மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாற்று நடையை தொடர்ந்து நடத்தி வரும் அமைப்பான பசுமை நடை சென்ற வருடம் ஆகஸ்டு மாதத்தில் விருட்சத்திருவிழா கொண்டாடியது. இந்த முறை அது போலவே வரலாற்றை நமக்கு கொண்டு சேர்த்த ஏதேனும் ஒரு ஊடகத்தை சிறப்பிக்க விழா எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. கல்வெட்டுகளும் சிற்பங்களும் பாறை ஓவியங்களும் கல் கருவிகளும் சொல்லாத வரலாறு எதுவுமில்லை இந்த பூவுலகில். அந்த பாறைகளையே சிறப்பிக்க முடிவு செய்து பாறைத் திருவிழாவாக கொண்டாடலாம் என்று முடிவு செய்தோம்.
செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி கீழக்குயில்குடியில் பாறைத்திருவிழா கொண்டாடலாம் என்று முடிவு செய்த நிமிடத்தில் இருந்து வேலைகள் தொடங்கின. திருவிழா நடத்த, நிதி திரட்ட, மதுர வரலாறு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, புத்தகத்தில் வெளியிட விளம்பரங்கள் பெற என்று அலைபேசியிலும் அலைச்சலிலும் கழிந்தன பொழுதுகள்.
திருவிழா நாளும் நெருங்கியது. ஒரு அரசியல் தலைவரை சிறை வைத்ததன் பொருட்டு நடந்த கலவரங்கள் ஊடே எங்கள் வேலைகளும் தொடர்ந்தன. நாடும் சதி செய்தது. பெட்ரோல் பங்குகளும் கடைகளும் மூடிக்கிடந்தன. எங்கும் எதிலும் கலவர பேரொலி. ஆயினும் குயில்குடி பெருமரத்தடியில் கூடிய வரலாற்றை நேசிக்கும் இளைஞர் பட்டாளம் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் வேலைகளில் மூழ்கினார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் கைகோர்த்து செய்த வேலை கண்டு கண்கள் குளிர்ந்தது சமணமலை.
அடுத்த நாள் காலை நிகழ்வு தொடங்க வேண்டிய நேரமான ஆறில் ஆர்ப்பரித்து பொழிந்தது புதுமழை. மழை வேண்டும் வேண்டும் என்று எத்தனையோ நாட்கள் தவமிருந்த போது பெய்யாத பெருமழை பாறைகளை கொண்டாடும் நாளிலா பெய்ய வேண்டும் என்று சற்றும் சலிக்காமல் வேலை செய்தார்கள் நம் மக்கள். பல்லாயிரம் ஆண்டுகளாய் பரஸ்பரம் நட்பு பாராட்டும் இரு பெரும் இயற்கை கூறுகள் அன்றும் நட்பை பாராட்டின.. ஆமாம்.. நண்பன் பாறைக்கு எடுக்கப்படும் பெருவிழாவிற்கு வராமல் மழைக்கென்ன பெரிய நாடாளும் வேலை?
பொழிந்த மழைதனிலே நனைந்தபடி ஆரம்பமானது விழா. மரத்தடி சமையல் ஒரு புறம் நடக்க, செட்டிப்புடவு நோக்கி மக்கள் கூட்டம் மறுபுறம் நடக்க இனிதே ஆரம்பமானது பாறைத்திருவிழா. செட்டிப்புடவு சென்று அங்கிருந்த சமண சிற்பங்களையும் கல்வெட்டையும் கண்டு விட்டு அய்யா சாந்தலிங்கம் விவரித்த வரலாற்றையும் கேட்டுக் கொண்டு திரும்ப எத்தனித்த போது மழை சற்று விடுபட்டது.
மலை நனைத்த மழை மறுபடி வருமோ என்று எண்ணிக்கொண்டே மரத்தடி வந்து சேர தயாராகி இருந்தது காலை உணவு. அக்கரை அடிசிலும் வெண்பொங்கலும் சூடான சாம்பார் சட்னியோடு மழை கலந்த காலை உணவு அற்புதம். தட்டில் வாங்கிக்கொண்டு மலையோடு ஒட்டிய தாமரைக் குளக்கரையில் அமர்ந்து உண்ணும் வரம் உங்களில் எத்தனை பேருக்கு கிடைக்கும்?
அனைவரும் உணவருந்தி முடிக்க மழை மேலும் வலுத்தது. உடனடி ஏற்பாடாய் மேலும் இரண்டு அரபுக்கொட்டாய்களும் அதனடியில் நாற்காலிகளும் போடப்பட்டன. அனைவரும் வந்தமற ஆரம்பமானது சிறப்பு பேச்சாளர்களின் கருத்துரைகள். அனைவரையும் வரவேற்ற முத்துகிருஷ்ணன் பசுமை நடை பற்றிய செய்திகளையும் இதன் பின்னால் இருந்த இளைஞர் பட்டாளத்தின் உழைப்பையும் அனைவரும் அறியுமாறு சொன்னார்.
அடுத்ததாக பேசிய கீழக்குயில்குடி ஊர்த்தலைவர் தங்கராசு – இதுகாறும் செட்டியார் சிலை என்று நாங்கள் நினைத்திருந்தது சமணர் கற்சிற்பம் என்பது உங்களால் தான் எங்களுக்கே தெரிந்தது. பசுமை நடையின் அனைத்து செயல்பாடுகளிலும் கீழக்குயில்குடி மக்கள் பெரும்பங்கு ஆற்றுவார்கள் என்று உறுதியளித்தார்.
அடுத்து பேசிய சாந்தலிங்கம் அய்யா மலைகளையும் பாறைகளையும் கல்வெட்டுகளையும் ஒவியங்களையும் அவை கூறும் வரலாறுகளையும் பற்றி பேருரை ஒன்றை வழங்கினார். பின்னர் பேசிய அய்யா தியடோர் பாஸ்கரன் இதுவரை செய்தவற்றை பற்றியும் இன்னும் செய்ய வேண்டிய பல வேலைகளை பற்றியும் சிறப்புரை ஆற்றினார். நடுகற்கள் மூலம் பெறப்படும் வரலாற்றையும் கல்வெட்டுகள் தவிர்த்த பிற சான்றுகள் மூலம் பெறப்படும் வரலாற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது அவரது உரையின் சாராம்சம்.
இதற்கிடையே மதுர வரலாறு நூலின் ஆங்கில வடிவமான “History of Madura: A Voyage into Jaina Antiquity” என்ற நூலை நிலவியல் அறிஞர் கிறிஸ்டோபர் ஜெயகரன் வெளியிட அதை பொறியாளர் பாண்டியன் பெற்றுக்கொண்டார்.
சூடான தேனீரும் சமோசாக்களும் வழங்கப்பட்டன. செவிக்கு உணவு, அறிவுக்கு உணவு, மற்றும் வயிற்றுக்கு உணவு என எல்லா தேவைகளும் நிறைவான உணர்வு வந்திருந்த நண்பர்களுக்கு.
மறுபுறம் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. மழையில் நனைந்த தாமரை மொட்டுக்கள் போல அவர்கள் ஆனந்தமாய் விளையாடினார்கள்.
நிகழ்வு முடியும் தருவாயில் சூரியன் வெளியே வந்து நண்பன் பாறைக்கு ஒளி தர பாறையும் அதன் பங்குக்கு மழையில் நனைந்த மக்களின் உடைகளை உலர்த்தியது. அறுசுவை மதிய உணவு உண்ட பிறகு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சான்றிதழில் கையொப்பமிட அமர்ந்தார்கள் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும்.
கையொப்பமிட்ட சான்றிதழ்கள் குழந்தைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு குழந்தைகள் எவ்வாறு உணர்ந்தார்கள் என்ற கருத்தும் கேட்கப்பட்டது. அனைத்து குழந்தைகளையும் கருத்து சொல்ல வாய்ப்பளித்த பிறகு அவர்களுக்கு ஒரு சிறு அன்பளிப்பு (தமிழர் விளையாட்டு பொருள்களான கோலிக்குண்டு, பம்பரம் போன்றவை) வழங்கப்பட்டது.
மழை நின்று போக, மலை நிலைத்து நிற்க, நின்ற மலைக்கு சிறப்பு செய்த உணர்வோடு அனைவரும் கலைந்தோம்.
பி.கு: நிகழ்வு நடத்த உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பணமாய், பொருளாய், வார்த்தையாய் உதவிய அனைவருக்கும், வந்து கலந்து கொண்ட அனைவருக்கும், இன்னும் பதிவு ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பியும் என்னை எழுதச் செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. வர வேண்டும் என்று நினைத்தும் வர முடியாமல் போன அனைவருக்கும் தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாய் இருக்கும் என்றே கருதுகிறேன்.
பந்த்-தை பந்தாடிய பசுமை நடை நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
அன்புடன்,
மதுரக்காரன் மற்றும் வரலாறு கூறும் பாறைகள்!
புகைப்பட உதவி – அருண் பாஸ், எப் ஜெய், மற்றும் ஆனந்த்.
- Acchanandhi
- Archaeological Society of India
- ASI
- அச்சனந்தி
- அமணமலை
- கல்வெட்டு
- கீழக்குயில்குடி
- சமண சிற்பங்கள்
- சமணமலை
- தீர்த்தங்கரர்
- தொல்லியல்
- பசுமை நடை
- பாறை ஓவியங்கள்
- பாறைத் திருவிழா
- பாறைத்திருவிழா
- மதுர வரலாறு
- மதுரை வரலாறு
- மதுரையில் சமணம்
- Green walk
- Green walk Madurai
- Heritage tour Madurai
- History of Madurai
- Inscription
- Inscriptions in Madurai
- Jain Sculptures
- Jain sites around Madurai
- Jainism
- Jainism in Madurai
- Jains in Madurai
- Keelakuyilkudi
- Keezhakuyilkudi
- Madurai events
- Madurai history
- Rock art in india
- Rock art in Tamilnadu
- Rock festival Green Walk
- Rock festival Madurai
- Samanamalai
- Teertankara
அற்புதமான பதிவு
மலைபடுகடாம்! – பாறைத் திருவிழா நினைவுகள்! = மதுரக்காரன் = அடுத்த நாள் காலை நிகழ்வு தொடங்க வேண்டிய நேரமான ஆறில் ஆர்ப்பரித்து பொழிந்தது புதுமழை. மழை வேண்டும் வேண்டும் என்று எத்தனையோ நாட்கள் தவமிருந்த போது பெய்யாத பெருமழை பாறைகளை கொண்டாடும் நாளிலா பெய்ய வேண்டும் என்று சற்றும் சலிக்காமல் வேலை செய்தார்கள் நம் மக்கள். பல்லாயிரம் ஆண்டுகளாய் பரஸ்பரம் நட்பு பாராட்டும் இரு பெரும் இயற்கை கூறுகள் அன்றும் நட்பை பாராட்டின.. ஆமாம்.. நண்பன் பாறைக்கு எடுக்கப்படும் பெருவிழாவிற்கு வராமல் மழைக்கென்ன பெரிய நாடாளும் வேலை? = ஆஹா. அழகு தமிழ் = எங்கள் அருமை Rajanna Venkatraman எழுதிய பதிவு, மகிழ்ச்சியுடன் எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
வாழ்த்துகள் = எங்கள் அருமை Rajanna Venkatraman
Hope I can join green walk soon. Interesting one. 🙂