தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு

தலப்பாகட்டி பிரியாணி தெரியுமா? இது அதுவல்ல. இது தாலாட்டு பற்றியது. தாலாட்டு என்றால் குழந்தையையோ குழந்தை மனமுடைய என்னைப் போன்ற பெரிய குழந்தையையோ தூங்க வைக்க அம்மாக்களோ இல்லை என்னை போன்ற அப்பாக்களோ பாடும் ஒரு பாடல். தமிழ் விக்கிஷனரியில் பார்த்து சரியான விளக்கம் அளிக்க மனம் ஒப்பவில்லை. ஏனெனில் நீங்கள் எப்படியும் நான் எழுதிய மேற்கூறிய விளக்கத்தை கூகிளில் சரி பார்ப்பீர்கள் அல்லவா?

தாலாட்டு பாடுவது ஒரு கலை. எல்லாரும் தாலாட்டு பாடிவிட முடியாது. தாலாட்டு பாட மிக முக்கியமான தகுதி ஒன்று உண்டு. நீங்கள் அப்பாவாகவோ இல்லை அம்மாவாகவோ இருக்க வேண்டும் என்பதல்ல. உங்கள் காந்தக்குரலில் சிக்குண்டு அந்த குழந்தை உறங்க வேண்டும். கட்டைக்குரலில் தாலாட்டுப் பாடி குழந்தை தொட்டிலில் இருந்து இறங்கி ஓடுமாறு செய்தீர்களானால் தாலாட்டு பாடும் தகுதியை நீங்கள் இழந்தவர் ஆவீர்கள்.

நான் உயிர் வாழ்வதற்கு கோழிக்குழம்பு எவ்வளவு அவசியமாகிறதோ அவ்வளவு அவசியம் குழந்தையின் தூக்கத்திற்கு தாலாட்டு. கோழிக்குழம்பின் ருசி அறிந்து அடங்கும் பசி போல இனிமையான தாலாட்டு கேட்டு அடங்கும் குழந்தையின் அழுகை. தாலாட்டு பாடினால் குழந்தை மட்டும் தான் தூங்கும் என்பதல்ல. நானும் தூங்குவேன். நீங்கதான் சார் அந்த குழந்தையே என்று வியப்போர்க்கு – நான் குழந்தையல்ல.

பிறந்த குழந்தைக்கு தாலாட்டு பாடி உறங்க வைக்கும் பழக்கம் இன்று சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. எனக்கு என் அம்மா பாடிய தாலாட்டு ஞாபகம் இல்லை. அவ்வளவு சிறிய பிள்ளையாக இருக்கும் போது அதை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். இன்று என் பிள்ளைக்கு தாலாட்டு பாட வேண்டும் என்று ஆசை. ஆனால் நான் தகுதி இழந்தவன் ஆகிறேன். என் கட்டைக்குரல் கேட்டால் குழந்தை என்னை கட்டையால் அடித்து விரட்டியே விடுவான்.

அவன் அம்மாவை (என் மனைவி) பாட சொன்னேன். அவளுக்கு தாலாட்டு பாட தெரியவில்லை. சிறுத்தை படத்தில் வரும் ஆராரோ ஆரிரரோ என்னும் தாலாட்டை அவளது அலைபேசியில் ஓட விட்டு தூங்க வைக்கிறாள் குழந்தையை. அவ்வளவு செய்கிறாளே. மகிழ்ச்சி. அவள் அந்த பாட்டை பாட விட்டால் முதலில் தூங்குவது நானே. இவ்வளவு கஷ்டப்படுகிறாளே என்று கூகிளில் தாலாட்டு என்று தேடித் பார்த்தேன். அனைத்தும் சினிமா பாடல்களே. சில இடங்களில் சில கிடைத்தாலும் அந்த ஆராரோ ஆரிராரோ கேட்டால் தான் தூங்குகிறான் பிள்ளை.

தாலாட்டு ரொம்ப முக்கியம். நாம் அதை ஒரு வலைப்பதிவில் சேர்த்து வைக்க வேண்டும். வருங்கால அப்பன்களுக்கு அது ரொம்பவும் தேவைப்படும். தாலாட்டு பாடல்கள் கிடைக்காமல் நான் தவித்த தவிப்பு வேறு எந்த அப்பனுக்கும் வரக் கூடாது என்று நான் அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். என்னைப்போல் கஷ்டம் அறிந்த அப்பன்கள் இதற்கு முன் இதை செய்திருக்கலாம். செய்யாமல் போய் விட்டனர். தாலாட்டுப் பாடல்களின் சிறப்பை பல இடங்களில் சிறப்பாக புரிய வைத்துள்ளனர் சான்றோர். கீழ்க்காணும் கவிதையில் அதன் சிறப்பை தெளிவாய் காணலாம்.

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு – நம்
தாய் போலே இங்கு வேறாரு

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை

ஆவாரங் காடெல்லாம் நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா பொன்னாரம் கேட்டானா
சோறுக்கு வேண்டி நிக்கும் பேரு
பொன் மின்ன வெள்ளி மின்ன வைரங்கள் மின்ன
தொழிலாளி கைகள் படத்தான் வேண்டும்
தாய் உண்ண சேய்யும் உண்ண நாமென்றும் உண்ண
விவசாயி தான் உழைக்க வேண்டும்
ஏழை அவர் பாடு அது காற்றோடு போயாச்சு

ஏரோட்டி போனாலே எல்லோர்க்கும் சோறு
சோற்கேட்டு போவானே அவன் பாடும் பாட்டு
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை….

நாடாலும் பேரென்ன மாடோட்டும் பேரென்ன
யாராரு உன்னை பெத்ததாரு
விஞ்ஞானி ஆனாலும் மெஞ்ஞானி ஆனாலும்
தாய்தானே பெத்து போட்டா கூறு
பகலென்ன இரவும் என்ன என்றென்றும் இங்கே
ஆணுக்கு பெண்ணின் துணை வேணும்
வெயிலென்ன மழையும் என்ன காலங்கள் தோறும்
அன்புக்கு தாயும் இங்கு வேணும்
தாய்தான் படும் பாடு அதை உணர்வாயே கண்மணி

தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல் வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை – அந்த
பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு – நம்
தாய் போலே இங்கு வேறாரு.

பின்குறிப்பு: உங்களுக்கு வட நாட்டு பாடல்கள் வேண்டுமெனில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய வாத்சல்யம் என்னும் ஆல்பம் இணையத்தில் கிடைக்கிறது. மேலும் ஆங்கில குழந்தையாய் உங்கள் குழந்தையை வளர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நீங்கள் உட்பட்டிருப்பின் கூகிளில் “Lullaby” என்று தேடவும். நிறைய தரவிறக்கலாம்.

குடியின்றி அமையாது உலகடா!

குடி என்ற சொல் சிலருக்கு நடுக்கத்தைக் கொடுக்கும். சிலருக்கு நடுக்கத்தைத் தடுக்கும். நான் குடிப்பேனா குடிக்க மாட்டேனா என்பதை விட குடியை பற்றிய எனது பார்வை எத்தகையது என்று பார்த்தல் நலம். சில நேரங்களில் குடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பது நான் கண்ட நிதர்சனம். மேலும் நமது கொள்ளளவு அறிந்து அதற்குட்பட்டு குடிப்பது என்பது பெரிய தவறொன்றும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

பண்டைய காலம் தொட்டே, நம் மக்களும் சரி பிற இன மக்களும் சரி, போதை தரும் பானங்களை உண்டே வந்துள்ளனர். அது எத்தகைய பானம் என்பது அவர்களது காலத்தை பொறுத்து அவர்களது கலாசாரத்தை பொறுத்து மாறுபடும். எத்தகைய கலாசாரத்திலும் மதுவும் குடியும் சார்ந்த பழக்கவழக்கங்கள் தொன்றுதொட்டு புழங்கி வந்ததை நாம் வரலாற்றின் வாயிலாக காணலாம்.

சீனர்கள் கி.மு. 7000ல் சாராயம் வாற்றிய ஆதாரம் ஜியாகு மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சில ஒயின் சாடிகளே. இந்தியாவில் இருந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் சுரா என்ற பானம் பருகப்பட்டதின் ஆதாரம் நம் வரலாற்றில் உண்டு. அரிசி, கோதுமை, கரும்பு, மற்றும் திராட்சையில் செய்யப்பட்ட இந்த பானம் உழைக்கும் வர்க்கத்திற்கும் போர்வீரர்களுக்கும் மிக பிரியமானதை இருந்ததை நாம் அறிகிறோம். மது அருந்துதல் தொன்றுதொட்டு நம்மிடையே இருந்து வந்த போதிலும், நடுவில் வந்த ஜைன, புத்த மதங்கள் பறைசாற்றிய ஒழுக்க நெறிகளுடன் போட்டியிட்டு தழைக்கவே நம் சமயங்கள் கள்ளுண்ணாமையை ஒரு ஒழுக்க நெறியாக கொண்டன.

கள்ளுக்கு பல பெயர்கள் உண்டு – அரியல், தேறல், மது, தோப்பி என. ஆதித்தமிழரின் பானமான கள் பனை, தென்னை, ஈச்ச மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. பாளையை சிறிது கீறி விட்டு அதனை சுற்றி கலயம் ஒன்றை பொருத்தி மாலையோ இல்லை காலையோ இறக்கினால் அது கள்ளாகும். அந்த கலயத்தினுள் சிறிது சுண்ணாம்பை தடவி காயை சுற்றி கட்டினால் அது பதநீராகும். சோற்று வடிநீரை மூன்று முதல் நான்கு நாட்கள் புளிக்க வைத்து குடித்த காலமும் நம் வரலாற்றில் இருந்தது. கார் அரிசியில் நீருற்றி அடுத்த நாள் காலையில் நீராகாரமாய் அந்த நீரை உண்பது வண்டல் மண் வழக்கம். உழைப்பாளி வர்க்கம் அந்த சாறை நாள்பட வடித்து குடிக்கும்போது அது புளிப்பு சுவையுடன் சிறிது போதையை தருகிறது. சில நாட்களுக்கு பிறகு அந்த கார் அரிசிச் சோற்றை மீன்குழம்புடன் சேர்த்து உண்பார்கள். பண்டைய தமிழ் மக்கள் எத்தகைய மதுவை உட்கொண்டார்கள் என்று தெரியாது. ஆனால் இன்று மானம் கேட்டு போய் டாஸ்மாக் முன் நின்று உள்சென்று சாக்கடைக்கு நடுவே குடிக்கும் நிலைக்கு நம் தமிழ் சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் மது உண்பது ஒரு வாழ்க்கை முறையாக, கலையாக கருதப்படுகிறது. உலகில் உள்ள மிக வீரியமான பானங்களில் இந்தியரின் எந்த ஒரு பானமும் முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அவரவர் நாட்டு பானத்தை சிறப்பு செய்தே வருகின்றன. கீழ்க்காணும் சில மதுவகைகள் அவ்வாறே சிறப்பு செய்யப்பட்டவை ஆகும்.

கொரியாவின் சொஜூ – வோட்காவை போல் சுவையுடையது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் மூலமாக கொரியாவிற்கு பரவிய சாராயவார்த்தல் முறைகளால் அரிசியில் இருந்து வார்க்கப்பட்ட மதுவகை இது. இதன் சிறப்பு – உலகில் மிக அதிக அளவில் விற்பனையாகும் மது இதுவே.

செக் நாட்டின் அப்சிந்தே – உலகின் மிகவும் வீரியமான மது வகை. ஆர்ட்டிமீசியா அப்சிந்தியம் என்ற செடியின் இலைகளில் இருந்து வார்க்கப்பட்ட மது வகை இது. பச்சை தேவதை என்று அழைக்கப்படும் அப்சிந்தேவில் மதுசாரம் 75 சதவீகிதமாகும். உலகின் புகழ்பெற்ற சில ஓவியர்கள், கவிஞர்கள் அப்சிந்தே குடிப்பவர்களாய் இருந்ததை நாம் வரலாற்றின் வழி அறியலாம்.

ஜப்பானின் சாக்கே – அரிசியில் வார்க்கப்படும் ஒருவகை மது. ஜப்பானின் கலாசாரத்தோடு பிணைந்து இருக்கும் மதுவகை சாக்கே. இனிப்பாய் ஒயினைப்போல் இருக்கும் சாக்கேவில் மதுசாரம் வெறும் 20 சதவீகிதமாகும். கி.பி. 712ல் இருந்து சாக்கே பற்றிய குறிப்புகள் ஜப்பானிய வரலாற்றில் காணப்படுகின்றன.

மெக்ஸிகோவின் தெகிலா – இல்லை. ஷகிலா இல்லை. தெகிலா. மெக்ஸிகோவின் மிகவும் புகழ்பெற்ற மதுவகை. உலகில் பல பாகங்களில் பருகப்படும் இப்பானம் ஒரு கள்ளிச்செடியில் இருந்து உருவாக்கப்படுகிறது. தெகிலா உருவாக்கத்தில் மெக்ஸிகோவிற்கு தனி உரிமை வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த நாடும் தெகிலா என்ற பெயரில் இந்த கள்ளிச்செடி சாராயத்தை வார்க்க அனுமதி இல்லை. அது மெக்ஸிகோவிற்கே உரித்தானது. 40 சதவீகிதம் மதுசாரம் உள்ளது.

ரஷ்யாவின் வோட்கா – ஒன்றும் பெரிதாக இல்லை. உலகின் எந்த மூலையிலும் கிடைக்கக்கூடிய ஒரு பானம். எத்தனாலுடன் தண்ணீர் சேர்த்தால் வோட்கா தயார். ரஷ்யாவில் அருந்தப்படும் மதுவில் 99 சதவீகிதம் வோட்காவாகும். இதன் மதுசாரம் 40 சதவீகிதமாகும். வோட்காவை முதன்முதலில் காய்ச்சிய காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. 1174ல் முதல் சாராய வடிசாலை உருவாக்கப்பட்டது.

பிரேசிலின் கஷாஹ்சா – பிரேசிலின் ரம். நான்கு நூற்றாண்டுகளாக பிரேசில் மக்களின் மிகப் பிரியமான பானம். 48 முதல் 50 சதவிகிதம் மதுசாரம் கொண்டது. கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மது, கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகிறது.

உலகெங்கும் உள்ள நாடுகளில் அவரவர் நாட்டு பானத்தை மதித்து வருகையில் நமது நாட்டில் மட்டும் நம் நாட்டு பானமான கள்ளை எதிர்த்து வருவது ஏனோ? கேரளாவில் கள்ளுக்கடைகள் சாலைக்கு சாலை அருமையான கள்ளை வெறும் 40 ரூபாய்க்கு தருகையில் தமிழ் நாட்டில் கள் இறக்குவதும் அதை அருந்துவதும் எங்கனம் குற்றமாகும்? எனக்கு உள்ள மிகப்பெரிய வருத்தம் என்னவெனில் கள்ளுக்கடைகள் மிகுந்து இருக்கும் கேரளாவிலும் கூட்டம் கள்ளுக்கடைகள் முன் இல்லாமல் மதுக்கடைகள் முன் நிற்பதே.

ஒரு மரத்துக் கள் ஒரு மண்டலம் என்பது மருந்து.

ஒரு கலயம் கள் என்பது உணவு.

இதற்கு மேலும் கள்ளருமை சொல்ல எனக்கு அவசியம் இல்லை.

தமிழ்நாட்டு அரசின் கள் மற்றும் மது சார்ந்த கொள்கைகள் மிகவும் முரன்பட்டிருப்பதாய் எனக்கு தோன்றுவது ஒன்றும் வியப்பில்லை. சொந்தப் பிள்ளையை தூக்கி எறிந்து விட்டு அந்நியரின் பிள்ளைகளை ஊட்டி வளர்க்கும் பாராமுகம் கொண்ட தாயாய் எனக்கு தமிழக அரசு தோன்றுகிறது. கள் இறக்கி வாழ்ந்து வந்த சமூகம் இன்று மதுவை உள்ளிறக்கி நாசம் போவது இந்த அரசு அறிந்த ஒன்றல்லவா? இன்றும் ஆங்காங்கே திருட்டுத்தனமாய் கிடைக்கும் கள்ளை குடித்து விட்டு யாரும் யாருக்கும் எந்த தீங்கும் இழைப்பதில்லை. ஆனால் IMFL குடித்து விட்டு இந்த நாட்டின் குடிமக்கள் செய்யும் காரியங்களை தினமும் செய்தித்தாளில் படிக்கையில் ஏன் இந்த மானங்கெட்ட பிழைப்பு என்று கேட்கவே தோன்றுகிறது.

ஒன்று கள் இறக்க அனுமதி தாருங்கள். இல்லை பூரண மதுவிலக்கை கொண்டு வாருங்கள். நியாயம் அனைத்து வகை பானங்களுக்கும் பொதுவானதாகவே இருக்கட்டும்.

பி.கு: நாஞ்சில் நாடனின் “உண்ணற்க கள்ளை" படித்த பாதிப்பில் எழுதியது. மறுபடி அதை வாசிப்பது போலிருந்தால் பொறுத்தருள்க.

குழப்பத்தை எங்கே விட!

தெருவில் மழை பெய்து தண்ணீர் நிறைந்து இருந்தது. ஓரத்தில் சிறிதுபோல் தண்ணீர் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது. மழை விட்டு நெடுநேரமாகியும் தண்ணீர் ஓடுவது நிற்கவில்லை. ஓடும் தண்ணீர் ஒருபுறமிருக்க, தேங்கி நின்ற தண்ணீரில் குழப்பம் ஒன்று குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.

மிக மகிழ்வாய் விளையாடிக்கொண்டிருந்த குழப்பத்தை பார்த்து சிரித்தபடி சென்றனர் சிலர். மேலும் சிலர், குழப்பத்தை கொஞ்சம் பிய்த்து தங்கள் பைக்குள் போட்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர். யார் எவ்வளவு எடுத்துச் சென்ற போதிலும் குழப்பம் தன்னளவில் இம்மி கூட குறையாமல் அப்படியே விளையாடிக் கொண்டிருந்தது.

குழப்பம் ஏன் தண்ணீரில் விளையாடுகிறது? அதற்கு விளையாட இடமா இல்லை? உலகெங்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடலில் மனமென்னும் மைதானம் வைத்து கொடுத்த போதிலும் குழப்பத்திற்கு தண்ணீரில் விளையாட தான் பிடிக்கிறதோ? இல்லை குழப்பம் கொஞ்சம் குழம்பி வெளியே வந்து விளையாடுகிறதோ?

சரி. குழப்பத்திடமே கேட்டு விடலாம் என்று அருகில் சென்றேன். சென்றவுடன் என்ன ஆனதென தெரியவில்லை. என் கை கட்டுப்பாட்டை இழந்து குழப்பத்தை கொஞ்சம் பிய்த்து என் பையில் போட்டு விட்டது. நான் பயந்து போய்விட்டேன். இப்போது அந்த குழப்பத்தை எடுத்து வெளியில் விடுவதா இல்லை அதை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போவதா? குழப்பத்தை வெளியில் விட்டால் மறுபடி அது பழைய குழப்பத்தோடு போய் சேர்ந்து விடுமா?

அப்படி அது சேராவிடில் ஒரு குழப்பத்தை அனாதையாக்கிய பாவமல்லவா என்னைச் சேரும்! இதுவரை யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத எனக்கு அப்படி ஒரு பழிச்சொல் தேவையா? ஆகையால் அந்த குழப்பத்தை வீட்டிற்கு எடுத்து சென்றேன். உள்ளே நுழையும் போதே பயம், என் மனைவி என்ன சொல்வாளோ என்று. நான் பயந்தபடியே நடந்தது.

குழப்பத்தை பார்த்தவுடன் என் மனைவி பயந்து விட்டாள். மறுபடி அதை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வரும்படி சொன்னாள். சமாதானம் செய்தும் ஏதும் பலனில்லை. மனைவி ஒத்துக்கொள்ளாத போது எவ்வாறு குழப்பத்தை வீட்டில் வைத்து வளர்ப்பது? மறுபடி விட்டுவிட்டு வர சென்றேன்.

மறுபடி சென்ற போது குழப்பத்தை பற்றி யோசித்துக் கொண்டே சென்றேன். அதை எடுத்து என் பையில் போடும் வரை எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத அந்த குழப்பம் பையில் போட்டவுடன் என் வாழ்வின் போக்கை மாற்ற கூடிய பலமுடையதானதை நினைத்து வியந்தேன். சில நிமிடமே ஆனாலும் குழப்பம் நம்மை எப்படி ஆட்கொள்கிறது பாருங்கள். யோசித்தபடி மெல்ல தெருவிற்கு வந்தேன்.

மழையால் நனைந்த அந்த தெரு இப்போது காய்ந்து கிடந்தது. நீர் ஓடிய அறிகுறியே இல்லை. குழப்பம் விளையாடித் திரிந்த அந்த நீர் நிரம்பிய குட்டை இப்போது வெறும் பள்ளமாய் காட்சியளித்தது. அதில் விளையாடிக்கொண்டிருந்த குழப்பத்தைக் காணோம். இப்போது நான் என்ன செய்ய? உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்களேன். மீ தி ஒரே கன்பூசன்!

மழை பெய்யும் நேரம்

இன்றும் மழை பெய்தது. நான் என் குழந்தையின் பீத்துணிகளை அலசி முடிக்கையில் வெளியே கேட்ட பேரிரைச்சல் கேட்காமல் இருக்க முடியவில்லை. மதியம் மூன்று மணி இருக்கும். துணிகள் குவிந்து கிடந்தன. இல்லை. அலசுவதோ துவைப்பதோ அசிங்கமில்லை. நான் அதை பற்றி கவலைப்பட்டு அதை செய்யாமல் இருப்பவன் அல்ல.

நான் என் குழந்தையின் துணிகளை அலசுவதை பெருமையாகவே கருதுகிறேன். என் தாயும் தந்தையும் எனக்கு செய்ததை நான் என் பிள்ளைக்கு செய்வது கடமை தானே? கடமை செய்தற்கு பெருமை எதற்கு என்று கேட்காதீர்கள். காலம் மாறிப் போச்சு. கடமையை ஒழுங்காய் செய்தாலே நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். திருட்டை, கொள்ளையை, கொலையை செய்துவிட்டு பெருமையாய் பேசும் ஈனர்கள் உலவும் நாட்டில் கடமையின் பெருமையை பேசுவதில் தவறொன்றுமில்லை.

மழை பெய்ததென சொன்னேன் அல்லவா. அது இன்று மட்டுமல்ல. நான் துணி அலச ஆரம்பித்த நாளில் இருந்து பெய்கிறது. எனக்கு மழை பிடிக்கும். மழைக்கும் என்னை பிடிக்கும். எங்கள் இருவருக்கும் உள்ள சொந்தம் சுமார் முப்பதாண்டு காலம் எந்த ஊடலுமின்றி சீராக இருந்து வந்துள்ளது. நான் திடீரென உழைப்பதை பார்த்து வானம் விட்ட கண்ணீரே மழையோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது. மழை என்னை அவ்விதம் அவமானப்படுத்தாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

காப்பி குடிக்க வேண்டும் போலிருந்தது. மழை பெய்யும் நேரம் காப்பி குடித்ததுண்டா நீங்கள்? சூடான வடிகாப்பியோடு.. இல்லை காப்பியை காப்பி என்று அழைக்கவே எனக்கு விருப்பம். குளம்பி என்பது எனக்கு பிடிக்கவில்லை. மொழியின் வரையறைக்குட்பட்டு நான் எழுதுவதில்லை. ஆக, சூடான வடிகாப்பியோடு இளஞ்சூட்டில் வேக வைத்த பச்சைப்பயரையோ தட்டாம்பயரையோ அருந்தி உண்டால் வரும் சுகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா?

அத்தை மாமா ஊரில் இல்லை. மனைவி தூங்கி விட்டாள். காப்பிக்கு வழி இல்லை. துவைத்து குளித்து விட்டு வெளியே வந்தேன். துணியை வீட்டின் முதல் மாடியில் (ஆனால் கட்டிடத்தின் இரண்டாம் மாடி) காய போட்டேன். அப்போது தான் ஞாபகம் வந்தது. சட்டென மொட்டை மாடிக்கு ஓடினேன். அங்கு காய போட்டிருந்த வளர்ந்தவர்கள் அணிந்த உடைகள் எல்லாமும் மழையில் நனைந்திருந்தன. மெல்ல தலை உயர்த்தி மேலே பார்த்தேன். வானம் மேகமற்று இருந்தது. ஆனால் மழை பெய்தது. பக்கத்தில் ஒரு வானவில் தெரிந்தது.

வானவில் உண்மையில் ஒரு அதிசயம். நீங்கள் வானவில்லை ரசித்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன? யோசித்து பாருங்கள். சென்னையில் நான் இருந்த காலம் மொத்தமும் நான் வானவில்லை கண்டிருந்தாலும் ரசித்ததில்லை. இன்று எனக்கு பிடிக்காத துணி துவைக்கும் வேலையை செய்து விட்டு அலுப்போடு வெளியே வந்த போதும் எனக்கு அந்த ரசிக்கும் மனநிலை இருந்தது. இது இருப்பிடம் சார்ந்ததா? இல்லை என் மனநிலை சார்ந்ததா? தெரியவில்லை.

நனைந்த துணிகளை அப்படியே விட்டு விட்டு நான் கீழே வந்தேன். வரும் வழியில் முதல் மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை காய வைக்க காற்றாடியை ஓடச்செய்து விட்டு வந்தேன். ஏனெனில் முதல் மாடியில் மழை பெய்யாது. வெயில் அடிக்காது. வானவில் வராது. நானும் துணிகளும் மட்டுமே.

கீழே வந்து குழந்தையை போய் பார்த்தேன். முழித்துப் பார்த்தான். மெல்ல தூக்கியவுடன் சிரித்தான். பிறகு இன்னொரு பீத்துணி சேர்ந்தது நாளை துவைக்க! நாளைக்கு மழை பெய்யுமா?

விதி வலியதா?

விதி வலியது. ரொம்பவும். நாம் ஒன்றை மனதில் வைத்து வாழ்ந்து வந்தால், அது வேறொன்றை நமக்களிக்கும். நானும் விதியுடன் சில நேரங்களில் போராடியும் சில நேரங்களில் சமாதானம் பேசியும் எனக்கு வேண்டியதை பெற முயற்சி செய்திருக்கிறேன். ஆனாலும் விதி வலியது. அது என்னை தட்டி தூக்கி கடாசிவிட்டு வென்று விட்டு போய் இருக்கிறது.

என் வாழ்வில் எனக்கு ஆசைகள் அதிகம் இருந்த காலங்களில் நான் விதியுடன் பலமுறை தோற்றுப்போயுள்ளேன். ஆயினும்  மனமுவந்து விதியோடு நான் பயணிக்க ஆரம்பித்த கணத்தில் இருந்து நான் அதனிடம் தோற்கவில்லை. அதுவும் என்னை வெல்லவில்லை. இருவருக்கான பொதுப்பயணத்தில் பேச்சு எதுவும் இல்லாத போதிலும் பரஸ்பர புரிதலுடன் நாங்கள் பயணம் செய்து வருகிறோம்.

விதியை எதிர்த்து போராடி வென்றவன் என்று சிலரை பற்றி படிக்கும் போது சிரிப்பு சிரிப்பாக வரும். அப்படி வென்றால் அவன் விதி அதுதானே. பிறகெப்படி அவனோ அவளோ விதியை எதிர்த்து போராடி வென்றவராவார்கள்? மனித மனம் மழுங்கிப் போய் படிப்பதை அப்படியே ஒப்புக்கொள்ளும் ஒரு நலிந்த சுற்றுச்சார் நிலையில் தான் விதி வெல்கிறது. மற்ற நேரங்களில் அது நமக்கு ஒரு நண்பனாக, சில சமயம் எதிரியாக நம்முடனே பயணிக்கிறது.

நம் மக்களிடம் நான் காணும் ஒரு பொதுப்பழக்கம், விதியின் மேல் பாரத்தை போடுவது. என்னளவில் இதை சிறிது கூட ஒப்புக்கொள்ள முடியாது. நாம் செய்யும் காரியங்களின் விளைவுகளே நாம் பாரத்தை நம் மீது ஏற்றுகிறோமா இல்லை விதியின் மேல் போடுகிறோமா என்பதை முடிவு செய்கிறது. நன்றாக வந்தால் நாம் செய்வது. காரியம் கெட்டால் விதிக்குப் பழி.

விதி எனக்கு ஒரு சிறந்த நண்பனாக சில காலங்களாக இருந்து வருகிறது. இரண்டே காரணங்கள். ஒன்று, அது நம்மை எதிர்த்து எதுவும் பேசுவதில்லை. இரண்டு, அது நமக்கு நன்மை பயக்கும் காரியங்களையே செய்து வருகிறது. அது நமக்கு தீமை பயக்கும் வகையில் ஏதேனும் காரியம் செய்தாலும் அது நன்மையாய் முடிவது எங்கனம் என்று நான் அறியேன். அத்தகைய நேரங்களில் நான் விதியை என் சிறந்த நண்பனாகவும் மிகச்சிறந்த எதிரியாகவும் பார்க்கிறேன். எதிரியின்றி வளர்ச்சி ஏது?

இன்று வேலையின்றி வீட்டில் அமர்ந்து இருக்கும் நான் இவ்வாறு எழுதிக் கிறுக்குவது விதியா? இல்லை இதை நான் தேர்ந்தேடுத்து செய்கிறேனா? நான் என் வேலையை ஏன் விட்டேன்? விதியா? இல்லை. அது நானெடுத்த முடிவு. அதற்கு விதி என்றும் பெயர் வைக்கலாம். என் நலனுக்காகவும் என் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டும் நான் எடுத்த முடிவு சரியா தவறா என்னும் பட்டிமன்ற தலைப்பாக இதை நான் ஊன்றி பாகுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை.

சில நேரங்களில் நான் விதிக்கு விட்டுக்கொடுப்பதுண்டு. அவ்வாறே இதை கருதலாம். விதி வலியது. அதை நண்பனாக்குங்கள். நாம் போராடுவதற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன. விதியோடு ஏன்? சிலர் இன்னும் அதை புரிந்து கொள்ளாமல் போராடுவார்கள். ஏன் தெரியுமா? அதுதான் விதி.

ஒரு பாட்டில் டொரினோ

சரியாக, மிகச்சரியாக இருபத்து மூன்று நாட்களுக்கு முன்னே, நான் ஒரு வெயில் கொளுத்திய மதிய வேளையில் குளிர்பானம் தேடி அலைந்தேன். வீடு காலி செய்யும் வேலை நடந்து கொண்டிருந்தது. வீடு ஏன் காலி செய்யப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழும். வீடு காலி செய்யப்படும் நேரம் ஆகி விட்டதன் காரணத்தால் அது காலி செய்யப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்.

குளிர்பானம் எனக்கு பிடிக்காது. இருந்தாலும், வெயில் கிளப்பிய சூட்டின் காரணமாக வழிந்த வியர்வையினால் உண்டான தாகத்தினை தணிக்கும் பொருட்டு எப்போதேனும் சிறிது அருந்துவதுண்டு. சில நேரங்களில் மது அருந்தும் பொருட்டு குளிர்பானம் அதனுடன் சேர்த்து அருந்தியதுண்டு. ஆயினும் குளிர்பானம் எனக்கு பிடித்ததில்லை.

எனக்கு குளிர்பானங்கள் பிடித்த காலம் ஒன்று இருந்தது. மறவோனாய், திறவோனாய், விடலையாய், காளையாய் திரிந்த பருவம் அது. அப்போது குளிர்பானம் குடிப்பது மதிப்பிற்குரிய ஒரு பழக்கமாக எனக்கு தோன்றியதுண்டு. அதன் காரணமாகவே நான் அவற்றை அருந்த ஆரம்பித்தேன். அதற்கு முன் குளிர்பானங்களோடு எனக்கு இருந்த ஒரே தொடர்பு எங்கள் வீட்டிற்கு உறவினர் வரும் போது அதை வாங்கி வந்து அவர்கள் பருகுவதை உற்று நோக்கி சப்புக்கொட்டுவதே ஆகும். மிகவும் அதிர்ஷ்டமான சில நேரங்களில் எனக்கும் சில கோப்பைகள் பருகக் கிடைத்ததுண்டு.

கல்லூரி வந்த காலத்தில் எங்களுக்கு கலவைக்கு கிடைத்தவை பெப்சியும் கோக்குமே. அப்போதெல்லாம் எனக்கு சந்தேகம் ஒன்று வந்ததுண்டு.. இவை எல்லாம் கிடைப்பதற்கு முன் நம் மக்கள் சாராயத்தை எதனுடன் கலந்து உண்டு வந்தனர் என்று. இன்று யோசித்து பார்த்தால் தெரிகிறது – ஏன் நமது அரசு உலகமயமாக்கலை தொடர்ந்து ஆதரித்து வந்ததென்று. அப்படியே குடித்த சாராயத்தை கூட கலந்து குடிப்பதற்கு வந்தேறிகள் வழிவந்த பானங்களை நாம் உபயோகிக்கும் நிலை வந்து விட்டதே.

அந்த உறவினர் வரும் காலத்தே கிடைத்து வந்த குளிர்பானங்கள் யாவுமே இன்று காணக்கூட கிடைப்பதில்லை. குடிப்பது இரண்டாம்பட்சமே. இன்றும் உறவினர் வந்தால் ஓடிப்போய் குளிர்பானம் வாங்கி வரும் கிராமத்து பண்பாடு மாறவில்லை என் வீட்டில். ஆனால் வாங்கி வரும் குளிர்பானம் மட்டும் மாறிப்போனது. அழகான ஆரஞ்சு நிறத்தில் கிடைத்து வந்த டொரினோவும் கோல்ட் ஸ்பாட்டும் காணமல் போனது. காளிமார்க் மட்டுமே இன்றைய கடும் போட்டியில் போவோண்டோ மூலமும் பன்னீர் சோடா மூலமும் மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கிறது.

டொரினோ அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த காலத்தில் அதை பற்றிய அருமை தெரியாமல் கோக்கும் பெப்சியுமான விஷங்களை அருந்திக்கொண்டிருந்த எனது மடமை எப்போது என்னை விட்டொழிந்து போனது என்றெனக்கு தெரியவில்லை. ஆயினும் கல்லூரி முடித்த காலத்தில் இருந்து எனது முதன்மையான பானம் போவோண்டோவாகிப் போனது. டொரினோ கிடைக்கவில்லை அப்போது. கோல்ட் ஸ்பாட் மாயமாய் மறைந்து போனது. இன்று முதுமகனாய் தேடி பார்க்கிறேன். இவையெல்லாம் எளிதாய் கிடைப்பதில்லை.

இன்று இவைகள் அழிவின் விளிம்பில் தத்தளித்தாலும் அது மீண்டு வரும் என்ற நம்பிக்கை உண்டு.  இரண்டு மாதங்களுக்கு முன்பு என் தங்கை எனக்கு ஒரு டொரினோ பாட்டில் பரிசளித்தாள். என் நண்பர்கள் எனக்கு வழங்கிய க்லேன்லிவட் 21 வருடங்கள் வாற்றப்பட்ட ஸ்காட்ச்சை விட பெரிய பரிசாக அந்த டொரினோ பாட்டில் எனக்கு தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன், திருநெல்வேலியில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அதில் வந்த ஒரு அலைவரிசையில், அந்த பழைய டொரினோ விளம்பரம் புது பொலிவுடன் ஓடிக்கொண்டிருந்தது. இளமையான விக்ரம் நடித்த விளம்பரப்படம் அது.

இன்றும் எனக்கு சில கேள்விகள் எழுவதுண்டு. நமது மக்கள் தயாரித்த அந்த பானங்களில் இல்லாத எந்த சுவையை நாம் இந்த வந்தேறிகள் கொடுத்த அக்காமாலாவிலும் கப்சியிலும் கண்டு விட்டோம்? நாக்கில் பட்டதும் ஜிவ்வென்று அன்னத்தை குளிர்வித்து இரைப்பையில் இறங்கும் வரை குளிர் தெரியும் டொரினோவையோ போவோண்டோவையோ இவைகள் மிஞ்சி விட்டனவா? இயற்கையான சர்க்கரை சேர்த்து காற்றின் அழுத்தம் ஏற்றி வந்த பன்னீர் சோடாவின் சுவையையோ சீரணிக்கும் ஆற்றலையோ 7 அப்போ மவுன்ட்டன் டியூவோ தருமா?

எதன் பின்னால் நாம் இப்படி அலைகிறோம்?

இன்றும் போவோண்டோவை மட்டுமே குளிர்பானமாய் கருதும் நண்பர்கள் எனக்குண்டு. மதுரை சென்றால் ஜிகர்தண்டாவும் பிற ஊர்களுக்கு சென்றால் கிடைக்கும் சர்பத்தும், இதர சில பானங்களும் நமக்கு வேறெங்கும் கிடைப்பதில்லை.

முடிவாய் ஒன்று சொல்கிறேன். இவை அழிவதற்கு முன் இவற்றை ருசித்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் வாழ்வில் நீங்கள் ஒரு முக்கியமான சுவையை அறியாதவராகி விடுவீர்கள்.

அது சரி. எனது தேடல் என்னவானது என்றதற்கு பதில் உங்களுக்கு இப்போது தேவை இல்லாததாகி விட்டது. ஆயினும் சொல்கிறேன்.. எனக்கு கிடைத்தது ஒரு பாட்டில் டொரினோ. முழு பாட்டிலையும் குடித்து விட்டு குப்புற கவிழ்ந்தேன்.

முனைத்தோல் வெட்டு

பேச அசூயைப்படும் ஒரு தலைப்பை விளம்பரம் வேண்டி தேர்ந்தெடுத்த எனது மூளைக்கு ஒவ்வொரு நாளும் உண்ண வேறு வேறு புத்தகங்கள் தேவைப்படும். ஒரு நாள் உணவை நான் தராவிடில் மூளை எனது மனதை மயக்கி என் கைகளையும் கண்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து, அதன் உணவை பறித்து உண்ணும்.

அப்படிப்பட்ட ஒரு நாளில் நான் வாசிக்க நேர்ந்த புத்தகம் தான் இது. புத்தகத்தின் தமிழாக்கப்பட்ட தலைப்பு இதுவே – “பூள் முனைத்தோல் வெட்டு – உலகின் மிக சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சையின் வரலாறு.” பூள் என்பது அசூயை கொள்ள வேண்டிய ஒரு வார்த்தை அல்லவே. அது ஆணின் உடலில் இருக்கும் ஒரு பகுதி. மேல சொல்லவேண்டுமென்றால் மனித இனத்தின் இருப்பை உறுதி செய்ய பயன்படும் ஒரு கருவி எனக்கொள்ளலாம்.

ஆதி காலம் தொட்டே, பல்வேறு சமநிலைக் கலாச்சாரங்களில் இந்த முனைவெட்டு முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதி காலத்தில், மதமும் மருத்துவமும் அறிவியலின் பாற்பட்டு விலகி வெவ்வேறு துறைகளாகும் முன்னமே, இந்த பழக்கம் இக்கலாசாரங்களில் விளங்கி வந்துள்ளது. முதன்முதல் முனைவெட்டின் ஆதாரம் ஒரு எகிப்திய கல்லறையின் மேல் வரையப்பட்ட ஒரு ஓவியமே. சக்காராவின் பெரும் இடுகாட்டில் உள்ள அன்க்மகோரின் கல்லறையின் மேல் வரையப்பட்ட பல்வேறு ஓவியங்களின் மத்தியில் காணப்படும் ஒரு ஓவியத்தில் இரு பூசாரிகள் இரு இளைஞர்களின் பிறப்புறுப்பை வெட்டும் காட்சி விளக்கப்பட்டுள்ளது.

image

கி.மு. 23ஆம் நூற்றாண்டில் யுஹா என்பவர் எழுதிய கூட்டு முனைவெட்டு குறித்த ஒரு அறிக்கையும் இதை உறுதி செய்கிறது. முனைவெட்டை பற்றி முப்பது பதிவுகள் போட்டு அதை விளம்பரம் செய்து புகழ் தேடும் அளவுக்கு என் மூளையின் வீச்சு மங்கி விடவில்லை. அனைவரும் போய் அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். படிக்க பிடிக்காவிட்டால், படியுங்கள். அப்போது தான் அறிவு வளராவிட்டாலும் வரலாறாவது ஆகும்.

270 பக்கங்கள் கொண்ட இந்த நூலினை அனைவரும் படிக்க முடியா. மனித இனத்தின் பரிமாண வளர்ச்சியை அறியும் ஆவல் கொண்டோர் மட்டுமே படிக்க வேண்டிய நூல் இது. பிறரிடம் தம் அறிவை காட்டி மெச்சி கொள்ள நினைத்து சீன் போடும் என்னைப் போன்ற சிலரும் படிக்கலாம்.

என்னுடையதை மூடும் முன், உங்களுக்கு ஒரு தகவல். பெண்களுக்கும் முனைவெட்டு உண்டு வரலாறில். 1994லில் டோகோ என்ற நாட்டிலிருந்து பாவ்ஜியா கசின்ட்ஜா என்ற பெண் அமெரிக்காவிற்கு போலி கடவுச்சீட்டில் வந்தாள். அகதியாக வேண்டி விண்ணப்பித்த அவள் தெரிவித்த காரணம்: அவள் மீண்டும் அவளது நாட்டிற்கு சென்றால் அவளுக்கு அவளது பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்து அவளை ஏற்கனவே மணமாகி மூன்று மனைவிகளையுடைய வயதான ஒருவனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். கசின்ட்ஜாவுக்கு நியாயம் கிடைக்க நேரமானது. ஆனால் அவள் மூலமாகவும், அவளுக்கு ஆதரவாகவும் பலர் வெளியே வந்தனர். அப்படி வெளியே வந்தவர் தான் வாரிஸ் டிரி. “பாலைவன மலர்கள்" என்ற பெயரில் இவர் எழுதி வெளியிட்ட நூல் பேரும் பரபரப்பை கிளப்பியது. 1999ல் பிரெஞ்சு நீதிமன்றம் ஒரு ஆப்பிரிக்க பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த பெண் செய்த குற்றம்: பத்து வயதிற்குட்பட்ட 48 பெண்களுக்கு அவர்களின் பிறப்புறுப்புகளை வெட்டியது.

மேலும் சொல்லிக்கொண்டே போகலாம். படியுங்கள். புத்தகத்தின் ஆங்கில தலைப்பு – Circumcision – A history of the World’s most controversial surgery.

மின்புத்தகம் வேண்டுமேன்போர் கூகிளில் தேடி கண்டு கொள்ளலாம். இருக்கிறது என்பது மட்டுமே நான் சொல்லும் தகவல்.

கொண்டக்கடலை சமோசாவும் ஒரு கப் ரோஸ்மில்க்கும்

நெல்லை கடைவீதியில் இருட்டு கடை அல்வா கடைக்கு மிக அருகில் உள்ள இருட்டான சந்தில் எதுவுமில்லை. அதற்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் சிறு பிள்ளைகள் படிக்கின்றனர். சிறு பிள்ளைகள் இடைவேளையில் அல்வா வாங்கி சாப்பிடுவதில்லை. அவர்களும் மாங்காயும், பிங்கர் அப்பளமும், கடுக்காயும், இலந்தைப்பழமும், கம்மர்கட்டும், மற்றும் சிலவும் கிடைத்தாலும் அவர்கள் அல்வா வாங்குவதில்லை. நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் வெளியூர் பிரயாணிகள் கம்மர்கட்டையும், கடுக்காயையும் கண்டு கொள்ளாமல் அல்வா வாங்கி தின்பதிலேயே என் முழு கவனம் உள்ளது. நான் பள்ளிச்சிறார்களை கண்டு கொல்வதில்லை. ஏனெனில் என் மனம் முழுதும் சமோசாவும் ரோஸ்மில்க்குமே உள்ளது.

கொண்டக்கடலை போட்டு சமோசா செய்வது வெங்காயமும் சேர்த்து. வெங்காயம் இன்றி செய்யப்பட்ட சமோசா விலை போனாலும், அது விலை அதிகம் என கருதப்படும். வெங்காயம் விலை குறைப்பிற்கான ஒரு காரணமாயினும் அது சமோசாவின் சுவையை அதிகரிக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. வெங்காயம் அற்ற கொண்டக்கடலையை மட்டும் உள்ளடக்கிய வெள்ளை சமோசா சுவைக்கும் போது சுவையற்று மாவை சவைப்பது போலும் இருப்பது இயற்கையின் திருவிளையாடல் அன்றி வேறென்ன?

ரோஸ்மில்க் குடிப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா என்று கேள்வி எழுப்பினால், முன் வரிசையில் நின்று நல்லதே என்று உரக்க கத்தும் கூட்டத்தில் உள்ள இருவர் ரோஸ்மில்க்கே குடித்ததில்லை. அதேபோல் கெட்டதே என்று கத்தும் கூட்டத்துள் இருக்கும் மூவர், யாரும் காணாத போது திருட்டுத்தனமாய் ரோஸ்மில்க் குடிக்கும் சுவை அறிந்தவர்களாய் இருக்கலாம். இது உண்மையில் ரோஸ்மில்க் பற்றிய ஒரு பதிவே. ஆனாலும் வெங்காயமும் கொண்டக்கடலையும் சேர்ந்த சுவை மிகுந்த சமோசா ஒரு பதிவில் அதற்கான இடத்தை எடுத்துக்கொள்கையில் அதை மறுக்கும் அதிகாரம் எனக்கு இல்லாமல் போய் விட்டது.

மின்னல் வெட்டும் ஒரு மழை இல்லாத நாளின் பகலில், போத்தீசில் மஷ்ரூம் வாங்க போன எனக்கு, இந்த சமோசாவும் ரோஸ்மில்க்கும் பரிச்சயமானது ஏதோ காரணத்தின் காரணமாகவே. சமோசா சாப்பிட்டு ரோஸ்மில்க் குடித்த இரவில் மின்னல் வெட்டி மழை பெய்யாதது யார் செய்த குற்றமோ? மின்னலுக்கும் வெங்காயம் சேர்த்த சமொசாவுக்கும் ஏதேனும் தொடர்புண்டோ? கொடும் மின்னலோடு கூடிய கொட்டும் மழை இரவில் சூடான சமோசா உண்பதில் உங்களுக்கு எவ்வளவு இன்பமுண்டோ, அந்த இன்பம் எனக்கும் உண்டு. ஆனால் மழை நாளில் உண்ணப்படும் ஒரு சமோசாவிற்க்கும் பளீரென்று வெயில் சுடும் நேரத்தில் குடிக்கப்படும் ஒரு ரோஸ்மில்க்கிற்க்கும் என்னவொரு இன்பம் இருக்கும்? சமோசா உண்ணப்படுவதும் ரோஸ்மில்க் குடிக்கப்படுவதும் அவற்றின் அழிவா இல்லை ஆக்கமா?

பதிலில்லை என்னிடம்.

ஆனால் எடுக்க எடுக்க குறையாத வெங்காயம் நிரம்பிய சமோசாவும் அதீதமாக குளிரூட்டப்பட்ட ரோஸ்மில்க்கும் என்னிடம் நிறைய உண்டு. அவைகளை நான் என் கனவிலிருந்து தானே தருவிக்கிறேன்.

உண்ணற்க கள்ளை – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனை நான் வாசித்ததில்லை. நாஞ்சில் வட்டார சொல் அகராதி மட்டும் வாங்கினேன் படிக்க. ஆனால் அதை பயன்படுத்தும் நிலை இன்று வரை எனக்கு நேரவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் என் தங்கையின் நண்பன் முத்துவேல் எனது வீட்டிற்கு என்னை சந்திக்க வந்திருந்தான். பேசிக் கொண்டு இருக்கையில் கள் பற்றி பேச்சு வந்தது.

கள் பற்றி நாஞ்சில் நாடன் சில அருமையான கட்டுரைகள் எழுதி உள்ளதாக என்னிடம் கூறினான். அதில் ஒன்றை வாசித்தும் காண்பித்தான். அதுவே நீங்கள் கீழ்க்காணும் கட்டுரை.

அவன் வாசித்த விதமும், நாஞ்சில் நாடனின் எழுத்து நடையும் என்னை மெய்மறக்கச் செய்தது. சொற்றொடர்களின் வலிமையையும் ஞா.ஞாவின் அர்த்தமுள்ள கேள்விகளும் என்னை முழுமையாகக் கவர்ந்தது. அந்த காரணங்களினாலேயே இதை இங்கு பகிர்கிறேன்.

கள் பற்றி நான் கொண்டிருந்த கருத்தை மேலும் சீர்படுத்தும் வகையில் எழுப்பப்பட்ட கேள்விகளால், நான் திகைத்துப்போய் நிற்கிறேன். படித்து ரசித்ததை பகிராத பாவி என இனி என்னை பழிக்க முடியாது.

கள் ஆதித்தமிழரின் பானம். நினைவில் வைத்திருப்போம் என்றும். இனி படித்து ரசியுங்கள்.

உண்ணற்க கள்ளை 1உண்ணற்க கள்ளை 2உண்ணற்க கள்ளை 3உண்ணற்க கள்ளை 4உண்ணற்க கள்ளை 5உண்ணற்க கள்ளை 6உண்ணற்க கள்ளை 7உண்ணற்க கள்ளை 8உண்ணற்க கள்ளை 9

 

என்னவொரு முடிவுரை – “கள் கிட்டாது, எனவே வெட்டென மற!” Winking smile