மழை பெய்யும் நேரம்

இன்றும் மழை பெய்தது. நான் என் குழந்தையின் பீத்துணிகளை அலசி முடிக்கையில் வெளியே கேட்ட பேரிரைச்சல் கேட்காமல் இருக்க முடியவில்லை. மதியம் மூன்று மணி இருக்கும். துணிகள் குவிந்து கிடந்தன. இல்லை. அலசுவதோ துவைப்பதோ அசிங்கமில்லை. நான் அதை பற்றி கவலைப்பட்டு அதை செய்யாமல் இருப்பவன் அல்ல.

நான் என் குழந்தையின் துணிகளை அலசுவதை பெருமையாகவே கருதுகிறேன். என் தாயும் தந்தையும் எனக்கு செய்ததை நான் என் பிள்ளைக்கு செய்வது கடமை தானே? கடமை செய்தற்கு பெருமை எதற்கு என்று கேட்காதீர்கள். காலம் மாறிப் போச்சு. கடமையை ஒழுங்காய் செய்தாலே நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். திருட்டை, கொள்ளையை, கொலையை செய்துவிட்டு பெருமையாய் பேசும் ஈனர்கள் உலவும் நாட்டில் கடமையின் பெருமையை பேசுவதில் தவறொன்றுமில்லை.

மழை பெய்ததென சொன்னேன் அல்லவா. அது இன்று மட்டுமல்ல. நான் துணி அலச ஆரம்பித்த நாளில் இருந்து பெய்கிறது. எனக்கு மழை பிடிக்கும். மழைக்கும் என்னை பிடிக்கும். எங்கள் இருவருக்கும் உள்ள சொந்தம் சுமார் முப்பதாண்டு காலம் எந்த ஊடலுமின்றி சீராக இருந்து வந்துள்ளது. நான் திடீரென உழைப்பதை பார்த்து வானம் விட்ட கண்ணீரே மழையோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது. மழை என்னை அவ்விதம் அவமானப்படுத்தாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

காப்பி குடிக்க வேண்டும் போலிருந்தது. மழை பெய்யும் நேரம் காப்பி குடித்ததுண்டா நீங்கள்? சூடான வடிகாப்பியோடு.. இல்லை காப்பியை காப்பி என்று அழைக்கவே எனக்கு விருப்பம். குளம்பி என்பது எனக்கு பிடிக்கவில்லை. மொழியின் வரையறைக்குட்பட்டு நான் எழுதுவதில்லை. ஆக, சூடான வடிகாப்பியோடு இளஞ்சூட்டில் வேக வைத்த பச்சைப்பயரையோ தட்டாம்பயரையோ அருந்தி உண்டால் வரும் சுகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா?

அத்தை மாமா ஊரில் இல்லை. மனைவி தூங்கி விட்டாள். காப்பிக்கு வழி இல்லை. துவைத்து குளித்து விட்டு வெளியே வந்தேன். துணியை வீட்டின் முதல் மாடியில் (ஆனால் கட்டிடத்தின் இரண்டாம் மாடி) காய போட்டேன். அப்போது தான் ஞாபகம் வந்தது. சட்டென மொட்டை மாடிக்கு ஓடினேன். அங்கு காய போட்டிருந்த வளர்ந்தவர்கள் அணிந்த உடைகள் எல்லாமும் மழையில் நனைந்திருந்தன. மெல்ல தலை உயர்த்தி மேலே பார்த்தேன். வானம் மேகமற்று இருந்தது. ஆனால் மழை பெய்தது. பக்கத்தில் ஒரு வானவில் தெரிந்தது.

வானவில் உண்மையில் ஒரு அதிசயம். நீங்கள் வானவில்லை ரசித்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன? யோசித்து பாருங்கள். சென்னையில் நான் இருந்த காலம் மொத்தமும் நான் வானவில்லை கண்டிருந்தாலும் ரசித்ததில்லை. இன்று எனக்கு பிடிக்காத துணி துவைக்கும் வேலையை செய்து விட்டு அலுப்போடு வெளியே வந்த போதும் எனக்கு அந்த ரசிக்கும் மனநிலை இருந்தது. இது இருப்பிடம் சார்ந்ததா? இல்லை என் மனநிலை சார்ந்ததா? தெரியவில்லை.

நனைந்த துணிகளை அப்படியே விட்டு விட்டு நான் கீழே வந்தேன். வரும் வழியில் முதல் மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை காய வைக்க காற்றாடியை ஓடச்செய்து விட்டு வந்தேன். ஏனெனில் முதல் மாடியில் மழை பெய்யாது. வெயில் அடிக்காது. வானவில் வராது. நானும் துணிகளும் மட்டுமே.

கீழே வந்து குழந்தையை போய் பார்த்தேன். முழித்துப் பார்த்தான். மெல்ல தூக்கியவுடன் சிரித்தான். பிறகு இன்னொரு பீத்துணி சேர்ந்தது நாளை துவைக்க! நாளைக்கு மழை பெய்யுமா?

நேற்று பெய்த காளான்

நேற்று பலமாய் குடையுடன் கூடிய காளான் பெய்தது. பெய்த காளானால் காளான் இன்றி வற்றிக்கிடந்த சில குட்டைகளும் ஆறுகளும் ஓடைகளும் நிரம்பித் தளும்பின. செம்மண் பூமி மொத்தமும் காளானால் பச்சையாய் மாறியது. கரிசல் மண் நிரம்பிய குட்டைகளும் காளான் பட்டதால் வெள்ளை நிறமாய் காட்சியளித்தன. காளான் பெய்த போது அதில் சில பெரிதாகவும் வண்ணமுடைய காளான்களாகவும் சில சிறிய வாசமுடைய காளான்களாகவும் இருந்தது. நான் காளானில் நனைவதை தவிர்க்க வாழைப்பாதையின் ஓரத்தில் இருந்த சிறு கடையில் நின்று வந்தேன்.

மொத்தம் மூன்று மணி நேரம் காளான் பெய்தது. காளான் பெய்கையில் நான் சிறுகடையில் வாங்கிய வாழைமலையை மெல்லத்தின்றேன். அந்த வாழை மிகப்பெரியது. அதன் உச்சியில்தான் மலை பயிரிடப்படுகிறதென அந்த சிறுகடைகாரன் சொன்னான். நான் அந்த மலையை தின்ற வேளையில் காளான் சற்று குறைந்தது. நானும் காளான் குறைந்துவிட்டதென நினைத்து பாதி தின்ற மலையை விழுங்கி விட்டு விறுவிறுவென நடக்கலானேன்.

சுமார் ஒரு முப்பத்து மூன்று அடிகள் எடுத்து வைத்திருக்கையில் காளான் வலுத்தது. காளானில் நனைந்தால் சளி பிடிக்கும். மனைவி திட்டுவாள். அதற்கு பயந்து நான் வைத்திருந்த சிறுகடையில் மலையோடு வாங்கிய வடையை தலைக்கு மேல் வைத்து நடந்தேன். வடையின் நடுவில் இருந்த ஓட்டை வழியாக காளான் இரண்டு என் தலை மேல் விழுந்தது. முழுக்க நனைந்து விட்டேன்.

நனைவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லா காளானிலும் நனைய முடியாது. சில காளான்கள் கல்லாய் பெய்யும். மண்டை உடைந்து விடும். ஒவ்வொரு முறையும் காளானில் நான் நனையும் போதும் இந்த நினைவு என்னை பயம் கொள்ளச் செய்யும். மண்டைதானே போனால் போகட்டும் என்று என்னை தைரியமூட்டிக்கொண்டு நனைவேன். இந்த நனைதல் நாம் மனமுவந்து ஏற்றுக்கொண்டால் தான் ருசிக்கும்.

ஒருவழியாய் அடுத்த கடையை அடைந்த போது காளான் சற்றே தணிந்தது. ஒரு தம் குடித்து டீ அடித்து மெல்ல வீடு நோக்கி நடந்தேன். வாழைப்பாதை மொத்தமும் பச்சையாய் குலுங்கிப் பூத்தது. இரு பூக்களில் இருந்து ஒரு வண்டு மெல்ல பறந்து வெளியே வந்தது. வண்டுகள் மட்டும் எப்படி காளானில் நனையாமல் பறக்கின்றன என்று பார்த்து அதைப்போல் செய்ய நினைத்தேன். பிறகு வடை வைத்தும் நனைந்த என் நிலைமை என்னை மறுபடி நிதர்சனத்திற்கு இட்டு வந்தது.

முடிவாய் வீடு வந்து சேர்ந்து ஆடை மாற்றி துணி அணிந்தேன். டிவியை போட்டு செய்திகள் கேட்ட போது காளானை பற்றியே செய்திகள் எதுவுமே வரவில்லை. ரமணன் கூட எதுவும் சொல்லாதது மிகவும் எமாற்றமளித்தது. என் மனைவிடம் கேட்ட போது அவளும் எதுவும் தெரியவில்லை என்றாள். அதைபற்றிய எண்ணங்களோடே தூங்கி விட்டேன்.

காலை எழுந்து வெளியே வந்து பார்க்கையில், பக்கத்து வீட்டு குழந்தை தேங்கி நின்ற காளான் குவியலில் விளையாடிக் கொண்டிருந்தாள். என்னை பார்த்தவுடன் ஓடி வந்து என் கை பிடித்து இழுத்து சென்று என் தோட்டத்தின் ஒரு மூலையை காட்டினாள்.

அங்கு அழகாய் முளைத்திருந்தது மழை, நேற்று பெய்த காளானில்!!