கற்றல் இனிது! கற்பித்தல் அதனினும் இனிது!

ஸ்கேல் எடுத்த அடி வெளுத்த ஆசிரியர்களும் அன்பாக அறிவுரைத்த ஆசிரியர்களும் தாண்டி இன்று ஒரு பல் மருத்துவராய் உங்கள் முன் நிற்க, இரு தரப்புமே முக்கிய காரணங்கள்.கற்க வேண்டியவற்றை கற்பித்து மறக்க வேண்டியவற்றை மறக்க வைத்து என்னை மெருகேற்றியததில் ஆசிரியர்களின் பங்கு அலாதியானது.

பால்ய வகுப்புகளில் எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் முகம் எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. ஆனால் கற்றுக்கொடுத்த பாடங்கள் மட்டும் நினைவில். நான் வளர வளர ஆசிரியர்கள் முகங்களும் ஆழப் பதிந்து போயின மனதில். பள்ளி வகுப்புகளிலும் கல்லூரியிலும் அதன் பிறகான மருத்துவ பயிற்சியிலும் எண்ணற்ற ஆசிரியர்களோடு படித்துள்ளேன். இங்கு குறிக்கப்பட வேண்டியது நான் ஆசிரியர்களின் கீழ் படித்ததில்லை. அவர்களோடு தான் படித்திருக்கிறேன். அல்லது அவ்வாறு நினைத்தே அனைத்து வகுப்புகளையும் தாண்டி வந்துள்ளேன்.

பள்ளிக் காலங்களில் எனக்கு ஆங்கிலம் வராது. இருந்தாலும் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்டு, வகுப்பெடுத்து, ஓரளவு ஆங்கிலம் பேச வைத்து மேலே படிக்க எந்த ஊருக்கு சென்றாலும் பிழைப்பை ஓட்ட முடியும் என்று நம்பிக்கை வர வைத்தது ரவி ஆனந்தன் சாரும் பாலு சாரும். What is your name? என்று கேட்டால் my name is Rajanna என்று அப்பாவி போல் சொல்லித் திரிந்தவன் நான். கல்லூரி முதல் நாள், ஒரு சீனியர் கேட்ட கேள்விக்கு இப்படி பதில் சொல்ல கல்லூரிப் பேருந்தே ‘கொல்’லென சிரித்தது. சட்டைப்பையை pocket என்று சொல்வதறியாமல் ‘சோப்’ என்று சொல்லித் திரிந்தவனாய் இருந்திருக்கிறேன். அதை திருத்தி மொழிப்புலமையை மாற்றி வைத்தவர்கள் எல்லாருமே எனக்கு ஆசிரியர்கள் தான்.

ஒன்பதாம் வகுப்பில் மார்க் அதிகம் பெற வேண்டி தமிழை விட்டுவிட்டு பிரெஞ்சு வகுப்பில் சென்று அமர்ந்தவன் நான். ஒரு வருட பிரஞ்சு படிப்புக்கு பின் "என்ன கருமம் இது! என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்’ என்று உணர்ந்து பள்ளியில் அனுமதி பெற்று மறுபடி தமிழ் வகுப்புள் சென்றவனை வாரியணைத்து தமிழ் கற்றுவித்தார் கேகேடி. இன்றைக்கு ஓரளவு பிழையின்றி பேசவும் எழுதவும் முடிகிறதென்றால் அதற்கு அவரே முழுமுதல் காரணம்.
கணக்கென்றால் அலர்ஜி எனக்கு. என்னை கணக்கில் 180க்கு மேல் எடுக்க வைத்ததே ஒரு சாதனைதான். அந்த வகையில் கணக்கு சொல்லிக்கொடுத்த சரோஜா டீச்சர், புதுமலர்செல்வி டீச்சர், ஹரிஹரன் சார் எல்லாரும் தெய்வங்கள் எனக்கு.

வேதியியல் சொல்லிக்கொடுத்த நித்யா மேடம், அகிலாண்டம் டீச்சர், சேதுராமன் சார் போன்றோர் எல்லாம் தற்போது எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது எனக்கு. ஆனால் கெமிஸ்ட்ரி லேபில் இருந்து களவாண்டு வந்த சால்ட்டுகளையும் கழிப்பறை கழுவும் ஆசிட்டையும் வைத்து நான் செய்த வேதியியல் பரிசோதனைகளுக்கு தங்கை மட்டுமே சாட்சி.

பாட்டனி சொல்லிக் கொடுத்த ரமேஷ் சார் தற்போதும் நல்ல நண்பர் எனக்கு. தொடர் தொடர்பில் இல்லாவிட்டாலும் பிற நண்பர்கள் மூலம் என் வளர்ச்சியை உறுதி செய்து கொண்டே தான் இருக்கிறார். விலங்கியல் கற்பித்த சூர்யா மிஸ்சையும் நினைவு கூற வேண்டும் இந்நேரம்.

இயற்பியல் – என் அம்மாவின் சப்ஜெக்ட். 36 ஆண்டுகாலமாய் இயற்பியல் போதித்து வரும் அம்மா இந்த வருடம் பணி ஓய்வு பெறுகிறார்கள். ஒரு வருடம் படிக்கவே முட்டி மோதி தாண்டி வந்த எனக்கு இத்தனை வருடங்கள் எப்படி அம்மாவால் அதை படித்து பிறருக்கு சொல்லித்தர முடிகிறது என்பது பெரிய ஆச்சர்யம். ஆனாலும் அம்மாவிடம் நான் இயற்பியல் படித்ததில்லை. எனக்கு இயற்பியல் சொல்லித்தந்த நாகராஜன் சார், ராமானுஜம் சார், பாலு சார் போன்றோர் இன்னும் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சி.

நான் பள்ளி படித்த காலங்களில் அங்கு முதல்வராய் இருந்த நந்தகுமார் சாருக்கும் என் நன்றிகள் பல. ஒருவேளை நீங்கள் பள்ளியிலே இருந்து பிரெஞ்சு பாடத்தை தொடர்ந்து நடத்தியிருந்தால் நான் அதிலேயே தொடர்ந்திருக்க வாய்ப்பிருந்தது. Merci!

பள்ளி தாண்டி கல்லூரி வந்தால், அங்கு எண்ணற்ற ஆசிரியர்களிடம் கற்றேன். அத்தனை பேரையும் இங்கு இணைத்து வாழ்த்த ஆசைதான். ஆனால் இந்த தகவல் மிகப்பெரியதாகி வாசிப்போரையும் விரட்டி விடும் என்ற காரணத்தினால் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து முடித்து விடுகிறேன்.

அது போக, இன்று இத்தனை புத்தகங்கள் படிக்கிறேன் என்றால் அதற்கு காரணம் எதுவும் இல்லாமல் இல்லை. அதிலிருந்தும் நிறைய கற்றுக் கொள்கிறேன். அந்தவகையில் நான் படித்த, படித்துக் கொண்டிருக்கும், படிக்கப் போகும் புத்தகங்களை எழுதிய அனைவரும் என் ஆசான்கள் தான். நன்றிகள் பல.