இந்த இனமும் அழிந்து போகுமா?

நீங்கள் நினைப்பது என்னவென்று எனக்கு தெரியும். அழிவு, இனம் இந்த இரண்டு சொற்களையும் சேர்த்துப் பார்த்தால் உங்களுக்கு இலங்கையில் வாழ்ந்தும் செத்துக் கொண்டிருக்கும் நமதருமை சகோதர சகோதரிகளே நினைவுக்கு வருவார்கள். அவர்களை பற்றி எழுதி என்னால் பெரிய மாற்றம் எதையும் கொண்டு வர முடியுமென்று எனக்கு தோன்றவில்லை.

இந்த பதிவு இன்னொரு அரிய இனத்தை பற்றியது. அவர்கள் திருட்டுத்தனமாய் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விற்பவர்கள். சுருக்கமாய் புரியும்படி சொன்னால் பிளாக்கில் டிக்கட் விற்பவர்கள். அவர்களை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? முன்னொரு காலத்தில் பண்டிகை நேரத்து வெளியீடுகளை அவர்கள் தயவின்றி பார்க்க முடியாது என்பது மனதில் தோன்றி மறையுமே.

பிளாக்கில் டிக்கெட் விற்பது காலகாலமாய் நடந்து வருவதுதான்.. கறுப்பு சந்தை உங்களுக்கு தெரியுமல்லவா.. அதன் வழித்தோன்றலாய் வந்ததே பிளாக் டிக்கெட். ஆங்கிலத்தில் Ticket Resale என்று சொல்வார்கள். இன்று இந்த கள்ளசீட்டு வியாபாரம் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறது. ஆனாலும் சினிமா தியேட்டர் வாசலில் நாம் கண்டு வந்த இந்த கள்ளசீட்டு விற்போர் இன்று கண்ணில் தென்படுவதில்லை.

ரயில் சீட்டும் விழாக்களின் நுழைவு சீட்டும் இன்றும் கள்ள சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆயினும் திரைக்காட்சி சாலைகளில் பத்து அம்பது பத்து அம்பது என்று வாங்குவோருக்கு மட்டுமே கேட்கும்படி கூவும் திறமையுடைய ஓரினம் இன்று வாழ வழியின்றி பிற திருட்டு தொழில்களில் ஈடுபடுமாறு செய்து விட்டது நமது சமுதாயம்.

பள்ளியில் படிக்கும் போது சேரன் பாண்டியன் படம் வெளியிடப்பட்டது. என் அண்ணனோடு அதற்கு சென்ற போது உழைப்பாளி திரைப்படத்தில் வரும் டிக்கட் வாங்கும் காட்சி போலவே நாங்களும் நசுக்கப்பட்டோம். ஒரே வித்தியாசம் – அதில் கவுண்டமணிக்கும் ரஜினிகாந்திற்கும் டிக்கட் கிடைக்கும். எங்களுக்கு கிடைக்கவில்லை. மனம் நொந்து மெல்ல திரும்பி வரும் போது பக்கத்தில் வந்து நின்று டிக்கட் வேணுமா தம்பி என்று கேட்ட அந்த பெண்ணின் முகம் இன்றும் நினைவில் நிற்கிறது. முடிவாய் 20 ரூபாய் டிக்கட்டை 35 ரூபாய்க்கு வாங்கி நாங்கள் அந்த படத்தை பார்த்தோம்.

கல்லூரி வந்தபின் இந்த கே.பி.கருப்புகளோடு எனது உறவு மேலும் பலமாய் தொடர்ந்தது. கோயம்பேடு ரோகினி தியேட்டரில் கள்ளசீட்டு விற்ற அதே வீரப்பன் மீசை வைத்த தாத்தாவை நான் தேவி தியேட்டரிலும் கண்டேன். ஆச்சர்யம் என்னவென்றால் அவரும் என்னை கண்டு கொண்டதுதான். அந்த முறை நாங்கள் தேவி தியேட்டரில் சற்று குறைவான விலைக்கு வாங்கிய கள்ளசீட்டு கொண்டு படம் பார்த்தோம். அந்த மீசைக்கார தாத்தா எங்கே போனாரோ தெரியவில்லை.

சத்யம் தியேட்டர் வாசலில் கூட்டத்தை பார்த்து மலைத்து நின்ற என்னை ரே! ராரா! பிளாக்லோ டிக்கட் தீஸ்குண்டாமு! என்று அழைத்த ஆந்திர தேசத்து அழகன் குமார் முடிவில் 25 ரூபாய் டிக்கட்டை 50 ரூபாய்க்கு வாங்கி வந்தான். திறந்து பார்த்தால் பத்து டிக்கட்டுகள். அனைத்தும் 10 ரூபாய் டிக்கட்டுகள். என்ன செய்வது.. முதல் வரிசை படம் தான். சத்யம் தியேட்டரின் பெருந்திரையில் லகான் என்ற ஹிந்தி மொழி படத்தை கழுத்து ஓடிய பார்த்தது இன்றும் மனக்கண்ணில் தெரிகிறது. ஏமாற்றிப் போன காசு எந்த பீச்சில் சுண்டக்கஞ்சிக் கலயத்துள் முங்கியதோ தெரியாது!

திரையரங்கு உரிமையாளர்களே தங்கள் ஆட்கள் மூலம் கள்ளசீட்டு விற்பது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. வெளியீட்டு தேதியன்று 100 ரூபாய் சீட்டு 1000திற்கும் சில நாட்கள் கழித்து 500ற்கும் பிறகு சில நாட்கள் கழித்து 100 ரூபாய்க்கும் விற்கப்படும். 50 நாட்களுக்கு மேல் எந்தப் படமும் இப்போது ஓடுவதில்லை. ஆகையால் சம்பாதித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இது போல் செய்கிறார்கள்.

சில நேரங்களில் மிகப்பெரிய நடிகர் நடித்த திரைப்படங்களை பல ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் அந்த செலவையும் சமாளிக்க ஆரம்ப நாட்களில் அதிக விலைக்கு சீட்டு விற்பது கண்கூடு. உச்ச நடிகர் நடித்த ஐ ரோபாட் மாதிரி திரைப்படத்தின் சீட்டு 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது எனக்கு வயிற்றெரிச்சலை உண்டு பண்ணியது. சமீபத்திய ஒரு ஆயுதப் பெயருடைய திரைப்பட வெளியீட்டின் போது 50 ருபாய் சீட்டு 150க்கும் 100 ருபாய் சீட்டு 250க்கும் 200 ருபாய் சீட்டு 400க்கும் விற்பனை செய்யப்பட்டதை நாளிதழ்களில் கண்டிருப்பீர்கள். அதெல்லாம் இதற்குதானோ என்று ஒரு எண்ணம் உருவாவதில் தவறில்லை.

இன்று ஜம்மென்று ஆன்லைன் வர்த்தக வலைத்தளங்கள் மூலம் சீட்டை பதிவு செய்து படம் பார்த்து விடலாம். நீங்கள் சற்று பொறுமையாக இருந்தால். அவசரமாக முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்று நினைத்தால் ஏதேனும் தியேட்டர் உரிமையாளரை குறி வைத்து நட்பு பாராட்டுவது நல்லது. அதுவும் முடியாதென்றால் கவுண்ட்டரில் உள்ள ஆள் யாரென்று பார்த்து அவரை தொடர்ந்து சென்று நட்பு வளருங்கள்.

இனி நீங்கள் பிளாக்கில் டிக்கட் வாங்கினாலும் அது கூவநதிக் கரையோர குப்பத்தில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்கு போய் சேரப்போவதில்லை. அது தியேட்டர் முதலாளியின் கறுப்புக்கணக்குக்கோ இல்லை மாமூல் வாங்கி செல்லும் ஒரு போலீசின் பாக்கேட்டுக்கோ தான் போகப்போகிறது. ஏன் கொடுக்க வேண்டும்? பொறுமையாய் பாருங்கள். மிகவும் அவசரம் இல்லையென்று சற்று பொறுத்தால் தீபாவளியோ பொங்கலோ இல்லை ஏதோ ஒரு பண்டிகைக்கோ ‘உங்கள் தொலைக்காட்சியில் முதல் முறையாக’ என்று போட்டு விடுவார்கள். காசும் மிச்சம். பாவமும் சேராது.

பிளாக்கில் டிக்கட் விற்பது அவமானம் அல்ல. அது பெருமை. கடன் வாங்கி முதல் போட்டு முதல் போட்ட அரைமணி நேரத்துள் போலீசிடம் பிடிபடாமல் அதை லாபத்துடன் மீட்டெடுத்து கடன் அடைத்து மிஞ்சிய காசில் குவார்டரோ இல்லை சுண்டக்கஞ்சியோ குடித்து துணைக்கு மீன் கடித்து மிச்சக் காசை மறுபடி முதலாய் போடுவதென்றால் சும்மாவா? எவனும் செய்ய முடியாது. முடிந்தால் செய்து பாருங்கள். ஒரு இனம் அழியாமல் மிஞ்சும்.