இன்னீர் மன்றல் – நன்னீரை கொண்டாடும் பெருவிழா

IMG-20150810-WA0012IMG-20150810-WA0013

உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்

வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே!

உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்; அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள் இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர்; நெல் முதலாயவற்றை வித்தி மழையைப் பார்த்திருக்கும் புல்லிய நிலம் (புன்செய்) இடமகன்ற நிலத்தை உடைத்தாயினும் அது பொருந்தியாளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது; ஆதலால், கொல்லும் போரையுடைய செழிய! இதனைக் கடைப்பிடித்து விரைந்து நிலங் குழிந்தவிடத்தே நீர்நிலை மிகும் பரிசு தளைத்தோர், தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலாகிய மூன்றினையும் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத்தோராவார்; அந்நீரைத் தளையாதவர், இவ்வுலகத்துத் தம் பெயரைத் தளையாதோர்

– குடபுலவியனார் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனை பாடியது (புறநானூறு: பொதுவியல்; முதுமொழிக் காஞ்சி)

IMG-20150810-WA0007IMG-20150810-WA0011

நீர்நிலை அறிதல் அரிதாகி வரும் காலத்தே, நீர் மேலாண்மை குறித்த நமது அறிவை பெருக்கும் ஒரு முயற்சியாய் பசுமை நடையின் 50வது நடையை நீர் குறித்த ஒரு பெருவிழாவாய் கொண்டாட முடிவு செய்தோம். இதற்கு முன்பான 25வது நடையை விருட்சத் திருவிழாவாகவும் 40வது நடையை பாறைத் திருவிழாவாகவும் சிறப்பாக கொண்டாடிய பசுமை நடை, இந்த முறை சமூகத்தின் தேவையை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் உதவும் வண்ணம் நீரை உயர்த்திப் பிடித்துள்ளது.

1996ல் கடைசியாய் பெருகி ஓடிய நீரில் துண்டு போட்டு மீன் பிடித்த போது தான் வெள்ளம் வீட்டின் முன் சென்றதை நான் கண்டது. இருபதாண்டுகள் நிறைந்து போன இந்நேரத்தில் வீட்டில் ஆழ்துளை குழாயில் தண்ணீர் வற்றிப் போக காசு கொடுத்து தண்ணீர் வாங்கிய அவலத்தையும் நான் சந்திக்க நேர்ந்தது. மதுரை அண்ணா நகரில் குடியிருந்த காலத்தில் யானைக்குழாயை மூழ்கடித்து சென்ற மழை நீர் வண்டியூர் கண்மாய் உடைந்ததால் வந்தது என்பதறியாமல் மீன் பிடிக்க சென்ற கணத்தில், வீட்டின் உள்ளே நீர் வெள்ளமாய் வந்து அடித்துப் போனதில் வளர்த்து வந்த மீன்களை பறிகொடுத்தேன்.

இப்படி வாழ்ந்த நாம் இன்று அடுத்த வேளை தண்ணீருக்கு அல்லாட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? இந்த உலகத்தில் நீரைக்காக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நீர்நிலைகளை ஏன் பேண வேண்டும்? மழைநீர் சேகரிப்பு எதற்காக என்று பல கேள்விகள் நமக்கு இருக்கிறது.

IMG-20150810-WA0008IMG-20150810-WA0010

ஆகஸ்டு திங்கள் 16ஆம் நாள் மதுரை சமணமலை அடிவாரத்தில் கூடுகிறோம் இதை பற்றி பேச. நீர் காக்க நீங்கள் கலந்து கொள்ளலாம். நீர் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்க பசுமை நடையின் ஒரு சிறு முயற்சி இது. காலை உணவும் மதிய உணவும் பெருமரத்தடியில் பரிமாறப்படும். செவிக்குணவும் தீராது கிடைக்கும்..

குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9789730105.