முத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52

கற்கள் அழிவதில்லை, மனிதன் அவற்றில் ஒரு வீட்டின் தரைத்தளத்தை பார்க்கும் வரை. மதுரையை சுற்றி இருக்கும் எண்ணற்ற மலைகள் பல்லாயிரம் வருடங்கள் தாண்டி நிமிர்ந்து நின்றவை. இருபது வருடங்களில் அவற்றின் பாரம்பரியத்தையே அழித்து ஒழித்து விட்டார்கள். சமண தீர்த்தங்கரர்கள் சிலர் செய்த புண்ணிய காரியத்தால் சில மலைகள், சில மலைகளின் பகுதிகள் பிழைத்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் பெருமாள் மலை.

12118634_10153169485387644_1345280883383278317_n12074520_10153169487222644_7688484782451357090_n

மதுரையில் இருந்து தேனி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைகழகத்துக்கு சற்று முன்னரே பில்லர் சாலை தாண்டிய சில மீட்டர்கள் தூரத்தில் சாலை இடது புறம் திரும்புகிறது. உற்று நோக்காவிடில் தேனிக்கு பயணப்பட்டு விடலாம். சமணச்சின்னம் பெருமாள்மலை என்ற மஞ்சள் நிற பதாகை ஒன்று சாலையின் உட்திரும்பியவுடன் காணக்கிடைக்கும்.

மேலும் ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்றால் முத்துப்பட்டி கிராமத்துக்கு செல்லும் வழி கிடைக்கும். அங்கே பாண்டவ மலை, பெருமாள் மலைக்கு செல்லும் வழி கேட்டால் எவரேனும் சொல்லி விடுவார்கள். மனித ஆக்கிரமிப்பில் கரைந்தது போக மிச்சமுள்ள மலையை காணலாம். மலையின் பின்புறம் நடந்து சென்றால் அங்கே சமணர் குகையோன்றை காணலாம்.

இருபதுக்கும் மேற்பட்ட படுகைகள் வெட்டப்பட்ட மலைக்குகையின் வெளிப்புறத்தில் இருந்து இரண்டு தீர்த்தங்கரர்கள் மதுரையை பலநூறு ஆண்டுகளாக பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். உள்ளே கொஞ்சம் மண்டை உடைக்கப்பட்ட மகாவீரர் சிலையாக அமர்ந்து அர்த்தபரியன்காசனத்தில் தியானித்து இருக்கிறார். அநேகமாக மகாவீரரின் தனிச்சிற்பம் இந்த ஒரு மலையின் தான் காணப்படுகிறது என்று கருதுகிறேன். வேறு எங்கும் இது போல தனி சிற்பத்தை கண்டதில்லை.

12118965_10153169486572644_6034584809312372608_n

தீர்த்தங்கரர்களுக்கு கீழே இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் இந்த கல்வெட்டுகளில் இருக்கும் வரிகள் கீழ்வருமாறு:

’ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர் மாணக்கர் மகாணந்தி பெரியார் நாட்டாற்றுப்புறத்து நாட்டார்பேரால் செய்விச்ச திருமேனி‘

12107988_10153169485602644_320814175282762152_n

’ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாஸி படாரர் மாணாக்கர் குணசேனதேவர் மாணாக்கர் கனகவீரப் பெரியடிகள் நாட்டாற்றுப்புறத்து அமிர்த பராக்கிரம நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி பள்ளிச் சிவிகையார் ரக்ஷ‘

12088569_10153169485537644_8975255395143404956_n

குரண்டி என்ற ஊரில் இருந்த பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் இதைச் செய்ததாக கருதலாம். குரண்டியில் சமணர்களின் பெரும்பள்ளி இருந்திருக்கவும், அப்பள்ளியில் நிறைய மாணவர்கள் பயின்றிருக்கவும் கூடும். குரண்டியின் அக்காலப்பெயர்தான் பராந்தக பர்வதம். இன்னொரு கல்வெட்டில் கீழ்குயில்குடி ஊரார்க்காக குரண்டிப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்திருக்கலாம்.

திடிக்காத்தான் {ம}….னம் எய்…’ குகைத்தளத்தின் கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டு கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்து தந்த கற்படுகையாக இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.

’நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்’ சிறுகுகைத் தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாக காணப்படும் இக்கல்வெட்டு கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி என்பது சேரர் துறைமுகப்பட்டிணத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும், நாகபேரூரின் தலைவரும் செய்துகொடுத்த கொடை எனப் பொருள் கொள்ளலாம்.

குகைத்தளத்தின் மேல் பகுதியில் மற்றொரு தமிழ் பிராமி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. “சையஅளன் விந்தையூர் காவிய்” என சொல்லப்பட்டுள்ள கல்வெட்டும் கிமு முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாய் இருக்கக்கூடும். விந்தையூர் என்பது தற்கால வண்டியூரை குறிக்கலாம்.

12112358_10153169485657644_4121115250463971805_n

குகைத்தளத்தை பார்வையிட்ட பிறகு அனைவரும் ஒருசேர அமர, சாந்தலிங்கம் அய்யாவின் சொற்பொழிவு நிகழ்ந்தது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் அவரது சொற்பொழிவில் இருந்தும் சித்திரவீதிக்காரனின் முந்தைய பயணகுறிப்பு பதிவிலிருந்தும் திரட்டப்பட்டவையே ஆகும். பெருமாள்மலை என்ற பெயர் கொஞ்சமாய் உறுத்த சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வையும் சைவம் வைணவம் மெல்ல தலையெடுத்த வரலாற்றையும் அசை போட்டுக்கொண்டே யோசிப்பின் அந்த பெயரின் காரணம் மெல்ல புலப்படும்.

தீபாவளி நெருங்கி வரும் வேளையில் மற்றொரு குறிப்பு உங்களுக்கு அவலாக கிடைக்கக்கூடும். நாம் கொண்டாடும் தீபாவளி சமண தீர்த்தங்கரர்களில் முக்கியமானவரான வர்த்தமான மகாவீரர் மரணித்த நாள் தான். நரகாசுரனை கொன்ற நாள் என்று நம்மை கொண்டாட வைத்திருக்கிறார்கள். மேலும் ஆவலாய் இருந்தால் தொ.பரமசிவன் அய்யா எழுதிய “அறியப்படாத தமிழகம்” படியுங்கள்.

1030வது சதய விழா நாயகனான சிவபாதசேகரனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..

நன்றி.

உழந்தும் உழவே தலை

“அலகிலா மறைவிளங்கும் அந்தணர் ஆகுதி விளங்கும்

பலகலையான் தொகை விளங்கும் பாவலர்தம் பா விளங்கும்

மலர்குலாந்திரு விளங்கும், மழை விளங்கும், மனுவிளங்கும்

உலகெலாம் ஒளி விளங்கும் உழவருழும் உழவாலே”

10460462_901125583265883_8947365232916167700_n

உழவர்களை நாம் கொண்டாட மறந்து பல ஆண்டுகள் ஆகின்றன. உழவுத் தொழில் நசிந்து உணவு உற்பத்தி குறையும் நிலை பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உழவு பற்றிய அறிவை நம் மக்களுக்கு தெரியவைக்கவும் குழந்தைகளுக்கு நம் கலாசாரம் பற்றிய ஒரு அறிமுகத்தை அளிக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. 

ஆனால் இத்தகைய முயற்சிகள் எப்போதும் நடப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போதில் அதில் எப்படியேனும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம தலைதூக்கும். இந்த முறை ஒரு நிகழ்வை நடத்தும் வாய்ப்பே பசுமை நடை மூலம் கிடைத்தது. பசுமை நடை நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்ட ஒரு பெருவிழாவாய் இது அமைந்தது.

10897800_901128976598877_5309248992013963706_n

பசுமை நடையின் பொங்கல் விழா வடபழஞ்சி அருகேயுள்ள வெள்ளபாறைப்பட்டியில் இனிதே நடந்தது நேற்று. பின்தங்கிய ஒரு கிராமத்தில் நடந்த விழா பால்ய கால பொங்கல் கொண்டாடல்களை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. கிராமத்திற்கு சென்று கரும்பு கடித்து சக்கை மென்று துப்பி கிராமத்தெருக்கள் முழுவதும் கரும்புச்சக்கைகளால் நிரப்பிய பொழுதுகள் கண் முன் வந்து போனது. கிணற்றுத்தண்ணீர் குளியலும் அதிகாலை பொங்கலும் அளித்த ஆனந்தத்தை கொஞ்சமேனும் மீட்டுத் தந்தது இந்த திருவிழா.

நிகழ்விற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே நண்பர்கள் அதற்கான வேளைகளில் ஈடுபட தொடங்கியிருந்தார்கள். கிராம மக்களோடு இணைந்து என்ன வேலைகளை யார் செய்வது போன்ற ஏற்பாடுகள் செவ்வனே நடைபெற்று வந்தன. நேரமின்மையால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் முகநூல் வழி மேலதிக தகவல்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். நிகழ்விற்கு முந்தைய நாள் அனைவருக்குமான இரவு உணவை வாங்கிக் கொண்டு கிராமத்திற்கு போனேன்.

பெரும்பாலான ஏற்பாடுகள் முடிந்து போயிருந்தன. அனைவரும் பசியோடு இருந்ததால் உணவு உண்ண எத்தனித்தோம். ஒரு பெரிய மரத்தின் அடியில்  கூதற்காற்றின் வருடலில் இட்லிகளும் பரோட்டாகளும் உள்ளே சென்றது. பின்னர், வரும் நண்பர்களுக்கு வழி காட்ட தட்டிகள் கட்டவும் சாலைகளில் சுண்ணாம்புக் கரைசலால் குறியீடுகள் இடவும் வேண்டியிருந்தது. சரவணன், நான், ஹியூபர்ட், சித்திரவீதிக்காரன், செந்தில், கந்தவேல், மற்றும் மதுமலரன் அந்த வேலையை செய்து முடித்தோம்.

மறுபடி ஊருக்கு வந்து ஊருக்கு மத்தியில் இருக்கும் பாறைமேல் படுத்துக் கதைத்தோம். ஒரு ஊழிக்காலத்து வெள்ளத்தில் ஊர் மக்கள் அனைவரும் மூழ்கி மரணிக்க இருந்த வேளையில் இந்த பாறை மேல் ஏறி நின்றதாகவும் அந்த பாறை நீரில் மிதந்து அவர்களை காத்ததாகவும் ஊர் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதனால் இன்றளவும் அந்த பாறையை அவர்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். செருப்பணிந்து பாறை மேல் ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இரவு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். மெல்ல அனைவரையும் உறக்கம் தழுவ சிலர் வீடு நோக்கி புறப்பட்டார்கள். நான் எனது காரிலேயே உறங்கினேன்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். மனைவியும் மகனும் தயாராக பின் காரில் வெள்ளபாறைப்பட்டி நோக்கி புறப்பட்டோம். நாங்கள் சென்ற வேளையில் நன்றாக விடிந்து விட்டிருந்தது. பொங்கல் வைக்கும் ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. ஆட்டுக்குட்டிகளை பார்த்து குதியாளம் போட்டபடி காரிலிருந்து இறங்கி ஓடினான் ஆதன்.

IMG_9580-2

சற்று நேரத்தில் விழா தொடங்குவதாக முத்துகிருஷ்ணன் அறிவித்தார். பசுமை நடை உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஊர் முழுக்க சென்று கதவுகளை தட்டி ஊர் மக்களை விழாவில் கலந்து கொள்ளும்படி அழைத்தார்கள். மற்றொரு புறம் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியிருந்தன. கொரியாவில் இருந்து மதுரையின் ஒரு கல்லூரியில் படிக்க வந்திருக்கும் பெண்கள் சிலர் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல், பாட்டில் நிரப்புதல், இளவட்டக் கல் தூக்குதல் போன்ற விளையாட்டுகளில் மக்கள் பெரும் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள்.

IMG_9826

10917376_901126069932501_8468682185633501560_n

10423279_901127949932313_3122283141044457700_n

10305042_901126563265785_7474851606855890293_n

விளையாட்டுக்கள் முடிந்த சற்று நேரத்தில் குலவை சத்தத்தோடு பொங்கல் பொங்கியது. காலை உணவு ஆரம்பமானது. ஊர் மக்கள் எல்லோரும் வரிசையில் நின்று உணவு வாங்க, பசுமை நடையின் ஆர்வலர்கள் பாசத்தோடு பரிமாற சுவையான சர்க்கரை பொங்கலும் சூடான வெண்பொங்கலும் பரிமாறப்பட்டது. ருசித்து சாப்பிட்ட மக்கள் அனைவரும் பாறை மேல் ஏறி அமர போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா ஆரம்பித்தது.

IMG_9600

IMG_9816

10151987_901130189932089_7268186705003793807_n

10923495_901130509932057_5758240078971602267_n

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அய்யா சாந்தலிங்கம் ஊர்த்தலைவரும் பரிசுகளை வழங்கினார்கள். சாந்தலிங்கம் அய்யாவின் பேச்சில் உழவுத்தொழிலின் தொன்மை குறித்த குறிப்புகள் அதிகம் இருந்தன. மேலும் அத்தகைய தொன்மை மிகுந்த தொழில் நசிந்து வருவதை குறித்த வருத்தமும் இழையோடி இருந்தது. பின்னர் நம் பசுமை நடை குழுவினருக்கு இந்த விழா நடக்க பெரிதும் உறுதுணையாய் இருந்த ராமசாமி அண்ணனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

IMG_9793

இந்த நிகழ்வின் பின்பு உறியடி திருவிழா ஆரம்பமானது. கட்டையை எடுத்துக் கொண்டு முதலில் கிளம்பிய ஹுயுபர்ட் அண்ணன் உறிக்கு நேரெதிர் திசையில் நடக்க விழா களை கட்டியது. ஏதோ ஞாபகத்தில் சட்டென்று உறி இருக்கும் திசைக்கு திரும்பி மிக அருகே சென்று விட்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் திசை மாறிப் போனார். பிறகு பசுமை நடை உறுப்பினர்கள் பலரும் முயற்சித்து வெற்றியடையாமல் திரும்பி வந்தார்கள். முடிவாய் வெள்ளபாறப்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உறியை அடிக்க விழா இனிதே நிறைவடைந்தது. மக்கள் அனைவரும் வீடடைய பசுமை நடை நண்பர்கள் அனைவரும் இணைந்து மதிய உணவு உண்டு விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

10553483_901132373265204_2227258840335530460_n

மதுரையில் இருந்து வெறுமனே 8 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமம் இப்படி பின்தங்கிய நிலையில் இருப்பது அதிர்ச்சியளித்தது. கிராமத்தை சுற்றி ஒரு பெருஞ்சுவர் ஒன்றும் காணப்பட்டது. அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மறந்து போனது. ஆனால் நண்பர் பாடுவாசி ரகுநாத்தின் பதிவில் அது குறித்த நீண்ட விளக்கம் இருக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் விளக்கம் அது (சுட்டி கீழே).

இரண்டு வயதில் நான் கொண்டாடிய கிராமத்து பொங்கல் என் மகனுக்கு வாய்க்காமலே போய் விடுமோ என்ற கவலையை போக்கி விட்டது இத்திருவிழா. அதிகாலை எழுவதே ஒரு சிரமம் என்று இருக்கும் ஒரு காலகட்டத்தில் நேற்று மட்டும் எப்படி அவன் விடிகாலை துயில் களைந்தான் என்று இப்போதும் ஆச்சர்யமாய் இருக்கிறது. ஊருக்கு சென்றதும் அங்கு கண்ட வெள்ளாட்டு குட்டிகளோடு விளையாடி கோழி பிடித்துக் களைத்தான். சுற்றி நின்ற ஒத்த உணர்வுடைய நண்பர்களோடு பேசித் திளைத்தான். தமிழர் திருவிழாவில் தமிழனாய் முளைத்தான். இரண்டு வயதில் அவனுக்கு கிட்டிய இப்படி ஓர் அனுபவம் நகரத்தின் கட்டிடக்காடுகளுக்குள் டிவி பார்த்து கொண்டாடும் பிள்ளைகளுக்கு கிட்டுவதில்லை என்பது நிச்சயம்.

IMG_9784

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பணம் கொடுப்பதோ அவர்கள் வசதியாய் வாழ வழி செய்து கொடுப்பதோ பெரிய விடயமில்லை. ஆனால் வாழ்வின் நுண்அற்புதங்களை, கிராமத்து வாழ்வின் அழகியலை, அவ்வூர் பிள்ளைகளின் விளையாட்டை, பலன் எதிர்பாரா நட்பை, அன்பை உங்கள் பிள்ளைகளுக்கு அனுபவமாய் கிடைக்க வழி செய்வது கண்டிப்பாய் பெரிய விஷயம் தான்.

இரண்டு வயதில் அவனுக்கு என்ன புரிந்திருக்கும் என்று யோசிக்கலாம். ஆழ்ந்து சிந்தித்தால், இரண்டு வயதில் அவனுக்கு என்ன புரிந்திருக்க வேண்டுமோ அது புரிந்திருக்கும்.

மேலும் இந்த விழா குறித்த பதிவுகள்:

பாடுவாசி ரகுநாத் – தை பிறக்கட்டும்; வெள்ளப்பாறைபட்டிக்கு வழி பிறக்கட்டும்.

வஹாப் ஷாஜஹான் – பொங்கல் விழா

படங்கள் உதவி – அருண் பாஸ் (JV fashion studios) மற்றும் ஹுபர்ட் அண்ணன் கேமிரா!

மெட்ராஸ் – கேள்விகள் சில

madras-movie-poster

விமர்சனம் இல்லை. ஒரு பார்வை மட்டுமே.

சில நாட்களுக்கு முன் ‘மெட்ராஸ்’ பார்த்தேன். வழக்கமான அரசியல் படம் தான். ஆனால் பா.ரஞ்சித் அந்த அரசியலை வைத்திருக்கும் இடம் மிகவும் முக்கியமானது.

பார்க்க ஆரம்பித்த உடன் முதலில் நினைவுக்கு வந்தது பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்!’ கார்த்தியின் அம்மாவாக வரும் ரமா அதில் அறிமுகம் ஆனார். ஏ ராசாத்தி ரோசாப்பு பாடலில் தென்னவனோடு இவர்தான் நடித்திருப்பார். அதை மனதில் இருந்து நீக்கி விட்டு பார்க்க ஆரம்பித்தேன்.

நான் இன்ன சாதி என்று ஒருவன் சொல்ல வேண்டாம். அவனது நடை உடை பாவனைகளிலேயே அவன் சாதியை அனுமானிக்கும் சமூகம் இது. பெயரை வைத்து, இருக்கும் இடத்தை வைத்து, சொந்த ஊரை வைத்து சாதி கண்டுபிடிப்பார்கள். நம் சமூகத்தின் வேர்களில் புரையோடிப்போயிருக்கும் சாதீய வன்மம் எல்லா மனிதர்களிடமும் கொஞ்சம் மிச்சம் இருக்கவே செய்கிறது.

மெட்ராஸ் படத்தின் கதாநாயகி எனக்கு அப்படித்தான் தெரிந்தாள். அவள் அந்த பாத்திரத்துக்கு பொருத்தமானவள் அல்ல என்று கட்டியம் கூறியது என் மனது. பாக்க சேட்டு பொண்ணு மாதிரி இருக்கே.. என்பதுதான் என் மனதில் முதலில் தோன்றிய எண்ணம். இதற்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம். முதல் காரணி, மெட்ராஸ் பார்க்கும் முன் நான் “இத்தரஅம்மாயிலதோ” என்றோர் தெலுகு படத்தை பார்த்தேன். அதில் இதே நாயகி (கேத்ரீன் தெரேசா) ஒரு மத்திய அமைச்சரின் மகளாய் வந்து அல்லு அர்ஜூனை விழுந்து விழுந்து காதலிப்பார். ஒருவேளை அதை பார்த்து பின் உடனே மெட்ராஸ் பார்த்த காரணமோ என்னவோ அந்த கதாநாயகி வடசென்னையில் பிறந்து வளர்ந்தவள் என்ற பாத்திர படைப்பு சற்றும் ஒட்டவில்லை. இரண்டாம் காரணி, வெள்ளை தோல் பெண்கள் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பதில்லை. இப்படி யதார்த்தமாய் பதிவு செய்த ரஞ்சித்துக்கும் ஒரு வெள்ளை தோல் நாயகி தேவைப்படுகிறாளே என்ற சலிப்பாய் கூட இருக்கலாம்.  அடிப்படை மக்கள் வாழ்வியலை அழுத்தமாய் பதிவு செய்யும் இந்த படத்திலும் நாயகி வெள்ளையாய் இருக்க வேண்டும் என்ற விதி ஏன்? நாயகி கருப்பாய் இருந்தால் கார்த்தி காதலிக்க மாட்டாரா? மூன்றாம் காரணி, என்னுள் இருக்கும் சாதீய எச்சமாய் இருக்கலாம்.

வடசென்னையின் பல பகுதிகளில் அலைந்து திரிந்தவன் என்ற முறையில் ரஞ்சித்தின் பாத்திர படைப்பிலோ வாழ்வியல் உருவாக்கத்திலோ வேறு எந்த குறைகளையும் என்னால் காண இயலவில்லை. புளியந்தோப்பின் நெரிசல் மிகுந்த சாலைகளையும் வியாசர்பாடியின் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளிலும் மாஞ்சா போட்ட நூல்களிலும் புகுந்து செல்லும் கதைக்களம் அது. அதனுள் இருக்கும் அரசியலை நுணுக்கமாய் விவரித்ததில் மெட்ராஸ் வெற்றி பெறுகிறது.

ஆயினும் அன்பு கொலை செய்யப்பட்ட பின் நடக்கும் தனி மனித பழிவாங்கல் வழக்கமான திரைப்படமாய் மெட்ராசை சுருக்கி விட்டது. அதுவும் கொலைகள் பல செய்து விட்டு கடைசியில் கார்த்தி குழந்தைகளுக்கு போதிப்பது போல் காட்டுவது எப்படி யதார்த்தமாகும்? வடசென்னை மட்டும் அல்ல. பல்வேறு ஊர்களில் இருக்கும் வன்முறையில் வாழ்க்கையை நடத்தும் கும்பல் எதுவும் தனிப்பட்ட ஒருவனின் மரணத்தோடு முடிந்து விடுவதில்லை. மாரிக்கு ஒரு விஜி இருந்தது போல் விஜிக்கு ஒருவன் இருப்பான். அன்புவிற்கு ஒரு மாரி இருந்தது போல் கார்த்திக்கு ஒருவன் இருப்பான். பழிவாங்குதல் அவனுக்கு நேராமல் இருக்க வேண்டுமானால் அவன் எதிரிகளை மொத்தமாய் கருவறுக்க வேண்டும்.

மாரியின் மனதை மாற்றுவதன் மூலம் அன்பின் சாவுக்கு காரணமாய் இருந்தது கண்ணன். ஆனால் கடைசி வரை கண்ணனை எதுவும் செய்ய வேண்டும் என்று காளிக்கு தோன்றவே இல்லை. கண்ணன் தானே அந்த சுவரின் அரசியலுக்கு ஆணிவேர். கண்ணனை ஏற்கனவே கொல்ல முயற்சித்தவன் காளி. கண்ணன் சும்மா இருப்பானா?? விஜியும் காளியின் எதிரிதான்.

இதே கதைக்களம் தொடர்ந்திருந்தால் காளியும் கொஞ்ச நாட்களில் இறந்திருப்பான். கொன்று போட்டிருப்பார்கள். கலையரசி அழுது கொண்டே பிள்ளையிடம் அப்பன் சாவுக்கு பழிவாங்கிட்டு தான் கண்ணாலம் கட்டுவேன்னு எந்தலையில அடிச்சு சத்தியம் செய்யுடா! என்று கேட்பது போல் படம் முடிந்திருக்கும்.

ஆனாலும் வடசென்னையின் வாழ்க்கையை, வன்முறையை, அரசியலை அழுத்தமாய் பதிவு செய்தமைக்கு என் வாழ்த்துக்கள் ரஞ்சித். அடுத்த படைப்பு இன்னும் யதார்த்தமாய் உன்னதமாய் அமைய வாழ்த்துக்கள்.

மலைபடுகடாம்! – பாறைத் திருவிழா நினைவுகள்!

10256910_837017749676667_2289648865055744447_n

மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாற்று நடையை தொடர்ந்து நடத்தி வரும் அமைப்பான பசுமை நடை சென்ற வருடம் ஆகஸ்டு மாதத்தில் விருட்சத்திருவிழா கொண்டாடியது. இந்த முறை அது போலவே வரலாற்றை நமக்கு கொண்டு சேர்த்த ஏதேனும் ஒரு ஊடகத்தை சிறப்பிக்க விழா எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. கல்வெட்டுகளும் சிற்பங்களும் பாறை ஓவியங்களும் கல் கருவிகளும் சொல்லாத வரலாறு எதுவுமில்லை இந்த பூவுலகில். அந்த பாறைகளையே சிறப்பிக்க முடிவு செய்து பாறைத் திருவிழாவாக கொண்டாடலாம் என்று முடிவு செய்தோம்.

10676386_837017533010022_8346189927330405776_n

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி கீழக்குயில்குடியில்  பாறைத்திருவிழா கொண்டாடலாம் என்று முடிவு செய்த நிமிடத்தில் இருந்து வேலைகள் தொடங்கின. திருவிழா நடத்த, நிதி திரட்ட, மதுர வரலாறு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, புத்தகத்தில் வெளியிட விளம்பரங்கள் பெற என்று அலைபேசியிலும் அலைச்சலிலும் கழிந்தன பொழுதுகள்.

1921895_837019119676530_4930353511964383276_n10580066_10203138714205105_8582780758823346382_n

திருவிழா நாளும் நெருங்கியது. ஒரு அரசியல் தலைவரை சிறை வைத்ததன் பொருட்டு நடந்த கலவரங்கள் ஊடே எங்கள் வேலைகளும் தொடர்ந்தன. நாடும் சதி செய்தது. பெட்ரோல் பங்குகளும் கடைகளும் மூடிக்கிடந்தன. எங்கும் எதிலும் கலவர பேரொலி. ஆயினும் குயில்குடி பெருமரத்தடியில் கூடிய வரலாற்றை நேசிக்கும் இளைஞர் பட்டாளம் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் வேலைகளில் மூழ்கினார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் கைகோர்த்து செய்த வேலை கண்டு கண்கள் குளிர்ந்தது சமணமலை.

அடுத்த நாள் காலை நிகழ்வு தொடங்க வேண்டிய நேரமான ஆறில் ஆர்ப்பரித்து பொழிந்தது புதுமழை. மழை வேண்டும் வேண்டும் என்று எத்தனையோ நாட்கள் தவமிருந்த போது பெய்யாத பெருமழை பாறைகளை கொண்டாடும் நாளிலா பெய்ய வேண்டும் என்று சற்றும் சலிக்காமல் வேலை செய்தார்கள் நம் மக்கள். பல்லாயிரம் ஆண்டுகளாய் பரஸ்பரம் நட்பு பாராட்டும் இரு பெரும் இயற்கை கூறுகள் அன்றும் நட்பை பாராட்டின.. ஆமாம்.. நண்பன் பாறைக்கு எடுக்கப்படும் பெருவிழாவிற்கு வராமல் மழைக்கென்ன பெரிய நாடாளும் வேலை?

1604551_10203138713405085_7776508082431939654_n

பொழிந்த மழைதனிலே நனைந்தபடி ஆரம்பமானது விழா. மரத்தடி சமையல் ஒரு புறம் நடக்க, செட்டிப்புடவு நோக்கி மக்கள் கூட்டம் மறுபுறம் நடக்க இனிதே ஆரம்பமானது பாறைத்திருவிழா. செட்டிப்புடவு சென்று அங்கிருந்த சமண சிற்பங்களையும் கல்வெட்டையும் கண்டு விட்டு அய்யா சாந்தலிங்கம் விவரித்த வரலாற்றையும் கேட்டுக் கொண்டு திரும்ப எத்தனித்த போது மழை சற்று விடுபட்டது.

10348599_837019469676495_1859004917811191638_n10689422_837019869676455_2242802920269166253_n

மலை நனைத்த மழை மறுபடி வருமோ என்று எண்ணிக்கொண்டே மரத்தடி வந்து சேர தயாராகி இருந்தது காலை உணவு. அக்கரை அடிசிலும் வெண்பொங்கலும் சூடான சாம்பார் சட்னியோடு மழை கலந்த காலை உணவு அற்புதம். தட்டில் வாங்கிக்கொண்டு மலையோடு ஒட்டிய தாமரைக் குளக்கரையில் அமர்ந்து உண்ணும் வரம் உங்களில் எத்தனை பேருக்கு கிடைக்கும்?

10542008_837018503009925_6040574293722819142_n

அனைவரும் உணவருந்தி முடிக்க மழை மேலும் வலுத்தது. உடனடி ஏற்பாடாய் மேலும் இரண்டு அரபுக்கொட்டாய்களும் அதனடியில் நாற்காலிகளும் போடப்பட்டன. அனைவரும் வந்தமற ஆரம்பமானது சிறப்பு பேச்சாளர்களின் கருத்துரைகள். அனைவரையும் வரவேற்ற முத்துகிருஷ்ணன் பசுமை நடை பற்றிய செய்திகளையும் இதன் பின்னால் இருந்த இளைஞர் பட்டாளத்தின் உழைப்பையும் அனைவரும் அறியுமாறு சொன்னார்.

10426734_837020259676416_7604145288611141415_n

அடுத்ததாக பேசிய கீழக்குயில்குடி ஊர்த்தலைவர் தங்கராசு – இதுகாறும் செட்டியார் சிலை என்று நாங்கள் நினைத்திருந்தது சமணர் கற்சிற்பம் என்பது உங்களால் தான் எங்களுக்கே தெரிந்தது. பசுமை நடையின் அனைத்து செயல்பாடுகளிலும் கீழக்குயில்குடி மக்கள் பெரும்பங்கு ஆற்றுவார்கள் என்று உறுதியளித்தார்.

10636079_837020933009682_8950850325609568079_n

அடுத்து பேசிய சாந்தலிங்கம் அய்யா மலைகளையும் பாறைகளையும் கல்வெட்டுகளையும் ஒவியங்களையும் அவை கூறும் வரலாறுகளையும் பற்றி பேருரை ஒன்றை வழங்கினார்.  பின்னர் பேசிய அய்யா தியடோர் பாஸ்கரன் இதுவரை செய்தவற்றை பற்றியும் இன்னும் செய்ய வேண்டிய பல வேலைகளை பற்றியும் சிறப்புரை ஆற்றினார். நடுகற்கள் மூலம் பெறப்படும் வரலாற்றையும் கல்வெட்டுகள் தவிர்த்த பிற சான்றுகள் மூலம் பெறப்படும் வரலாற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது அவரது உரையின் சாராம்சம்.

10644442_837022513009524_3432699423661218364_o

1794759_837022623009513_8485187133277250806_n

இதற்கிடையே மதுர வரலாறு நூலின் ஆங்கில வடிவமான “History of Madura: A Voyage into Jaina Antiquity” என்ற நூலை நிலவியல் அறிஞர் கிறிஸ்டோபர் ஜெயகரன் வெளியிட அதை பொறியாளர் பாண்டியன் பெற்றுக்கொண்டார்.

10409581_837021206342988_4444827688020674378_n

சூடான தேனீரும் சமோசாக்களும் வழங்கப்பட்டன. செவிக்கு உணவு, அறிவுக்கு உணவு, மற்றும் வயிற்றுக்கு உணவு என எல்லா தேவைகளும் நிறைவான உணர்வு வந்திருந்த நண்பர்களுக்கு.

10342776_10203153658538704_1576753702621624778_n

மறுபுறம் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. மழையில் நனைந்த தாமரை மொட்டுக்கள் போல அவர்கள் ஆனந்தமாய் விளையாடினார்கள்.

10665089_837018719676570_7182810347912815051_n

9739_837020279676414_5249074236772492006_n

10471260_837021973009578_3851137930450031573_n

நிகழ்வு முடியும் தருவாயில் சூரியன் வெளியே வந்து நண்பன் பாறைக்கு ஒளி தர பாறையும் அதன் பங்குக்கு மழையில் நனைந்த மக்களின் உடைகளை உலர்த்தியது. அறுசுவை மதிய உணவு உண்ட பிறகு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சான்றிதழில் கையொப்பமிட அமர்ந்தார்கள் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும்.

10676322_837026249675817_7955020067561896141_n

10689869_837025833009192_1539523390550940834_n

கையொப்பமிட்ட சான்றிதழ்கள் குழந்தைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு குழந்தைகள் எவ்வாறு உணர்ந்தார்கள் என்ற கருத்தும் கேட்கப்பட்டது. அனைத்து குழந்தைகளையும் கருத்து சொல்ல வாய்ப்பளித்த பிறகு அவர்களுக்கு ஒரு சிறு அன்பளிப்பு (தமிழர் விளையாட்டு பொருள்களான கோலிக்குண்டு, பம்பரம் போன்றவை) வழங்கப்பட்டது.

மழை நின்று போக, மலை நிலைத்து நிற்க, நின்ற மலைக்கு சிறப்பு செய்த உணர்வோடு அனைவரும் கலைந்தோம்.

993711_837023409676101_6466177469353429394_n

பி.கு: நிகழ்வு நடத்த உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பணமாய், பொருளாய், வார்த்தையாய் உதவிய அனைவருக்கும், வந்து கலந்து கொண்ட அனைவருக்கும், இன்னும் பதிவு ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பியும் என்னை எழுதச் செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.  வர வேண்டும் என்று நினைத்தும் வர முடியாமல் போன அனைவருக்கும் தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாய் இருக்கும் என்றே கருதுகிறேன்.

பந்த்-தை பந்தாடிய பசுமை நடை நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

அன்புடன்,

மதுரக்காரன் மற்றும் வரலாறு கூறும் பாறைகள்!

1625568_837026816342427_7452138003505966903_n

புகைப்பட உதவி – அருண் பாஸ், எப் ஜெய், மற்றும் ஆனந்த்.

கற்றல் இனிது! கற்பித்தல் அதனினும் இனிது!

ஸ்கேல் எடுத்த அடி வெளுத்த ஆசிரியர்களும் அன்பாக அறிவுரைத்த ஆசிரியர்களும் தாண்டி இன்று ஒரு பல் மருத்துவராய் உங்கள் முன் நிற்க, இரு தரப்புமே முக்கிய காரணங்கள்.கற்க வேண்டியவற்றை கற்பித்து மறக்க வேண்டியவற்றை மறக்க வைத்து என்னை மெருகேற்றியததில் ஆசிரியர்களின் பங்கு அலாதியானது.

பால்ய வகுப்புகளில் எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் முகம் எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. ஆனால் கற்றுக்கொடுத்த பாடங்கள் மட்டும் நினைவில். நான் வளர வளர ஆசிரியர்கள் முகங்களும் ஆழப் பதிந்து போயின மனதில். பள்ளி வகுப்புகளிலும் கல்லூரியிலும் அதன் பிறகான மருத்துவ பயிற்சியிலும் எண்ணற்ற ஆசிரியர்களோடு படித்துள்ளேன். இங்கு குறிக்கப்பட வேண்டியது நான் ஆசிரியர்களின் கீழ் படித்ததில்லை. அவர்களோடு தான் படித்திருக்கிறேன். அல்லது அவ்வாறு நினைத்தே அனைத்து வகுப்புகளையும் தாண்டி வந்துள்ளேன்.

பள்ளிக் காலங்களில் எனக்கு ஆங்கிலம் வராது. இருந்தாலும் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்டு, வகுப்பெடுத்து, ஓரளவு ஆங்கிலம் பேச வைத்து மேலே படிக்க எந்த ஊருக்கு சென்றாலும் பிழைப்பை ஓட்ட முடியும் என்று நம்பிக்கை வர வைத்தது ரவி ஆனந்தன் சாரும் பாலு சாரும். What is your name? என்று கேட்டால் my name is Rajanna என்று அப்பாவி போல் சொல்லித் திரிந்தவன் நான். கல்லூரி முதல் நாள், ஒரு சீனியர் கேட்ட கேள்விக்கு இப்படி பதில் சொல்ல கல்லூரிப் பேருந்தே ‘கொல்’லென சிரித்தது. சட்டைப்பையை pocket என்று சொல்வதறியாமல் ‘சோப்’ என்று சொல்லித் திரிந்தவனாய் இருந்திருக்கிறேன். அதை திருத்தி மொழிப்புலமையை மாற்றி வைத்தவர்கள் எல்லாருமே எனக்கு ஆசிரியர்கள் தான்.

ஒன்பதாம் வகுப்பில் மார்க் அதிகம் பெற வேண்டி தமிழை விட்டுவிட்டு பிரெஞ்சு வகுப்பில் சென்று அமர்ந்தவன் நான். ஒரு வருட பிரஞ்சு படிப்புக்கு பின் "என்ன கருமம் இது! என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்’ என்று உணர்ந்து பள்ளியில் அனுமதி பெற்று மறுபடி தமிழ் வகுப்புள் சென்றவனை வாரியணைத்து தமிழ் கற்றுவித்தார் கேகேடி. இன்றைக்கு ஓரளவு பிழையின்றி பேசவும் எழுதவும் முடிகிறதென்றால் அதற்கு அவரே முழுமுதல் காரணம்.
கணக்கென்றால் அலர்ஜி எனக்கு. என்னை கணக்கில் 180க்கு மேல் எடுக்க வைத்ததே ஒரு சாதனைதான். அந்த வகையில் கணக்கு சொல்லிக்கொடுத்த சரோஜா டீச்சர், புதுமலர்செல்வி டீச்சர், ஹரிஹரன் சார் எல்லாரும் தெய்வங்கள் எனக்கு.

வேதியியல் சொல்லிக்கொடுத்த நித்யா மேடம், அகிலாண்டம் டீச்சர், சேதுராமன் சார் போன்றோர் எல்லாம் தற்போது எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது எனக்கு. ஆனால் கெமிஸ்ட்ரி லேபில் இருந்து களவாண்டு வந்த சால்ட்டுகளையும் கழிப்பறை கழுவும் ஆசிட்டையும் வைத்து நான் செய்த வேதியியல் பரிசோதனைகளுக்கு தங்கை மட்டுமே சாட்சி.

பாட்டனி சொல்லிக் கொடுத்த ரமேஷ் சார் தற்போதும் நல்ல நண்பர் எனக்கு. தொடர் தொடர்பில் இல்லாவிட்டாலும் பிற நண்பர்கள் மூலம் என் வளர்ச்சியை உறுதி செய்து கொண்டே தான் இருக்கிறார். விலங்கியல் கற்பித்த சூர்யா மிஸ்சையும் நினைவு கூற வேண்டும் இந்நேரம்.

இயற்பியல் – என் அம்மாவின் சப்ஜெக்ட். 36 ஆண்டுகாலமாய் இயற்பியல் போதித்து வரும் அம்மா இந்த வருடம் பணி ஓய்வு பெறுகிறார்கள். ஒரு வருடம் படிக்கவே முட்டி மோதி தாண்டி வந்த எனக்கு இத்தனை வருடங்கள் எப்படி அம்மாவால் அதை படித்து பிறருக்கு சொல்லித்தர முடிகிறது என்பது பெரிய ஆச்சர்யம். ஆனாலும் அம்மாவிடம் நான் இயற்பியல் படித்ததில்லை. எனக்கு இயற்பியல் சொல்லித்தந்த நாகராஜன் சார், ராமானுஜம் சார், பாலு சார் போன்றோர் இன்னும் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சி.

நான் பள்ளி படித்த காலங்களில் அங்கு முதல்வராய் இருந்த நந்தகுமார் சாருக்கும் என் நன்றிகள் பல. ஒருவேளை நீங்கள் பள்ளியிலே இருந்து பிரெஞ்சு பாடத்தை தொடர்ந்து நடத்தியிருந்தால் நான் அதிலேயே தொடர்ந்திருக்க வாய்ப்பிருந்தது. Merci!

பள்ளி தாண்டி கல்லூரி வந்தால், அங்கு எண்ணற்ற ஆசிரியர்களிடம் கற்றேன். அத்தனை பேரையும் இங்கு இணைத்து வாழ்த்த ஆசைதான். ஆனால் இந்த தகவல் மிகப்பெரியதாகி வாசிப்போரையும் விரட்டி விடும் என்ற காரணத்தினால் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து முடித்து விடுகிறேன்.

அது போக, இன்று இத்தனை புத்தகங்கள் படிக்கிறேன் என்றால் அதற்கு காரணம் எதுவும் இல்லாமல் இல்லை. அதிலிருந்தும் நிறைய கற்றுக் கொள்கிறேன். அந்தவகையில் நான் படித்த, படித்துக் கொண்டிருக்கும், படிக்கப் போகும் புத்தகங்களை எழுதிய அனைவரும் என் ஆசான்கள் தான். நன்றிகள் பல.

ஆமை ஒன்று நீந்துகிறது

அது ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம். அருப்புக்கோட்டை தாண்டி 18 கல் தொலைவில் வறண்ட மண் கொண்ட ஒரு விவசாய பூமி. பலகாலம் அந்த மண்ணில் விளையாடி கம்மாயில் குளித்து விளையாடி இருக்கிறேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல் டிவி இன்டர்நெட் எல்லாம் கிடையாது.

பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு செல்வது ஒரு திருவிழா போலத்தான். செல்லும் போது வெள்ளையாய் செல்லும் நான் விடுமுறை முடிந்து மதுரை வரும்போது பொட்டல் வெயிலில் காயவைத்த கருவாடாய் வருவேன். அதெல்லாம் கவலையில்லை. விளையாட்டு மும்முரத்தில் அடிபடுவது கூட தெரியாது. வண்டல் மண் கொஞ்சம் எடுத்து அப்பிக் கொண்டு விளையாட்டை தொடர்வோம்.

ஊருக்கு பேருந்து வந்து நிற்கும் இடத்தில் மடம் ஒன்று இருந்தது. மடம் என்றாள் சாமியார் மடம் இல்லை. இது ஊர் பெருசுகள் உட்கார்ந்து கதைக்கும் இடம். பெரிய வேம்பு ஒன்று உண்டு அங்கே. நாகணவாய் பறவைகளும் காக்கைகளும் கொத்தித் தின்று கொண்டே திரியும். அவ்வப்போது சில கிளிகள் வரும். பெரும்பாலும் காலை நீர் பாய்ச்சும் வேலை எல்லாம் முடித்து விட்டு சீட்டுக்கட்டும் பீடிக்கட்டுமாய் வந்து அமர்வார்கள். மதிய பொழுது வரை சீட்டும் பீடியுமாய் கரையும் அவர்களுக்கு. நாங்கள் பக்கம் சென்றால் இழுத்து வைத்து வம்பு வளர்ப்பார்கள்.

அப்படித்தான் மாட்டிக்கொண்டேன் ஒரு நாளில். சீனி தாத்தா பீடியை வலுவாய் இழுப்பவர். பக்கம் சென்றாலே பீடி வாசம் தான் வீசும். பீடி வாசம் பிடிக்குமா உங்களுக்கு? பனி படரும் மலை உச்சிகளில் கடுங்காப்பியோடு ஒரு பீடி அடித்துப் பாருங்கள். தெரியும். சீனி தாத்தா மடத்தில் தனியாய் அமர்த்திருந்த ஒரு மதிய வேளையில் பனங்காய் வண்டி ஒட்டிக் கொண்டே மடத்திற்கு அருகில் சென்று விட்டேன். 

“டேய்.. எடுபட்ட பயலே.. இங்க வாடா.”

“என்ன தாத்தா?”

“படுவா. உச்சிப்பொழுதுல இப்புடி வண்டி ஒட்டிகிட்டு திரியுற.. காலு சுடலையா?”

“சுடும்.. ஆனா ஓடுனா தெரியாது.” 

“சரிடா. மூக்கு வழியா புகை விடுவேன் பாக்குறியா?”

“அதெல்லாம் நான் பாத்துருக்கேன்.”

“சரி. காது வழியா விடுறேண்டா.. உத்து பாரு.”

நானும் காதில் புகை விட்டு பார்த்ததில்லையாதலால் உற்று பார்க்கலானேன்.

நல்லா பாத்துக்கோடா.. கொஞ்சந்தேன் வரும் என்றவர் புகையை இழுத்தார். கவனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென காலில் சுரீர் என்று ஒரு வலி. கிள்ளி விட்டார் தொடையில்.

கண்ணில் நீரோடு நிமிர்ந்து பார்க்கையில் “டேய். காதுல பொகைய விட்டேனே பாக்கல?” என்றார். “கரெக்டா காதுல பொகைய விடுற நேரம் ஒனக்கு என்ன எழவு வேடிக்க? மறுக்கா பாரு” என்றார்.

இதேன்னடா வம்பு. “நல்லா தெரிஞ்சுட்டு தாத்தா.. கொஞ்சம் எல்லாம் புகை வரல. நெறையவே வந்துச்சு” என்று தப்பித்து ஓடி வந்தேன்.

இப்படி பல கதைகள். பல நிகழ்வுகள்.

கடைசி முறை நான் ஊருக்கு சென்ற போது சீனி தாத்தா இல்லை. தவறி விட்டார். ஊர் மொத்தம் வெறிச்சோடிக் கிடந்தது. மடம் மொத்தமும் தூசி. சிலந்தி வலைகள். யாரும் இல்லை. இறங்கி ஊருக்குள் நடந்தேன்.

பாட்டி வீடு ஓட்டு வீடுதான். 93 வயதிருக்கும் அவளுக்கு. முகச்சுருக்கங்களுக்கு இடையே எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்கும் புன்னகை அவளுடையது.

“எப்பய்யா வந்த?" என்றாள் பாட்டி. நிமிர்ந்து பார்க்க முடியாமல் “இப்பத் தான் வாரேன்" என்றேன். சிரித்தாள்.

“இன்னக்கிதான் வழி தெரிஞ்சுச்சா?”

“இல்ல அவ்வா. வரணும்னு தான் நெனச்சேன். வேல கொஞ்சம் ஜாஸ்தி. வர முடியல.”

“அவ்வாவ பாக்கணும்ன்னு இப்பவாச்சும் தோணுச்சே.”

எதுவும் சொல்லவில்லை.

அங்கு மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்தேன். அப்பா, சித்தப்பா, அத்தை என்று அனைவரும் ஓரிடத்தில் நின்று கொண்டு இருந்தார்கள்.

மெல்ல சிரித்தேன். “அதெல்லாம் அந்தக்காலம்” என்றாள் பாட்டி.

“இப்பெல்லாம் ஒருத்தரும் வர்றதில்ல. எல்லாருக்கும் ஜோலி தான் முக்கியம். “

அலமாரியை திறந்தேன். பழைய புத்தகங்கள் கொஞ்சம் கிடந்தன.

விடுமுறை கழிக்க அங்கு வரும்போதெல்லாம் எனக்கு துணையாய் இருந்தது பாட்டியும் அங்கு கிடந்த சிறுவர்மலர் புத்தகங்களும் தான். சிறுவர் மலரில் வந்த ‘உயிரைத் தேடி’ என்ற கதை மிகவும் பிடிக்கும். உலகம் மொத்தம் அழிந்து விடுகிறது. எஞ்சிய சிலர் பிற உயிர்களை தேடி செல்லும் பிரயாணம் தான் அதன் கரு.

“மழ பெஞ்சுச்சா அவ்வா?”

“அதெங்க பெஞ்சுச்சு? வானம் பாத்துட்டேதான் கெடக்கேன். கொஞ்சம் தூத்தல் போட்டுச்சு. அப்பறம் காணம்!”

வெளியே பார்த்த போது எதிரில் இருந்த கொட்டாய் கண்ணில் பட்டது. ஒரு காலத்தில் ஐந்தாறு மாடுகள் இருந்த போது மாடு ஈனும் காட்சியை கண்டது நினைவில் வந்தது.

“எங்கவ்வா? ஒரு மாட்டையும் காணோம்?”

“மாடா! மனுஷனே இல்லாத ஊருல மாட்டுக்கு என்னைய்யா வேல? அதையெல்லாம் வச்சி பாக்க முடியல.”

காலை பத்து மணி இருக்கும். ஊரில் நடமாட்டமே இல்லை. எங்கோ ஒரு வீட்டில் “டாடி மம்மி வீட்டில் இல்லை" என்ற பாடல் டிவியில் ஒலித்தது. வெயில் ஏறியது. தோட்டம் வரை சென்று வருவதாக சொல்லி கிளம்பினேன்.

மடத்தை தாண்டி தோட்டம் நோக்கி நடந்தேன். கம்மாய் தாண்டி ஒரு சிறுகுன்று இருக்கும். எனக்கு அது மலை. ஊர்க்காரர்கள் மல்லை என்று சொல்வார்கள். மலை தாண்டி ஏறி இறங்கியதும் வலது பக்கம் ஒரு பெருங்கிணறு இருக்கும். அது எங்கள் கிணறல்ல. இடது புறம் இரு பெருவிருட்சங்கள் இருக்கும். அத்திமரங்கள் அவை. குளித்து விளையாடி வீட்டிற்கு செல்லும் போது விழுந்து கிடக்கும் அத்திப்பழங்களை எடுத்து வாயில் போட்டு கொள்வோம்.

தோட்டம் நோக்கி நடந்தேன். அத்திமரங்களில் இருந்து அரைக்கல் தொலைவில் இருந்தது தோட்டம். எப்போதும் வாழை மரங்களோடு வரப்பு ஓரம் இருக்கும் தென்னை மரங்களும் மாமரங்களும் அதை ஒரு சோலை போல் காட்டும். அதுதான் என் நினைவில் பதிந்த பிம்பம். தோட்டத்தை நெருங்க நெருங்க மனம் கனத்தது. மாமரங்களை காணவில்லை. தென்னைகள் வாடல் நோயினால் வாடிப்போய் காயற்றுக் கிடந்தன. நிலம் மொத்தம் கடலைச்செடி போட்டிருந்தார்கள்.

உள்ளே நுழைந்தேன். கிணறு சிறிது தூரத்தில் இருந்தது. வாய்க்கால்கள் வறண்டு போயிருந்தன. மெல்ல உள்ளே சென்று வரப்போரம் இருந்த ஒரு கடலை செடியை பிடுங்கினேன். கடலை நன்றாய் காய்த்திருந்தது. கடலைகளை பிடுங்கிவிட்டு செடியை தூர வீசினேன். கொஞ்சம் கடலையை மென்று கொண்டே கிணற்றை நோக்கி நடந்தேன்.

அந்தக் கிணறு மிகவும் பழையது. உள்ளே இறங்க வழியுண்டு. அரைக்கிணறு தண்ணீருடன் தான் நான் அதை பார்த்ததுண்டு. மீன்களும் ஆமைகளும் நீந்தும். ஆச்சர்யமாய் இருக்கும். எப்படி இந்த கிணற்றுக்குள் மீன்கள் வருகின்றன என்று. சில நேரம் பாம்புகள் கண்ணில் படுவதுண்டு.

நீர்ச்சாரைகளை பிடித்து வருவார் சித்தப்பா. நீர்ச்சாரையை கையில் பிடித்து சைக்கிள் கேரியரில் ஒரு முள்ளுச்செடி ஒன்றை மாட்டி அதனுள் நீர்ச்சாரையை போட்டால் அது வெளியே வராது. வர முயன்றால் முள் குத்தும். ஊருக்குள் எடுத்து வந்து குழந்தைகளிடம் கொடுத்து விடுவார். வன்கொடுமை செய்வார்கள் அறியா வயதில். பீடி, மூக்குப்பொடி போடுவார்கள். பாவம் பாம்புகள்.

கிணற்றை நெருங்கி எட்டிப்பார்த்தேன். நீர் இல்லை. கொஞ்சமாய் படிக்கட்டுகளில் இறங்கினேன். அடியில் கொஞ்சம் நீர் இருந்தது. கலங்கிக் கிடந்தது அந்த கிராமத்து வாழ்வைப் போல. உற்றுப் பார்த்தேன். ஆமை ஒன்று மட்டும் நீந்திக்கொண்டு இருந்தது. மீன்கள் எதுவும் கண்ணில் படவில்லை. குளிக்கலாம் என்று நினைத்தேன். ஆமையை தொந்தரவு செய்ய மனமில்லை. மேலே ஏறி வந்து ஊர் நோக்கி நடந்தேன்.

அத்திப்பழங்கள் காணவில்லை. ஒன்று கூட இல்லை. மேலே பார்த்தேன். அத்திமரம் ஒன்று பட்டுப்போயிருந்தது. மற்றொரு மரம் கிடைக்கும் நீரை மொத்தமும் இலைக்காய் ஒதுக்கிவிட்டது போலும். பழங்கள் இல்லை. மலை தாண்டி இறங்கினால் கம்மாயில் தேங்கிக்கிடந்த நீரில் அத்தைகள் நீர் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். நலம் விசாரித்துவிட்டு மேற்கொண்டு நடந்தேன்.

பாட்டி வீட்டு சாப்பாடு கம்பங்கூழ் அல்லது கேப்பைக்கூழாய் இருக்கும் என்று நினைத்து உள்ளே சென்றேன். பாட்டி நெல்லுச்சோறு பொங்கி வைத்து இருந்தாள். கொஞ்சம் பேசிக்கொண்டே சாப்பிட்டேன்.

“சரி அவ்வா. நான் கெளம்புறேன். பஸ்சு வந்துரும் இப்போ.”

“இருந்துட்டு காலைல போயேண்டா"

“இல்லவ்வா. நெறைய வேலை இருக்கு. நான் போயிட்டு ஒரு நாள் தங்குற மாதிரி வர்றேன்.”

“ஒரு நாள் இருந்துட்டு போய்யா.”

“இல்லவ்வா கண்டிப்பா அடுத்த மாசம் வர்றேன்.”

“சரிய்யா. எல்லாரையும் கேட்டேன்னு சொல்லு.” என்று சொல்லும் போது அவள் கண்களில் நீர் தேங்கி நின்றது.

“சரிவ்வா.”

வீட்டில் இருந்து இறங்குகையில் இரண்டு ஆடுகள் குறுக்காய் ஓடின. பின்னாலேயே ஒரு குட்டி ஆடு ஓடியது. பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன்.

அந்தக்காலத்தில் நிறைய பஸ்கள் உண்டு ஊருக்கு. எல்லாம் தனியார் பேருந்துகள் தான். அரசு பேருந்து ஒன்றே ஒன்று தான். அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழியும். நிற்க இடம் கிடைக்காது.

“வாத்தியார் வூட்டு புள்ளைய கொஞ்சம் மூட்டை மேல தூக்கி ஒக்கார வைங்கப்போவ். பாவம் மதுரைல இருந்து வருது.” – பக்கத்து ஊர் மாணவர்கள் கொஞ்சம் பேர் சொல்வார்கள்.

“என்னய்யா.. லீவு விட்டுட்டாங்கேளா? உங்கப்பன் நல்லாயிருக்கானாடா? நான் கேட்டேன்னு சொல்லு!” – ஏதோ ஒரு வங்கிழடு கேட்கும்.

நினைவுகளை ஓட்டியபடியே நின்றேன். பேருந்து வந்தது. ஏறி ஜன்னலோர இருக்கை ஒன்றில் அமர்ந்தேன். பேருந்து கிளம்பியது. ஊர் பின்னோக்கி சென்றது. நினைவுகள்  நீங்காமல் நின்றது. ஆமை மட்டும் நீந்திக்கொண்டே இருந்தது.

பாட்டி அழுதுகொண்டே இருக்கிறாளோ என்னமோ?

சென்னை – வரலாற்றின் உள்ளே

சென்னை. பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது வெயில். ஒரு காலத்தில் சுற்றிலும் மரங்களோடு நதிகள் சூழ்ந்த கிராமமாய் இருந்த சென்னை இன்று அந்த அடையாளத்தை தொலைத்து நிற்கிறது. சென்னையின் வரலாற்றை தேடிப் படிக்கும் எனக்கு இந்த நாளில் அதை பிறரோடும் பகிரத் தோன்றியது.

ஆங்கிலத்தில் எளிதாய் எழுதி விட்டேன் (Copy paste). சுட்டி இங்கே – Chennai Day – A journey into the history.

இதை தமிழாக்கம் செய்வது சுலபமில்லையே. ஆயினும் ஒரு சிறு சுருக்கமான முயற்சி. Smile

About the origins of Madras:

சென்னையின் ஸ்தல வரலாறு:

திரு.பிரான்சிஸ் டே தான் சென்னை உருவாக இருந்த காரணகர்த்தா. அவர் வந்து சேர்ந்த போது திருவல்லிக்கேணி நதி என்று அழைக்கப்பட்ட கூவம் நதி படகு போக்குவரத்துக்கு ஏதுவாய் இருந்தது. மழைக்காலத்தில் அதைப் பார்த்த டே அது எப்போதும் தண்ணீரோடு இருக்கும் என்று நம்பி ஏமாந்து போனதில் வியப்பில்லை. சந்திரகிரி நாயக்க மன்னரோடு அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்தது. காட்பாடியில் இருந்து குடுர் வரை செல்லும் ரயில் பாதையில் வரும் சந்திரகிரி ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கல் தொலைவில் இருந்த ராஜாமகாலில் இந்த மன்னர் டேவிற்கு சென்னையை தாரை வார்த்தார்.

புனித ஜார்ஜ் கோட்டை:

ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த கட்டிடம் புனித ஜார்ஜ் கோட்டை என்றே அழைக்கப்பட்டு வந்தாலும், கோட்டை சுவர் உருவானது பல ஆண்டுகள் கழித்துத்தான். மைசூர் வீரர்கள் தாக்குதலுக்கு பயந்தே பீரங்கிகள் வைக்கப்பட்டு கோட்டை சுவர் பிற்காலத்தில் எழுப்பப்பட்டது.

1746ல் பிரெஞ்சு படையின் தாக்குதலுக்கு பின், ஆங்கிலேயர்கள் அனைவரும் புதுச்சேரியில் சிறை வைக்கப்பட்டனர். சென்னையில் பிரெஞ்சுக் கொடி பறந்தது. போரின் பின்னான சமாதான உடன்படிக்கையில் சென்னை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மற்றொரு பிரெஞ்சு தாக்குதல் வெற்றிகரமாய் முறியடிக்கப்பட்டது.

மிகவும் சிறியதாய் இருந்த புனித ஜார்ஜ் கோட்டை, அதை சுற்றியுள்ள வொயிட் டவுன் பெரிதானதால், நிஜமான கோட்டையாக மாற்றப்பட்டது. முதலில் கட்டப்பட்ட சிறிய கோட்டை சுவர் இடிக்கப்பட்டது.

வொயிட் டவுன், ப்ளாக் டவுன், ஆர்மீனியன் தெரு:

புனித ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே உருவான இரு துணையிடங்கள் வொயிட் டவுன் என்றும் பிளாக் டவுன் என்றும் அழைக்கப்பட்டன. தற்போதைய ஜார்ஜ் கோட்டையின் எல்லைகள் தான் அந்த காலத்தில் வொயிட் டவுனின் எல்லையாய் இருந்தன. நீதிமன்றம், சட்டக்கல்லூரி, மற்றும் இவற்றின் இடையே இருக்கும் காலி இடம் – இவை மூன்றும் சேர்ந்து தான் பிளாக் டவுன் என்று அழைக்கப்பட்டது. வொயிட் டவுன் கிறிஸ்டியன் டவுன் என்றும் அழைக்கப்பட்டது. வொயிட் டவுனின் பிரதானமாய் ஆங்கிலேயர், போர்த்துகீசியர், மற்றும் ஐரோப்பியர்கள் வசித்தனர். ப்ளாக் டவுனில் பெரும்பான்மை மக்கள் தெலுகு மக்களாய் இருந்தனர்.

ஆர்மீனியரை புதைக்கும் இடமே இப்போது ஆர்மீனியன் தெரு என்று அழைக்கப்படுகிறது. வியாபாரத்தில் சிறந்து விளங்கிய ஆர்மீனியர்கள் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே சென்னையில் தங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். பீட்டர் அஸ்கான் என்ற ஆர்மீனிய வணிகர் நாற்பதாண்டு காலம் சென்னையில் தங்கி 1751ல் மரணமடைந்தார். இவர்தான் சைதாப்பேட்டையில் மார்மலாங் பாலத்தையும் புனித தோமையர் மலையில் மேலே செல்லும் படிக்கட்டுகளையும் கட்டியவர். இவரது கல்லறையை இன்றும் வேப்பேரியில் உள்ள புனித மத்தியாஸ் தேவாலயத்தில் காணலாம்.

பி.கு: மார்மலாங் பாலம் எதுவென்று யோசிக்கிறீர்களா? இன்று மறைமலை அடிகள் பாலம் என்று அழைக்கப்படும் அடையாற்றின் வடக்கு கரையை தென்கரையோடு இணைக்கிறது. அதில் உள்ள கல்வெட்டில் பீட்டர் அஸ்கானின் பெயரை காணலாம்.

வால்டாக்ஸ் ரோடும் சால்ட் கொட்டாயும்:

சென்னையை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து மீட்ட பிறகு, பிளாக் டவுனின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழும்பியது. ஆங்கிலேயர் பிளாக் டவுனின் பாதுகாப்பிற்கு சுவர் அமைக்க வேண்டும் என்றும் அதற்கான செலவை பிளாக் டவுன்வாசிகளே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்தனர். ஆகையால் அதற்கு ஒரு அலுவலகம் அமைத்து சுவர் வரியாக பணம் வசூலிக்கப்பட்டது. அந்த தெருவே இன்று வால்டாக்ஸ் ரோடு என்று அழைக்கப்படுகிறது. இது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சால்ட் கோட்டார் வரை நீண்டிருந்தது. சால்ட்கொட்டாய் என்னும் பெயர் காரணத்தை ஜாக்கி சேகர் அவரது பதிவில் அருமையாய் விளக்கி இருக்கிறார். எனக்கு கொஞ்சம் வேலை மிச்சம்.

மேலே படிக்க – சால்ட் கோட்டர்ஸ்.

எலிகு யேல், காலடிபேட்டை, சிந்தாதிரிபேட்டை, நைனியப்ப நாயக்கன் தெரு:

ஜார்ஜ் கோட்டையில் கவர்னராய் இருந்த எலிகு யேல் நெசவாளர் குடும்பங்களை அழைத்து வந்து வீவர்ஸ் தெருவில் தங்க வைத்தார். இந்த தெருவே இன்று நைனியப்ப நாயக்கன் தெரு என்று அழைக்கப்படுகிறது. இருபத்து ஐந்து ஆண்டுகள் கழித்து கவர்னர் காலட் மேலும் சில நெசவாளர்களை அழைத்து வந்து திருவொற்றியூருக்கு அருகே தங்க வைத்தார். அவர் பெயருடன் காலட் பேட்டை என்று வழங்கி வந்த இடம் சற்றே மருவி இன்று காலடிப்பேட்டை என்று வழங்குகிறது. மேலும் தேவை ஏற்பட்டதால் நெசவாளர்களை அழைத்து வந்து வீவர்ஸ் காலனி ஒன்று உருவாக்கப்பட்டது. அதுவே இன்று சிந்தாதிரிபேட்டை என்று விளங்குகிறது.

வண்ணாரப்பேட்டை:

துணி துவைப்பவர்கள் அதிகம் இருந்ததால் அது வாஷர்மேன் பேட்டை என்று அழைக்கப்படவில்லை. ஆங்கிலேயர் அகராதியில் வாஷர்மேன் என்றால் துணிகளுக்கு வெண்மையிடுபவர் என்று ஒரு பொருள் வரும். அதனாலே இதை அவ்வாறு அழைத்தனர்.

போதுமென்று நினைக்கிறேன். இதற்கு மேல் மொழிபெயர்க்க நேரமில்லை. அதைவிட முக்கியமாய் எனக்கு அவ்வளவு பொறுமையோ புலமையோ இல்லை. Smile

நேரமிருந்தால் படியுங்கள். க்ளின் பார்லோ எழுதிய “The Story of Madras.”

இனிய சென்னை தின வாழ்த்துக்கள்.

ரயில் பயணங்களில்…

ஏதேனும் கருத்து கதை தேடி இதை படிக்க விழைவோர், தயவு செய்து படிக்க வேண்டாம். அவ்வளவு முக்கியமான கருத்துக்கள் எதுவும் இதில் சொல்லப்படவில்லை. அதை நான் எப்போதுமே சொன்னதில்லை என்பது வேறு விஷயம். இந்த பதிவு ஒரு ரயில் பிரயாணத்தை பற்றியது.

நான் ரயிலில் அடிக்கடி பிரயாணம் செய்பவன். ரயில் எனக்கு ஒரு சிநேகிதன் போல. போல என்ன? சிநேகிதனே தான். ஒவ்வொரு முறை நான் பயணம் செல்லும் போதும் எனக்கு புதியதோர் அனுபவத்தை தரும் ரயிலை விட பெரிய சிநேகிதன் வேறு யார்? மதுரையில் இருந்து சென்னைக்கும் நெல்லைக்கும் பலமுறை செய்த பயணங்கள் அனைத்துமே மறக்க முடியாதவை. சென்னைப் பயணங்கள் பெரும்பான்மை இரவில் கழிந்து விடும் போதும் என் மற்றொரு தோழனான புத்தகத்தை ரயில் சிநேகிதனுடன் சேர்ந்து வாசிப்பதில் எனக்கு அலாதி இன்பம்.

ரயிலை முதன்முதல் பார்த்த தமிழன் என்ன நினைத்தான் என்று காவல் கோட்டத்தில் சு.வெங்கடேசன் தெளிவாய் சொன்னாலும், என்னை பொறுத்தவரையில் அந்த வார்த்தைகள் ஒவ்வொரு குழந்தையும் முதன்முதலில் ரயிலை பார்க்கும் போது என்ன நினைக்குமோ, அதையே விளக்குவனவாக உள்ளன. ரயிலுடன் எனது முதல் சந்திப்பு எனக்கு சுத்தமாய் நினைவில் இல்லை. ஆனால் சிறுவயதில் செய்த முதல் மற்றும் ஒரே ரயில் பயணம் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை குறுகிய ரயில் பாதையில் செல்லும் பயணிகள் ரயிலில் சென்றதே.

அப்போது ராமேஸ்வரம் மட்டுமல்ல எங்கே சென்றாலும் குறுகிய ரயில் பாதை தான். அகல ரயில் பாதை எல்லாம் நான் ரயில் பற்றி முற்றும் அறிந்த பின்னரே வந்தன. யாரோ கண்டுபிடித்து சொல்லியிருப்பார்கள். ரயில் பயணங்கள் ரசனையானவை. ஒவ்வொரு முறை ரயிலில் செல்லும் போதும் அழகான குழந்தையோ, அழகிய சிரிப்புடைய ஒரு பெண்ணோ, பொக்கைவாய் கிழவியோ, கதைப்பெட்டகமான ஒரு தாத்தாவோ கண்டிப்பாக கூட வருவார்கள். வெகு சில நேரங்களில் கடும் போதையில் தள்ளாடும் ஒருவர் சக பிராணியாய் வரக்கூடும். சில நேரங்களில் மேற்கூறிய நபர் நாமாகவே இருக்ககூடும்.

இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்கும் ஒரே இடம் இந்த ரயில்பெட்டி தான். ஒரு பக்கம் காசு வைத்து சீட்டாடும் கட்டதுரைகள், மறுபக்கம் ஏறியதில் இருந்து இறங்கும் வரை தூங்கிக்கொண்டே வரும் கும்பகர்ண மகாத்மாக்கள், இன்னொரு பக்கம் புத்தகங்களிலும் ஜன்னல் வேடிக்கையிலும் மூழ்கிக் கிடக்கும் என் போன்ற கிறுக்கர்கள், இன்னொரு பக்கம் அடுப்பை வைத்து சப்பாத்தி செய்து சாப்பிடும் வட இந்திய நாடோடி குடும்பம் என பல்வேறு முகங்களின் கதம்பமாய் இருக்கும் இந்திய ரயில் பெட்டி. சில நேரங்களில் வெள்ளையாய் சில முகங்கள் தெரியக்கூடும்.

டெல்லி வரை நான் சென்ற ஒரு பயணத்தில் சிலரோடு ஏற்பட்ட நட்பு இன்றும் தொடர்கிறது. திரும்பி வரும் போது கையில் 100 ரூபாயோடு டெல்லியில் ரயில் ஏறி சென்னை வரை பட்டினி கிடக்காமல் அதே நூறு ரூபாயோடு வந்து சேர்ந்தது எங்கனம்? காப்பி முதற்கொண்டு எனக்கு குடுத்தது சக தமிழர்கள் அல்லர். என்னோடு பிரயாணம் செய்த ஒரு வட இந்தியக்குடும்பமே. அவர்களுக்காக நான் எதுவுமே செய்யவில்லை. இடம் மாற்றிக் கொண்டு அவர்கள் குட்டிக் குழந்தைக்கு ஜன்னல் இருக்கையை விட்டுக்கொடுத்ததும், அந்த 36 மணி நேர பயணத்தில் தென்இந்தியாவில் சுற்றிப்பார்க்க இருக்கும் இடங்களை அவர்கள் மொழியில் சொல்லி வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். பிறகு சென்னையில் இறங்கி அவர்களுக்கு ஆட்டோ பிடித்துக் கொடுத்தேன்.

பெங்களூருவுக்கு பிரதி ஞாயிறு மதிய ரயில் பிடித்து நண்பர்களுடன் படிக்கட்டில் அமர்ந்து நண்பன் வாங்கித்தந்த பிரட் ஆம்லெட் சாப்பிட்டபடி சென்றது நான் காதலித்த பெண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை. குளிரூட்டப்பட்ட பெட்டியில் சினுவா அச்சீபே எழுதிய “சிதைவுகள்” படித்தபடி நான் அவளை பார்க்க வந்திருப்பேன் என்று அவள் நினைத்திருக்கக்கூடும். சொல்லாதது என் தவறுதான். காதலென்றாலும் சாதலென்றாலும் விளம்பரம் தேவைப்படுகிறது இந்நாளில்.

கல்லூரி படிக்கும் காலத்தே பொங்கலுக்கு ஊருக்கு போக முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி நிற்கக்கூட இடமின்றி வந்தேன். திண்டுக்கல் தொடருந்து நிலையத்தில் பசியால் மயங்க ஆரம்பித்த எனக்கு குடிக்க போவண்டோவும் கொறிக்க முறுக்கும் வாங்கித் தந்து காணாமல் போன அந்த நல்ல மனிதர் முகம் மட்டும் எனக்கு நினைவில் இல்லை.

நல்ல மனிதர்கள் சந்தித்த அளவு நல்ல மனிதர் அல்லாதவரையும் மிகுந்த கோபக்காரர்களையும் நான் சந்தித்து இருக்கிறேன். சமீபத்தில் என் நண்பன் விஷ்ணுவோடு நான் ரயிலில் சென்ற போது மிகுந்த கோபக்காரரான ஒரு சீட்டு பரிசோதகர் என்னை காவலரிடம் இட்டுச்சென்று புகார் செய்ததை மறக்க முடியுமா? அவசரமாக செல்வதால் முன்பதிவு செய்யவில்லை. நண்பன் வந்ததால் இந்தப் பெட்டியில் ஏறினேன் என்று நான் தண்டத்தொகை கட்ட தயாராய் இருந்தும் அதை ஒப்புக்கொள்ளாமல் அவர் என்மேல் புகார் செய்தார். அந்த நேரத்தில் தான் அமர்த்திருந்த இருக்கையை எனக்காக தந்த அந்த காவலர் அக்காவை இன்னும் பாண்டியன் விரைவு வண்டியில் செல்லும் போதெல்லாம் தேடுகிறேன்.

இரவு புத்தகம் படிக்க எனது அலைபேசி வெளிச்சத்தை நான் உபயோகித்தால் அது தன் தூக்கத்தை கெடுக்கிறது என்று காவலரிடம் புகார் சொல்லியவர் பிற்பாடு முன்பதிவு பயணசீட்டு இன்றி முன்பதிவு பெட்டியில் ஏறியதால் அதே காவலரால் கைது செய்யப்பட்டதை விதி என்று சொல்லலாமா?

சென்ற மாதம் அதே பாண்டியன் விரைவு வண்டியில் என்னோடு பயணித்த பரோடாவில் வட்டிக்கு விடும் தொழில் செய்யும் ஒருவரோடு நடந்த உரையாடல் இது..

அவர் – நீங்க என்ன வேல சார் பாக்குறீங்க?

நான் – நான் பல் மருத்துவரா இருக்கேன்..

அவர்- கேக்குறேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க சார். எவ்வளவு சம்பாதிப்பீங்க?

நான் – பிச்சையெடுத்தோ புடுங்கித் தின்னோ  தான் வாழணும்னுங்கற நிலைமை வராத அளவுக்கு சம்பாதிக்கிறேன்.

அவர் – சும்மா சொல்லுங்க சார்.

நான் – மாசம் ஒரு பதினஞ்சாயிரம் சம்பாதிப்பேன். அவ்வளவுதான்.

அவர் – நீங்க டாக்டருக்கு படிச்சு அவ்ளோ தான் சம்பாதிக்கிறீங்க.. நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் தெரியுமா?

நான் – தெரியாது

அவர் – மாசம் எட்டு லட்ச ரூபா சம்பாதிக்கிறேன்.

நான் – உங்க சீட் நம்பர் என்ன?

அவர் – சீட் நம்பர் எல்லாம் இல்ல சார். TTE வந்தா காசாலேயே அவர சமாளிச்சுடுவேன்.

நான் – சரிங்க. நீங்க உங்க சீட்ல போய் உட்காருங்க. நான் இங்க தூங்க போறேன்.

அவர் – சார். இது RAC. ரெண்டு பேரும் உட்காந்துட்டே தான் போகணும். நான் TTEகிட்டே உங்களுக்கும் ஒரு சீட்டு தர சொல்றேன்.

நான் – ஸாரி பாஸ். இந்த சீட்டு எனக்கு கன்பர்ம் ஆகிடுச்சு. உங்களுக்கு சீட்டு மட்டும் நீங்க வாங்கிக்கோங்க.

சிறிது நேரத்தில் TTE வந்தார்.

TTE: சீட்டு காட்டுங்க.

அவர்: சார். சீட்டு இல்ல சார். ஜெனரல் டிக்கட் தான் இருக்கு.

TTE: 650 ரூபா பைன் போடுவேன். இல்லாட்டி அடுத்த ஸ்டேஷன்ல எறங்கி ஜெனரல் கம்பார்ட்மென்ட் போயிடுங்க.

அவர்: சார். 50 ரூபா தரேன் சார். இப்படி ஓரத்துல படுத்துக்கிறேன். (என்னைப் பார்த்து) டாக்டர் சார்.. நீங்களும் கொஞ்சம் சொல்லுங்க சார்.

TTE: நக்கலா? ஒழுங்கா ஓடிடு. இல்லை இங்கே எறக்கி விட்டு உள்ள தள்ள சொல்லிடுவேன்.

அவர்: (என்னை பார்த்து) சார். உங்களைத்தான். கொஞ்சம் சொல்லுங்க சார்.

நான்: அவரு வேலைய அவரு செய்றாரு. இதுல நான் சொல்றதுல என்னங்க இருக்கு. இதுக்கு மேல கேட்டா நீங்க என்கிட்டே என்ன சொன்னீங்களோ அத தான் நான் அவருகிட்ட சொல்ல முடியும்.

TTE: கெளம்பு கெளம்பு. வண்டி கிளம்பப் போகுது.

என்னை முறைத்துக்கொண்டே அவர் தன் பெட்டிகளை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து போனார். TTE என்னை பார்த்து “பாத்து சார். ஆள் கொஞ்சம் சரியில்லை" என்றார்.

நான் இரவு முழுவதும் உயிர் பயத்தோடு புத்தகம் படித்தபடி மதுரை வந்து சேர்ந்தேன். நான் படித்த புத்தகம் சினுவா அச்சிபே எழுதிய “சிதைவுகள்" (Things fall apart).

இந்த இனமும் அழிந்து போகுமா?

நீங்கள் நினைப்பது என்னவென்று எனக்கு தெரியும். அழிவு, இனம் இந்த இரண்டு சொற்களையும் சேர்த்துப் பார்த்தால் உங்களுக்கு இலங்கையில் வாழ்ந்தும் செத்துக் கொண்டிருக்கும் நமதருமை சகோதர சகோதரிகளே நினைவுக்கு வருவார்கள். அவர்களை பற்றி எழுதி என்னால் பெரிய மாற்றம் எதையும் கொண்டு வர முடியுமென்று எனக்கு தோன்றவில்லை.

இந்த பதிவு இன்னொரு அரிய இனத்தை பற்றியது. அவர்கள் திருட்டுத்தனமாய் திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விற்பவர்கள். சுருக்கமாய் புரியும்படி சொன்னால் பிளாக்கில் டிக்கட் விற்பவர்கள். அவர்களை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? முன்னொரு காலத்தில் பண்டிகை நேரத்து வெளியீடுகளை அவர்கள் தயவின்றி பார்க்க முடியாது என்பது மனதில் தோன்றி மறையுமே.

பிளாக்கில் டிக்கெட் விற்பது காலகாலமாய் நடந்து வருவதுதான்.. கறுப்பு சந்தை உங்களுக்கு தெரியுமல்லவா.. அதன் வழித்தோன்றலாய் வந்ததே பிளாக் டிக்கெட். ஆங்கிலத்தில் Ticket Resale என்று சொல்வார்கள். இன்று இந்த கள்ளசீட்டு வியாபாரம் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறது. ஆனாலும் சினிமா தியேட்டர் வாசலில் நாம் கண்டு வந்த இந்த கள்ளசீட்டு விற்போர் இன்று கண்ணில் தென்படுவதில்லை.

ரயில் சீட்டும் விழாக்களின் நுழைவு சீட்டும் இன்றும் கள்ள சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆயினும் திரைக்காட்சி சாலைகளில் பத்து அம்பது பத்து அம்பது என்று வாங்குவோருக்கு மட்டுமே கேட்கும்படி கூவும் திறமையுடைய ஓரினம் இன்று வாழ வழியின்றி பிற திருட்டு தொழில்களில் ஈடுபடுமாறு செய்து விட்டது நமது சமுதாயம்.

பள்ளியில் படிக்கும் போது சேரன் பாண்டியன் படம் வெளியிடப்பட்டது. என் அண்ணனோடு அதற்கு சென்ற போது உழைப்பாளி திரைப்படத்தில் வரும் டிக்கட் வாங்கும் காட்சி போலவே நாங்களும் நசுக்கப்பட்டோம். ஒரே வித்தியாசம் – அதில் கவுண்டமணிக்கும் ரஜினிகாந்திற்கும் டிக்கட் கிடைக்கும். எங்களுக்கு கிடைக்கவில்லை. மனம் நொந்து மெல்ல திரும்பி வரும் போது பக்கத்தில் வந்து நின்று டிக்கட் வேணுமா தம்பி என்று கேட்ட அந்த பெண்ணின் முகம் இன்றும் நினைவில் நிற்கிறது. முடிவாய் 20 ரூபாய் டிக்கட்டை 35 ரூபாய்க்கு வாங்கி நாங்கள் அந்த படத்தை பார்த்தோம்.

கல்லூரி வந்தபின் இந்த கே.பி.கருப்புகளோடு எனது உறவு மேலும் பலமாய் தொடர்ந்தது. கோயம்பேடு ரோகினி தியேட்டரில் கள்ளசீட்டு விற்ற அதே வீரப்பன் மீசை வைத்த தாத்தாவை நான் தேவி தியேட்டரிலும் கண்டேன். ஆச்சர்யம் என்னவென்றால் அவரும் என்னை கண்டு கொண்டதுதான். அந்த முறை நாங்கள் தேவி தியேட்டரில் சற்று குறைவான விலைக்கு வாங்கிய கள்ளசீட்டு கொண்டு படம் பார்த்தோம். அந்த மீசைக்கார தாத்தா எங்கே போனாரோ தெரியவில்லை.

சத்யம் தியேட்டர் வாசலில் கூட்டத்தை பார்த்து மலைத்து நின்ற என்னை ரே! ராரா! பிளாக்லோ டிக்கட் தீஸ்குண்டாமு! என்று அழைத்த ஆந்திர தேசத்து அழகன் குமார் முடிவில் 25 ரூபாய் டிக்கட்டை 50 ரூபாய்க்கு வாங்கி வந்தான். திறந்து பார்த்தால் பத்து டிக்கட்டுகள். அனைத்தும் 10 ரூபாய் டிக்கட்டுகள். என்ன செய்வது.. முதல் வரிசை படம் தான். சத்யம் தியேட்டரின் பெருந்திரையில் லகான் என்ற ஹிந்தி மொழி படத்தை கழுத்து ஓடிய பார்த்தது இன்றும் மனக்கண்ணில் தெரிகிறது. ஏமாற்றிப் போன காசு எந்த பீச்சில் சுண்டக்கஞ்சிக் கலயத்துள் முங்கியதோ தெரியாது!

திரையரங்கு உரிமையாளர்களே தங்கள் ஆட்கள் மூலம் கள்ளசீட்டு விற்பது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. வெளியீட்டு தேதியன்று 100 ரூபாய் சீட்டு 1000திற்கும் சில நாட்கள் கழித்து 500ற்கும் பிறகு சில நாட்கள் கழித்து 100 ரூபாய்க்கும் விற்கப்படும். 50 நாட்களுக்கு மேல் எந்தப் படமும் இப்போது ஓடுவதில்லை. ஆகையால் சம்பாதித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இது போல் செய்கிறார்கள்.

சில நேரங்களில் மிகப்பெரிய நடிகர் நடித்த திரைப்படங்களை பல ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் அந்த செலவையும் சமாளிக்க ஆரம்ப நாட்களில் அதிக விலைக்கு சீட்டு விற்பது கண்கூடு. உச்ச நடிகர் நடித்த ஐ ரோபாட் மாதிரி திரைப்படத்தின் சீட்டு 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது எனக்கு வயிற்றெரிச்சலை உண்டு பண்ணியது. சமீபத்திய ஒரு ஆயுதப் பெயருடைய திரைப்பட வெளியீட்டின் போது 50 ருபாய் சீட்டு 150க்கும் 100 ருபாய் சீட்டு 250க்கும் 200 ருபாய் சீட்டு 400க்கும் விற்பனை செய்யப்பட்டதை நாளிதழ்களில் கண்டிருப்பீர்கள். அதெல்லாம் இதற்குதானோ என்று ஒரு எண்ணம் உருவாவதில் தவறில்லை.

இன்று ஜம்மென்று ஆன்லைன் வர்த்தக வலைத்தளங்கள் மூலம் சீட்டை பதிவு செய்து படம் பார்த்து விடலாம். நீங்கள் சற்று பொறுமையாக இருந்தால். அவசரமாக முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்று நினைத்தால் ஏதேனும் தியேட்டர் உரிமையாளரை குறி வைத்து நட்பு பாராட்டுவது நல்லது. அதுவும் முடியாதென்றால் கவுண்ட்டரில் உள்ள ஆள் யாரென்று பார்த்து அவரை தொடர்ந்து சென்று நட்பு வளருங்கள்.

இனி நீங்கள் பிளாக்கில் டிக்கட் வாங்கினாலும் அது கூவநதிக் கரையோர குப்பத்தில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்கு போய் சேரப்போவதில்லை. அது தியேட்டர் முதலாளியின் கறுப்புக்கணக்குக்கோ இல்லை மாமூல் வாங்கி செல்லும் ஒரு போலீசின் பாக்கேட்டுக்கோ தான் போகப்போகிறது. ஏன் கொடுக்க வேண்டும்? பொறுமையாய் பாருங்கள். மிகவும் அவசரம் இல்லையென்று சற்று பொறுத்தால் தீபாவளியோ பொங்கலோ இல்லை ஏதோ ஒரு பண்டிகைக்கோ ‘உங்கள் தொலைக்காட்சியில் முதல் முறையாக’ என்று போட்டு விடுவார்கள். காசும் மிச்சம். பாவமும் சேராது.

பிளாக்கில் டிக்கட் விற்பது அவமானம் அல்ல. அது பெருமை. கடன் வாங்கி முதல் போட்டு முதல் போட்ட அரைமணி நேரத்துள் போலீசிடம் பிடிபடாமல் அதை லாபத்துடன் மீட்டெடுத்து கடன் அடைத்து மிஞ்சிய காசில் குவார்டரோ இல்லை சுண்டக்கஞ்சியோ குடித்து துணைக்கு மீன் கடித்து மிச்சக் காசை மறுபடி முதலாய் போடுவதென்றால் சும்மாவா? எவனும் செய்ய முடியாது. முடிந்தால் செய்து பாருங்கள். ஒரு இனம் அழியாமல் மிஞ்சும்.

சீனி வெடி போடுங்கள்!

நீங்களெல்லாம் தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவீர்கள்? மன்னிக்கவும். வெடி போடாதீர்கள். அதனால் சுற்றுச்சூழல் கெடுகிறது, அதில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி பிழிகிறார்கள், காசு கரியாகிறது என்றெல்லாம் சொல்லி உங்களை ஓட வைப்பது என் எண்ணமல்ல. வெடி தீபாவளியின் முக்கியமான ஒரு அங்கமாகும். போடுங்கள். ஏன் என்று கடைசியில் சொல்கிறேன்.

சிறுவயதில் இருந்து வெடி வெடித்தால் தான் தீபாவளி என்ற விஷயம் சால்னாவில் ஊறிக் கிடந்த பரோட்டா போல என் மனதில் ஊறிக் கிடந்தது. பள்ளிக்கல்வி முடியும் தருணத்தில் வெடி வெடிக்காவிட்டால் தான் கவுரவம் என்று மனதில் நினைத்ததுண்டு. எனக்கு கற்பிக்கப்பட்டது அப்படி. ஒரு பட்டாசின் பின்னால் உள்ள உழைப்பும் பயன்பாட்டு பொருளாதாரமும் விளங்காத அந்த வயதில் நான் அப்படி யோசித்தது தவறில்லை என்று நினைக்கிறேன்.

பணமற்று இருந்த நேரங்களில் கை நிறைய வெடிகளை சிலர் கொளுத்திக்கொண்டே இருப்பதை பார்ப்பேன். என் பட்டாசுகள் புஸ்ஸாகிவிடும். மனசு மட்டும் வெடிக்கும். பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நினைத்த வயதில் கையில் பணமில்லை. கையில் பணமிருக்கும் வயதில் பட்டாசு வெடிக்க மனமில்லை. இப்படியே தான் கடந்த பத்து வருடங்கள் கழிந்தன.

தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னமே சிறு சிறு பெட்டிக்கடைகளில் சிறுபட்டாசுகள் கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு பத்து என்று வாங்கி வெடிப்போம். தீபாவளி நெருங்க நெருங்க ஆவல் பெருகி அணைகட்ட முடியா அளவு பொங்கும் போது, வீட்டில் கேட்டு அழுது அதற்காய் அடி திட்டுகள் வாங்கி பிறகு அவர்களால் சமாளிக்க முடியாமல் காசை கொடுத்து வெடி வாங்கி தரும் அன்று ஜென்மம் சாபல்யம் அடையும். வெடி வாங்கினாலும் வெடிக்க முடியாது. தீபாவளி வரை அதை வைத்து அழகு பார்ப்போம். தீபாவளிக்கு முன் தினம் மெல்ல வெடிகள் போட ஆரம்பிப்போம். ஆர்வக்கோளாறில் தீர்த்து விடக்கூடாது. நேர மேலாண்மையையும் வள ஒதுக்கீட்டையும் அப்போதே நமக்கு சொல்லித்தந்தன வெடிகள்.

பிறகு வெடிகளை வகைப்படுத்தி வரிசைப்படுத்தி எந்த எந்த வெடிகளை முதலில் வெடித்து எவைகளை கடைசியில் வெடிக்க வேண்டும் என்ற பட்டியல் மனதினுள் தயார் செய்யப்படும். தனித்தன்மையான வெடி ஏதேனும் அதிர்ஷ்டவசமாக நமக்கு கிடைத்தால் அதுவே கடைசியாய் வெடிக்கப்படும் வெடியாய் இருக்கும். அதற்கு ஊரெல்லாம் சொல்லி நண்பர்கள் எல்லாம் கூடி அனைவரும் நோக்க பற்ற வைப்போம். சில நேரங்களில் அவை எதிர்பாராத பலன் தருபவையாக இருந்ததுண்டு. பகலானால் ஒலி தரும் வெடிகள். டாம் டூம் வெடிகள் அனைத்தும் அதிகாலை ஆரம்பித்து மாலை வரை வரும். இரவானால் ஒளி தரும் வெடிகள். வண்ணமயமாய் நம் வானை மாற்ற முனையும்.  இதற்க்கெல்லாம் மேலாய் சிறிது வெடிகள் பதுக்கப்படும். அவை கார்த்திகை தீபத்திற்காக.

வெடிகளை வெடிப்பதில் பல வகைகள். ஒரு சீனி வெடி பொட்டலம் வாங்கி வைத்துக் கொண்டு அதை ஒவ்வொன்றாய் வெடிப்பதில் நான் அன்று கண்ட சந்தோஷம் இன்று பல வண்ண வானவேடிக்கைகளை காட்டும் வெடிகளை வெடிக்கும் போது இல்லையே. நான் மிக விரும்பியவை சீனிவெடியும் ஓலை வெடியும் தான். வெங்காய வெடி கூட. என்ன இழவுக்கு அதை தடை செய்தார்கள் என்பது நியாபகமில்லை. சீனிவெடியை பிஜிலி வெடி என்று அசிங்கமாகவும் அழைப்பார்கள்.

அதுபோக குருவி வெடி, லட்சுமி வெடி, டபுள் ஷாட், செவன் ஷாட், அணுகுண்டு (“மூணு சுழி ண்-மா”, என் மனைவி பெயர் அனு. அவள் தப்பாக நினைத்துக்கொள்ள கூடாதே. முன்னெச்சரிக்கை), புல்லட் பாம், பாம்பு மாத்திரை, கார்ட்டூன் வெடிகள், சங்கு சக்கரம், ராக்கெட் என்றும் பலவும் வாங்கி வெடிக்க மனம் கிடந்தது தவிக்கும். லட்சுமி வெடியும் புஸ்வானமும், சங்கு சக்கரமும், சனியன் பிடித்த சாட்டையும் மட்டுமே கிடைக்கும். ராக்கெட் யாராவது ஓசியில் கொடுத்தால் உண்டு.

எங்கள் தெருவில் யாரிடம் சீனி வெடி பொட்டலங்கள் அதிகம் உண்டோ அவனே ராஜா! நிறைய சீனி வெடி பொட்டலங்கள் கிடைத்தால் அதிலேயே சிறு சரம் செய்து வெடிப்போம். சிறு சரம் என்றால் ரெண்டு மூணு சீனி வெடிகளை திரி கிள்ளி சேர்த்து சுற்றி பின் வெடிக்க விடுவது. முதல் வெடி வெடித்த பின் மற்றவை சிதறி கண்ட இடத்தில் வெடிக்கும். அதில் இருந்து தப்பிப்பதில் அலாதி இன்பம். பிறகு அவை சிதறி வெடித்ததால் கிடைக்கும் திட்டுக்களை தவிர்க்க அவற்றின் மேல் ஒரு சிரட்டையை கவிழ்த்தி வைப்போம். அது வெடித்து எவன் மேலாவது போய் விழுந்து தொலையும் போது எங்கள் வெடி வைபவம் ஒரு தற்காலிக முடிவை சந்திக்கும்.

அதிகாலை எழுந்து முதல் வெடி வெடிப்பது என்ன ஒரு சுகம். நாலு மணிக்கு எழுந்து எண்ணை வைப்போமா இல்லையோ வெடியை திரி கிள்ளி பற்ற வைப்போம். அடுத்த வீட்டுக்காரன் அலறி எழுவதில் அப்படியோர் ஆனந்தம் கண்டோம். இரவானால் மொட்டை மாடிக்கு போய் பணமுள்ளவர் வெடிக்கும் வான்வெடிகளை வேடிக்கை பார்த்தே பொழுது போகும். இன்றேன்னவோ மாலை முழுவதும் டிவியில் வரும் புதிய திரைப்படங்கள் ஆக்ரமித்து கொள்வதால் எனக்கு மொட்டை மாடிக்கு போக துணையொன்று இல்லை.

மாலை வரை திரி கிள்ளி திரி கிள்ளி விரல் நுனிகள் எல்லாம் கருப்படைந்து வெடி மருந்து அப்பிக் கிடக்கும். திரி கிள்ளாவிட்டால் வெடி சீக்கிரம் வெடித்து விடும். ஓட நேரம் இருக்காது. ராக்கெட்டுக்கு மட்டும் நான் திரி கிள்ள மாட்டேன். அதான் திரி மிகவும் மிருதுவானது. சற்று பலமாக இழுத்தால் கையோடு வந்து விடும். அப்பறம் ராக்கெட்டை ஷோ கேசில் தான் வைக்க வேண்டும். அணுகுண்டு திரியும் கிள்ளுவதில்லை. நீளம் அதனது திரி. கிள்ளி விட்டால் வெடிக்க ஒரு மாமாங்கம் ஆகும்.

இவையெல்லாம் என் மனதின் அடிஆழத்தில் ஒளிந்து கிடந்த நினைவுகள். வெடியோடு எனக்குள்ள தொடர்பை புதுப்பிக்க நான் உங்களுக்கு காரணம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நான் சிறுவயதில் அனுபவித்த அந்த சிறு சிறு சுகங்களை என் பிள்ளைக்கும் கொடுக்க வேண்டும் என்பது நான் சிறுபிள்ளையாய் இருந்த காலத்தே செய்யப்பட்ட ஒரு முடிவாகும். ஆகையால், மிக யோசித்து இந்த தீபாவளிக்கு வெடி வெடித்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். நானும் என் உறவுகளும் சிவகாசிக்கு அருகே சென்று ஒன்பதாயிரம் ரூபாய்க்கு வெடிகள் வாங்கி வந்தோம். சீனி வெடி வாங்கவில்லை. அது என் பிள்ளை சற்று பெரியவன் ஆனதும் இருவரும் சேர்ந்து வெடிப்போம். இப்போதைக்கு அவனால் ஒழுங்காக பார்க்க ரசிக்க முடியாது. ஆனாலும் பழக்க வேண்டும். பொத்தி பொத்தி வைக்க பிள்ளை என்ன பாங்க்கில் வைத்த தங்கமா?

வெடி போடுங்கள். நாலு குடும்பம் நன்றாக வாழும். வாழ்த்தும். சுற்றுச்சூழல் கெடுமே என்ற போலி கவலை உங்களுக்கு வேண்டாம். அவ்வளவு அக்கறை இருந்தால் நெகிழித்தாள், வாகனம் போன்றவற்றை அதிகம் உபயோகிக்காமல் தண்ணீர், மின்சாரம், கல்நெய் சேமித்து வாழப் பழகவும். நீங்கள் ஒரு நாள் வெடி வெடித்து மகிழ்ந்தால் ஓசோனில் ஓட்டை விழுந்து விடாது. நீங்கள் மனிதப்பக்கிகளாக தனி மனித ஒழுக்கத்தை எல்லாவற்றிலும் பேணி வந்தால் இயற்கை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். பட்டாசுக்கு மட்டும் ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மை?

காசு கரியாகிறது என்பதெல்லாம் உங்கள் சாக்கு. பிள்ளைகள் சந்தோஷத்திற்கு முன் உங்களுக்கு காசு ஒரு கேடா?

பாதுகாப்பாய் வெடி போடுங்கள். வயதானவர்கள், கைக்குழந்தைகள், உடல்நிலை சரியில்லாதோர் அருகிலிருந்தால் தயவு செய்து ஒலி உண்டாக்கும் வெடி வகைகளை தவிர்க்கவும். காவல்துறை சொல்லும் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கவும். உங்கள் பொறுப்பின்மையால் உங்களை காயப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. பிறரை காயப்படுத்தும் உரிமை யாருக்கும் அறவே கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெடி வாங்கும் காசை தானம் செய்கிறேன் என்று ஒருவர் வாய் சோற்றை பிடுங்கி இன்னொருவர் வாயில் போடாதீர்கள். தனித்தனியே கொடுங்கள். கை வலிக்காது.