ஆமை ஒன்று நீந்துகிறது

அது ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம். அருப்புக்கோட்டை தாண்டி 18 கல் தொலைவில் வறண்ட மண் கொண்ட ஒரு விவசாய பூமி. பலகாலம் அந்த மண்ணில் விளையாடி கம்மாயில் குளித்து விளையாடி இருக்கிறேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல் டிவி இன்டர்நெட் எல்லாம் கிடையாது.

பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு செல்வது ஒரு திருவிழா போலத்தான். செல்லும் போது வெள்ளையாய் செல்லும் நான் விடுமுறை முடிந்து மதுரை வரும்போது பொட்டல் வெயிலில் காயவைத்த கருவாடாய் வருவேன். அதெல்லாம் கவலையில்லை. விளையாட்டு மும்முரத்தில் அடிபடுவது கூட தெரியாது. வண்டல் மண் கொஞ்சம் எடுத்து அப்பிக் கொண்டு விளையாட்டை தொடர்வோம்.

ஊருக்கு பேருந்து வந்து நிற்கும் இடத்தில் மடம் ஒன்று இருந்தது. மடம் என்றாள் சாமியார் மடம் இல்லை. இது ஊர் பெருசுகள் உட்கார்ந்து கதைக்கும் இடம். பெரிய வேம்பு ஒன்று உண்டு அங்கே. நாகணவாய் பறவைகளும் காக்கைகளும் கொத்தித் தின்று கொண்டே திரியும். அவ்வப்போது சில கிளிகள் வரும். பெரும்பாலும் காலை நீர் பாய்ச்சும் வேலை எல்லாம் முடித்து விட்டு சீட்டுக்கட்டும் பீடிக்கட்டுமாய் வந்து அமர்வார்கள். மதிய பொழுது வரை சீட்டும் பீடியுமாய் கரையும் அவர்களுக்கு. நாங்கள் பக்கம் சென்றால் இழுத்து வைத்து வம்பு வளர்ப்பார்கள்.

அப்படித்தான் மாட்டிக்கொண்டேன் ஒரு நாளில். சீனி தாத்தா பீடியை வலுவாய் இழுப்பவர். பக்கம் சென்றாலே பீடி வாசம் தான் வீசும். பீடி வாசம் பிடிக்குமா உங்களுக்கு? பனி படரும் மலை உச்சிகளில் கடுங்காப்பியோடு ஒரு பீடி அடித்துப் பாருங்கள். தெரியும். சீனி தாத்தா மடத்தில் தனியாய் அமர்த்திருந்த ஒரு மதிய வேளையில் பனங்காய் வண்டி ஒட்டிக் கொண்டே மடத்திற்கு அருகில் சென்று விட்டேன். 

“டேய்.. எடுபட்ட பயலே.. இங்க வாடா.”

“என்ன தாத்தா?”

“படுவா. உச்சிப்பொழுதுல இப்புடி வண்டி ஒட்டிகிட்டு திரியுற.. காலு சுடலையா?”

“சுடும்.. ஆனா ஓடுனா தெரியாது.” 

“சரிடா. மூக்கு வழியா புகை விடுவேன் பாக்குறியா?”

“அதெல்லாம் நான் பாத்துருக்கேன்.”

“சரி. காது வழியா விடுறேண்டா.. உத்து பாரு.”

நானும் காதில் புகை விட்டு பார்த்ததில்லையாதலால் உற்று பார்க்கலானேன்.

நல்லா பாத்துக்கோடா.. கொஞ்சந்தேன் வரும் என்றவர் புகையை இழுத்தார். கவனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென காலில் சுரீர் என்று ஒரு வலி. கிள்ளி விட்டார் தொடையில்.

கண்ணில் நீரோடு நிமிர்ந்து பார்க்கையில் “டேய். காதுல பொகைய விட்டேனே பாக்கல?” என்றார். “கரெக்டா காதுல பொகைய விடுற நேரம் ஒனக்கு என்ன எழவு வேடிக்க? மறுக்கா பாரு” என்றார்.

இதேன்னடா வம்பு. “நல்லா தெரிஞ்சுட்டு தாத்தா.. கொஞ்சம் எல்லாம் புகை வரல. நெறையவே வந்துச்சு” என்று தப்பித்து ஓடி வந்தேன்.

இப்படி பல கதைகள். பல நிகழ்வுகள்.

கடைசி முறை நான் ஊருக்கு சென்ற போது சீனி தாத்தா இல்லை. தவறி விட்டார். ஊர் மொத்தம் வெறிச்சோடிக் கிடந்தது. மடம் மொத்தமும் தூசி. சிலந்தி வலைகள். யாரும் இல்லை. இறங்கி ஊருக்குள் நடந்தேன்.

பாட்டி வீடு ஓட்டு வீடுதான். 93 வயதிருக்கும் அவளுக்கு. முகச்சுருக்கங்களுக்கு இடையே எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்கும் புன்னகை அவளுடையது.

“எப்பய்யா வந்த?" என்றாள் பாட்டி. நிமிர்ந்து பார்க்க முடியாமல் “இப்பத் தான் வாரேன்" என்றேன். சிரித்தாள்.

“இன்னக்கிதான் வழி தெரிஞ்சுச்சா?”

“இல்ல அவ்வா. வரணும்னு தான் நெனச்சேன். வேல கொஞ்சம் ஜாஸ்தி. வர முடியல.”

“அவ்வாவ பாக்கணும்ன்னு இப்பவாச்சும் தோணுச்சே.”

எதுவும் சொல்லவில்லை.

அங்கு மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்தேன். அப்பா, சித்தப்பா, அத்தை என்று அனைவரும் ஓரிடத்தில் நின்று கொண்டு இருந்தார்கள்.

மெல்ல சிரித்தேன். “அதெல்லாம் அந்தக்காலம்” என்றாள் பாட்டி.

“இப்பெல்லாம் ஒருத்தரும் வர்றதில்ல. எல்லாருக்கும் ஜோலி தான் முக்கியம். “

அலமாரியை திறந்தேன். பழைய புத்தகங்கள் கொஞ்சம் கிடந்தன.

விடுமுறை கழிக்க அங்கு வரும்போதெல்லாம் எனக்கு துணையாய் இருந்தது பாட்டியும் அங்கு கிடந்த சிறுவர்மலர் புத்தகங்களும் தான். சிறுவர் மலரில் வந்த ‘உயிரைத் தேடி’ என்ற கதை மிகவும் பிடிக்கும். உலகம் மொத்தம் அழிந்து விடுகிறது. எஞ்சிய சிலர் பிற உயிர்களை தேடி செல்லும் பிரயாணம் தான் அதன் கரு.

“மழ பெஞ்சுச்சா அவ்வா?”

“அதெங்க பெஞ்சுச்சு? வானம் பாத்துட்டேதான் கெடக்கேன். கொஞ்சம் தூத்தல் போட்டுச்சு. அப்பறம் காணம்!”

வெளியே பார்த்த போது எதிரில் இருந்த கொட்டாய் கண்ணில் பட்டது. ஒரு காலத்தில் ஐந்தாறு மாடுகள் இருந்த போது மாடு ஈனும் காட்சியை கண்டது நினைவில் வந்தது.

“எங்கவ்வா? ஒரு மாட்டையும் காணோம்?”

“மாடா! மனுஷனே இல்லாத ஊருல மாட்டுக்கு என்னைய்யா வேல? அதையெல்லாம் வச்சி பாக்க முடியல.”

காலை பத்து மணி இருக்கும். ஊரில் நடமாட்டமே இல்லை. எங்கோ ஒரு வீட்டில் “டாடி மம்மி வீட்டில் இல்லை" என்ற பாடல் டிவியில் ஒலித்தது. வெயில் ஏறியது. தோட்டம் வரை சென்று வருவதாக சொல்லி கிளம்பினேன்.

மடத்தை தாண்டி தோட்டம் நோக்கி நடந்தேன். கம்மாய் தாண்டி ஒரு சிறுகுன்று இருக்கும். எனக்கு அது மலை. ஊர்க்காரர்கள் மல்லை என்று சொல்வார்கள். மலை தாண்டி ஏறி இறங்கியதும் வலது பக்கம் ஒரு பெருங்கிணறு இருக்கும். அது எங்கள் கிணறல்ல. இடது புறம் இரு பெருவிருட்சங்கள் இருக்கும். அத்திமரங்கள் அவை. குளித்து விளையாடி வீட்டிற்கு செல்லும் போது விழுந்து கிடக்கும் அத்திப்பழங்களை எடுத்து வாயில் போட்டு கொள்வோம்.

தோட்டம் நோக்கி நடந்தேன். அத்திமரங்களில் இருந்து அரைக்கல் தொலைவில் இருந்தது தோட்டம். எப்போதும் வாழை மரங்களோடு வரப்பு ஓரம் இருக்கும் தென்னை மரங்களும் மாமரங்களும் அதை ஒரு சோலை போல் காட்டும். அதுதான் என் நினைவில் பதிந்த பிம்பம். தோட்டத்தை நெருங்க நெருங்க மனம் கனத்தது. மாமரங்களை காணவில்லை. தென்னைகள் வாடல் நோயினால் வாடிப்போய் காயற்றுக் கிடந்தன. நிலம் மொத்தம் கடலைச்செடி போட்டிருந்தார்கள்.

உள்ளே நுழைந்தேன். கிணறு சிறிது தூரத்தில் இருந்தது. வாய்க்கால்கள் வறண்டு போயிருந்தன. மெல்ல உள்ளே சென்று வரப்போரம் இருந்த ஒரு கடலை செடியை பிடுங்கினேன். கடலை நன்றாய் காய்த்திருந்தது. கடலைகளை பிடுங்கிவிட்டு செடியை தூர வீசினேன். கொஞ்சம் கடலையை மென்று கொண்டே கிணற்றை நோக்கி நடந்தேன்.

அந்தக் கிணறு மிகவும் பழையது. உள்ளே இறங்க வழியுண்டு. அரைக்கிணறு தண்ணீருடன் தான் நான் அதை பார்த்ததுண்டு. மீன்களும் ஆமைகளும் நீந்தும். ஆச்சர்யமாய் இருக்கும். எப்படி இந்த கிணற்றுக்குள் மீன்கள் வருகின்றன என்று. சில நேரம் பாம்புகள் கண்ணில் படுவதுண்டு.

நீர்ச்சாரைகளை பிடித்து வருவார் சித்தப்பா. நீர்ச்சாரையை கையில் பிடித்து சைக்கிள் கேரியரில் ஒரு முள்ளுச்செடி ஒன்றை மாட்டி அதனுள் நீர்ச்சாரையை போட்டால் அது வெளியே வராது. வர முயன்றால் முள் குத்தும். ஊருக்குள் எடுத்து வந்து குழந்தைகளிடம் கொடுத்து விடுவார். வன்கொடுமை செய்வார்கள் அறியா வயதில். பீடி, மூக்குப்பொடி போடுவார்கள். பாவம் பாம்புகள்.

கிணற்றை நெருங்கி எட்டிப்பார்த்தேன். நீர் இல்லை. கொஞ்சமாய் படிக்கட்டுகளில் இறங்கினேன். அடியில் கொஞ்சம் நீர் இருந்தது. கலங்கிக் கிடந்தது அந்த கிராமத்து வாழ்வைப் போல. உற்றுப் பார்த்தேன். ஆமை ஒன்று மட்டும் நீந்திக்கொண்டு இருந்தது. மீன்கள் எதுவும் கண்ணில் படவில்லை. குளிக்கலாம் என்று நினைத்தேன். ஆமையை தொந்தரவு செய்ய மனமில்லை. மேலே ஏறி வந்து ஊர் நோக்கி நடந்தேன்.

அத்திப்பழங்கள் காணவில்லை. ஒன்று கூட இல்லை. மேலே பார்த்தேன். அத்திமரம் ஒன்று பட்டுப்போயிருந்தது. மற்றொரு மரம் கிடைக்கும் நீரை மொத்தமும் இலைக்காய் ஒதுக்கிவிட்டது போலும். பழங்கள் இல்லை. மலை தாண்டி இறங்கினால் கம்மாயில் தேங்கிக்கிடந்த நீரில் அத்தைகள் நீர் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். நலம் விசாரித்துவிட்டு மேற்கொண்டு நடந்தேன்.

பாட்டி வீட்டு சாப்பாடு கம்பங்கூழ் அல்லது கேப்பைக்கூழாய் இருக்கும் என்று நினைத்து உள்ளே சென்றேன். பாட்டி நெல்லுச்சோறு பொங்கி வைத்து இருந்தாள். கொஞ்சம் பேசிக்கொண்டே சாப்பிட்டேன்.

“சரி அவ்வா. நான் கெளம்புறேன். பஸ்சு வந்துரும் இப்போ.”

“இருந்துட்டு காலைல போயேண்டா"

“இல்லவ்வா. நெறைய வேலை இருக்கு. நான் போயிட்டு ஒரு நாள் தங்குற மாதிரி வர்றேன்.”

“ஒரு நாள் இருந்துட்டு போய்யா.”

“இல்லவ்வா கண்டிப்பா அடுத்த மாசம் வர்றேன்.”

“சரிய்யா. எல்லாரையும் கேட்டேன்னு சொல்லு.” என்று சொல்லும் போது அவள் கண்களில் நீர் தேங்கி நின்றது.

“சரிவ்வா.”

வீட்டில் இருந்து இறங்குகையில் இரண்டு ஆடுகள் குறுக்காய் ஓடின. பின்னாலேயே ஒரு குட்டி ஆடு ஓடியது. பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன்.

அந்தக்காலத்தில் நிறைய பஸ்கள் உண்டு ஊருக்கு. எல்லாம் தனியார் பேருந்துகள் தான். அரசு பேருந்து ஒன்றே ஒன்று தான். அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழியும். நிற்க இடம் கிடைக்காது.

“வாத்தியார் வூட்டு புள்ளைய கொஞ்சம் மூட்டை மேல தூக்கி ஒக்கார வைங்கப்போவ். பாவம் மதுரைல இருந்து வருது.” – பக்கத்து ஊர் மாணவர்கள் கொஞ்சம் பேர் சொல்வார்கள்.

“என்னய்யா.. லீவு விட்டுட்டாங்கேளா? உங்கப்பன் நல்லாயிருக்கானாடா? நான் கேட்டேன்னு சொல்லு!” – ஏதோ ஒரு வங்கிழடு கேட்கும்.

நினைவுகளை ஓட்டியபடியே நின்றேன். பேருந்து வந்தது. ஏறி ஜன்னலோர இருக்கை ஒன்றில் அமர்ந்தேன். பேருந்து கிளம்பியது. ஊர் பின்னோக்கி சென்றது. நினைவுகள்  நீங்காமல் நின்றது. ஆமை மட்டும் நீந்திக்கொண்டே இருந்தது.

பாட்டி அழுதுகொண்டே இருக்கிறாளோ என்னமோ?