பசுமை நடை பற்றிய பதிவு தானே என்று வாசிக்காமல் செல்ல வேண்டாம். பசுமை நடை மூலம் நாம் அறியும் வரலாறும் பாறைகளில் வடிக்கப்பட்ட கதைகளும் மீண்டும் மீண்டும் நம்மை நம் முன்னோர்களிடம் இட்டுச் செல்கின்றன. சென்ற முறை பசுமை நடைக்கு திருவாதவூர் சென்றோம். இந்த முறை முடிவு செய்த இடம் கொங்கர் புளியங்குளம்.
மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைகழகத்தை தாண்டியவுடன் வருவது புளியங்குளம் என்னும் ஊர். முன்தினம் பெய்த பெருமழையால் உறக்கம் அழுத்திவிட சற்று மெல்லவே எழுந்து கிளம்பினேன். என் வீட்டில் இருந்து பல்கலைக்கழகத்தின் தூரத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்பது வண்டி ஓட்டிச் சென்ற போது தெரிந்தது.
ஒரு வழியாய் பல்கலைக்கழகத்தின் எதிரே காத்திருந்த நண்பர்களை கண்ட பிறகுதான் கொஞ்சம் மனம் ஆறுதல் அடைந்தது. நான் சென்ற நேரத்தில் கந்தவேல் சாப்பாடு பொட்டலங்களுடன் வர, எங்கள் பசுமை நடை இனிதே ஆரம்பமானது.
பல்கலைக்கழகத்தில் இருந்து தேனி செல்லும் பாதையில் மேலும் இரண்டு கிலோமீட்டர்கள் சென்றால் புளியங்குளத்தை அடையலாம். ஊருக்கு முன்னே வலப்புறம் பார்த்தால் மலை தெரியும். பிரதான சாலையில் தொல்லியல் துறை வைத்திருக்கும் பெயர்ப்பலகைகள் உங்களுக்கு வழிகாட்டும். அந்த சாலையில் வலப்புறம் திரும்பி கொஞ்சம் தூரமே செல்ல வேண்டும்.
அந்த சாலையின் இடப்புறம் மரங்கள் சூழ்ந்த ஊற்று நீர் பெருகும் இடத்தில் மாயன் கோவில் உள்ளது. இந்த மாயன் கோவில் அருகே உங்கள் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம். மாயன் கோவிலில் இருந்து மேற்கு நோக்கி நடந்து சென்றால் தொல்லியல் துறையால் வைக்கப்பட்ட சிதைக்கப்பட்ட அறிவிப்பு பலகைகள் உங்களை வரவேற்கும். வாசிக்க வேண்டுமானால் உடைந்து கிடக்கும் பலகைகளை எடுத்து அடுக்கியே வாசிக்க வேண்டியிருக்கும்.
சமணப்படுக்கைக்கு செல்ல இரும்பினால் ஆன ஏணி வைத்திருக்கிறார்கள். மேலேறி சென்றால் அங்கு கிட்டத்தட்ட 50 பேர் தங்குவதற்கு ஏற்றாற்போல் படுகைகள் வெட்டப்பட்டு உள்ளன. சற்று மேலேறி சென்றால் அங்கு மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
கொங்கர் புளியங்குளத்தில் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். இந்த படுகைகளை செய்வித்தவர் யார், செய்தவர் யார் என்பது குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன.
கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகளை அய்யா சொ.சாந்தலிங்கம் அவர்கள் விளக்கிக் கூறினார்.
முதல் கல்வெட்டில்… “குற கொடு பிதவன் உபச அன் உபறுவ” என்பது “உபசஅன் உபறுவன்” என்பவர் இதை செய்து கொடுத்திருப்பதை குறிக்கிறது!
இரண்டாம் கல்வெட்டில்… “குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்” என்பது குகையை குடைவதற்கு பொன் கொடுத்தவன் “சேரஅதன்” என்பவன் என்பதை குறிக்கிறது!
மூன்றாம் கல்வெட்டில்… “பாகன் ஊர் பேராதன் பிடன் ஈத்தவே பொன்” என்பது பாகனூரைச் சேர்ந்த “பேராதன் பிடன்” என்பவரால் இக்கொடை தரப்பட்டதாக சொல்கிறது.
கல்வெட்டுக்களை படித்து முடித்த பிறகு பசுமை நடை உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது மனதை மகிழ்வித்தது. கண்ணாடி போத்தல்கள், சீட்டுக்கட்டுகள், நெகிழித்தட்டுகள், நெகிழிப்போத்தல்கள் என்று அந்த வரலாற்று மகத்துவமுடைய இடத்தை ஒரு குப்பைத்தொட்டியாய் ஆக்கி வைத்திருக்கிறார்கள் நம் மக்கள். மேலும் எங்கெங்கு காணினும் தங்களது பெயரை பூசியும் சமணப் படுகைகளில் தங்கள் கேவலமான பொற்பெயரைச் செதுக்கியும் அவர்களது வரலாற்று அறிவின் வீச்சை பதிந்துள்ளார்கள்.
குப்பைகளை மட்டுமே களைய முடிந்தது பசுமை நடை குழுவினர் பிறகு மலை மேல் ஏறினோம். பசுமை போர்த்திய நார்த்தம்புற்களில் இருந்து எழும்பிய எலுமிச்சை வாசம் மூக்கைத்துளைத்தது. சிலர் அவற்றை வீட்டில் சென்று தேநீர் போட்டு அருந்த பறித்துக் கொண்டார்கள்.
மேலே ஏறும் வழியில் ஒரு மகாவீரர் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம். இது கிபி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததது. மேலும் இந்த புடைப்புச் சிற்பத்துக்கு கீழே வட்டெழுத்துக்களில் இதைச் செய்வித்த அச்சநந்தியின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
மலையுச்சியில் ஒரு பெருமாள் கோவிலும் பெயர் அறியா கிராம தெய்வக்கோவிலும் உள்ளன. மேலே இருந்து பார்க்கையில் மதுரை மிகவும் அழகாக இருந்தது. சுமார் 2000 வருடங்களுக்கு முன் எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே இயலவில்லை.
மேலே சிறிது நேரம் அமர்ந்து கதை பேசிக்கொண்டு இருந்தோம். சிலர் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாய் இருந்தார்கள். மேலும் சிலர் நாகமலையை ரசித்துக்கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து அனைவரும் கீழிறங்கி வந்தோம். வரும் வழியில் மகாவீரர் சிற்பம் அருகில் மலை மேல் இருந்து ஒரு சிறு ஊற்றில் நீர் வந்து கொண்டிருந்தது. சுவைத்துப் பார்த்தோம். சுனைநீரின் புளிப்புச் சுவை. போத்தல்களில் கொஞ்சம் நீரை அடைத்துக்கொண்டு மாயன் கோவில் வந்து சேர்ந்தோம்.
மாயன் கோவிலில் வைத்து அனைவரும் உணவு உண்டனர். பொதுவாக பசுமை நடையில் காலை உணவு இட்லியாய் இருக்கும். இந்த முறையும் அனைவருக்கும் இட்லி இருந்தாலும் இயற்கை உணவை முயற்சி செய்து பார்க்கலாமே என்று ஒரு சிறு முயற்சி செய்திருந்தனர். சிலருக்கு மட்டும் கருப்பட்டி தோசை, அவல் மிக்சர் போன்ற இயற்கை உணவை பரிமாறினார்கள். அனைவருக்கும் அதைக் கொடுக்கும் போது பிடிக்குமோ என்னவோ என்பதால் தான் இந்த ஒரு சிறு சோதனை. உண்ட அனைவருக்கும் அது பிடித்திருந்ததால், இனிமேல் பசுமை நடையில் இயற்கை உணவு ஒரு பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
பசுமைநடை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், அறிஞர் சொ.சாந்தலிங்கம் அய்யா, வலைப்பதிவர்கள் சித்திரவீதிக்காரன், உதயகுமார் பாலகிருஷ்ணன், விஷ்ணு குமார், மற்றும் பலரை சந்தித்ததின் மகிழ்ச்சி.
அடுத்த பசுமை நடையில் சந்திக்கலாம்.
மேலும் படிக்க:
பசுமை நடை 27 – கொங்கர் புளியங்குளம். = மதுரக்காரன் பதிவு. பசுமை நடையை அருமைப் படங்களுடன் பகிர்ந்திருக்கிறார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் படித்துப் பார்த்து பசுமை நடையில் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு வேண்டுகோள், கூழாங்கற்கள் நிகழ்ச்சியும் பசுமை நடையும் ஒரே நாளில் வருகின்றன. அதை இரண்டு அணியினரும் பேசி வெவ்வேறு நாளில் வருமாறு ஏற்பாடு செய்யலாம்.
வாழ்த்துகள் திரு ராஜண்ணா.
நன்றி அப்பா.. கலந்து பேசி ஏற்பாடு செய்து விடலாம். 🙂
பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது… தங்களின் பயணம் சிறப்பாக மேலும் தொடரட்டும்… நன்றி… வாழ்த்துக்கள்…
பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன் சார். 🙂
அழகான எழுத்து நடை எங்களை பசுமைநடைக்கு கைபிடித்து அழைத்துசெல்கின்றது. புகைப்படங்கள் அருமை,
பின்னூட்டத்திற்கு நன்றி வேல்முருகன் சார். தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 🙂
good update
Thank you! 🙂
படங்களும் விளக்கங்களும்
மிக மிக அருமை
பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்
பின்னூட்டத்திற்கு நன்றி. தங்களுக்கும் என் வாழ்த்துக்கள். 🙂
எண்ணமும் எழுத்தும் சிறப்பாய் இருக்கிறது.
மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும். 🙂
சிறப்பான ஒரு பசுமை நடையை முடித்துவிட்டு வந்து சிறப்பான படங்களுடன் எங்களுடன் பகிர்ந்திருக்கிறீர்கள், ராஜண்ணா!
புகைப்படங்கள் வெகு தெளிவு.
ஆமாம், கல்வெட்டுக்களை பதிவில் போட்டிருக்கிறீர்களே, எப்படி (புகைப்படங்கள் அல்லாமல்)
முதல், இரண்டாம், மூன்றாம் கல்வெட்டு என்று. அவைகளை எப்படிப் படிப்பது? இவைகளைப் பற்றியும் எழுதுங்களேன், நேரம் கிடைக்கும்போது, ப்ளீஸ்!
பாராட்டுக்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்!
நன்றி அம்மா. வரிசை பிரகாரம் அவை எழுதப்பட்டுள்ளன கற்களில். அதே முறையை நானும் தொடர்ந்தேன். கல்வெட்டுக்களில் வரும் பிராமி எழுத்தை தட்டச்சு செய்யக் கற்றுக் கொண்டு இருக்கிறேன். முழுவதும் படித்த பிறகு இதைப் பற்றிய பதிவுகள் போட வேண்டும் என்பது எனது ஆசை. 🙂
பண்டைய தமிழர்கள், சமணம், மதுரை இம் மூன்றையும் கண் முன்னே கொண்டு வந்து, மதுரையின் அழகையும், மலைகளின் இயற்கையையும் தொட்டுச் சென்ற தங்கள் பதிவுக்கும், பசுமை நடை குழுவிற்கும் மிக்க நன்றிகள். அத்தோடு இயற்கை வரலாற்றுத் தலங்களை பாதுகாக்க போற்ற நம் அரசும் மக்களும் அக்கறை கொள்ளாமல் போனதும், நெகிழிப் போத்தல்களையும், சீரழிவுகளையும் சந்தித்து வரும் இரண்டாயிரம் ஆண்டு கால பகுதியை எண்ணிய போது வருத்தமடைந்தேன். மேற்கில் சில நூறாண்டு பழமைகளைப் போற்றிக் காக்கின்றனர், நாமோ நம் வரலாற்றுச் செல்வத்தை அழிய விட்டுக் கிடக்கின்றோமே. பசுமை நடை குறித்த பதிவுகளை ஆங்கிலத்திலும் எழுத முயலவும் வேண்டும், இது உலகளாவிய ரீதியில் அறியப்படல் வேண்டும். நன்றிகள்!
மிக்க நன்றி நண்பரே. ஆங்கில பதிவுகள் எழுதும் எண்ணம் இருக்கிறது. நேரம் மின்சாரத்தை விட தட்டுப்பாடாய் இருக்கிறது. முயற்சி செய்கிறேன்.
கல்வெட்டியல் வகுப்பிற்குச் செல்வதோடு நில்லாமல் தமிழ் பிராமி எழுத்துருக்கான மென்பொருளைத் தேடியெடுத்து அதைப் பயன்படுத்தி பிராமி எழுத்துக்களைத் தட்டச்சு செய்திருப்பது, அப்பப்பா உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது…
நன்றி உதயகுமார்.. தட்டச்சு செய்தால் நினைவில் நிற்கும் என்பதால் செய்தேன்.. கூடிய சீக்கிரமே ஒரு முழுப்பதிவும் தமிழ் பிராமியில் எழுத வேண்டும். 😉
பசுமை நடை பற்றியது தானே என்று வாசிக்காமல் செல்ல வேண்டாம்.. நல்ல வேளை நான் வாசிக்க தவறவில்லை! அழகான பசுமை நடை, அதை அழகாக எடுத்துரைத்த உங்கள் எழுத்து நடை, கண்ணை கவர்ந்த அழகான புகைபடங்கள்!! எனக்கும் என்றைக்கவது இந்த மாதிரி பசுமை நடை செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கத்துடன் விடை பெறுகிரேன் 🙂
என்றைக்காவது ஒரு நாள் நீங்களும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் மகாலக்ஷ்மி அவர்களே. பின்னூட்டத்திற்கு நன்றி. 🙂
நல்ல பதிவு. அழகான புகைப்படங்கள். வாழ்த்துகள்.
அன்புடன்,
சித்திரவீதிக்காரன்.
நன்றி நண்பா.
மேலும் பல பதிவுகள் எழுத வேண்டும் நாம் இணைந்து.. 🙂
வணக்கம். தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_24.html
நன்றி கீதமஞ்சரி அவர்களே. வலைச்சரம் பார்த்த பிறகு தான் தங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன்.
ஒரு மாதமாய் இணையம் சரியாய் இயங்கவில்லை. ஆகையினாலே கொஞ்சம் தாமதம். 🙂
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது முதலில் வாழ்த்துக்கள்… சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_24.html?showComment=1390519247701#c4761600294553611110
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி அய்யா.
சென்று பார்க்கிறேன். BSNL செய்த உள்நாட்டு சதியால் எனது இணையம் ஒரு மாதமாய் முடங்கிக்கிடந்தது. இப்போது சரியாகி விட்டது. 🙂
பசுமை நடை மற்றும் கொங்கர் புளியங்குளம் பற்றி அறிந்துகொண்டேன்…பல்கலைகழகத்தில்தான் படித்தேன்…அப்பொழுது தெரியவில்லையே என்ற வருத்தம் தோன்றுகிறது.
பார்க்கலாம் என்றாவது பசுமை நடையில் கலந்துகொள்ள அமைகிறதா என்று…பகிர்விற்கு நன்றி.
நன்றி. கண்டிப்பாய் கலந்து கொள்ளுங்கள். 🙂