பசுமை நடை – அ.முத்துகிருஷ்ணன் என்னும் விதையில் ஆரம்பித்து இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கும் அமைப்பு. பண்டைய தமிழ் கோவில்கள், சமணர் கோவில்கள், சமணர் குகைகள் என்று பயணித்து வரலாற்றை மீட்டுக் கொண்டு வர முயலும், அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுக்கொண்டிருக்கும் அமைப்பு.
24 பசுமை நடைகள் முடிந்த நிலையில் 25ஆம் பசுமை நடையை ஒரு பெருவிருட்சத்தின் நிழலில் ஊர் கொண்டாடும் ஒரு திருவிழாவாய் நடத்த திட்டமிட்டோம். அதற்காய் தேதி ஒன்றும் குறிக்கப்பட்டது. குறிப்பை உணர்த்தும் வகையில் ஆகஸ்டு திங்கள் 25ஆம் நாள் இந்த திருவிழா நடைபெறும் என்று அறிவித்தார் முத்துகிருஷ்ணன்.
அதே நாளில் இதுவரை சென்ற பசுமை நடை பயணங்களை தொகுத்து ஒரு வரலாற்று ஆவணமாய் வெளியிட வேண்டும் என்றும் அறிவித்தார். பசுமை நடை உறுப்பினர்கள் மற்றும் மதுரை மக்கள் குடும்பத்தோடு கூடிக்கொண்டாடும் திருவிழாவாய் இதை நிகழ்த்திக் காட்ட பசுமை நடை நண்பர்கள் எடுத்த முயற்சி சிறிதொன்றும் அல்ல. அவர்களுக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள்.
ஆகஸ்டு திங்கள் 23ஆம் முதல் சந்திப்பு அதே கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் நிகழ்ந்தது. விருட்சத்திருவிழாவின் பொறுப்புகள் பகிர்தளிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரிகளில் இருந்து மாணவர் படை ஒன்றும் நிகழ்வை நடத்த உதவி செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
வந்தது ஆகஸ்டு திங்கள் 25ஆம் நாள். அதிகாலை துயில் எழுந்து குளித்து முடித்து தயாரானேன். என் மருத்துவமனையில் பகுதி நேரமாய் வேலை செய்யும் மோகன் தானும் வரவேண்டும் என்று பிரியப்பட்டதால், அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன். அச்சம்பத்து தாண்டி வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே நண்பர்கள் விஷ்ணு மற்றும் ராஜேஷை சந்தித்துவிட்டேன்.
சமண மலை அடிவாரத்தை அடைந்ததும் பசுமை நடை செய்திருந்த ஏற்பாடு என்னை ஆச்சர்யப்படுத்தியது. வெயில் மக்களை பாதிக்காமல் இருக்க ஷாமியானா தடுப்பு, மக்கள் தரையில் அமர கார்பெட் விரிப்பு என்று அனைத்தையும் யோசித்து செய்திருந்தனர்.
மிகவும் முக்கியமான விஷயம் – பெண்கள் அதிகம் வருவார்கள் என்பதால் அவர்கள் நிலையையும் யோசித்து மதுரை மாநகராட்சியில் இருந்து ஒரு நடமாடும் கழிப்பறையையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
விழா தொடங்கும் முன் செட்டிபுடவு வரை ஒரு சிறு நடை சென்றனர். அய்யா சாந்தலிங்கம் அங்கு சென்று வரலாறு சொல்லும் உண்மைகளை ஆர்வலர்களுக்கு எடுத்துரைத்தார். நானும் சில நண்பர்களும் தொலைதொடர்பு சம்பந்தமான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதால் அதில் பங்குகொள்ள இயலவில்லை.
செட்டிப்புடவு சென்று திரும்பி வந்த அனைவருக்கும் காலை உணவு தயாராகி காத்திருந்தது. இயற்கை உணவிற்கான மூலப் பொருட்களை தேடிச் சென்று வாங்கி வந்து அதை அங்கேயே சமைத்து பரிமாறினர். காலை உணவாய் சர்க்கரை பொங்கல் (அக்கர அடிசில்) மற்றும் வெண்பொங்கல் பரிமாறப்பட்டது. சாம்பாரும் மிளகாய் தூக்கலான தேங்காய் சட்னியும் தொட்டுக்கொள்ள.
உணவருந்திய பின் நண்பர்கள் அனைவரும் சென்று ஆலமரத்தின் கீழ் அமர, நிகழ்வு இனிதே துவங்கியது. முத்துகிருஷ்ணன் மற்றும் சில பசுமை நடை நண்பர்கள் பேசிய பின், அய்யா சாந்தலிங்கம் பேசினார். பல முறை கேட்டது என்றாலும் மறுபடி மறுபடி கேட்கத்தூண்டும் பேச்சு அவருடையது.
பிறகு அய்யா தொ.பரமசிவம் பேச ஆரம்பித்தார். சமணம் பற்றிய அவரது பார்வை மிகவும் வித்தியாசமானது. சமணம் ஒரு மதம் என்று நினைப்போர் பலருக்கும் அது ஒரு மதமல்ல, வாழ்வியல் நெறி என்று தெளிவாய் எடுத்துரைத்தார். அய்யாவின் பேச்சின் வீடியோ பதிவுகள் கிடைத்ததும் அதை இங்கே பகிர்கிறேன்.
அதன் பிறகு அய்யா மஹ்மூத், தமிழிசை அறிஞர் முத்தையா, பேராசிரியர் கண்ணன், மதுரை காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப, பத்திரிக்கையாளர்கள் கவின் மலர், சுகிதா, கவிஞர் குட்டிரேவதி, பேராசிரியர் சுந்தர்காளி, பூவுலகின் நண்பர்கள் ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசன், கீழக்குயில்குடி ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் வந்தவாசியில் இருந்து வந்த சமணரான ஆனந்தராஜன் ஆகியோர் பேச விழா இனிதே நடந்தது. புகைப்படங்கள் கீழே.
திரு.பாலகிருஷ்ணன், இ.கா.ப. அவர்கள்
அய்யா முத்தையா அவர்கள். இடதுபுறம் அமர்ந்திருப்பவர் அய்யா மஹ்மூத் அவர்கள்.
பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள்.
அய்யா ஆனந்தராஜன் அவர்கள்.
பேராசிரியர் கண்ணன் அவர்கள்.
இந்த உரைகளுக்கு இடையே நடந்த இன்னும் சில விஷயங்கள் கீழே:
“மதுர வரலாறு – சமண பெருவெளியின் ஊடே” என்னும் தலைப்பில் நூல் வெளியீடு நடந்தது. இந்த நூலை தொ.ப அய்யா வெளியிட சமண மலை அடிவாரத்தில் பருத்திப்பால் விற்கும் ஜெயமணி அம்மா பெற்றுக்கொண்டார்.
பசுமை நடை அமைப்பிற்கான புதிய இலச்சினையை காவல்துறை ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் வெளியிட திரு.மஹ்மூத் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பசுமை நடை ஓவியங்களை திரு.ரவி வெளியிட புகைப்பட கலைஞர் ஸ்ரீராம் ஜனக் பெற்றுக்கொண்டார்.
இன்னொருபுறம் குழந்தைகளுக்கான முகாம் ஒன்றும் நடைபெற்றது. 168 குழந்தைகள் பங்கேற்ற இந்த நிகழ்வை சிறப்பாய் நடத்திய பசுமை நடை ஆர்வலர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், குழந்தைகளை ஊக்குவிக்க ஒரு சான்றிதழும் விளையாட்டு சாமான்கள் அடங்கிய ஒரு பையும் வழங்கப்பட்டது சிறப்பு. விளையாட்டுகள் அனைத்தும் பண்டைய தமிழ் விளையாட்டுகளாய் (கிட்டிப்புள், பம்பரம் போன்றவை) இருந்தது தனிச்சிறப்பு.
கீழே சில புகைப்படங்கள்:
குழந்தைகள் செய்து வைத்த களிமண் பொம்மைகள்:
சான்றிதழில் கையொப்பமிடும் சாந்தலிங்கம் அய்யா.
நிகழ்வுகள் முடிந்த பின் மதிய உணவை அருமையான சாம்பார் சாதம், தயிர் சாதம், கூட்டு, அப்பளம் வழங்கப்பட்டது. உணவு அருந்திய பின் ஒவ்வொருவராய் கிளம்பிச்செல்ல பசுமை நடை உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தில் சேர்ந்திருந்த குப்பைகளை எடுத்து மாநகராட்சி கழிவு சேகரிப்பு வாகனத்தில் சேர்த்தோம். பருத்திப்பால் அருந்திக்கொண்டே ஆல் நிழலில் அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் பேசி பிரிய மனமின்றி பிரிந்தோம்.
இந்த முறை மிகவும் சிறப்பாய் அமைந்தன சந்திப்புகள். தொ.பரமசிவம் அய்யாவை சந்தித்தது மகிழ்ச்சி. மேலும் ஆத்மார்த்தி அண்ணன், தோழி தீபா நாகராணி, நண்பர் கடங்கநேரியான், நண்பன் முத்துக்குமரன், தோழிகள் கவின் மலர், சுகிதா, மற்றும் குட்டி ரேவதி, சித்திரவீதிக்காரன் சுந்தர் என்று மனதுக்கு இனிமையான சந்திப்புகள்.
முத்துகிருஷ்ணன் இட்ட விதை இன்று மரமாய் எழுந்து நிற்கிறது. அது தோப்பாகி வனமாகி மக்கள் வாழ்வை வளமாக்க வாழ்த்துக்கள்.
மேலும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே – ராஜண்ணா, செல்வம் ராமசாமி.