புரோட்டா loves சால்னா!

அவன் பெயர் புரோட்டா. இத்தாலியில் பிறந்தவன். இந்தியா என்று ஒரு நாடு இருந்ததே அவனுக்கு தெரியாது. டெல்லியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாலும் அவனுக்கு இந்தியாவின் இருப்பு தெரியாததாய் இருந்தது.

புரோட்டாவின் காதலியின் பெயர் சால்னா. அவள் பெல்ஜியம் அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். சால்னாவிற்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அதிகம் தேநீர் குடிப்பாள். பிறப்பிலிருந்தே வோட்கா மட்டுமே குடித்து பழகி இருந்த புரோட்டாவிற்கு அது சுத்தமாய் பிடிப்பதில்லை. ஆயினும் சால்னா இன்றி தன் வாழ்வில் சுவையில்லை என்று தெரிந்திருந்ததால் அவன் அதை பெரிதாய் கருதவில்லை.

புரோட்டாவும் சால்னாவும் சந்தித்தது டெல்லியில் படித்த போது. அவளுக்கு இந்தியாவின் இருப்பு தெரிந்திருந்தது. அவனிடம் அவள் முதல்முறை சொன்னபோது இவன் சிரித்த எள்ளல் சிரிப்பில் அவள் நம்பிக்கை இழந்தாள். டெல்லியில் அவர்கள் ஒன்றாய் படித்தார்கள். அவள் பாடம் படித்தாள். அவன் அவளைப் படித்தான்.

ஐந்தாம் வகுப்பு முடிந்த போது அவன் மருத்துவராகி விட்டிருந்தான். அவளோ ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்தாள். மருத்துவர் புரோட்டாவின் வீட்டில் ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த சால்னாவை ஏற்றுக்கொள்ள பெரும் தயக்கம் இருந்தது. சால்னாவின் சாதி வேறு குறுக்கே நின்றது.

அவர்கள் அவனுக்கு அவர்களின் சாதியில் ஒரு பெண் பார்த்தார்கள். அவள் பெயர் சேர்வா. ரஷியாவை சேர்ந்தவள். உலகின் புகழ் பெற்ற மருத்துவ பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் ராஸ்புடின் கல்லூரியில் நர்சாய் வேலை பார்த்தவள். நர்ஸ் வேலை பார்க்கும் போதே மருத்துவர்கள் செய்யும் சிகிச்சை முறைகளை கற்று தேர்ந்து அவர்களை முந்தி மிகச்சிறந்த மருத்துவ மாணவியாய் அந்த கல்லூரியில் இருந்து தேர்ந்து வந்தவள். பேரழகி.

புரோட்டாவிற்கு அவளை பார்த்து ஒரு சின்ன சபலம் ஏற்பட்டாலும் அவனுக்கு சால்னாவின் மீதான காதல் போகாத காரணத்தினால் அவளையே திருமணம் செய்ய ஆசைப்பட்டான். இருப்பினும் வீட்டில் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் புரோட்டாவும் சால்னாவும் ஊரை விட்டு ஓடிப் போக தலைப்பட்டார்கள். வெறியோடு அவர்கள் ஓடியே பஞ்சாப் வழியாக விருதுநகர் வந்து சேர்ந்தார்கள்.

அங்கு அவர்கள் சிறப்பாய் குடும்பம் நடத்தி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ ஊரே அவர்களை பார்த்து ஆச்சர்யப்பட்டது. பிள்ளைகள் பெரியவர்கள் ஆன பிறகு பொழுது சற்றும் போகாதிருக்கவே புரோட்டா ஒரு புதிய வகை உணவு தயாரிப்பில் ஈடுபட்டான். மைதா மாவை வைத்து அவன் செய்த உணவுக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் கிடந்த போது விருதுநகர் வாழ் பெருமக்கள் அவன் பெயர் சொல்லியே அழைக்கலாயினர். வெறும் புரோட்டாவை எப்படி தின்பது? அவன் மனைவியான சால்னா ஒரு குழம்பு தயாரித்தாள். அதையும் அவள் பெயர் சொல்லியே அழைத்தனர்.

இதற்கிடையே புரோட்டாவின் மேல் தீராக்காதல் கொண்ட சேர்வா சென்னை வந்து சேர்ந்தாள். இதற்குள் விருதுநகரில் மட்டுமே பிரபலமாக இருந்த புரோட்டா சென்னை வரை வந்து விட்டிருந்தது. சால்னா என்ற பெயரைக் கண்டு எரிச்சலுற்ற அவள் அங்கு ஒரு குழம்பு தயாரித்தாள். அதற்கு அவள் பெயரையே வைத்தாள். நீண்ட காலம் புரோட்டாவின் மேல் காதல் கொண்டு திரிந்தவள் அப்படியே இறந்து போனாள்.

இப்படித்தான் கடைகளில் புரோட்டாவிற்கு மதுரைப் பக்கம் சால்னாவும் வட தமிழகத்தில் சேர்வாவும் வழங்கப்பட்டன. இன்றும் விருதுநகர் செல்லும் வழியில் புரோட்டாவின் கல்லறையைக் காணலாம். சேர்வா எம்மதத்தையும் சேராத காரணத்தினால் அவளுக்கு கல்லறை இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. சால்னா மட்டும் மதுரையில் உயிருடன் வாழ்கிறாள். அவளுக்கு முட்டகறி, கறிதோசை என்று இரண்டு பிள்ளைகள். இருவரையும் ஆறுமுகம் கடையில் பார்க்கலாம்.

சிலர் சொல்வது போல புரோட்டா சால்னாவிற்கு தெரியாமல் சென்னை வந்து சேர்வாவுடன் குடும்பம் நடத்தினான் என்பது சற்றும் உண்மையில்லை.

திட்டாதீர்கள். இது ஒரு காவிய காதல் கதை.