ஆந்தை – ஒரு விந்தை!

சென்னை ட்ரெக்கிங் கிளப்போட ஒரு நாள் நாகலாவுக்கு ட்ரெக்கிங் போயிருந்தேன். அங்க போனப்போ கார எல்லாம் ஒரு நல்ல பெரிய மாங்கா மரத்தடில நிறுத்திட்டு அப்பறம் உள்ள நடந்து போகணும்.

வண்டிய நிறுத்திட்டு சாப்பாட எல்லாரும் எடுத்து வச்சிட்டு இருந்தப்போ யாரோ கூப்பிட்டு ஒரு குட்டிப்பறவை விழுந்து கெடக்குன்னு சொன்னாங்க. அங்க போய் பாத்தா அது ஒரு ஆந்தை. சின்ன ஆந்தை. கூட்டுல இருந்து கீழ விழுந்து கெடந்துச்சு.

ஒடம்பு பூரா ஒரே எறும்பு (Fire ants). அத மெல்ல கைல எடுத்து ஒவ்வொரு எறும்பா எடுக்க ஆரம்பிச்சேன். முழுசா எடுத்து முடிக்கிறதுக்குள்ள எறும்புங்க என் கையையும் ஒரு கை பாத்துருச்சுங்க. ரெக்கைக்குள்ள கூட எறும்புங்க கடிச்சு வச்சதாலே ஆந்தை ரொம்ப மோசமான நிலைமைல இருந்துச்சு.

மெல்ல கைல எடுத்துகிட்டே மலைக்குள்ள போயிட்டோம். ஆந்தை பகல்ல ரெஸ்ட் எடுக்குங்கிறதாலே என்னோட கேமரா பைக்குள்ள அத விட்டுட்டோம். சாயங்காலம் மறுபடி மாங்கா மரத்துக்கு வந்த அப்பறம் அந்த குட்டி ஆந்தைய அதோட கூட்டிலேயே விட்டுரலாம்ன்னு முடிவு பண்ணினோம். எவ்வளவோ முயற்சி பண்ணியும் அதோட கூட்ட கண்டுபிடிக்கவே முடியல. அங்கேயே விட்டுட்டு வந்த மறுபடி அது எறும்புக்கு இரையாகிடும்ன்னு கைல வச்சிட்டே சென்னை வரைக்கும் கொண்டு வந்துட்டோம்.

வீட்டுக்கு வந்த அப்பறம் தான் ஆந்தைக்கு எதாச்சும் சாப்புட குடுக்கணும்னு தோணுச்சு. அது ராத்திரி ஆன ஒடனே கத்த ஆரம்பிச்சுது. சரின்னு சொல்லி ரெண்டு கட்டெறும்ப பிடிச்சு போட்டோம். லபக் லபக்ன்னு சாப்பிட்டுச்சு. ஆந்தைக்கு தண்ணி குடுக்கணும்னு ஒரு கிண்ணியில தண்ணி வச்சா அது அத சீண்டக்கூட இல்ல. என்னடா இது.. ஒரு ஆந்தைய கொன்ன பாவம் நமக்கு வேண்டாமுன்னு அத வலுக்கட்டாயமா பிடிச்சு வாய தெறந்து தண்ணிய ஒரு சிரிஞ்சு வச்சு உள்ள ஊத்தினோம். அதுக்கு அப்பறமும் அது கத்திக்கிட்டே இருந்துச்சு. எங்ககிட்ட எறும்பு தீந்து போச்சு. அதனால அது புழு தான் சாப்பிடும்னு ஒரு அனுமானத்துல கொஞ்சம் நூடுல்ஸ வேக வச்சு அது கிட்ட குடுத்தோம். அது லேசா தின்னு பாத்துட்டு மூஞ்சிலே துப்பிடுச்சு.

இது என்னடா சாமி மதுரைக்கு வந்த சோதனைன்னு மனோஜ் ஏதோ பழம் எல்லாம் வெட்டி போட்டான். அத அது திரும்பிக் கூட பாக்கல. அடப்போப்பான்னு ஆந்தைய அப்பிடியே விட்டுட்டு நாங்க தூங்கிட்டோம். காலைல எழுந்து பாத்த அது சாச்சு வச்ச பாயிக்கு பின்னாடி போய் ஒளிஞ்சுகிச்சு. சரி இனிமே இதுக்கு ராத்திரி தான் சாப்பாடு தேவைப்படும்னு அது என்னதான் திங்கும்ன்னு கூகிள் போட்டு பாத்தோம். அங்கதான் செம மொக்க வாங்கினோம்.

ஆந்தை புழு, பூச்சி, மற்றும் சில வகை அசைவ உணவுகள் மட்டுமே சாப்பிடும்னு போட்டுருந்தான். அத விட முக்கியமான விஷயம். ஆந்தை தண்ணியே குடிக்காதாம். அதுக்கு தேவையான தண்ணிய அது சாப்பிடுற உணவுல இருந்தே எடுத்துக்குமாம். ஆஹா இது தெரியாம ஒரு அப்பாவி ஆந்தைய அந்தலசிந்தல பண்ணிட்டமோன்னு ஒடனே கெளம்பி போய் கொஞ்சம் ஈரலும் கொஞ்சம் மீனும் வாங்கிட்டு வந்தோம்.

ராத்திரி ஆச்சு. ஆந்தை அப்போ தான் பாய்க்கு பின்னால இருந்து வெளிய வந்துது. அத பிடிச்சுட்டு வந்து அதுக்கு பக்கத்துல ஈரல எடுத்து வச்சோம். கோரபசில இருந்துச்சு போல. கண்ண மூடி திறக்குரதுக்குள்ள பூராத்தையும் தின்னுடுச்சு. மீனும் அப்பிடித்தான். போயே போச்சு.

அப்பறம் தான் எங்க அலப்பறை ஆரம்பமாச்சு. எனக்கு தெரிஞ்ச எவனும் ஆந்தை வளத்ததில்ல. நானும் மனோஜும் பண்ண அலப்பறைல ஆந்தையாருக்கு விருந்தாளிகள் நெறைய வந்துட்டாங்க. அலெக்ஸ், ராம், மற்றும் பலர் அங்க வந்து போட்டோ எடுத்துட்டு போனாங்க. அந்த ஆந்தைக்கு என்ன பேரு வைக்கலாம்ன்னு யோசிச்சுட்டே இருந்தோம். அவ்ல் (Owl) அப்பிடிங்கிற பேர கொஞ்சம் தமிழ்ப்படுத்தி அவுலாண்டின்னு பேரு வச்சிட்டோம்.

Rajanna Photography-1-40

அவரு காலைல எல்லாம் அமைதியா எதாச்சும் இருட்டான எடத்துல போய் ஒளிஞ்சுப்பார். ராத்திரி ஆனா தான் அவரு ரவுசு ஆரம்பிக்கும். ராத்திரி பூரா கத்திகிட்டு, அங்க இங்க சுத்திகிட்டே இருக்கும். அது ரொம்ப குட்டிங்கிறதாலே அதாலே பறக்க முடியல. நானும் இது நம்ம உருளுறப்போ நடுவுல மாட்டினா நசுங்கிடுமேன்னு அத ஒரு டப்பாக்குள்ளே வச்சுட்டு என் லேப்டாப்ப அதுக்கு மேல வெயிட்டு வச்சிட்டு படுப்பேன். அந்த பிக்காளி லேப்டாப்ப தள்ளி விட்டுட்டு ராத்திரி நம்ம தலைமாட்டுல நின்னுட்டு கத்தும். முடியல.

இதுக்கு நடுவுல அவுலாண்டி கொஞ்சம் கொஞ்சம் பறக்க ஆரம்பிச்சார். காத்தாடி போட்டா அடி பட்டுடுமேன்னு காத்தாடி போடாம, AC மட்டும் போட்டுட்டு தான் ரெண்டு நாள் தூங்கினோம். மெல்ல மெல்ல அவரு நல்லாவே பறக்க ஆரம்பிச்சார். ஒரு நாள் நான் ஆபிஸ்ல இருந்து வந்து அவர தேடினேன். காணவே இல்ல. மனோஜுக்கு போன் பண்ணி கேட்டா அங்கதாண்ணெ இருந்துச்சு அப்டின்னான். எங்க தேடியும் கிடைக்கல.

எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு. சொல்லாம கொள்ளாம பறந்து போயிட்டானேன்னு ரொம்ப வருத்தம். ஆனாலும் அந்த ஆந்தை பொழைச்சுருக்கும் ஒரு நம்பிக்கை. அதுக்கு அப்பறம் அந்த ஆந்தைய நான் பாக்கவே இல்ல.

இன்னைக்கும் நான் வீட்டுல ஆந்தை வச்சிருந்தேன்னு சொன்னா நெறைய பேரு நம்புறதில்லை. அவங்களுக்கு ஆந்தை ஒரு விந்தை. எனக்கு அது இன்னொரு பறவை. ஒரு உயிரை காப்பாத்தணும்னா இன்னும் ஆயிரம் ஆந்தைக்கு கறி வாங்கிப் போட நான் ரெடி. ஆந்தை தான் தேடி வரணும். வரும்.