கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

மரணம். மிகப்பெரிய வார்த்தை இது. சில நேரங்களில் நெருங்கிய சொந்தத்தை இழக்கும் போதில் அனைவரும் சபிக்கும் ஒரு வார்த்தை. என்ன சொல்லி என்ன.. மரணம் மட்டுமே வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு விளைவு. மரணத்தை வென்றவன் என்ற போஸ்டர்கள் பார்க்கும் போதெல்லாம் அடக்க முடியாத சிரிப்பு எனக்கு வரும். வெல்ல முடியாத ஒன்றே ஒன்று மரணம் என்ற சிறுபிள்ளைக்குக் கூட தெரிந்த உண்மை போஸ்டர் அடிக்கும் பெருமூளைக்காரர்களுக்கு தெரியாமல் போவது எங்கனம்?

நான் படிக்கும் போஸ்டர்களில் நிறைய வகைகளுண்டு. அரசியல் காமெடி போஸ்டர், பூப்புனித நீராட்டு விழா போஸ்டர், புதுக்கடை திறப்பு விழா போஸ்டர், சினிமா போஸ்டர், சினிமா நட்சத்திரங்களின் படங்கள் கொண்ட ரசிகனின் திருமண போஸ்டர், தலைவரின் படம் போட்ட கவுன்சிலர் வீட்டு புதுமனை புகுவிழா போஸ்டர் என்று மேலும் பல.

எனக்கு தெரிந்து இந்தியாவில் மட்டும் தான் போஸ்டர் ஓட்டும் கலாச்சாரம் இப்படி விரவிக் கிடக்கிறது. ஹங்கேரி சென்றிருந்த போது அங்கு சுவர்களில் Graffitti என்ற பொதுச்சுவற்றில் வரையப்பட்ட வண்ணமயமான ஒரு வகை கலையை மட்டுமே கண்டேன். நம் மக்கள் ஏன் அவ்வாறு செய்வதில்லை. சோம்பேறித்தனமா? இல்லை செலவு மிச்சமா? எனக்கென்னமோ ஒரு சுவற்றில் வரைவதற்கு ஆகும் செலவு ஊரெல்லாம் போஸ்டர் ஓட்டும் செலவை விட கம்மியாக இருக்குமென்றே படுகிறது.

போஸ்டருக்கு வருவோம். அந்த காலத்தில் ஓட்டப்பட்ட போஸ்டர்களை விட தற்காலத்தே ஒட்டப்படும் போஸ்டர்கள் விலை கூடியனவாய் உள்ளன. வண்ணமயமாய் இருக்கும் போஸ்டர்களால் சுவற்றில் வரையும் ஓவியர்கள் வாழ்வு கேள்விக்குரியதாய் மாறியது வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். ஆனாலும் இன்றும் மலிவு விலையில் கிடைக்கும் ஒரே போஸ்டர் எதுவென்றால், அது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மட்டுமே.

இந்த பகுதியில் வசித்த இன்னார் தவறி விட்டார் என்று அந்த பகுதிக்கு மொத்தமும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம். ஆதலினால் அலங்காரம் இல்லை. துக்க நிகழ்ச்சி. ஆதலால் வண்ணம் இல்லை. எவ்வளவு எளிதான ஒரு விடை. என்னதான் நீங்கள் பெரிய சினிமா நட்சத்திரமாய் இருந்தாலும், அறுபது வயதான உங்களை இருபது வயதானவராய் காட்டும் வண்ணமயமான போஸ்டர்கள்  உலக சுவற்றையெல்லாம் அலங்கரித்தாலும், உங்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கறுப்பு வெள்ளையாய் தான் இருக்கும்.

அரசியல் போஸ்டர்கள் கதையே வேறு. கமலபாதங்களில் காணிக்கையாக்கும் போஸ்டர் அடித்தவன் அவன் தாயின் எளிய பாதங்களை ஒரு நாளும் நினைத்து பார்த்திருப்பானா என்பது எப்படியொரு நகைமுரண். இன்று ஆட்சியில் இல்லாத அஞ்சாநெஞ்சரின் புகைப்படம் இல்லாத போஸ்டரை அவர் ஆட்சியில் இருந்தபோது மதுரையில் காண்பதரிது. இன்றோ அவரின் புகைப்படம் போட்டால் அந்த போஸ்டருக்கு வாழ்வு கம்மி.

உங்களுக்கு என்றேனும் தோன்றியதுண்டா? நீங்கள் இறந்து போனால் அதை உலகிற்கு தெரிவிப்பது எங்கனம்? பேஸ்புக் போதுமா? கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வேண்டாமா? நான் என் நண்பர்களிடம் சொல்லப்போகிறேன். நான் செத்தால் நல்ல புகைப்படம் போட்டு வண்ணத்தில் அச்சடித்து ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுமாறு. பிரியாவிடைக்கே அவ்வளவு அலப்பறை இருக்கும்போது நிறைவாய் வாழ்ந்த ஒருவனை வழியனுப்ப என்ன தயக்கம்? வண்ணம் கொண்டு வழி அனுப்புவோம். நிறைவாய் வாழ்ந்த நண்பர்கள் மட்டுமின்றி விட்ட குறை தொட்ட குறையாய் வாழ்வில் வண்ணமே காணாத நண்பர்களுக்கும் வண்ணத்தோடே வழியனுப்பலாம். என்ன பெரிய நஷ்டம் வந்து விடப் போகிறது? இருக்கும் போது செய்யாத உதவியை இந்த உலகம் இறந்த பின்பே செய்யும் என்பது எனக்கும் உங்களுக்கும் தெரியும்தானே..

வண்ண போஸ்டர் என்பது மரணத்தை மகிழ்வாய் எதிர்கொள்வதற்கு சமானம். நமது போஸ்டரை நாமே வடிவமைக்கலாம். அதற்காக சிறப்பான ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளலாம். ஜாலியாய் இருக்கும்.

“என்ன மச்சி பண்ணிட்டு இருக்கே?”

“மச்சி! சாவுக்கு ஒட்டர போஸ்டருக்காக போட்டோ எடுத்துட்டு இருக்கேண்டா!”

எதற்கும் வருடம் ஒரு முறை ஒரு போட்டோ எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. எப்போ எது வரும் என்று யாருக்குத் தெரியும்?