படிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்.

சமீபத்தில் டிஸ்கவரி புக் பேலசும் கதைகள் பேசுவோம் அமைப்பும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து நடத்திய நாவல் முகாமில் கலந்து கொண்டேன். சிறுமலை அடிவாரத்தில் இருந்த LIFE சென்டரில் நடந்த இந்த முகாமில் கிட்டத்தட்ட 60 பேர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் எஸ்ரா அவர்கள் ஆழ்ந்து படிக்கவேண்டிய பல நூல்களை பற்றி பேசினார். மொழிபெயர்ப்பின் உன்னதம் குறித்து மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் அய்யாவும் திறனாய்வாளர் முருகேசபாண்டியன் அய்யாவும் பேசினார்கள். மணிகண்டன், தேவதச்சன், வினாயகமுருகன், ஹூபர்ட், மதுமலரன், சித்திரவீதிக்காரன் சுந்தர் மற்றும் பல எழுத்தாளர்கள், இளம் வாசகர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றோம்.

இந்த நூல் வரிசை எஸ்ராவின் வலைப்பதிவிலும் இடம்பெற்றுள்ளது. ஆயினும் இங்கு பகிர்வதற்கு காரணம் ஒன்றுண்டு. இந்த புத்தகங்களின் மூலங்களை எங்கெங்கோ தேடி சேகரித்து கொடுக்க வேண்டும் என்று ஒரு முயற்சி. தமிழில் வாசிப்பது சுவாரஸ்யமாய் இருந்தாலும், வேகமாய் நிகழ்ந்தாலும் எந்நேரமும் புத்தகம் கையில் வைத்திருக்க இயலாத என் போன்றோருக்கு அலைபேசியில் சேகரித்து வைத்துக் கொள்ள இந்த பதிவு உதவும்.  என்னால் இயன்றவரை தேடி இதில் பதிந்துள்ளேன். கிடைக்காத புத்தகளின் தரவு எங்கேனும் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். நான் சேர்த்து விடுகிறேன்.

நூல்கள்:

 1. புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய். – அனைத்து படைப்புகளும் உள்ளன.
 2. மண்கட்டியை காற்று அடித்துப்போகாது – பாஸி அலியேவா.
 3. சக்கரவர்த்தி பீட்டர் – அலெக்ஸி டால்ஸ்டாய்.
 4. அன்னை வயல் – சிங்கிஸ் ஐத்மதோவ்
 5. மாறிய தலைகள் – நட் ஹாம்சன்
 6. மங்கையர்கூடம் – பியர்ல் எஸ் பக்.
 7. மதகுரு – செல்மா லாகர்லேவ்
 8. பிளாடெராவும் நானும் – ஜோன் ரமோன் ஜிமனேஸ்
 9. அந்நியன் – அல்பேர் காம்யூ
 10. கொள்ளை நோய் – அல்பேர் காம்யூ
 11. விசாரணை – காப்கா
 12. வீழ்ச்சி/சிதைவுகள் – சினுவா அச்சிபி
 13. பீட்டர்ஸ்பர்க் நாயகன் – கூட்ஸி
 14. புலப்படாத நகரங்கள் – இடாலோ கால்வினோ
 15. ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை – இடாலோ கால்வினோ
 16. தூங்கும் அழகிகளின் இல்லம் – யசுநாரி கவாபடா
 17. தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டீ ரூவாக்
 18. நாநா – எமிலி ஜோவாக்
 19. டாம் சாயரின் அனுபவங்கள் – மார்க் ட்வைன்
 20. ஆலிஸின் அற்புத உலகம் – லூயி கரோல்
 21. காதலின் துயரம் – வுல்ப்காங் வான் கொதே
 22. அவமான சின்னம் – நத்தானியல் ஹதொர்ன்
 23. கானகத்தின் குரல் – ஜாக் லண்டன்.
 24. சிலுவையில் தொங்கும் சாத்தான் (Caitaani mutharaba-Ini) – நுகூகி
 25. அபாயம் – ஜோஷ் வண்டலூ
 26. கால யந்திரம் – ஹெச்.ஜி.வெல்ஸ்
 27. விலங்குப்பண்ணை – ஜார்ஜ் ஒர்வெல்
 28. ரசவாதி – பாவ்லோ கோயலோ
 29. கோதானம் – பிரேம்சந்த்
 30. சம்ஸ்காரா – யூ.ஆர். அனந்த மூர்த்தி
 31. நமக்கு நாமே அந்நியர்கள் – அக்நேயர்
 32. செம்மீன் – தகழி சிவசங்கரன் பிள்ளை
 33. கயிறு – தகழி சிவசங்கரன் பிள்ளை
 34. அழிந்தபிறகு – சிவராம் காரந்த்
 35. மண்ணும் மனிதர்களும் – சிவராம் காரந்த்
 36. நீலகண்ட பறவையைத் தேடி – அதின் பந்தோபத்யாய
 37. அக்னி நதி – குல் அதுல்துன் ஹைதர்
 38. ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பானர்ஜி
 39. கரையான் – சீர்செந்து முங்கோபாத்யாய
 40. பதேர் பாஞ்சாலி – பிபூதி பூஷன் பந்தோபாத்யாய
 41. பொம்மலாட்டம் – மாணிக் பந்தோபாத்யாய
 42. பொலிவு இழந்த போர்வை – ராஜேந்தர்சிங் பேடி
 43. இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர்
 44. பாண்டவபுரம் – சேது
 45. தமஸ் – பீஷ்ம சஹானி
 46. பர்வா – எஸ்.எஸ்.பைரப்பா
 47. நிழல் கோடுகள் – அமிதவ் கோஷ்
 48. சிப்பியின் வயிற்றில் முத்து – போதிசத்வ மைத்ரேயா
 49. எங்கள் உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது – வைக்கம் முகமது பஷீர்
 50. பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர்
 51. சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர்
 52. மதில்கள் – வைக்கம் முகமது பஷீர்
 53. விடியுமா – சதுர்நாத் பாதுரி
 54. மய்யழிக்கரையோரம் – முகுந்தன்
 55. பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூடகா
 56. சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானி
 57. தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா
 58. லட்சிய ஹிந்து ஹோட்டல் – பிபூதிபூஷன் பந்தோபாத்யாய
 59. கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா
 60. அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி
 61. அரைநாழிகை நேரம் – பாறபுரத்து
 62. சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி
 63. எரியும் பனிக்காடு – டேனியல்
 64. பனி – ஓரான் பாமுக்
 65. தனிமையின் நூறு ஆண்டுகள் – கப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
 66. ஓநாய் குலச்சின்னம் – ஜியாங் ரோங்
 67. மௌனவதம் – ஆர்துவோ
 68. சின்ன விஷயங்களின் கடவுள் – அருந்ததி ராய்
 69. அராபிய இரவுகளும் பகலும் – மாபௌஸ்
 70. டான் க்விக்சாட் – செர்வாண்டிஸ்
 71. முதல் மனிதன் – அல்பேர் காம்யூ
 72. கா – ராபர்டோ கலாசோ
 73. மணற்குன்றுப் பெண் – கோபோ அபே
 74. நள்ளிரவின் குழந்தைகள் – சல்மான் ருஷ்டி

நான் சேர்த்த புத்தகங்கள்:

 1. தீண்டாத வசந்தம் – ஜி.கல்யாண ராவ்
 2. மகிழ்ச்சியான இளவரசன் – ஹெச்.ஜி.வெல்ஸ்
 3. டோட்டோ சான் ஜன்னலோரத்தில் சிறுமி – டேட்சுகோ குரயோனாகி
 4. பட்டாம்பூச்சி – ஹென்றி சாரியர்
 5. அசடன் – தஸ்தாவ்யெவ்ஸ்கி
 6. அப்பாவின் துப்பாக்கி – ஹிநெர் சலீம்
 7. ஆறாவது வார்டு – அன்டன் செகோவ்
 8. இறைச்சிக்காடு – அப்டன் சின்க்ளைர்
 9. ஏழு தலைமுறைகள் – அலெக்ஸ் ஹேலி
 10. கானுறை வேங்கை – உல்லாஸ் கரந்த்

விசா இன்றி ஒரு வெளிநாட்டு பயணம்

கச்சத்தீவு – பெயரைக் கேட்டவுடன் நினைவுகள் பலவும் உங்களுக்கு வந்து போகும். நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான பெயர் இது. பல காலமாய் சர்ச்சைக்குள் சிக்கி வரும் இந்த தீவு வெறும் 1.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவே கொண்டது. ஆர்ப்பரிக்கும் கடல் அற்ற ராமேஸ்வரத்தில் இருந்து 25 கடல் மைல் தூரத்தில் அமைந்துள்ளது கச்சத்தீவு.

Katch 1

நம்மூர்காரர்கள் அனைவருக்கும் இந்த ஆசை உண்டு – கச்சத்தீவில் ஒரு முறையேனும் காலடி வைக்க வேண்டும் என்று. பல்வேறு தீவுப்பயணங்கள் எனக்கு சாத்தியப்பட்டு இருந்தாலும் கச்ச்சத்தீவினுக்கோர் பயணம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது எனக்கும், இந்த வருடம் வரை. அங்கு செல்லும் வழிமுறைகள் கூட தெரியாமல் இருந்தது. பிறகு வந்தது ஒரு வாய்ப்பு.

katch 4

1480ல் உண்டான கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டது. அப்போது ராமேஸ்வரம் இந்திய துணைக்கண்டத்தோடு இணைந்திருந்தது. இந்த புயலால் கடற் அடிப்பரப்பில் ஏற்பட்ட நிலவியல் மாற்றத்தால் பாம்பன் கால்வாய் உருவாகி ராமேஸ்வரம் தனித்தீவானது. அதே சமயம் அங்கு மேலும் பல தீவுகள் உருவாயின. அவற்றுள் ஒன்று கச்சத்தீவு. உருவானதில் இருந்து இராமநாதபுரம் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு 1973ஆம் ஆண்டு இந்தியா இலங்கை செய்து கொண்ட நல்லிணக்க ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை வசம் சென்றது.

katch 3

தற்போதைய நிலையில் கச்சத்தீவிற்கு பயணம் செய்யும் வாய்ப்பு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைத்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் திங்கள் நடைபெறும் புனித அந்தோனியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தான் அது. இந்த ஒரு வாய்ப்பைத் தவிர வேறு எந்த ஒரு முகாந்திரம் கொண்டும் கச்சத்தீவில் கால் வைக்க முடியாது. இது இரு நாட்டவருக்கும் பொருந்தும், சீனர்களை தவிர.

பசுமை நடை குழு மூலம் கிடைத்த வாய்ப்பில் நான், முத்துகிருஷ்ணன், ராபர்ட் சந்திரகுமார் குடும்பத்தினர், வேல்முருகன், சோபியா, மது மலரன், சிவசதீஷ், ஹூபர்ட், சரவணன், மற்றும் பலர் ராமேஸ்வரம் புகைவண்டியில் இனிதே எங்கள் பயணத்தை தொடங்கினோம். அன்றிரவு ராமேஸ்வரத்தில் ஒரு விடுதியில் தங்கி விட்டு அடுத்த நாள் காலை 9 மணி அளவில் ராமேஸ்வரம் படகுத்துறைக்கு சென்றோம்.

katch 5

அங்கு ஆரம்பித்தது எங்கள் காத்திருப்பு. இந்திய பயணிகள் கொண்டு செல்லும் பொருட்கள், அவர்கள் அடையாள அட்டை போன்றவற்றை பரிசீலிக்க அங்கு ஒரு தற்காலிக சோதனை சாவடி அமைத்திருந்தார்கள். சுள்ளென அடித்த வெயிலில் இரண்டு மணி நேரம் நின்றபின் ஒருவழியாய் அனைத்து பரிசோதனைகளையும் முடித்து விட்டு படகில் ஏறி அமர்ந்தோம். கேமிராவை கொண்டு செல்ல கொஞ்சம் அவர்களிடம் பேசி அனுமதி பெற வேண்டியிருந்தது.

படகில் அனைவரும் ஏறியபின், படகோட்டி அண்ணன் ஜெராண்டோ மற்றும் படகின் உரிமையாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோருடன் பேசிக்கொண்டே கச்சத்தீவு நோக்கி பயணமானோம். ராமேஸ்வரத்தின் படகுத்துறை கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணில் இருந்து மறைந்து வர ஒரு கட்டத்தில் எப்பக்கம் நோக்கினும் ஆழி மட்டுமே கண்ணில் தெரிந்தது. பேச்சு கொடுத்து பார்த்ததில் ஆரோக்கியதாஸ் அங்கு கடல் குறைந்த பட்சம் 7-8 தாவு இருக்கும் என்றார். தாவு என்பது அவர்கள் கடல் ஆழத்தை குறிக்க பயன்படுத்தும் ஒரு சொல்.

katch 6

நானும் மற்றும் சில நண்பர்களும் அணியத்தில் அமர்ந்து கொண்டோம். நீவாட்டு சாடைக்கு தோணி ஏறிக்குதித்து சென்றது வயிற்றை பிறட்டினாலும் சமாளித்தோம். பிச்சலில் இருந்தவர்கள் அதிகம் சிரமப்பட்டார்கள். கடலில் ஒன்றரை மணி நேரம் பயணப்பட்ட பின் ஒரு பெரிய இந்திய கோஸ்ட்கார்டு கப்பல் ராஜ்கமல் கண்ணில் பட்டது. அதில் கணக்கு சொல்லியபின், இந்திய எல்லையை கடந்து எங்கள் பயணம் தொடர்ந்தது.

மேலும் ஒரு அரைமணி நேர பயணத்தில் இலங்கை கடற்படையின் சிறு போர்க்கப்பல் ஒன்றின் அருகே சென்றோம். அங்கும் ஆள் எண்ணிக்கை உறுதி செய்தபின் கச்சத்தீவிற்கு அருகே செல்ல அனுமதித்தார்கள். கச்சத்தீவின் கரையில் மிதக்கும் படகு துறை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. கரை இறங்கி கால் வைத்தோம். எங்கெங்கு காணினும் சிங்கள கொடிகள். “Welcome to Srilanka” என்று ஒரு வரவேற்பு பலகை.

katch 2

அங்கே நின்று கொண்டு இருக்கும்போது இனிய தமிழில் வரவேற்றார்கள் சிங்கள கடற்படை வீரர்கள். அங்கும் நமது அடையாள அட்டையை காட்டி உள்ளே செல்ல வேண்டும். பரிசோதனை உண்டு. ஆனால் இந்திய அதிகாரிகள் காட்டிய கெடுபிடியில் ஒரு ஐந்து சதவீத கெடுபிடியை கூட இலங்கை அதிகாரிகள் காட்டவில்லை. ஒரு பர்லாங் தூரம் நடந்த பின் ஒரு பெருமரத்தடியில் கொஞ்சம் புதர்களை சுத்தப்படுத்தி அங்கு தங்குமிடம் போல் வசதி செய்து கொண்டோம்.

katch 7

சிறு சந்தை ஒன்று உருவாகியிருந்தது. இலங்கையின் புகழ்பெற்ற ராணி சோப், பனங்கட்டி, கருப்பட்டி, போன்றவை விற்பனைஸ் செய்தார்கள் என்றாலும் பெரும்பாலும் காணக்கிடைத்தவை மலிவு விலை சீன பொம்மைகள் தான். கொஞ்சம் பொருட்கள் வாங்கி வைத்ததிலே நேரம் போனதே தெரியவில்லை. சூடான தேநீர் கிடைத்தது. பிறகு அந்தோனியார் கோவிலை நோக்கி நடந்தோம்.

katch 11

அந்தோனியார் கோவில் அருமையாய் அமைக்கப்பட்டிருந்தது. இலங்கை கொடி கடற்காற்றில் தடதடவென பறந்து கொண்டிருந்தது. இலங்கை கோஸ்ட்கார்டும் கடற்படையும் ரோந்து சென்று கொண்டே இருந்தனர். ஐந்து மணி சுமாருக்கு அந்தோணியார் ஆலயத்தில் விழா தொடக்கியது, திருப்பலிபூசை, சப்பரம், பாடல்கள் ஜெபம் என்று சில மணிநேரம் விழா நடக்க, நாங்கள் கடற்கரையில் அமர்ந்து அங்கு வந்த இலங்கை தமிழ் உறவுகளிடம் பேசிக்கொண்டு இருந்தோம். யாழ் இசை மட்டும் இனிது அல்ல. யாழ் தமிழும் இனிதே.

இரவு உணவருந்த தங்குமிடம் சென்றோம். இலங்கை அரசு உணவு தருவதாகவும் யார் வேண்டுமானாலும் வந்து வாங்கி கொள்ளலாம் என்றும் ஒலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். என்னதான் தருகிறார்கள் என்று பார்க்கலாம் என்று நண்பர்கள் சென்று ஐந்து பொட்டலங்கள் வாங்கி வந்தார்கள். மீன் சேமியா, மாசி சம்பல் சேமியா, புட்டு என்று இலங்கை அரசு அனைவருக்கும் உணவளித்திருந்தது. நாங்கள் கொண்டு சென்ற உணவை வீணாக்காமல் அதையே உண்டோம்.

katch 12

மேலும் அங்கு சீனர்கள் ஒரு கட்டிடம் கட்டி முகாம் ஒன்று அமைத்திருக்கிறார்கள். அதனருகே சென்று பார்க்கலாம் என்று சென்ற போது அங்கு வந்த சிங்கள காவல் படை வீரர் ஒருவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள் இவை: – “அண்ணா. அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி. தயவு செய்து இந்த பக்கம் வாருங்கள்.” நம் ஊர் போலிசானால் அடி வெளுத்திருப்பார்கள்.

katch 15

கொடிகளின் பின்னணியில் தெரிவது சீன முகாம்.

katch 9

இரவு நான் கழிப்பிடத்திற்கு சென்ற போது அங்கு ஒரு இலங்கை போலிஸ்காரர் அனைத்து கழிப்பிடங்களுக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். நீங்கள் ஏன் இந்த வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் – மக்கள் கழிப்பிடத்திற்கு சென்ற பிறகு சரியாய் தண்ணீர் ஊற்றுவதில்லை. அதனால் எனக்கு இதை ஒரு வேலையாய் கொடுத்திருக்கிறார்கள் என்றார். நான் எதுவும் பேசவில்லை. மறுபடி வந்து படுத்துக்கொண்டேன்.

சிலர் மட்டும் கடற்கரையில் சென்று படுத்துக்கொண்டார்கள். பிறர் அங்கேயே உறங்கி எழுந்தோம். காலை எழுந்தவுடன் தேநீர் அருந்த சென்று விட்டு மற்றொரு பகுதிக்கு நடந்து சென்றோம். அங்கு இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் அருகே புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மெல்ல அருகே பாறைகள் மேல் ஏறி நடந்தோம். மொத்தமும் பவளப்பாறைகள். அங்கு இடிந்த நிலையில் இருந்த அந்தோனியார் சிலை ஒன்றை கண்டோம்.

katch 13

மறுபடியும் அந்தோணியார் கோவிலில் திருப்பலி பூசை நடந்தது. சப்பரம் சுற்றி வந்த பின் ஜெபம் நடந்தது. இலங்கை அரசு அனைவருக்கும் காலை உணவும் ஏற்பாடு செய்திருந்தது. ரொட்டியும், ஜாமும், குடிக்க ஒரு மைலோவும் கொடுத்திருந்தனர். ஜெபம் முடிந்தபின் கொடியிறக்கப்பட்டது. அதன் பின்னர் அனைவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேற்கில் இருந்த படகுத்துறைக்கு நடந்து சென்றோம். கடும் கூட்டம். அனைவருக்கும் வீடு செல்ல அவசரம். படகு ஓட்டுனரின் திறமையால் எங்கள் படகு சற்று முன்னமே வர அதில் ஏறி மதியம் ஒரு மணி அளவில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். மறுபடி எங்களை கடும் சோதனை செய்து விட்டு இந்தியாவின் உள்ளே வர அனுமதித்தனர். ராமேஸ்வரத்தில் மதிய உணவு உண்டு விட்டு மாலை ரயிலில் மதுரை வந்து சேர்ந்தோம்.

Katch 10

katch 14

இந்த பயணத்தில் நான் இலங்கை அரசை விமர்சிக்காமல் தடுத்தவை இவைதான்:

 • இலங்கை அரசு அனைவருக்கும் குடிக்க தண்ணீர் ஏற்பாடு செய்திருந்தது. கச்சத்தீவில் நல்ல தண்ணீர் கிடையாது. நெடுந்தீவில் இருந்து டாங்கர்களை கப்பலில் ஏற்றி இரவு பகல் என்று பாராமல் நீரேற்றிக் கொண்டிருந்தார்கள்.
 • இலங்கை அரசு அனைவருக்கும் உணவளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆயினும் உணவளித்தார்கள்.
 • ஏறத்தாழ 8000 பேர் வரும் ஒரு விழாவிற்காக அவர்கள் 100 கழிப்பிடங்கள் கட்டியிருந்தார்கள். அதற்கு மோட்டார் வைத்து கடல் நீர் தொட்டிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள்.

katch 8

இவற்றை அவர்கள் கண்டிப்பாய் செய்ய வேண்டும் என்பது கிடையாது. ஆயினும் செய்திருந்தார்கள். அதனால் சிறிதேனும் பலன் பெற்றிருந்தாலும் அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதென் நிலைப்பாடு.

நன்றி: புகைப்படங்கள் வழங்கி உதவிய அருண் பாஸ் மற்றும் ஜெய் இருவருக்கும்.

காவல் கோட்டம்–ஒரு பாமரனின் பார்வை

சு.வெங்கடேசனுடன் எனக்கு அவ்வளவாய் பழக்கமில்லை. ஒரே ஒரு முறை சந்தித்து இருக்கிறேன். அவர் எனக்கு எந்த வித பொருளுதவியும் செய்ததில்லை. அவரது அரசியல் நிலைப்பாடுகள், இலக்கிய செயல்பாடுகள், பொதுக்கருத்துக்கள் போன்றவற்றுடன் எனக்கு யாதொரு தொடர்பும் இல்லை. சில கருத்துக்களோடு ஒப்புதல் கூட இல்லை. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் தெரியுமா? காவல் கோட்டம் என்னும் இந்த வரலாற்று புதினத்தை விமர்சனம் செய்ய எனக்கு இருக்கும் ஒரே தகுதி நானோர் வாசகன் என்பதே. வேறு எந்த முகாந்திரமும் இல்லை. நல்லதும் கெட்டதும் சேர்த்தே சொல்கிறேன், ஒரு வாசகனின் பார்வையில். நன்றி.

முதன்முதலில் காவல் கோட்டம் நூலை சென்னை லேன்ட்மார்க் புத்தக கடையில் பார்த்த போதே வாங்க வேண்டும் என்று நினைத்தேன். பணமில்லை. பிறகு சிறிது பணம் சேர்ந்த பிறகு தேடிக் கண்டுபிடித்து வாங்கினேன். வாங்கிய உடன் படிக்கவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகே படிக்க ஆரம்பித்தேன். முதல் முயற்சி அயர்ச்சியைத் தந்தது. 300 ஆண்டுகால விஜயநகர மதுரை வரலாற்றை தாண்டுவதற்குள் பிற வேலைகள் வந்து ஆக்கிரமித்ததால் புத்தகத்தை மதுரையில் வைத்து விட்டு சென்னை சென்று விட்டேன்.

ஒரு மாதம் சென்றிருக்கும். சுத்தமாய் நினைவில் இல்லை காவல் கோட்டம். என் அம்மாவிடம் தொலைபேசியில் ஒருநாள் பேசுகையில் சொன்னார்கள் – நீ ஒரு புக்கு வாங்கிட்டு வந்து வச்சியே. அத படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப நல்லா இருக்கு என்று. என்னால் சும்மா இருக்கும் போது படிக்க முடியாத புத்தகத்தை அவ்வளவு வேலைப்பளுவுக்கு இடையே என் அம்மாவால் படிக்க முடிகிறது என்றால் அதை மீண்டும் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது.

பிறிதொரு நன்னாளில் அதை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். ஆதித்தாய் சடச்சி தன் கணவன் கருப்பண்ணனின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு அவனை சாவுக்கு அனுப்பும் காட்சியில் மறுபடி தொடங்கியது எனது பயணம். சடச்சியின் சந்ததிகள் பெருகுவதும் பிறிதொரு காலத்தில் விஜயநகர குமாரகம்பணன் படையெடுப்பின் போது சடைச்சி மக்களை கங்காதேவி பார்ப்பதுமாய் பிரயாணிக்கிறது. இதற்கிடையே கம்பிளி ராஜ்ஜியம், விஜயநகரம் என்று ஒரு சிறு வரலாற்று பயணம்.

முதல் 200 பக்கங்கள் தடதடவென சமவெளியில் செல்லும் ரயில் போல் பிரயாணிக்கும் நாவல் அதன் பிறகு மலையேறும் ரயில் போல் மெதுவாய் செல்கிறது. மெதுவாய் செல்வதால் குறையொன்றுமில்லை. மெதுவாய் சென்றால் தானே மலையழகை ரசிக்க முடியும். அதுபோலவே கள்ளர் மக்கள் வாழ்வும் களவும் அதையொட்டிய காவலுமாய் மக்கள் வாழ்வியலுக்குள் சென்று முக்குளிக்கிறார் சு.வெ. இனவரைவியலை லாவகமாய் கையில் எடுத்து   புனைவோடு சேர்த்து கதை சொல்வது எளிதல்ல. மதுரையும் அதை சுற்றியுள்ள ஊர்களும் சந்தித்த பஞ்சங்கள், ஆங்கிலேயர் அடக்குமுறைகள், அதற்கு வந்த எதிர்ப்புகள் என்று நான்மாடக்கூடலின் வரலாற்றை கதையாய்க் கூறும் கதையிது.

ஒவ்வொரு முறை வரலாற்று நிகழ்வுகளை அந்த நாவலில் வாசிக்கும் போதும் அந்த இடத்துக்கு நம் மனம் பயணிப்பதை தவிர்க்க முடியவில்லை. பேரும் புகழும் பெற்றவர்கள் அனைவரும் சிறுபாத்திரங்களாய் தாண்டிப்போக தாதனூர்காரர்களும் பெரியாம்பளகளும் ஆங்கன்களும் ஆதிக்கம் செலுத்தும் நாவலிது.

இஸ்லாமியர் ஆட்சி போன பிறகு கங்காதேவி மீனாட்சியை மறுபடி மதுரைக்கு அழைத்து வரும் காட்சி விவரிப்பும், விஸ்வநாத நாயக்கர் கட்டிய மதுரை கோட்டையை மாரட்டும், பிளாக்பர்னும் திட்டமிட்டு பெருமாள் முதலி மூலம் இடிக்கும் வரலாறும் அந்த கோட்டை இடிபடும் போது கோட்டைக்காவல் தெய்வங்கள் இறங்கி வரும் காட்சி விவரிப்பும் உங்களை புல்லரிக்க வைக்கும்.

“சுபவேளை நெருங்கியதும் கிழக்கு மதில் மேலிருந்த நூற்றுக்கணக்கான எக்காளங்களும் கொம்புகளும் ஒருசேர முழங்கின. தாலப்பொலி வழி விரிக்க, ஆரத்திச்சுடர்கள் நிரையில் நின்றெரிய அன்னை மதுரையில் நுழைந்தாள். நகரமக்கள் கோவிலுக்கு செல்லும் இருமருங்கிலும் நின்றிருந்தனர். மீனாட்சியைக் கண்டதும் அழுகையும் புலம்பலும் வாழ்த்தொலியும் சரணவிளியுமாக மக்கள் கூட்டம் சன்னதம் கொண்டது. கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து மிதந்து வந்து கிழக்குக் கோபுர வாசலின் முன்னே நின்றாள். மாறவர்மன் சுந்தரபாண்டியனின் நெடுங்கோபுரம் தலை தாழ்த்தி வணங்கியது போலிருந்தது.”

தாதனூரின் ஒவ்வொரு கொத்தும் கொடிவழிகளும் வகையறாக்களும் ஏன் அந்த பெயர் பெற்றுள்ளது என்பதையும் சிறுவரலாறுகள் மூலம் விவரிக்கிறார் சு.வெ. ஒத்தப்பல்லன் வகையறா, காளை வகையறா, பனைமரத்தான் வகையறா, குருத வகையறா, காவேரி வகையறா, வல்லம் வகையறா என்று ஒவ்வொரு வகையறாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. அதை வரலாற்றோடு பின்னிப் பிணைத்து சொல்லும் முயற்சியில் சிறப்பாய் வெற்றி பெறுகிறார் சு.வெ. சின்னானின் ரகசியம், ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி, மதுரையின் முதல் கச்சேரி என்று பயணிக்கும் நாவலில் குறிப்பிடத்தக்க ஒன்று சு.வெயின் எழுத்து நடை. மேலும் மதுரையில் நடந்த மிஷனரி வேலைகளை இயல்பாய் உரைத்திருப்பது சிறப்பு.

“நகரின் முதல் கச்சேரி (போலீஸ் ஸ்டேசன்) கீழமாசி வீதியில் பிளாக்பர்னின் விளக்குத்தூணுக்கு நூறு கெஜ தூரம் வடக்கே தள்ளி கட்டி முடிக்கப்பட்டது. ஒரு பகுதி போலீஸ் ஸ்டேசனுக்காகவும், ஒரு பகுதி கொத்தவால் சாவடிக்காகவும் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. மதுரையில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கட்டிடம் இதுதான். அந்த ஐரோப்பிய பாணி கட்டிடத்தில் இருந்த கவர்ச்சி, செல்வர்களை ஈர்த்தபடி இருந்தது. இரும்பு ராடர்கள் போட்டு, நிறைய ஜன்னல்கள் வைத்து காற்றோட்டமான முறையில் கட்டப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்தை மக்கள் தினமும் வந்து பார்த்துவிட்டுப் போயினர்.”

மதுரை நகரில் இப்போதும் இருக்கும் பல்வேறு கட்டிடங்களின் சிறப்பை, வரலாற்றை மக்களின் வாழ்வியலோடு இயைந்து சொல்லியிருப்பது சிறப்பு. களவில் இரவின் இருப்பையும், களவின் முறைகளையும், களவினால் வந்த காவல் பொறுப்பையும் சு.வெ விவரிக்கும் போது தற்போதும் அந்த நிலை இருப்பதை உணர முடிகிறது. ஆங்கிலேயர் ஆட்சி வர கள்ளர் மக்கள் படும் துயரங்களும் அவர்களை அழுத்தும் சமூக மாற்றங்களும் தெளிவாய் பதியப்பட்டு இருப்பது சிறப்பு. காவலையும் களவையும் இரு கண்களாக கொண்ட ஒரு சமூகம் எப்படி சாவுகள் தண்டனைகள் வழியே குற்றப்பரம்பரை ஆக்கப்பட்டது என்று இந்நாவலில் காணலாம்.

சில இடங்களில் நாவல் வழிமாறிப் போகிறது. தேவையற்ற தகவல்களை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். விவரிப்புகளை படிக்கும் போது சிறிது ஆயாசம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை, குறிப்பாய் இரவு பற்றி. அது போலவே முதல் 200 பக்கங்கள் கடும் அயர்ச்சியை உண்டு பண்ணும். 400 ஆண்டுகால சரித்திரத்தை 200 பக்கங்களில் அடைக்கும்போது உண்டாகும் அயர்ச்சி அது. ஜெயமோகன் “எழுதும் கலையில்" சொல்வது போல தேர்ந்த ஒரு செறிவூட்டலால் இந்த நாவலில் 200 பக்கங்கள் குறைத்து மேலும் அழகிய ஒரு படைப்பாய் வழங்கியிருக்கலாம்.

மேலும் வன்முறை நிறைந்த கள்ளர் வாழ்க்கை அழகியல் நோக்கோடு காட்டப்[பட்டிருப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். களவை நியாயப்படுத்துதல் சரிதான்.. ஆனால் இடம் பொருள் ஏவல் பார்த்து செய்வதுதானே களவு. தாது வருஷ பஞ்சத்தில் களவு செய்வதை, காவக்கூலி வாங்கிக்கொண்டு பதுக்குவதற்கு துணைபோதலை  காவியப்படுத்துதல் சரியல்ல என்பது என் கருத்து.

இத்தகைய குறைகள் இருப்பினும் சு.வெ மீது என்னால் எந்த பெருங்குற்றமும் சாட்ட முடியாது. வரலாறு பிடிக்கும் ஒவ்வொருவரும் படித்தாக வேண்டிய நூல் இது. இதை மட்டும் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இதையும் படிக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன். பலமுறை படித்தவன் என்ற முறையில் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஏதேனும் புதிய தகவலோ வரலாற்று உண்மையோ எனக்கு தெரிய வருகிறது. படித்து முடித்த பின் மலைப்பும் பிரமிப்புமே மிஞ்சுகிறது. பத்தாண்டு கால உழைப்பு என்று சொல்லும்போதில் அதில் எனக்கேதும் ஐயமில்லை.

நூல்: காவல் கோட்டம்

வெளியீடு: தமிழினி

விலை: ரூ.650

ஆசிரியர்: சு.வெங்கடேசன்.

கிடைக்குமிடம்: டிஸ்கவரி புக் பேலஸ்

கோலி சோடா – விமர்சனம்

Goli-Soda-Movie-Stills-8

சென்ற வாரம் நான் முதலில் பார்த்த படம் – ரம்மி. ஏண்டா போனேன் என்று யோசிக்க வைத்த படம். அந்த படம் உருவாக்கிய ரணத்தை ஆற்ற மற்றொரு நல்ல படம் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கோலி சோடா சென்றேன் நண்பன் உதயாவுடன்.

கோயம்பேடு மார்க்கெட். நான்கு யாருமற்ற சிறுவர்கள். அவர்களுக்கு அம்மா போல் ஒரு ஆச்சி. அந்த ஆச்சிக்கு ஒரு அழகிய மகள். இத்தகைய சூழ்நிலையோடு தொடங்கும் ஒரு வழக்கமான தமிழ் திரைப்படம் அந்த அழகிய பெண்ணை அந்த நான்கு இளைஞர்களில் ஒருவன் காதலித்து கைப்பிடிப்பதையே காட்டும். மாற்றி யோசித்த விஜய் மில்டனுக்கு வாழ்த்துக்கள்.

மூட்டை தூக்கி சம்பாதிக்கும் அந்த நான்கு விடலைகள் மனதில் எதிர்காலம் பற்றிய பயத்தை விதைக்கிறார் ஆச்சி. உதவியும் செய்கிறார். மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவராய் இருக்கும் நாயுடுவிடம் அழைத்துச் செல்கிறார். நாயுடுவும் கிடங்காய் போட்டு வைத்திருக்கும் தனது கடை ஒன்றை நான்கு பேருக்கு அளிக்கிறார்.

ஆச்சி மெஸ் ஆரம்பமாகிறது. ஆனால் கூடவே ஒரு சிக்கலும். நாயுடுவின் அடியாள் மயிலு ஒருநாள் அங்கு வருகிறான். வருபவன் அங்கே அமர்ந்து குடிக்கிறான். கூட்டம் சேர்க்கிறான். ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தி விடுகிறான். இது தெரிய வர, நான்கு பேருக்கும் மயிலுக்கும் கைகலப்பு ஏற்படுகிறது.

நான்கு பேரையும் அழைத்துக்கொண்டு ஆச்சி நாயுடுவை சந்திக்க செல்கிறார்.  அவர்களை சந்திக்கும் நாயுடு தான் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பதையும் அதற்கு மூலதனமே பயம் என்றும் தெரிவிக்கிறார். இந்த நான்கு பேரும் மயிலை அடித்ததால் அந்த பயம் போய்விடும் என்றும் அந்த சிறுவர்கள் மறுபடி சென்று கடையை திறக்க வேண்டும் என்றும் மயில் அங்கு வந்து அவர்களை அடிப்பான் என்று சொல்கிறார்.  சிறுவர்களில் யாரும் தப்பி ஓடாமல் இருக்க ஆச்சியை பணயமாக வீட்டில் வைத்து விட சொல்கிறார். நான்கு சிறுவர்களும் சென்று கடையை திறக்கிறார்கள். மயில் வருகிறான்.

அதன் பிறகு என்ன நடந்தது? மயில் என்ன செய்தான்? ஆச்சி எப்படி தப்பித்தார்? அந்த சிறுவர்கள் என்ன ஆனார்கள்? இதை அனைத்தையும் திரையில் காண்க. மேலே நான் சொன்னது முதல் பாதியின் பாதி மட்டுமே.

சிறப்பு:

நான்கு பேர் – பசங்க படத்தில் நடித்த அந்த நான்கு பேரும் வளர்ந்து விடலை பையன்கள் ஆகி விட்டார்கள். தேர்ந்த நடிப்பு. ஒருவரையும் குறை சொல்ல முடியாது.

goli-soda-tamil-movie-stills41384932869

ஆச்சி – அருமையான பாத்திர படைப்பு. மார்க்கட் ஆச்சிகள் என்றாலே பான்பராக் போட்டுக்கொண்டு ரவுடித்தனம் செய்யும் பெண்கள் ஆளும் தமிழ் சினிமாவில் முதல் முறையாய் கணவன் இல்லாது போனாலும் கண்ணியமாய் தொழில் செய்யும் தைரியமான பெண்ணாக இருக்கிறார் ஆச்சி. சுஜாதா சிவகுமாரின் திரைப்பயனத்தில் இது ஒரு மைல்கல்.

ATM – கண்ணாடி போட்டுக்கொண்டு அட்டு பீசு என்ற ரோலை ஏற்று நடிப்பது எத்தனை பேருக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் மிகவும் லாவகமாய் அந்த பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சீதா. பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

இமான் அண்ணாச்சி – பட்டாசு. பிரித்து மேய்கிறார். அதுவும் போலிஸ் ஸ்டேஷனில் நின்று கொண்டே வசனம் பேசும் இடத்தில் வசனமே சரியாய் கேட்கவில்லை. அவ்வளவு கைதட்டல்.

யூகிக்க முடியாத திரைக்கதை. இரண்டாம் பாதியில் சற்றே தோய்வடைந்தாலும் தடதடவென ஓடும் திரைக்கதையால் பார்வையாளர்களை கட்டி போடுகிறார். இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் சிறப்பாய் செயல்பட்டிருக்கிறார் விஜய் மில்டன். விடலை பையன்கள் கதை இந்நேரம் கஸ்தூரி ராஜா இல்லை செல்வராகவன் கையிலோ கிடைத்திருந்தால் இந்நேரம் நமக்கு மிகச்சிறந்த ஒரு செக்ஸ் படம் கிடைத்திருக்கும். அனைத்தையும் காட்ட வாய்ப்பிருந்தும் அந்த நான்கு பையன்களையும் மிகவும் கண்ணியமாய் காட்டியிருக்கிறார் விஜய் மில்டன்.  கேமரா, சண்டை காட்சிகள், பாடல்கள், இசை என தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் பணியை சிறப்பாய் செய்துள்ளார்கள்.

கேள்விகள்:

கருப்பாய் இருக்கும் பெண்ணை கறுப்பு பையன் தான் காதலிக்க வேண்டுமா சார்?

எங்கோ பிரிந்து செல்லும் நான்கு பேரும் தங்கள் சுயதேடலில் மீண்டு வருவதாய் காட்டியிருக்கலாம். அந்த பெண் அவர்கள் நான்கு பேரையும் தேதி செல்வதை தவிர்த்திருக்கலாம். தங்கள் அடையாளத்தை தொலைத்த வெறியில் நான்கு பேரும் மீண்டு வந்ததாய் காட்டியிருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.

இரண்டு மூன்று பாத்திரங்கள் அப்படியே தொடுப்பில் நின்று விடுகின்றன. அந்த பாத்திரங்களை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.

இவை எல்லாம் குறைகள் அல்ல. எனக்கு உண்டான கேள்விகள் தான்.

முடிவு:

யாருமே கெட்டவன் இல்லை. சூழல் தான் அவர்களை கெட்டவர்கள் ஆக்குகிறது என்று சொல்லும் சில காட்சிகள், சூழலையும் தாண்டி நாம் நல்லவர்களாய் வாழலாம் என்று சொல்லும் பல காட்சிகள் என வாழ்க்கையின் இரு பக்கங்களையும் அழகாய் சொல்கிறது. கண்டிப்பாய் ஒரு முறை பார்க்க வேண்டிய படம். மறுமுறை செல்ல ஆர்வமிருந்தால் பார்க்கலாம்.

ரம்மி – திரை விமர்சனம்

இது வழக்கமான திரை விமர்சனமாய் இருக்காது. இந்த படத்துக்கு செல்பவர்கள் தாராளமாய் செல்லலாம். இந்த விமர்சனம் எனது கடுப்பிற்கு ஒரு வடிகால் மட்டுமே. மற்ற எவருடைய முடிவையும் மாற்றும் வல்லமை இதற்கு கிடையாது.

இந்த இயக்குனருக்கு சில கேள்விகள்:

1. இந்த படத்துக்கு ஏன் ரம்மின்னு பேரு வச்சீங்க?

2. இந்த படத்தின் ஹீரோ இனிகோ பிரபாகர் தான். ஏன் விஜய் சேதுபதி பேரு மொதல்ல வருது? செல்லிங் டாக்டிக்சா?

3. ஈரோயினுக்கு ஷூட்டிங் அப்போ சோறே போடலியா?

4. அந்த சையது கேரக்டர் பாவம். இந்த டம்மி வேலைய பாக்க முதல் பாதில அத்தாம் பெரிய பில்ட் அப் தேவையா?

5. வில்லன் பெரிய மனுஷன். அவ்ளோ பெரிய மனுஷன் வீட்டு பொண்ணு தான் விஜய் சேதுபதி லவ் பண்ற பொண்ணுன்னு சொல்லாம ஏன் மறைச்சீங்க? சஸ்பென்சா?

6. சென்றாயன்னு ஒருத்தர் மூடர் கூடம்ங்கற படத்துல நல்லா நடிச்சிருந்தாரு. அவரு கூட உங்களுக்கு ஏதாச்சும் பங்காளி சண்டையா? அவரு பொழப்ப கெடுத்துட்டீங்களே. 

7. ஹோட்டல்ல தோசை வாங்கிட்டு அது பிடிக்கலன்னா வேற தோசை போட்டு குடுப்பான். ஆனா சினிமாக்கு போயிட்டு இப்புடி ஏமாந்தா அந்த காச திருப்பி குடுக்கணும்ல.. அதுதான நியாயம்?

இன்னும் நெறைய கேள்வி இருக்கு. ஆனா எனக்கு வேலையும் நெறைய கெடக்கு.

விமர்சனம் எங்கயா?

இந்தா!! இங்க கிளிக் செய்யுங்க!! – ரம்மி

அந்த பாவப்பட்ட தயாரிப்பாளருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

பி.கு – இந்த பழி மொத்தமும் இயக்குனருக்கு மட்டுமே சேரும். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அவர்கள் பணியை செவ்வனே செய்து விட்டார்கள்.

புரோட்டா loves சால்னா!

அவன் பெயர் புரோட்டா. இத்தாலியில் பிறந்தவன். இந்தியா என்று ஒரு நாடு இருந்ததே அவனுக்கு தெரியாது. டெல்லியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாலும் அவனுக்கு இந்தியாவின் இருப்பு தெரியாததாய் இருந்தது.

புரோட்டாவின் காதலியின் பெயர் சால்னா. அவள் பெல்ஜியம் அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். சால்னாவிற்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அதிகம் தேநீர் குடிப்பாள். பிறப்பிலிருந்தே வோட்கா மட்டுமே குடித்து பழகி இருந்த புரோட்டாவிற்கு அது சுத்தமாய் பிடிப்பதில்லை. ஆயினும் சால்னா இன்றி தன் வாழ்வில் சுவையில்லை என்று தெரிந்திருந்ததால் அவன் அதை பெரிதாய் கருதவில்லை.

புரோட்டாவும் சால்னாவும் சந்தித்தது டெல்லியில் படித்த போது. அவளுக்கு இந்தியாவின் இருப்பு தெரிந்திருந்தது. அவனிடம் அவள் முதல்முறை சொன்னபோது இவன் சிரித்த எள்ளல் சிரிப்பில் அவள் நம்பிக்கை இழந்தாள். டெல்லியில் அவர்கள் ஒன்றாய் படித்தார்கள். அவள் பாடம் படித்தாள். அவன் அவளைப் படித்தான்.

ஐந்தாம் வகுப்பு முடிந்த போது அவன் மருத்துவராகி விட்டிருந்தான். அவளோ ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்தாள். மருத்துவர் புரோட்டாவின் வீட்டில் ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த சால்னாவை ஏற்றுக்கொள்ள பெரும் தயக்கம் இருந்தது. சால்னாவின் சாதி வேறு குறுக்கே நின்றது.

அவர்கள் அவனுக்கு அவர்களின் சாதியில் ஒரு பெண் பார்த்தார்கள். அவள் பெயர் சேர்வா. ரஷியாவை சேர்ந்தவள். உலகின் புகழ் பெற்ற மருத்துவ பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் ராஸ்புடின் கல்லூரியில் நர்சாய் வேலை பார்த்தவள். நர்ஸ் வேலை பார்க்கும் போதே மருத்துவர்கள் செய்யும் சிகிச்சை முறைகளை கற்று தேர்ந்து அவர்களை முந்தி மிகச்சிறந்த மருத்துவ மாணவியாய் அந்த கல்லூரியில் இருந்து தேர்ந்து வந்தவள். பேரழகி.

புரோட்டாவிற்கு அவளை பார்த்து ஒரு சின்ன சபலம் ஏற்பட்டாலும் அவனுக்கு சால்னாவின் மீதான காதல் போகாத காரணத்தினால் அவளையே திருமணம் செய்ய ஆசைப்பட்டான். இருப்பினும் வீட்டில் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் புரோட்டாவும் சால்னாவும் ஊரை விட்டு ஓடிப் போக தலைப்பட்டார்கள். வெறியோடு அவர்கள் ஓடியே பஞ்சாப் வழியாக விருதுநகர் வந்து சேர்ந்தார்கள்.

அங்கு அவர்கள் சிறப்பாய் குடும்பம் நடத்தி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ ஊரே அவர்களை பார்த்து ஆச்சர்யப்பட்டது. பிள்ளைகள் பெரியவர்கள் ஆன பிறகு பொழுது சற்றும் போகாதிருக்கவே புரோட்டா ஒரு புதிய வகை உணவு தயாரிப்பில் ஈடுபட்டான். மைதா மாவை வைத்து அவன் செய்த உணவுக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் கிடந்த போது விருதுநகர் வாழ் பெருமக்கள் அவன் பெயர் சொல்லியே அழைக்கலாயினர். வெறும் புரோட்டாவை எப்படி தின்பது? அவன் மனைவியான சால்னா ஒரு குழம்பு தயாரித்தாள். அதையும் அவள் பெயர் சொல்லியே அழைத்தனர்.

இதற்கிடையே புரோட்டாவின் மேல் தீராக்காதல் கொண்ட சேர்வா சென்னை வந்து சேர்ந்தாள். இதற்குள் விருதுநகரில் மட்டுமே பிரபலமாக இருந்த புரோட்டா சென்னை வரை வந்து விட்டிருந்தது. சால்னா என்ற பெயரைக் கண்டு எரிச்சலுற்ற அவள் அங்கு ஒரு குழம்பு தயாரித்தாள். அதற்கு அவள் பெயரையே வைத்தாள். நீண்ட காலம் புரோட்டாவின் மேல் காதல் கொண்டு திரிந்தவள் அப்படியே இறந்து போனாள்.

இப்படித்தான் கடைகளில் புரோட்டாவிற்கு மதுரைப் பக்கம் சால்னாவும் வட தமிழகத்தில் சேர்வாவும் வழங்கப்பட்டன. இன்றும் விருதுநகர் செல்லும் வழியில் புரோட்டாவின் கல்லறையைக் காணலாம். சேர்வா எம்மதத்தையும் சேராத காரணத்தினால் அவளுக்கு கல்லறை இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. சால்னா மட்டும் மதுரையில் உயிருடன் வாழ்கிறாள். அவளுக்கு முட்டகறி, கறிதோசை என்று இரண்டு பிள்ளைகள். இருவரையும் ஆறுமுகம் கடையில் பார்க்கலாம்.

சிலர் சொல்வது போல புரோட்டா சால்னாவிற்கு தெரியாமல் சென்னை வந்து சேர்வாவுடன் குடும்பம் நடத்தினான் என்பது சற்றும் உண்மையில்லை.

திட்டாதீர்கள். இது ஒரு காவிய காதல் கதை.

ஏழைகளின் முந்திரி!

கடலை. பெண்பிள்ளைகளிடம் பேசும் பேச்சுக்கு கடலை என்ற பெயரை எவன் வைத்தானோ தெரியவில்லை. எங்கே சொன்னாலும் அந்த பேச்சைத் தான் நினைக்கிறார்கள். மகத்துவமான உணவான நிலக்கடலை பற்றிய நினைவு பெரும்பாலானோருக்கு வருவதில்லை.

நிலக்கடலை என்று பொதுவாய் அழைக்கப்படும் இந்த பருப்பு வகை வேர்க்கடலை, மணிலாக்கடலை, மணிலாக்கொட்டை என்றும் அழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டில் முதன்முதலில் விளைவிக்கப்பட்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும் உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

போர்த்துகீசியாவில் இருந்து இந்தியா வந்த வாஸ்கோ டி காமாவுடன் வந்த ஏசு சங்க பாதிரியார்கள் மூலம் இந்தப்பயிர் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கலாம் என்று லேய்பேர்கர் (1928) குறிப்பிடுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில் இந்த பயிர் அதிகம் விளைவிக்கப்பட்டதால் அது கிழக்கு கடற்கரை வழியாய் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்திருக்கலாம் என்று சுப்பா ராவ் (1909) கருதுகிறார். மணிலாக்கொட்டை என்ற பெயரை இதற்கு சான்றாக வைக்கிறார் சேஷாத்ரி (1962).

இன்று உலகஅளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னனி நாடாக உள்ளது இந்தியா. ஏறத்தாழ எட்டு மில்லியன் ஹெக்டேர்களில் கடலை சாகுபடி செய்யப்படுகிறது.  முக்கியமாய், ஆந்திரம், தமிழகம், குஜராத், கர்நாடகம், மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடலை சாகுபடி பிரதானமாய் இருக்கிறது.

கடலை சாகுபடியில் மிக முக்கியமானது விதைக்கும் நேரம். ஒரு வாரம் தள்ளிப்போனாலும் சாகுபடி பாதிக்கும் கம்மியாய் குறைந்து போகும். ஜூன் மாத முதல் வாரத்தில் இருந்து ஜூலை மாத இறுதி வாரத்திற்குள் கடலை விதைத்து விட வேண்டும். மேலும் இந்த நேரத்தில் செய்யும் விதைப்பினால் இலைத்துளைப்பான் (Leaf miner) மற்றும் Spodopteraa ஆகிய நோய் தாக்குதகளை குறைக்கலாம். கடலைச்செடிகளுக்கு ஊடுபயிராய் ஆமணக்கு, காராமணி மற்றும் சோயா பயிரிடுவதன் மூலமும் நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.

இதெல்லாம் சரிதான். ஆனால் கடலை சாப்பிடும் முறை இருக்கிறதே… அது எப்படியெல்லாம் சாப்பிடப்படுகிறது என்று பார்ப்பதுதானே நம் ஆசை. முதலில் நம் நாட்டுக்கு வருவோம். இந்தியாவில் கடலை கொண்டு பெரும்பாலும் செய்யப்படுவது சமையல் எண்ணெய். அதன் பிறகு கடலையை அவித்தோ வறுத்தோ உண்பார்கள். கடலை மூலம் செய்யப்படும் கடலை மிட்டாய், கோகோ மிட்டாய் போன்றவை குழந்தைகள் விரும்பி உண்ணும் மிட்டாய்களாய் இன்றும் இருக்கின்றன. சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் “Peanut Planet” என்றோர் கடை இருந்தது. இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. கடலை இன்றும் நம் தமிழக சமையலில் மட்டுமல்லாமல் இந்திய சமையலில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. உதாரணம் கடலை சட்னி. அது இருந்தால் எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை தோசைக்கு. 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடலை கொண்டு செய்யப்படும் வெண்ணெய் (Peanut Butter) புகழ்பெற்ற உணவாக உள்ளது. மேலும் பல்வேறு சாக்லேட் நிறுவனங்கள் இவற்றைக் கொண்டு சாக்லேட் தயாரிக்கின்றன. Butterfinger, Reese’s Peanut Buttercups, Twix, Snickers போன்றவை உலகப்புகழ் பெற்ற சாக்லேட் வகைகள். மேலும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலும் வேர்க்கடலை சூப் போட்டு குடிக்கின்றனர்.

 

ஆப்பிரிக்கர்களின் உணவில் கடலை ஒரு பெரிய இடத்தை பிடித்துள்ளது. கோழி அடித்து குழம்பு வைத்தாலும், குரங்கை கொன்று கறி சமைத்தாலும் அதில் கடலை இருக்கும். ஆப்பிரிக்க மக்களின் உணவு பழக்கங்களில் கடலை எத்தகைய இடத்தை பிடித்துள்ளது என்பதை இங்கே காணலாம். மேற்கு ஆப்பிரிக்க கடலை சூப் பிராந்திய வேறுபாடுகள் எடுத்து பலவாறு மாறியது. கானாவில்  அது கிழங்கு, வாழைக்காய், மற்றும் ரொட்டி மற்றும் மரவள்ளிக் கிழங்கு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு வேரினால் செய்யப்பட்ட fufuவுடன் பரிமாறப்பட்டது., மாலி மற்றும் செனகலில், மாபி (Maafe) என்று அழைக்கப்படும் கடலை சூப்பில் கோழி இறைச்சி மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்ப்பார்கள்.

African peanut soup

Fufu with Peanuts

Maafe

Thiébou guerté என்ற உணவு செனகல் நாட்டில் பிரபலம். நேரடி மொழிபெயர்ப்பில் கடலை அரிசி என்று வரும். செனகல் நாட்டின் மிக முக்கிய பணப்பயிர் கடலை தான். ஆகையால் அங்கு உண்ணப்படும் பெரும்பாலான உணவு வகைகளில் கடலை இடம்பெறுகிறது.

Ceebu Yapp

தென்அமெரிக்க நாடுகளே இந்த கடலையின் தொடக்கவிடம் என்பதை முன்னரே கண்டோம். ஆயினும் வேர்க்கடலை கொண்டு உருவாக்கப்படும் தனித்துவமான உணவுகள் நிறைய இல்லை என்பது ஆச்சயமூட்டும் ஒரு விஷயம். Papas Con Ocapa மற்றும் Chicken Fricasse போன்ற உணவுகளே அதிகம் செய்யப்படுகின்றன.

என்னதான் சொல்லுங்கள். ஒரு மழைநாள் மாலையில் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு அம்மா உப்பு போட்டு அவித்துக் கொடுத்த வேர்க்கடலையை உரித்து எடுத்து சாப்பிடுவது போன்ற ஒரு சுவை எந்த சாக்லேட்டிலும் கிடைக்காது.  அதேபோல் என்னதான் கோழி, மீன், திராட்சை என்று வாங்கி வைத்தாலும் மசாலாவில் புரட்டி எடுத்த கடலைதான் மிகச்சிறந்த துணையுணவு.

எதற்கு என்று கேட்கிறீர்களா? எதற்கும்.

பசுமை நடை 27 – கொங்கர் புளியங்குளம்.

பசுமை நடை பற்றிய பதிவு தானே என்று வாசிக்காமல் செல்ல வேண்டாம். பசுமை நடை மூலம் நாம் அறியும் வரலாறும் பாறைகளில் வடிக்கப்பட்ட கதைகளும் மீண்டும் மீண்டும் நம்மை நம் முன்னோர்களிடம் இட்டுச் செல்கின்றன. சென்ற முறை பசுமை நடைக்கு திருவாதவூர் சென்றோம். இந்த முறை முடிவு செய்த இடம் கொங்கர் புளியங்குளம்.

IMG_0326

மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைகழகத்தை தாண்டியவுடன் வருவது புளியங்குளம் என்னும் ஊர். முன்தினம் பெய்த பெருமழையால் உறக்கம் அழுத்திவிட சற்று மெல்லவே எழுந்து கிளம்பினேன். என் வீட்டில் இருந்து பல்கலைக்கழகத்தின் தூரத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்பது வண்டி ஓட்டிச் சென்ற போது தெரிந்தது.

ஒரு வழியாய் பல்கலைக்கழகத்தின் எதிரே காத்திருந்த நண்பர்களை கண்ட பிறகுதான் கொஞ்சம் மனம் ஆறுதல் அடைந்தது. நான் சென்ற நேரத்தில் கந்தவேல் சாப்பாடு பொட்டலங்களுடன் வர, எங்கள் பசுமை நடை இனிதே ஆரம்பமானது.

பல்கலைக்கழகத்தில் இருந்து தேனி செல்லும் பாதையில் மேலும் இரண்டு கிலோமீட்டர்கள் சென்றால் புளியங்குளத்தை அடையலாம். ஊருக்கு முன்னே வலப்புறம் பார்த்தால் மலை தெரியும். பிரதான சாலையில் தொல்லியல் துறை வைத்திருக்கும் பெயர்ப்பலகைகள் உங்களுக்கு வழிகாட்டும். அந்த சாலையில் வலப்புறம் திரும்பி கொஞ்சம் தூரமே செல்ல வேண்டும்.

அந்த சாலையின் இடப்புறம் மரங்கள் சூழ்ந்த ஊற்று நீர் பெருகும் இடத்தில் மாயன் கோவில் உள்ளது. இந்த மாயன் கோவில் அருகே உங்கள் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம். மாயன் கோவிலில் இருந்து மேற்கு நோக்கி நடந்து சென்றால் தொல்லியல் துறையால் வைக்கப்பட்ட சிதைக்கப்பட்ட அறிவிப்பு பலகைகள் உங்களை வரவேற்கும். வாசிக்க வேண்டுமானால் உடைந்து கிடக்கும் பலகைகளை எடுத்து அடுக்கியே வாசிக்க வேண்டியிருக்கும்.

சமணப்படுக்கைக்கு செல்ல இரும்பினால் ஆன ஏணி வைத்திருக்கிறார்கள். மேலேறி சென்றால் அங்கு கிட்டத்தட்ட 50 பேர் தங்குவதற்கு ஏற்றாற்போல் படுகைகள் வெட்டப்பட்டு உள்ளன. சற்று மேலேறி சென்றால் அங்கு மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

IMG_0281

கொங்கர் புளியங்குளத்தில் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இந்த படுகைகளை செய்வித்தவர் யார், செய்தவர் யார் என்பது குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன.

IMG_0287

கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகளை அய்யா சொ.சாந்தலிங்கம் அவர்கள் விளக்கிக் கூறினார்.

முதல் கல்வெட்டில்… “குற கொடு பிதவன் உபச அன் உபறுவ” என்பது “உபசஅன் உபறுவன்” என்பவர் இதை செய்து கொடுத்திருப்பதை குறிக்கிறது!

First Brahmi inscription

இரண்டாம் கல்வெட்டில்… “குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்” என்பது குகையை குடைவதற்கு பொன் கொடுத்தவன் “சேரஅதன்” என்பவன் என்பதை குறிக்கிறது!

Second inscriptionimage

மூன்றாம் கல்வெட்டில்… “பாகன் ஊர் பேராதன் பிடன் ஈத்தவே பொன்” என்பது பாகனூரைச் சேர்ந்த “பேராதன் பிடன்” என்பவரால் இக்கொடை தரப்பட்டதாக சொல்கிறது.

Third inscription

கல்வெட்டுக்களை படித்து முடித்த பிறகு பசுமை நடை உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது மனதை மகிழ்வித்தது. கண்ணாடி போத்தல்கள், சீட்டுக்கட்டுகள், நெகிழித்தட்டுகள், நெகிழிப்போத்தல்கள் என்று அந்த வரலாற்று மகத்துவமுடைய இடத்தை ஒரு குப்பைத்தொட்டியாய் ஆக்கி வைத்திருக்கிறார்கள் நம் மக்கள். மேலும் எங்கெங்கு காணினும் தங்களது பெயரை பூசியும் சமணப் படுகைகளில் தங்கள் கேவலமான பொற்பெயரைச் செதுக்கியும் அவர்களது வரலாற்று அறிவின் வீச்சை பதிந்துள்ளார்கள்.

IMG_0300-2IMG_0310

குப்பைகளை மட்டுமே களைய முடிந்தது பசுமை நடை குழுவினர் பிறகு மலை மேல் ஏறினோம். பசுமை போர்த்திய நார்த்தம்புற்களில் இருந்து எழும்பிய எலுமிச்சை வாசம் மூக்கைத்துளைத்தது. சிலர் அவற்றை வீட்டில் சென்று தேநீர் போட்டு அருந்த பறித்துக் கொண்டார்கள்.

மேலே ஏறும் வழியில் ஒரு மகாவீரர் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம். இது கிபி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததது. மேலும் இந்த புடைப்புச் சிற்பத்துக்கு கீழே வட்டெழுத்துக்களில் இதைச் செய்வித்த அச்சநந்தியின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

IMG_0319IMG_0317

மலையுச்சியில் ஒரு பெருமாள் கோவிலும் பெயர் அறியா கிராம தெய்வக்கோவிலும் உள்ளன. மேலே இருந்து பார்க்கையில் மதுரை மிகவும் அழகாக இருந்தது. சுமார் 2000 வருடங்களுக்கு முன் எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே இயலவில்லை.

மேலே சிறிது நேரம் அமர்ந்து கதை பேசிக்கொண்டு இருந்தோம். சிலர் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாய் இருந்தார்கள். மேலும் சிலர் நாகமலையை ரசித்துக்கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து அனைவரும் கீழிறங்கி வந்தோம். வரும் வழியில் மகாவீரர் சிற்பம் அருகில் மலை மேல் இருந்து ஒரு சிறு ஊற்றில் நீர் வந்து கொண்டிருந்தது. சுவைத்துப் பார்த்தோம். சுனைநீரின் புளிப்புச் சுவை. போத்தல்களில் கொஞ்சம் நீரை அடைத்துக்கொண்டு மாயன் கோவில் வந்து சேர்ந்தோம்.

IMG_0311

IMG_0351

மாயன் கோவிலில் வைத்து அனைவரும் உணவு உண்டனர். பொதுவாக பசுமை நடையில் காலை உணவு இட்லியாய் இருக்கும். இந்த முறையும் அனைவருக்கும் இட்லி இருந்தாலும் இயற்கை உணவை முயற்சி செய்து பார்க்கலாமே என்று ஒரு சிறு முயற்சி செய்திருந்தனர். சிலருக்கு மட்டும் கருப்பட்டி தோசை, அவல் மிக்சர் போன்ற இயற்கை உணவை பரிமாறினார்கள். அனைவருக்கும் அதைக் கொடுக்கும் போது பிடிக்குமோ என்னவோ என்பதால் தான் இந்த ஒரு சிறு சோதனை. உண்ட அனைவருக்கும் அது பிடித்திருந்ததால், இனிமேல் பசுமை நடையில் இயற்கை உணவு ஒரு பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

பசுமைநடை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், அறிஞர் சொ.சாந்தலிங்கம் அய்யா, வலைப்பதிவர்கள் சித்திரவீதிக்காரன், உதயகுமார் பாலகிருஷ்ணன், விஷ்ணு குமார், மற்றும் பலரை சந்தித்ததின் மகிழ்ச்சி.

IMG_0277

அடுத்த பசுமை நடையில் சந்திக்கலாம்.

மேலும் படிக்க:

சித்திரவீதிக்காரன்

வேல்முருகனின் நெடுஞ்சாலை!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – பார்வை

தமிழ் சினிமாவில் திரைக்கதை சிறப்பாய் இருந்த படங்கள் தோற்றதாய் சரித்திரம் கிடையாது. திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட பாக்யராஜின் பெரும்பாலான படங்கள் பெருவெற்றி பெற்றவையே. ஆனால் திரைக்கதை மன்னன் என்ற அந்த பதவியில் இருந்து பாக்யராஜ் இறங்கி பல வருடங்கள் ஆகின்றன. சில வருடங்களுக்கு முன், ஆரண்ய காண்டம் என்ற படம் எடுத்த தியாகராஜன் குமாரராஜா அந்த பதவிக்கு பொருத்தமாய் இருந்தார். அதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவராத நிலையில், மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் மூலம் அந்த பதவியில் நங்கூரமிட்டு அமர்ந்து இருக்கிறார்.

போலீஸ் தேடும் குற்றவாளியான ஓநாய் (மிஷ்கின்) ஒரு ஆட்டுக்குட்டியால் (மருத்துவ கல்லூரி மாணவர் ஸ்ரீ) காப்பாற்றப்படுகிறார். அடுத்த நாள் காணாமல் போகும் ஓநாய், ஸ்ரீயை தேடி வந்து கைது செய்யும் போலீஸ், ஓநாயை கொல்லத்தேடும் நிழல் உலக தாதா தம்பா (பரத்), ஓநாய் காப்பாற்ற முயலும் சில ஆட்டுக்குட்டிகள் என்று கதை ஒன்றும் பெரியதாய் இல்லை. ஏற்கனவே பல முறை பார்த்த படங்களின் கதையை ஒத்து இருக்கிறது. பல திரைப்பட விமர்சனங்களில் உபயோகிக்கப்பட்ட க்ளிஷேவான “டிக்கட்டின் பின்னால்" எழுதிவிடக்கூடிய கதை என்றும் சொல்லலாம்.

ஆனால் அதை ஒரு திரைப்படமாக இரண்டரை மணி நேரம் கொண்டு சென்று இருக்கை நுனியில் ரசிகனை உட்கார வைப்பது ஒரு கலை. அதன் பெயர் திரைக்கதை. திரைக்கதை எழுதுவது எப்படி என்று ஒருவர் பாடம் எடுத்தால் அதில் இந்த படத்தின் திரைக்கதை கட்டாயம் இடம்பெறும். சிறு பிழைகள், லாஜிக் இடிப்புகள் இருந்தாலும் சிறப்பான திரைக்கதை மற்றும் நெறியாழ்கை மூலம் இந்த படத்தை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.

கதாபாத்திரங்கள் சிலவற்றை பார்ப்போம்.

ஸ்ரீ – மருத்துவக்கல்லூரி மாணவன் சந்துரு. வழக்கு எண் 18/9ல் பிளாட்பார கடை ஊழியனாய் நடித்த ஸ்ரீ இந்த படத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். மிகையற்ற சிறப்பான நடிப்பை வழங்கியுள்ள ஸ்ரீக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது இப்படி நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால்.

மிஷ்கின் – நல்ல திரைக்கதை ஆசிரியராய், இயக்குனராய் இருக்கும் மிஷ்கின் தானோர் நல்ல நடிகரும் கூட என்று நிருபித்து இருக்கிறார். குறிப்பாய் அந்த கல்லறைக் காட்சியில் ஏன் இந்த ஓட்டம் என்று கதை போல் சொல்லுமிடத்தில் சிலருக்கு கண்ணீர் வருவது நிச்சயம். பிரமாதம் மிஷ்கின்.

ஷாஜி – மலையாள வாசம் வீசும் வசனங்களால் ஈர்த்தாலும் சில இடங்களில் பதறுகிறார். முதல் படம் என்பதால் அது இயல்பே. குறிப்பாய் மருத்துவரிடம் விவாதிக்கும் இடத்தில் ஷாஜி அட்டகாசம்.

ஆதித்யா – கொடுத்ததை சிறப்பாய் செய்திருக்கிறார். குறைவான வாய்ப்பிருந்தும் குறைவற்ற நடிப்பு.

பரத் – மொக்கை வில்லன் கதாபாத்திரம். இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாம். கொஞ்சம் செயற்கைத்தனம் தெரிகிறது நடிப்பில்.

மோனா மற்றும் திருநங்கை  – இவர்களுக்கு மிகச்சிறப்பான எதிர்காலம் உண்டு தமிழ்த்திரையுலகில். சிறப்பான நடிப்பு.

திறனாற்றுநர்கள் சிலரை பார்ப்போம்

இளையராஜா – இவரை விமர்சிக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை. பாராட்ட வார்த்தைகள் எதுவும் எனது சொற்திறனில் இல்லை.

பாலாஜி வி ரங்கா – மிஷ்கினின் ட்ரேட்மார்க் ஷாட்களை கிடைத்த ஒளியில் எடுத்து கலக்கியிருக்கிறார். வித்தியாசமான எதிர்பாராத கோணங்களில் வரும் காட்சிகள் பாராட்டத்தக்கவை. குறிப்பாய் வாகன விரட்டுகளும், வாகனங்கள் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளும் அருமை.

மேலும் ஹரியின் நிழற்படங்களும், கோபிநாத்தின் படத்தொகுப்பும், பில்லா ஜகனின் சண்டை அமைப்பும் ரசிக்கும்படி இருக்கின்றன.

இந்தப் படத்தின் திரைக்கதையை, அதில் வரும் திருப்பங்களை விமர்சனம் என்ற பெயரில் வெளியே முழுதாய் சொல்வதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. இந்த படத்தை நீங்கள் ரசிக்கப்போவதே அதன் திரைக்கதைக்காகத் தான். படத்தை பார்க்கும்போதில் அவ்வப்போது உலக சினிமா என்ற வார்த்தை நினைவுக்கு வருகிறது. குறைவான வசனங்கள், தெளிவான காட்சியமைப்பு, தடதடக்கும் பின்னணி இசை, எங்கும் தொடரும் கேமிரா என்று அனைவரும் இணைந்து இந்த படத்தை நிமிர்ந்து நிற்கச்செய்கிறார்கள்.

குறைகளின்றி படங்கள் கிடையாது. முதல்நாள் மண்ணீரல் நீக்க அறுவைசிகிச்சை செய்து கொண்ட ஒருவன் அடுத்த நாள் காலை எழுந்து நடமாடுவது என்பது ஒரு மெடிக்கல் மிராக்கிள். அதேபோல், இந்த கதையமைப்பில் சற்றும் ஒட்டாத சாமுராய் சண்டைக்காட்சி, ரயிலில் இருந்து தப்பும் காட்சி போன்றவற்றில் மேலும் கவனம் செலுத்தி நம்பக்கூடிய வகையிலோ செய்திருக்கலாம்.

தடதடவென ஓடும் ரயில் போல் செல்லும் கதையில் இந்தக்குறைகளெல்லாம் மிக சிறிதானவை. பெரிய குறைகள் என்று சொல்லவியலாது.

முடிவு:

தமிழ்த்திரையுலக ரசிகர்கள் கண்டிப்பாய் காண வேண்டிய படம். ஆஸ்கர் விருது, கேன்ஸ் விருது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு நல்ல திரைப்படத்தை ஆதரிக்கும் ரசிகனாய் இருப்பது முக்கியம். ஆரண்யகாண்டம் திரைப்படத்திற்கு ஏற்பட்ட நிலைமையே இந்த படத்திற்கும் ஏற்படாமல் இருக்க திரையரங்கிற்கு சென்று காணுங்கள்.

மிஷ்கினின் அடுத்த படைப்பை எதிர்நோக்கி….

பி.கு: எனக்கு தெரிந்தது பற்றி மட்டுமே எனது விமர்சனம். மாற்று கருத்து இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். குறைகள் இல்லாத படங்கள் இல்லாதது போல பிழைகள் இல்லாத பதிவுகளும் கிடையாது இவ்வுலகில். 

Winking smile

பொற்றாமரை – நூல் அறிமுகம்

இந்த பதிவு கும்பகோணத்தில் இருந்து வரும் அக்டோபர் மாத சஞ்சிகை சிற்றிதழில் வெளியிடப்பட்டது. சஞ்சிகை வலைப்பதிவிலும் வெளியிடப்பட்டது.

மதுரை தொன்மை நிறைந்த ஒரு ஊர் என்பது அனைவரும் அறிந்ததே. மதுரையின் தொன்மைக்கு பெரும் அடையாளமாய் விளங்குவது ஊரின் மத்தியில் உயர்ந்து நிற்கும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலே. கடவுள் மீது நம்பிக்கை இல்லாத என் போன்றோரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் உயர்ந்து நின்று இந்த ஊரின் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றிவரும் அக்கோயில் சிறப்பை தெளிவாய் எடுத்துரைக்க ஒரு நன்னூல் இல்லையே என்ற நிலையை உடைத்தெறிய உருவாக்கப்பட்ட படைப்பே பொற்றாமரை.

03-rajanna-potramarai-photo-1

முனைவர் அம்பை.மணிவண்ணன் தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர். மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் தற்போது மேலூர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியராய் பணியாற்றி வருகிறார். பல்வேறு நூல்களை அவர் எழுதியிருந்தாலும் அவரது ஆகச்சிறந்த படைப்பு பொற்றாமரை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மதுரையின் வரலாற்றை மேம்போக்காய் விவரிக்கத் தொடங்கும் இந்நூல் மெதுவாய் நம்மை அதனோடே ஒரு காலப்பிரயாணத்திற்கு அழைத்துச் செல்கிறது. திருக்கோவில் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் மதுரைக் கோவிலின் தலவரலாற்றை உரைக்கும் நூல் அதன் பிறகு கோவிலுக்குள் நம்மை ஒரு வழிகாட்டி ஊரை சுற்றிக்காட்டுவது போல் கை பிடித்து அழைத்துச் செல்கிறது.

நுழைவுவாயில், அட்டசக்தி மண்டபம், வேடமண்டபம் என்று ஒவ்வொரு பகுதியாய் நாம் பார்த்துச்செல்ல அதனூடே வரலாற்றுத்தகவல்களையும் புராணக்கதைகளையும் வழங்கியிருப்பது சிறப்பு. கதை படிப்பது போல் வரலாறு படிப்பது எளிது. ஒவ்வொரு மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், அதை கட்டியது யார் என்ற தகவல்கள், சிற்பங்களின் சிறப்புகள், சிற்பங்களின் பெயர்கள், அவற்றை தெளிவாய் காட்டும் வண்ண புகைப்படங்கள் என இந்நூல் நம்மை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச்செல்கிறது.

அதேபோல் சிற்பக்கலை குறித்த தகவல்கள் ஆச்சயமூட்டுகின்றன. இதுகாறும் நான் அறியாத பல தகவல்களை இந்நூல் வழியே நான் அறிந்தேன். உதாரணம் வேடமண்டபத்தில் காணப்படும் வேட்டுவச்சி மற்றும் வேடன் சிற்பங்கள் கடவுளர்களுடையது என்பதை விளக்கும் போது:

“இவ்வேட்டுவச்சியும் வேடனும் உமையும் சிவனுமாகும். வேட்டுவச்சியின் கைகளில் சூலாயுதம் மற்றும் கபாலம் காணப்படுகின்றன. மார்பில் கச்சை காட்டப்பட்டுள்ளமை, இச்சிற்பம் இறைவிதான் என்பதை உணர்த்துவதாக உள்ளது. பெண் உருவங்களைச் சிற்பங்களில் காட்டும்பொழுது தேவலோகப்பெண்கள் எனில் அவர்களுக்கு மார்பில் கச்சை இடம் பெறும்.”

இத்தகவலை நான் இதற்கு முன் அறிந்திலன்.

அதேபோல் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தை சுற்றிச் செல்லும் பாதையில் நூலும் பயணிக்கிறது. இக்கோவில் பற்றிய எனது பார்வையை இந்த நூல் கண்டிப்பாய் மாற்றியது. ஏதோ ஒரு சிற்பம் என்று இத்தனை நாள் தாண்டிச்சென்ற என்னை ஆகா! இது வேட மண்டபம். இதில் இருக்கும் மோகினி சிற்பம் இதுதான் என்று நின்று பார்க்க வைத்தது.

மிகச்சிறப்பாய் இந்நூலை வழங்கியுள்ள பேராசிரியர் அம்பை.மணிவண்ணனுக்கும், இதைப்பதிப்பித்த ஏ.ஆர். பதிப்பகத்துக்கும் எனது வாழ்த்துக்கள். வண்ணமயமான புகைப்படங்களை இந்நூலிற்காய் வழங்கிய ஒளிப்பட கலைஞர்கள் திருநாவுக்கரசிற்கும், தென்னகக்கண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும் முனைவருடன் நான் பேசிய பொழுது இந்த புத்தகத்தின் மறுபதிப்பு கூடிய சீக்கிரம் வெளி வரும் என்றும் மேலும் ஒரு மலிவு விலை பதிப்பு ஒன்றும் வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

மலிவு விலை பதிப்பு வராவிட்டாலும் கோவில்களை, சிற்பங்களை, தமிழ்க் கலைகளை, தமிழர் வரலாற்றை நேசிக்கும் அனைவரும் தங்கள் வீட்டில் வாங்கி வைக்கவேண்டிய நூலாகவே இதை நான் கருதுகிறேன். மதுரையை நேசிக்கும் அனைவர் கையிலும் தவழ வேண்டிய நூல் இது.

நூல் பெயர்: பொற்றாமரை

ஆசிரியர்: முனைவர் அம்பை.மணிவண்ணன்

விலை: ரூ. 955

பதிப்பகம்: ஏ.ஆர். பதிப்பகம்