண்டக்கடலையும் சேர்ந்த சுவை மிகுந்த சமோசா ஒரு பதிவில் அதற்கான இடத்தை எடுத்துக்கொள்கையில் அதை மறுக்கும் அதிகாரம் எனக்கு இல்லாமல் போய் விட்டது.

மின்னல் வெட்டும் ஒரு மழை இல்லாத நாளின் பகலில், போத்தீசில் மஷ்ரூம் வாங்க போன எனக்கு, இந்த சமோசாவும் ரோஸ்மில்க்கும் பரிச்சயமானது ஏதோ காரணத்தின் காரணமாகவே. சமோசா சாப்பிட்டு ரோஸ்மில்க் குடித்த இரவில் மின்னல் வெட்டி மழை பெய்யாதது யார் செய்த குற்றமோ? மின்னலுக்கும் வெங்காயம் சேர்த்த சமொசாவுக்கும் ஏதேனும் தொடர்புண்டோ? கொடும் மின்னலோடு கூடிய கொட்டும் மழை இரவில் சூடான சமோசா உண்பதில் உங்களுக்கு எவ்வளவு இன்பமுண்டோ, அந்த இன்பம் எனக்கும் உண்டு. ஆனால் மழை நாளில் உண்ணப்படும் ஒரு சமோசாவிற்க்கும் பளீரென்று வெயில் சுடும் நேரத்தில் குடிக்கப்படும் ஒரு ரோஸ்மில்க்கிற்க்கும் என்னவொரு இன்பம் இருக்கும்? சமோசா உண்ணப்படுவதும் ரோஸ்மில்க் குடிக்கப்படுவதும் அவற்றின் அழிவா இல்லை ஆக்கமா?

பதிலில்லை என்னிடம்.

ஆனால் எடுக்க எடுக்க குறையாத வெங்காயம் நிரம்பிய சமோசாவும் அதீதமாக குளிரூட்டப்பட்ட ரோஸ்மில்க்கும் என்னிடம் நிறைய உண்டு. அவைகளை நான் என் கனவிலிருந்து தானே தருவிக்கிறேன்.

உண்ணற்க கள்ளை – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனை நான் வாசித்ததில்லை. நாஞ்சில் வட்டார சொல் அகராதி மட்டும் வாங்கினேன் படிக்க. ஆனால் அதை பயன்படுத்தும் நிலை இன்று வரை எனக்கு நேரவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் என் தங்கையின் நண்பன் முத்துவேல் எனது வீட்டிற்கு என்னை சந்திக்க வந்திருந்தான். பேசிக் கொண்டு இருக்கையில் கள் பற்றி பேச்சு வந்தது.

கள் பற்றி நாஞ்சில் நாடன் சில அருமையான கட்டுரைகள் எழுதி உள்ளதாக என்னிடம் கூறினான். அதில் ஒன்றை வாசித்தும் காண்பித்தான். அதுவே நீங்கள் கீழ்க்காணும் கட்டுரை.

அவன் வாசித்த விதமும், நாஞ்சில் நாடனின் எழுத்து நடையும் என்னை மெய்மறக்கச் செய்தது. சொற்றொடர்களின் வலிமையையும் ஞா.ஞாவின் அர்த்தமுள்ள கேள்விகளும் என்னை முழுமையாகக் கவர்ந்தது. அந்த காரணங்களினாலேயே இதை இங்கு பகிர்கிறேன்.

கள் பற்றி நான் கொண்டிருந்த கருத்தை மேலும் சீர்படுத்தும் வகையில் எழுப்பப்பட்ட கேள்விகளால், நான் திகைத்துப்போய் நிற்கிறேன். படித்து ரசித்ததை பகிராத பாவி என இனி என்னை பழிக்க முடியாது.

கள் ஆதித்தமிழரின் பானம். நினைவில் வைத்திருப்போம் என்றும். இனி படித்து ரசியுங்கள்.

உண்ணற்க கள்ளை 1உண்ணற்க கள்ளை 2உண்ணற்க கள்ளை 3உண்ணற்க கள்ளை 4உண்ணற்க கள்ளை 5உண்ணற்க கள்ளை 6உண்ணற்க கள்ளை 7உண்ணற்க கள்ளை 8உண்ணற்க கள்ளை 9

 

என்னவொரு முடிவுரை – “கள் கிட்டாது, எனவே வெட்டென மற!” Winking smile

ஆண்டெனா

இல்ல. டைட்டில தப்பா படிச்சுட்டு ஆண்ட்ரியான்னு நெனைச்சுட்டு வந்தவங்க எல்லாரும் அப்பிடியே க்ளோஸ் பண்ணிக்கோங்க. இது ஆண்டெனா பத்தி.

அந்த காலத்துல எல்லாம் நமக்கு தெரிஞ்ச சேனல் ஒண்ணே ஒண்ணுதான் – தூர்தர்ஷன். என்னதான் முயற்சி பண்ணாலும், வேற சேனல் தெரியாது. சம்மர் லீவு விட்டாக்கூட நமக்கு எல்லாம் வேற பொழுதுபோக்கு கெடயாது. காலைலயும் சாயங்காலமும் வெளையாட்டு. மத்த நேரமெல்லாம் டிவி. ஆனா அந்த டிவி ஒழுங்கா தெரியணும்னா அந்த ஆண்டெனா ஒழுங்கா இருக்கணும்.

Rajanna Photography-1-39

ஆண்டெனா சரியா இல்லாட்டி செத்தோம். அத வீடு உச்சில மாட்டி வச்சிருப்பாங்க. ஊருக்கு எளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி மாதிரி, அதுல எதாச்சும் பிரச்சனைன்னா ஒடனே மாடி மேல ஏறி அத இங்கிட்டும் அங்கிட்டும் திருப்பனும். சில நேரம் நம்ம என்னதான் திருப்பினாலும், ஒரு எழவு படமும் தெரியாது. ரொம்ப நேரம் முயற்சி பண்ண அப்பறம் புள்ளி புள்ளியா தெரியும். அது சரியா தெரியற வரை நம்மல எறங்க விடமாட்டாங்க. நல்ல வேலை எங்க வீடு அவ்ளோ பெருசு இல்ல. ஆனா சில வீடுகள் ரொம்ப பெருசா இருக்கும். அவ்ளோ பெருசா இருந்தாலும் பத்தாதுன்னு ஆண்டெனாவ கொண்டு போயி தண்ணித்தொட்டி மேல மாட்டி வச்சிருப்பாங்க. அந்த வீட்டு பசங்க எல்லாம் ரொம்ப பாவம்.

1990ல மதுர அண்ணாநகர்ல நாங்க இருந்த வீடு, LIG வீடு. LIG வீடு எப்பிடின்னா, அதுக்கு மாடிக்கு படிக்கட்டு, சுத்துச்சுவர் எல்லாம் கெடயாது. தரை தளம் மட்டும் தான். ஆனா ஏணி போட்டு ஆண்டெனாவ மாட்டிட்டு போய்ட்டாங்க. அந்த கருமம் பிடிச்ச ஆண்டெனாவ இறுக்கி கட்டாம போனதாலே, அது பொசுக்கு பொசுக்குன்னு காத்து அடிச்சா திரும்பிக்கும். மாடி மேல ஏறி அதை சரி பண்றதுதான் நம்ம தலையாய கடமை. அப்டி ஒண்ணும் முக்கியமான நிகழ்ச்சி எதுவும் இருக்காது. வயலும் வாழ்வும், சுரபி, ராமாயணம், மாதிரி எதாச்சும் மொக்க நிகழ்ச்சிதான் போடுவானுங்க.

இந்த வயலும் வாழ்வும் வரப்போ கூட டிவி ஒழுங்காதான்யா தெரியும். என்னைக்கு ஒளியும் ஒலியும் போடுறானோ அன்னைக்கு தான் தாலியறுக்கும். இருட்டு நேரத்துல மரத்துல ஏறி அதுல இருந்து மாடிக்கு தாவி, ஆண்டெனாவ தடவி தடவி மாத்திட்டு வரதுக்குள்ளே ஒலியும் ஒளியுமே முடிஞ்சுடும்.

இதுல எங்க வீட்டுல இருந்த மரம் முருங்க மரம். சின்ன வயசுல கனத்த தாங்குச்சு. கொஞ்சம் பெருசான ஒடனே, டப்பு டப்புன்னு உடைஞ்சு விழும். அத பிடிச்சுட்டு தொங்குறப்போ, அது மட்டுமா விழும். நானும் சேந்து தான் விழுவேன். பல முறை ரத்தக்காயம் பாத்துருக்கேன். வீட்ல சொன்ன அதுக்கு வேற அடி விழும்ல. அதனால மூச்.

இப்புடி எல்லாம் நான் கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது தான் கேபிள் வந்துச்சு. என் நண்பர்கள் எல்லார் வீட்டுலயும் வாங்கிட்டாங்க. எங்க வீட்டுல மட்டும் முடியாது அப்டினுட்டாங்க. ஏன்னா, அது இருந்த படிப்பு கெட்டுடுமாம். அவ்வளவு நம்பிக்கை.

இவங்க குடுக்காட்டி என்ன, நம்மாலே கனெக்ஷன் குடுத்துக்கலாம்னு ப்யூஸ் போடுற வயர் எடுத்துட்டு மேல ஏறிட்டேன். ஏன்னா, அந்த பக்கத்து வீட்டுக்கு போற கேபிள் கனெக்ஷன் எல்லாம் பிரியுற ஜங்ஷன் பாக்ஸ் நம்ம வீடு மாடியில தான் இருந்துச்சு. அந்த ஜங்ஷன் பாக்ஸ்ல இருந்து டைரக்டா கனெக்ஷன் குடுத்தா படம் நல்லா தெரியும்னு ஒரு நம்பிக்க. ஜங்ஷன் பாக்ஸ் பக்கத்துல இருக்க வயர் ல ஒரு ஊசிய குத்தி, அதே மாதிரி நம்ம ஆண்டெனா வயர்ல ஒரு ஊசிய குத்தி, ரெண்டுக்கும் ப்யூஸ் வயர் வச்சி கனெக்ஷன் குடுத்துட்டேன்.

அப்டியே விட்டா கேபிள்காரன் வரப்போ கண்டுபிடிச்சுடுவானே. அதுனால ஜங்ஷன் பாக்ஸ் பக்கத்துல இருக்க ஊசி மேல ஒரு சின்ன கயறு கட்டி, அத வீட்டு ஹால் வரை இழுத்துட்டு வந்துட்டேன். கேபிள்காரன் வரான்னு தெரிஞ்சா, அந்த கயற பிடிச்சு ஒரே இழு. ஊசி கயறோட வந்துரும். இப்படியே ஒரு மூணு வருஷம் இலவசமா எல்லா சேனலும் பாத்தேன். நான் மட்டும் இல்ல.. கேபிள் குடுத்தா படிப்பு கெட்டுடும்னு சொன்ன பொன்மனசெம்மல்கள் கூட அத தான் பாத்தாங்க.

அப்புறம் நான் பத்தாப்பு படிக்கிறப்போ, வீடு மாறி இப்போ இருக்க வீட்டுக்கு வந்துட்டோம். இங்க வந்தா கேபிள் கனெக்ஷன் குடுக்க வழி இல்ல. அதுக்குள்ள நம்ம பொன்மனச்செம்மல்கள் அதுக்கு அடிமை ஆகிட்டாங்க. கரெக்டா நான் +2 வந்த ஒடனே வீட்டுக்கு கேபிள் கனெக்சன் வந்துடுச்சு.

அப்பறம் எல்லாம் நாசமா போச்சு. என் ஆண்டெனாவெ இப்போ ஒரு காட்சிப்பொருளா தான் இருக்கு. என் பிள்ளைக்கு காட்டுறதுக்காக மிச்சம் வச்சிருக்கேன்.

ஒரு காலத்துல எங்க பாத்தாலும் ஆண்டெனாவா தான் தெரியும். இப்போ எல்லாம் மொட்ட மாடில தட்ட கவுத்தி வச்சிருக்காய்ங்கே. எங்க போய் முடியுமோ! காதுல கம்பி கோத்து, தலைல தட்டு கவுத்தாத வரை சரிதான்.