மழை பெய்யும் நேரம்

இன்றும் மழை பெய்தது. நான் என் குழந்தையின் பீத்துணிகளை அலசி முடிக்கையில் வெளியே கேட்ட பேரிரைச்சல் கேட்காமல் இருக்க முடியவில்லை. மதியம் மூன்று மணி இருக்கும். துணிகள் குவிந்து கிடந்தன. இல்லை. அலசுவதோ துவைப்பதோ அசிங்கமில்லை. நான் அதை பற்றி கவலைப்பட்டு அதை செய்யாமல் இருப்பவன் அல்ல.

நான் என் குழந்தையின் துணிகளை அலசுவதை பெருமையாகவே கருதுகிறேன். என் தாயும் தந்தையும் எனக்கு செய்ததை நான் என் பிள்ளைக்கு செய்வது கடமை தானே? கடமை செய்தற்கு பெருமை எதற்கு என்று கேட்காதீர்கள். காலம் மாறிப் போச்சு. கடமையை ஒழுங்காய் செய்தாலே நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். திருட்டை, கொள்ளையை, கொலையை செய்துவிட்டு பெருமையாய் பேசும் ஈனர்கள் உலவும் நாட்டில் கடமையின் பெருமையை பேசுவதில் தவறொன்றுமில்லை.

மழை பெய்ததென சொன்னேன் அல்லவா. அது இன்று மட்டுமல்ல. நான் துணி அலச ஆரம்பித்த நாளில் இருந்து பெய்கிறது. எனக்கு மழை பிடிக்கும். மழைக்கும் என்னை பிடிக்கும். எங்கள் இருவருக்கும் உள்ள சொந்தம் சுமார் முப்பதாண்டு காலம் எந்த ஊடலுமின்றி சீராக இருந்து வந்துள்ளது. நான் திடீரென உழைப்பதை பார்த்து வானம் விட்ட கண்ணீரே மழையோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது. மழை என்னை அவ்விதம் அவமானப்படுத்தாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

காப்பி குடிக்க வேண்டும் போலிருந்தது. மழை பெய்யும் நேரம் காப்பி குடித்ததுண்டா நீங்கள்? சூடான வடிகாப்பியோடு.. இல்லை காப்பியை காப்பி என்று அழைக்கவே எனக்கு விருப்பம். குளம்பி என்பது எனக்கு பிடிக்கவில்லை. மொழியின் வரையறைக்குட்பட்டு நான் எழுதுவதில்லை. ஆக, சூடான வடிகாப்பியோடு இளஞ்சூட்டில் வேக வைத்த பச்சைப்பயரையோ தட்டாம்பயரையோ அருந்தி உண்டால் வரும் சுகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா?

அத்தை மாமா ஊரில் இல்லை. மனைவி தூங்கி விட்டாள். காப்பிக்கு வழி இல்லை. துவைத்து குளித்து விட்டு வெளியே வந்தேன். துணியை வீட்டின் முதல் மாடியில் (ஆனால் கட்டிடத்தின் இரண்டாம் மாடி) காய போட்டேன். அப்போது தான் ஞாபகம் வந்தது. சட்டென மொட்டை மாடிக்கு ஓடினேன். அங்கு காய போட்டிருந்த வளர்ந்தவர்கள் அணிந்த உடைகள் எல்லாமும் மழையில் நனைந்திருந்தன. மெல்ல தலை உயர்த்தி மேலே பார்த்தேன். வானம் மேகமற்று இருந்தது. ஆனால் மழை பெய்தது. பக்கத்தில் ஒரு வானவில் தெரிந்தது.

வானவில் உண்மையில் ஒரு அதிசயம். நீங்கள் வானவில்லை ரசித்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன? யோசித்து பாருங்கள். சென்னையில் நான் இருந்த காலம் மொத்தமும் நான் வானவில்லை கண்டிருந்தாலும் ரசித்ததில்லை. இன்று எனக்கு பிடிக்காத துணி துவைக்கும் வேலையை செய்து விட்டு அலுப்போடு வெளியே வந்த போதும் எனக்கு அந்த ரசிக்கும் மனநிலை இருந்தது. இது இருப்பிடம் சார்ந்ததா? இல்லை என் மனநிலை சார்ந்ததா? தெரியவில்லை.

நனைந்த துணிகளை அப்படியே விட்டு விட்டு நான் கீழே வந்தேன். வரும் வழியில் முதல் மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை காய வைக்க காற்றாடியை ஓடச்செய்து விட்டு வந்தேன். ஏனெனில் முதல் மாடியில் மழை பெய்யாது. வெயில் அடிக்காது. வானவில் வராது. நானும் துணிகளும் மட்டுமே.

கீழே வந்து குழந்தையை போய் பார்த்தேன். முழித்துப் பார்த்தான். மெல்ல தூக்கியவுடன் சிரித்தான். பிறகு இன்னொரு பீத்துணி சேர்ந்தது நாளை துவைக்க! நாளைக்கு மழை பெய்யுமா?

ஒரு பாட்டில் டொரினோ

சரியாக, மிகச்சரியாக இருபத்து மூன்று நாட்களுக்கு முன்னே, நான் ஒரு வெயில் கொளுத்திய மதிய வேளையில் குளிர்பானம் தேடி அலைந்தேன். வீடு காலி செய்யும் வேலை நடந்து கொண்டிருந்தது. வீடு ஏன் காலி செய்யப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழும். வீடு காலி செய்யப்படும் நேரம் ஆகி விட்டதன் காரணத்தால் அது காலி செய்யப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்.

குளிர்பானம் எனக்கு பிடிக்காது. இருந்தாலும், வெயில் கிளப்பிய சூட்டின் காரணமாக வழிந்த வியர்வையினால் உண்டான தாகத்தினை தணிக்கும் பொருட்டு எப்போதேனும் சிறிது அருந்துவதுண்டு. சில நேரங்களில் மது அருந்தும் பொருட்டு குளிர்பானம் அதனுடன் சேர்த்து அருந்தியதுண்டு. ஆயினும் குளிர்பானம் எனக்கு பிடித்ததில்லை.

எனக்கு குளிர்பானங்கள் பிடித்த காலம் ஒன்று இருந்தது. மறவோனாய், திறவோனாய், விடலையாய், காளையாய் திரிந்த பருவம் அது. அப்போது குளிர்பானம் குடிப்பது மதிப்பிற்குரிய ஒரு பழக்கமாக எனக்கு தோன்றியதுண்டு. அதன் காரணமாகவே நான் அவற்றை அருந்த ஆரம்பித்தேன். அதற்கு முன் குளிர்பானங்களோடு எனக்கு இருந்த ஒரே தொடர்பு எங்கள் வீட்டிற்கு உறவினர் வரும் போது அதை வாங்கி வந்து அவர்கள் பருகுவதை உற்று நோக்கி சப்புக்கொட்டுவதே ஆகும். மிகவும் அதிர்ஷ்டமான சில நேரங்களில் எனக்கும் சில கோப்பைகள் பருகக் கிடைத்ததுண்டு.

கல்லூரி வந்த காலத்தில் எங்களுக்கு கலவைக்கு கிடைத்தவை பெப்சியும் கோக்குமே. அப்போதெல்லாம் எனக்கு சந்தேகம் ஒன்று வந்ததுண்டு.. இவை எல்லாம் கிடைப்பதற்கு முன் நம் மக்கள் சாராயத்தை எதனுடன் கலந்து உண்டு வந்தனர் என்று. இன்று யோசித்து பார்த்தால் தெரிகிறது – ஏன் நமது அரசு உலகமயமாக்கலை தொடர்ந்து ஆதரித்து வந்ததென்று. அப்படியே குடித்த சாராயத்தை கூட கலந்து குடிப்பதற்கு வந்தேறிகள் வழிவந்த பானங்களை நாம் உபயோகிக்கும் நிலை வந்து விட்டதே.

அந்த உறவினர் வரும் காலத்தே கிடைத்து வந்த குளிர்பானங்கள் யாவுமே இன்று காணக்கூட கிடைப்பதில்லை. குடிப்பது இரண்டாம்பட்சமே. இன்றும் உறவினர் வந்தால் ஓடிப்போய் குளிர்பானம் வாங்கி வரும் கிராமத்து பண்பாடு மாறவில்லை என் வீட்டில். ஆனால் வாங்கி வரும் குளிர்பானம் மட்டும் மாறிப்போனது. அழகான ஆரஞ்சு நிறத்தில் கிடைத்து வந்த டொரினோவும் கோல்ட் ஸ்பாட்டும் காணமல் போனது. காளிமார்க் மட்டுமே இன்றைய கடும் போட்டியில் போவோண்டோ மூலமும் பன்னீர் சோடா மூலமும் மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கிறது.

டொரினோ அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த காலத்தில் அதை பற்றிய அருமை தெரியாமல் கோக்கும் பெப்சியுமான விஷங்களை அருந்திக்கொண்டிருந்த எனது மடமை எப்போது என்னை விட்டொழிந்து போனது என்றெனக்கு தெரியவில்லை. ஆயினும் கல்லூரி முடித்த காலத்தில் இருந்து எனது முதன்மையான பானம் போவோண்டோவாகிப் போனது. டொரினோ கிடைக்கவில்லை அப்போது. கோல்ட் ஸ்பாட் மாயமாய் மறைந்து போனது. இன்று முதுமகனாய் தேடி பார்க்கிறேன். இவையெல்லாம் எளிதாய் கிடைப்பதில்லை.

இன்று இவைகள் அழிவின் விளிம்பில் தத்தளித்தாலும் அது மீண்டு வரும் என்ற நம்பிக்கை உண்டு.  இரண்டு மாதங்களுக்கு முன்பு என் தங்கை எனக்கு ஒரு டொரினோ பாட்டில் பரிசளித்தாள். என் நண்பர்கள் எனக்கு வழங்கிய க்லேன்லிவட் 21 வருடங்கள் வாற்றப்பட்ட ஸ்காட்ச்சை விட பெரிய பரிசாக அந்த டொரினோ பாட்டில் எனக்கு தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன், திருநெல்வேலியில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அதில் வந்த ஒரு அலைவரிசையில், அந்த பழைய டொரினோ விளம்பரம் புது பொலிவுடன் ஓடிக்கொண்டிருந்தது. இளமையான விக்ரம் நடித்த விளம்பரப்படம் அது.

இன்றும் எனக்கு சில கேள்விகள் எழுவதுண்டு. நமது மக்கள் தயாரித்த அந்த பானங்களில் இல்லாத எந்த சுவையை நாம் இந்த வந்தேறிகள் கொடுத்த அக்காமாலாவிலும் கப்சியிலும் கண்டு விட்டோம்? நாக்கில் பட்டதும் ஜிவ்வென்று அன்னத்தை குளிர்வித்து இரைப்பையில் இறங்கும் வரை குளிர் தெரியும் டொரினோவையோ போவோண்டோவையோ இவைகள் மிஞ்சி விட்டனவா? இயற்கையான சர்க்கரை சேர்த்து காற்றின் அழுத்தம் ஏற்றி வந்த பன்னீர் சோடாவின் சுவையையோ சீரணிக்கும் ஆற்றலையோ 7 அப்போ மவுன்ட்டன் டியூவோ தருமா?

எதன் பின்னால் நாம் இப்படி அலைகிறோம்?

இன்றும் போவோண்டோவை மட்டுமே குளிர்பானமாய் கருதும் நண்பர்கள் எனக்குண்டு. மதுரை சென்றால் ஜிகர்தண்டாவும் பிற ஊர்களுக்கு சென்றால் கிடைக்கும் சர்பத்தும், இதர சில பானங்களும் நமக்கு வேறெங்கும் கிடைப்பதில்லை.

முடிவாய் ஒன்று சொல்கிறேன். இவை அழிவதற்கு முன் இவற்றை ருசித்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் வாழ்வில் நீங்கள் ஒரு முக்கியமான சுவையை அறியாதவராகி விடுவீர்கள்.

அது சரி. எனது தேடல் என்னவானது என்றதற்கு பதில் உங்களுக்கு இப்போது தேவை இல்லாததாகி விட்டது. ஆயினும் சொல்கிறேன்.. எனக்கு கிடைத்தது ஒரு பாட்டில் டொரினோ. முழு பாட்டிலையும் குடித்து விட்டு குப்புற கவிழ்ந்தேன்.

ஓட்ட டேக்கும் தேஞ்ச காசெட்டும்

ஒரு இருவது வருஷத்துக்கு முன்னால, இப்போ இருக்குற மாதிரி டிவி, டிவிடி பிளேயர், ஹோம் தியேட்டர் எல்லாம் அப்போ கெடயாது. வீட்டுல டிவி இருக்கிறதே பெரிய விஷயம். இதெல்லாம் எவன் வீட்டுல இருக்கோ அவன்தேன் பணக்காரன், வல்லான்.

எங்க வீட்டுல ஒரு BPL டிவி இருந்துச்சு. டிவி மட்டும்தான் இருந்துச்சு. வேற இதர கொசுறுகள் எல்லாம் இல்ல. படம் பாக்கணும்னா தியேட்டருக்கு போகணும் இல்லாட்டி டேக்கு வாங்கணும்/வாடகைக்கு எடுக்கணும்.

அதென்ன டேக்குன்னு கேக்குரிங்களா? இப்போ இருக்க டிவிடி பிளேயர் மாதிரி அப்போ VCR, VCP எல்லாம் இருந்துச்சு. VCRனா வீடியோ கேசட் ரெக்கார்டர். VCPனா வீடியோ கேசட் பிளேயர். இதெல்லாம் சாமான்ய விலை கெடயாது. யான வெல குதிர வெல விக்கும்.

டேக்கு வாங்கணும்னா வெளிநாட்ல இருந்து வர்ற சொந்தக்காரங்க யாருக்காச்சும் லெட்டர் போட்டு சொல்லணும். கிளம்புறதுக்கு முன்னாடி போன் போட்டு சொல்லி ஞாபகப்படுத்தணும். அந்த புண்ணியவான் வர்றப்போ அத மட்டும் மறந்துட்டு வந்துடுவாரு. அதுக்கு பதில் தங்கக்காசு மாதிரி ஒரு சாக்லேட் தருவாரு. விதியேன்னு தின்னுட்டு கவர நோட்டுக்குள்ள வச்சுப்போம். ஸ்கூல்ல போய் பாரீன் சாக்லேட் சாப்புட்டேன்ன்னு பீத்திக்கணும்ல. அதுக்கு.

அந்த டேக்க வாடகைக்கு எடுப்போம். வாடகை ஒரு நாளைக்கு தான் எடுப்போம். அதுக்கு மேல எடுக்க பட்ஜெட் பத்தாது. அந்த டேக்குக்கு ஒரு நாள் வாடகை 100 ரூபான்னு நெனைக்கிறேன். ஒரு கேசட்டுக்கு 15 ரூபா. என்ன கொடுமைன்னா, எல்லாம் தேஞ்சு போன காசெட்டா இருக்கும். எடுத்துட்டு வந்து போட்டா, டேக்குல சிக்கிக்கும். உசுர குடுத்து பத்திரமா வெளிய எடுத்துட்டு போய் மாத்திட்டு வருவோம். பாதி படம் பாத்த அப்பறம் சிக்கிகிட்டா போச்சு. காசெட்டு கடைக்காரனும் மாத்திக்க மாட்டான். வீட்ல வேற திட்டுவாங்க.

இப்புடி நம்ம கதை ஓடிட்டு இருக்கப்போ, எங்க சித்தி வீட்ல டேக்க வாங்கிட்டாங்க. சந்தோஷமான சந்தோஷம். லீவு விட்ட ஒடனே போய் அந்த டேக்கயும் கூடவே இலவசமா வந்த ரெண்டு கேசட்டையும் எடுத்துகிட்டு வந்தாச்சு. அந்த ரெண்டு கேசட் என்னன்னா – ஒன்னு வீரபாண்டிய கட்டபொம்மன். இன்னொன்னு கிழக்கு சீமையிலே.

ரெண்டு படத்தையும் ரெண்டு ரெண்டு தடவ பாத்தும் ஆசை தீரல. டேக்கு ப்ரீயா கெடச்சதாலே கைல காசு புழங்குச்சு. அதனாலே ஓடிப்போயி Evil Dead, Evil Dead 2, Blob மாதிரி திகில் படமெல்லாம் எடுத்துட்டு வந்து பாத்தோம். எல்லாம் ரெண்டு நாலு தான். அப்பறம் காசு தீந்து போச்சு. மறுபடி வீ.பா.க.பொவும் கி.சீயும் தான்.

நமக்கு ஒரே குஜால்தான். வீட்டுக்கு எவனாச்சும் வந்தா செத்தாங்க! ஒடனே டேக்க எடுத்து மாட்டி அதுல அந்த ரெண்டு படத்தையும் போட்டு காட்டாட்டி எனக்கு தூக்கமே வராது. இதுல பசங்க எல்லாம் காசு போட்டு WWF கேசட் எல்லாம் வாங்கிட்டு வந்து பாத்தாங்க.

ஆனா ரிபீட் போட்டு தள்ளுனதாலே வீ.பா.க.பொவும் கி.சீயும் தேஞ்சே போச்சு. டேக்க கொண்டு போய் குடுத்துட்டேன். அதுக்கு அப்பறம் ஒரு ரெண்டு வருஷம் அந்த பக்கம் போகவே இல்ல. சித்தி ரொம்ப திட்டுனதா அவங்க பையன் சொன்னான்.

😀

Aquarium – மீன் வளர்ப்பு – My childhood memories

ரொம்ப நாள் ஆச்சு மொக்கை போட்டு. எதாச்சும் எழுதலாம்னா என்னத்த எழுதுறதுன்னு ஒரே குழப்பம். திடீர்னு என் சின்ன வயசு நண்பன் ஒருத்தனை பேஸ்புக்ல பாத்தேன். அப்போ பழங்கதைகள் ரொம்ப பேசினப்போ அதையே எழுதலாம்னு ஒரு யோசனை.

சின்ன வயசுல எனக்கு மீன் வளர்குறதுக்கு ரொம்ப ஆசை. மீன்னா ஒன்னு ரெண்டு இல்ல.. மீன் பண்னையே வைக்கணும்னு ஆசை.
எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம் வேணும்ல. அதுனால மீன் வாங்கனும்னு சொல்லி வீட்ல ஒரு பத்து ரூபா உஷார் பண்ணினோம் எல்லாரும் சேந்து.

அதுக்கு முன்னாடி இந்த மீன் மேல ஆசை வந்ததுக்கு காரணம் நான் இல்ல. எங்க அம்மா தான். மூணாப்பு படிக்கிறப்போ ரெண்டு கோல்ட் பிஷ் வாங்கிட்டு வந்து ஒரு கண்ணாடி பாட்டில்ல போட்டு என் கிட்ட குடுத்தாங்க. நம்பி குடுத்தாங்க. நானும் அந்த நம்பிக்கையை ரெண்டு நாள் காப்பத்தினேன். அதுக்கு மேல முடியல. ரெண்டு மீனும் கடவுள் கிட்ட போய்டுச்சு. ஆனாலும் ஆசை விடுமா?

நான், அந்தோணி, கோபி, கார்த்தி, மற்றும் சில நண்பர்கள் தான் மீன் வளர்க்குறதுல எக்ஸ்பெர்ட். ரிசர்வ் லயனுக்கு வீடு மாத்தி போன பிறகு சேந்த செட்டு இது. மொதல்ல மெதுவா தான் ஆரம்பிச்சோம். நான் வீட்ல திட்டேல்லாம் வாங்கி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல போய் ஒரு ரெண்டு சியாமீஸ் பைட்டர் மீன், ரெண்டு கப்பீஸ் வாங்கிட்டு வந்தேன். இவனுங்க எல்லாம் அவனவனுக்கு அமைஞ்ச காசுல ஏதோ மீன் வாங்கிட்டு வந்தாங்க..

சின்ன பாட்டில் போட்டு வச்சா அந்த மீன் என்ன தான் பண்ணும்? எல்லாம் ஒரு வாரம் தான். மொத்தமும் காலி. எல்லார் வீட்லயும் எழவு. என்ன கண்றாவி பொழப்பு டா இதுன்னு மறுபடி வீட்ல காசு உஷார். நம்ம வீட்ல தான் தெரியுமே.. பசங்க எதாச்சும் பண்ணினா ஒண்ணு ஒதைச்சு ஓரமா உட்கார வைப்பாங்க இல்லாட்டி செல்லம் குடுத்து கெடுத்துத் குட்டி சுவர் ஆக்கிடுவாங்க. எங்க வீட்ல ஒரே ஆச்சர்யம். என்னடா ஒண்ணுமே பண்ணாத பன்னாடை இப்போ ஏதோ பண்ணுதுனு ஒரே சந்தோசம். அந்த சந்தோஷமான நிலைமைல நம்ம பிட்டு நச்சுனு நங்கூரம் மாதிரி நின்னுச்சு.

பாட்டில் போய் கண்ணாடி தொட்டி வந்தது. 🙂 கூடவே கொஞ்சம் நெறைய மீனும். அதுக்கு கூடவே இன்னும் கொஞ்சம் பொறாமையும். 🙂 அவன் வீட்ல மீன் தொட்டி வாங்கி குடுத்துட்டாங்கனு சொல்லியே எல்லா பயலும் பிட் பிட்டா போட்டு மீன் தொட்டி வாங்கிடானுங்க. நெறைய மீன் நெறைய தொட்டி. அடுத்த லெவல் முன்னேரனும் ல. அப்போ தான் பந்தயம் கட்டி சண்டைக்கு விடுற விளையாட்ட நாங்க உருவாக்கினோம். ஆடுகளம் தனுஷ் எல்லாம் தரைல ஆடுவாங்க. நாங்க தண்ணி ல ஆடுனவிங்க. இந்த சியாமீஸ் ஆம்பளை மீன் இருக்கே அது இன்னொரு ஆம்பளை சியாமீஸ் மீன் கூட ஒரே பாட்டில் ல போட்ட கடிச்சு கடிச்சு சண்டை போடும்.

என்கிட்டே ஒரு பச்சை கலர் சியாமீஸ் இருந்தது. கோபி கிட்ட ஒரு சேப்பு கலர் சியாமீஸ் இருந்தது. ரெண்டும் பக்கத்து பக்கத்து பாட்டில் ல வச்சாலே செம மொறை மொறைக்கும். அஞ்சு ரூபா பெட்டு கட்டி ஒரு நாள் சண்டை விட்டோம். என் மீன் கொஞ்சம் பெருசு. கோபி மீன் ஒரு ரெண்டு கடி வாங்கிட்டு தெறிச்சு ஓடிடுச்சு. ஆனா அது கோபிக்கு பெருத்த அவமானமா போச்சு. அவன் காசெல்லாம் தேடி சேத்து வச்சு சும்மா சன் ஆப் கண் முருகன் கணக்கா ஒரு சியாமீஸ் வாங்கிட்டு வந்தான். மறுபடி சண்டை. இந்த தடவை அவமானம் எனக்கு. இப்பிடியே தோத்து தோத்து விளையாடி எங்க கிட்ட நெறைய சியாமீஸ் சேந்து போச்சு. ஜெயிச்ச மீனுக்கு மவுசு ஜாஸ்தி ஆஹி நூறு ரூபாக்கு எல்லாம் வித்தோம்.

ஆனாலும் பண்ணை வைக்கிற ஆசை விடலியே. எங்க வீட்ல கெஞ்சி கேட்டு கஷ்டப்பட்டு ஒரு சிமெண்ட் தொட்டி உஷார் பண்ணினேன். அதுல ப்ளாக் மோலி, வைட் மோலி, பலூன் மோலி, ஆரஞ்சு மோலி, கப்பீஸ், ரோசி பார்ப், டின் பாயில் னு ஏகப்பட்ட மீன் வாங்கி போட்டதுல ஒரு நாள் ஒரு மோலியும் ஒரு கப்பியும் கர்ப்பம் ஆஹிடுச்சு. போதாதா நமக்கு. அத தனியா எடுத்து பாட்டில் ல போட்டு வச்சு குட்டி போடுரப்போ லைவ் டெலிகாஸ்ட் பண்ணினேன். செம்ம ஹிட்டு. எல்லாரும் கேளம்பிட்டாங்க.

அப்டியே பெரிய மீன் பண்ணை ஓனர் மாதிரி ஒரு கெத்து. என்ன இருந்தாலும் குட்டி போட வச்சாச்சே. ஆனா வீட்ல கடுப்பாகிட்டாங்க. உருப்பட போறதில்லனு தெரிஞ்ச நிமிஷத்துல இருந்து ஒரே திட்டு. நம்ம பிசினஸ் மைன்ட் யாருக்கும் புரியல. மீன் வித்து சம்பாதிச்ச காச மீன்லையே போடுறது தப்புனு சொல்ல ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு நல்லத எடுத்து சொல்ல, நமக்கு துணையா இருக்க, யாருமே இல்ல. தனி மரமா நின்னு போராட வேண்டியதா போச்சு.

இப்புடியே கூத்து அடிச்சுட்டு இருந்தா என்னடா லூசுத்தனம்னு எங்க வீட்ல ஒரு நாள் என்ன அடிச்சு கூத்து கொண்டாடுனாங்க. பத்தாப்பு – பேரு லேயே ஆப்பு இருக்கு பாருங்க. இந்த பத்தாங்கிளாஸ் வந்தாலே போச்சு. படி படினு சாவடிப்பாங்க. நானும் மீன் பண்ணை வைக்க போற நான் ஏன் படிக்கணும் னு கேக்கலாம்னு தான் நெனச்சேன். அடி பலமா இருக்கும்னு தெரிஞ்சதாலே விட்டுட்டேன். அப்புறம் அந்த மீன எல்லாம் தெரு தெருவா அலைஞ்சு கூவி கூவி வித்தது இன்னொரு கதை.

இந்த பள்ளி பருவத்துக்கு அப்புறம் கூட மீன் வளக்குர ஆசை போகல. காலேஜ் வந்து கூட வளத்தேன். அது பெரிய கதை ஏதும் இல்ல. காலேஜ்ல எவன் மீன் வளப்பான்.. எல்லாவனும் காதல்ல வளத்தோம். 🙂