பேண்டசாமியும் இருபது ரூபா மீல்சும்

வணக்கம்,

சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதை இது.  அப்போ நான் காலேஜ்ல படிச்சுட்டு இருந்தேன். ரெண்டாவது வருஷம்னு ஒரு ஞாபகம்.

அப்போ நாங்க எல்லாரும் காலேஜ் முன்னாடி இருக்க ஆந்திரா மெஸ்ல தான் சாப்பிடுவோம். அருமையான சாப்பாடு. நம்ம போக முடியாட்டி வீட்டுக்கே கொண்டு வந்து தந்துருவாங்க. மீல்ஸ ஒரு கட்டு கட்டிட்டு கும்முன்னு தூங்கிடலாம்.

ஒரு இனிய காலை பொழுதுல நம்ம பசங்க ஆந்திரா மெஸ் ஒனர்கிட்ட பஞ்சாயத்து பண்ணிட்டாங்க. அதுல இருந்து எவனும் அங்க சாப்புட போறதில்ல. வீராப்பு. நானும் எவ்வளோ நாள் தான் தனியா போய் சாப்புடுறது? நானும் நண்பர்களும் சேந்து பேசி வேற சாப்பாடு ஏற்பாடு பண்ணலாம்ன்னு பிளான் போட்டோம்.

யார்கிட்ட சாப்பாடு சொல்றது. காலேஜுக்குள்ள அமர்நாத் கான்டீன் வச்சிருந்தாரு. அவரு கிட்ட சொல்லலாம்னா அக்கௌன்ட்டு ஏற்கனவே எக்குத்தப்பா எகிறி போயிருந்தது. அவருகிட்ட நாங்க தலைமறைவா சுத்திகிட்டு இருந்தோம்.

அப்போ தான் வந்தாரு பேண்டசாமி. அவரோட நிஜ பேரு என்னன்னு யாருக்குமே தெரியாது. பேண்டசாமின்னு யாரு பேரு வச்சான்னும் ஞாபகம் இல்ல. ஆனா ஏன் வச்சாங்கன்னு நல்லா ஞாபகம் இருக்கு. அத கடைசில சொல்றேன்.

மீல்ஸ் இருவது ரூபாதான்னு சௌந்தர் ஒரே மொரண்டு பிடிச்சு ஆர்டர் பண்ணிட்டான். காலைல டிபன் பதினஞ்சு ரூபா. மதியம் மீல்ஸ் இருவது ரூபா. ராத்திரி சாப்பாடு பதினஞ்சு ரூபா. மொத நாளு, மதியம் சாப்பாடு வந்துச்சு. பேண்டசாமி பட்டய கேளப்பிட்டார். முட்டை குழம்பும் பொரியலும் டாப் டக்கர். நைட்டு சாப்பாடும் அப்டியே நல்லா இருந்துச்சு. ஒரு வாரம் போச்சு. நாங்க வாரம் ரெண்டு தடவை கறி சோறு கேட்டோம். அவரும் கறிக்கு எக்ஸ்ட்ரா காசு சொன்னாரு. சரின்னாச்சு. மொத நாளு பாத்ததுதான் முட்டைய. நாங்க அதுக்கு அப்பறம் பாக்கவே இல்ல.

சௌந்தர்தான் ரொம்ப டென்ஷன் ஆகிட்டான். நாங்க எல்லாரும் சண்டை போட்ட அப்பறம், மறுபடி ஒரே ஒரு நாள் முட்டை குழம்பு வந்துச்சு, அளவு கம்மியா. அதுக்கு அப்பறம் எல்லா அயிட்டமும் அளவுல குறைய ஆரம்பிச்சது. ருசியும் இல்ல. சிக்கன் வந்தா மட்டும் கொஞ்சம் நல்லா இருக்கும்.

இதுக்கு நடுவுல, ஆந்திரா மெஸ் சாப்பாட்டுக்கு நாங்க ஏற்கனவே அடிமை ஆகியிருந்த காரணத்தால, நாக்கு நாப்பது முழத்துக்கு நீள ஆரம்பிச்சது. இந்த ஆந்திரா மெஸ் இல்லாட்டி என்ன. சென்னைல தான் ஆயிரம் ஆந்திரா மெஸ் இருக்கேன்னு வளசரவாக்கம் வரை போய் அப்போ அப்போ சாப்பிட்டுட்டு வந்தோம். ஆனாலும், வேலைக்கு ஆகல.

ஒரு மாசம் தான். பேண்டசாமி மெஸ் தேகட்டிப் போச்சு. இதுக்கு மேல என்னால முடியாதுன்னு நான் கட்டன்ரைட்டா சொல்லிட்டேன். எல்லாருக்கும் ஆசை தான் ஆந்திரா மெஸ் போகணும்னு. ஆனா அவங்க தன்மானம் அதுக்கு இடம் குடுக்கல. ரெண்டு நாள் தான். பேண்டசாமி ஒரு காரியம் பண்ணாரு. சாப்பாடு சரியா வேகாம குடுத்துட்டாரு. ஸ்டோரி ஓவர். சாப்பாட தூக்கி போட்டுட்டு எல்லாரும் ஆந்திரா மெஸ் போய்ட்டோம்.

பேண்டசாமிக்கு போன் பண்ணி இனிமே சாப்பாடு தர வேண்டாம். நாங்க வேற ஏற்பாடு பண்ணியாச்சுன்னு தகவல் சொல்லிட்டு ஆந்திரா மெஸ்ல போய் செம்ம கட்டு கட்டிட்டோம். இன்னைக்கு வரைக்கும் என்ன பஞ்சாயத்து, ஏன் ஆந்திரா மெஸ் வேண்டாம்ன்னு சொன்னாங்கேனு எனக்கு தெரியாது.

அதுக்கு அப்பறம் நான் பேண்டசாமிய பாக்கவே இல்ல. நம்ம வாழ்க்கைல எத்தனையோ பேர பாத்துருப்போம். நம்ம தாண்டி வந்தவர்கள், நம்மள தாண்டி போனவர்கள் எல்லாரையும் நம்மால ஞாபகம் வச்சுக்க முடியுரதில்லை. ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தால சில பேர் நம்ம மனசுல பதிஞ்சுருப்பாங்க. பேண்டசாமி அதுல ஒருத்தர். அவரு மனசுல பதிஞ்சதுக்கு காரணம் அவரோட பேரும் அவரோட இருவது ரூபா மீல்சும் தான். அவரோட பெயர்க்காரணம் சொல்லணுமில்ல. மேல படிங்க.

சின்ன பாப்பா எல்லாம் வளர்றப்போ டாய்லெட் பழக்கம் எல்லாம் கத்து குடுப்போம். அத கத்துகிட்ட சின்ன பாப்பா ஒழுங்கா ஆய் வந்தா நம்மகிட்ட வந்து சொல்லும். நம்மளும் அத பாத்ரூம்க்கு கூப்பிட்டு போய் விடுவோம். ஆனா சில நேரம், அந்த பாப்பா நம்மகிட்ட சொல்லாமலே நடு வீட்ல ஆய் பண்ணிடும். அது பண்ணது தப்புன்னு அதுக்கு தெரியும். நம்ம அத கண்டுபிடிச்சு அந்த பாப்பாவ திட்ட போறப்போ, ஒரு பார்வை பாக்கும் தெரியுமா? இந்த பேண்டசாமி எப்போவுமே அப்பிடி தான் பாப்பாரு. அதான் அவருக்கு பேண்டசாமின்னு பேரு வச்சிட்டாங்க. இன்னொரு காரணமும் விஜய் ஆனந்த் சொன்னான். அவரு சாப்பாடு குடுக்குறப்போ, மொதல்ல நல்லா இருந்துச்சு. ஆனா போக போக சாப்பாடு சரி இல்ல. சாப்பாடு அவர் செஞ்சு குடுக்குறாரா இல்ல பேண்டு குடுக்குறாராங்கற சந்தேகத்துல வந்த பேரு அது அப்பிடின்னான். எது உண்மையோ தெரியல.

Smile