ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – பார்வை

தமிழ் சினிமாவில் திரைக்கதை சிறப்பாய் இருந்த படங்கள் தோற்றதாய் சரித்திரம் கிடையாது. திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட பாக்யராஜின் பெரும்பாலான படங்கள் பெருவெற்றி பெற்றவையே. ஆனால் திரைக்கதை மன்னன் என்ற அந்த பதவியில் இருந்து பாக்யராஜ் இறங்கி பல வருடங்கள் ஆகின்றன. சில வருடங்களுக்கு முன், ஆரண்ய காண்டம் என்ற படம் எடுத்த தியாகராஜன் குமாரராஜா அந்த பதவிக்கு பொருத்தமாய் இருந்தார். அதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவராத நிலையில், மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் மூலம் அந்த பதவியில் நங்கூரமிட்டு அமர்ந்து இருக்கிறார்.

போலீஸ் தேடும் குற்றவாளியான ஓநாய் (மிஷ்கின்) ஒரு ஆட்டுக்குட்டியால் (மருத்துவ கல்லூரி மாணவர் ஸ்ரீ) காப்பாற்றப்படுகிறார். அடுத்த நாள் காணாமல் போகும் ஓநாய், ஸ்ரீயை தேடி வந்து கைது செய்யும் போலீஸ், ஓநாயை கொல்லத்தேடும் நிழல் உலக தாதா தம்பா (பரத்), ஓநாய் காப்பாற்ற முயலும் சில ஆட்டுக்குட்டிகள் என்று கதை ஒன்றும் பெரியதாய் இல்லை. ஏற்கனவே பல முறை பார்த்த படங்களின் கதையை ஒத்து இருக்கிறது. பல திரைப்பட விமர்சனங்களில் உபயோகிக்கப்பட்ட க்ளிஷேவான “டிக்கட்டின் பின்னால்" எழுதிவிடக்கூடிய கதை என்றும் சொல்லலாம்.

ஆனால் அதை ஒரு திரைப்படமாக இரண்டரை மணி நேரம் கொண்டு சென்று இருக்கை நுனியில் ரசிகனை உட்கார வைப்பது ஒரு கலை. அதன் பெயர் திரைக்கதை. திரைக்கதை எழுதுவது எப்படி என்று ஒருவர் பாடம் எடுத்தால் அதில் இந்த படத்தின் திரைக்கதை கட்டாயம் இடம்பெறும். சிறு பிழைகள், லாஜிக் இடிப்புகள் இருந்தாலும் சிறப்பான திரைக்கதை மற்றும் நெறியாழ்கை மூலம் இந்த படத்தை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.

கதாபாத்திரங்கள் சிலவற்றை பார்ப்போம்.

ஸ்ரீ – மருத்துவக்கல்லூரி மாணவன் சந்துரு. வழக்கு எண் 18/9ல் பிளாட்பார கடை ஊழியனாய் நடித்த ஸ்ரீ இந்த படத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். மிகையற்ற சிறப்பான நடிப்பை வழங்கியுள்ள ஸ்ரீக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது இப்படி நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால்.

மிஷ்கின் – நல்ல திரைக்கதை ஆசிரியராய், இயக்குனராய் இருக்கும் மிஷ்கின் தானோர் நல்ல நடிகரும் கூட என்று நிருபித்து இருக்கிறார். குறிப்பாய் அந்த கல்லறைக் காட்சியில் ஏன் இந்த ஓட்டம் என்று கதை போல் சொல்லுமிடத்தில் சிலருக்கு கண்ணீர் வருவது நிச்சயம். பிரமாதம் மிஷ்கின்.

ஷாஜி – மலையாள வாசம் வீசும் வசனங்களால் ஈர்த்தாலும் சில இடங்களில் பதறுகிறார். முதல் படம் என்பதால் அது இயல்பே. குறிப்பாய் மருத்துவரிடம் விவாதிக்கும் இடத்தில் ஷாஜி அட்டகாசம்.

ஆதித்யா – கொடுத்ததை சிறப்பாய் செய்திருக்கிறார். குறைவான வாய்ப்பிருந்தும் குறைவற்ற நடிப்பு.

பரத் – மொக்கை வில்லன் கதாபாத்திரம். இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாம். கொஞ்சம் செயற்கைத்தனம் தெரிகிறது நடிப்பில்.

மோனா மற்றும் திருநங்கை  – இவர்களுக்கு மிகச்சிறப்பான எதிர்காலம் உண்டு தமிழ்த்திரையுலகில். சிறப்பான நடிப்பு.

திறனாற்றுநர்கள் சிலரை பார்ப்போம்

இளையராஜா – இவரை விமர்சிக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை. பாராட்ட வார்த்தைகள் எதுவும் எனது சொற்திறனில் இல்லை.

பாலாஜி வி ரங்கா – மிஷ்கினின் ட்ரேட்மார்க் ஷாட்களை கிடைத்த ஒளியில் எடுத்து கலக்கியிருக்கிறார். வித்தியாசமான எதிர்பாராத கோணங்களில் வரும் காட்சிகள் பாராட்டத்தக்கவை. குறிப்பாய் வாகன விரட்டுகளும், வாகனங்கள் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளும் அருமை.

மேலும் ஹரியின் நிழற்படங்களும், கோபிநாத்தின் படத்தொகுப்பும், பில்லா ஜகனின் சண்டை அமைப்பும் ரசிக்கும்படி இருக்கின்றன.

இந்தப் படத்தின் திரைக்கதையை, அதில் வரும் திருப்பங்களை விமர்சனம் என்ற பெயரில் வெளியே முழுதாய் சொல்வதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. இந்த படத்தை நீங்கள் ரசிக்கப்போவதே அதன் திரைக்கதைக்காகத் தான். படத்தை பார்க்கும்போதில் அவ்வப்போது உலக சினிமா என்ற வார்த்தை நினைவுக்கு வருகிறது. குறைவான வசனங்கள், தெளிவான காட்சியமைப்பு, தடதடக்கும் பின்னணி இசை, எங்கும் தொடரும் கேமிரா என்று அனைவரும் இணைந்து இந்த படத்தை நிமிர்ந்து நிற்கச்செய்கிறார்கள்.

குறைகளின்றி படங்கள் கிடையாது. முதல்நாள் மண்ணீரல் நீக்க அறுவைசிகிச்சை செய்து கொண்ட ஒருவன் அடுத்த நாள் காலை எழுந்து நடமாடுவது என்பது ஒரு மெடிக்கல் மிராக்கிள். அதேபோல், இந்த கதையமைப்பில் சற்றும் ஒட்டாத சாமுராய் சண்டைக்காட்சி, ரயிலில் இருந்து தப்பும் காட்சி போன்றவற்றில் மேலும் கவனம் செலுத்தி நம்பக்கூடிய வகையிலோ செய்திருக்கலாம்.

தடதடவென ஓடும் ரயில் போல் செல்லும் கதையில் இந்தக்குறைகளெல்லாம் மிக சிறிதானவை. பெரிய குறைகள் என்று சொல்லவியலாது.

முடிவு:

தமிழ்த்திரையுலக ரசிகர்கள் கண்டிப்பாய் காண வேண்டிய படம். ஆஸ்கர் விருது, கேன்ஸ் விருது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு நல்ல திரைப்படத்தை ஆதரிக்கும் ரசிகனாய் இருப்பது முக்கியம். ஆரண்யகாண்டம் திரைப்படத்திற்கு ஏற்பட்ட நிலைமையே இந்த படத்திற்கும் ஏற்படாமல் இருக்க திரையரங்கிற்கு சென்று காணுங்கள்.

மிஷ்கினின் அடுத்த படைப்பை எதிர்நோக்கி….

பி.கு: எனக்கு தெரிந்தது பற்றி மட்டுமே எனது விமர்சனம். மாற்று கருத்து இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். குறைகள் இல்லாத படங்கள் இல்லாதது போல பிழைகள் இல்லாத பதிவுகளும் கிடையாது இவ்வுலகில். 

Winking smile

9 thoughts on “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – பார்வை

 1. நான் சினிமா பார்ப்பதில்லை. ஆர்வமுமில்லை.
  உங்கள் பதிவின் அமைப்பை சீர்திருத்தியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.
  நல்ல தமிழில் எழுத முயற்சி செய்கிறீர்கள், எழுத எழுத தமிழ் வசப்படும். நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
  விமர்சனம் நன்றாக இருக்கிறது.
  உங்கள் எழுத்துக்காக எனது பக்கத்தில் பகிர்கிறேன். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். நன்றி.

 2. நான் சினிமா பார்ப்பதில்லை. ஆர்வமுமில்லை.
  உங்கள் பதிவின் அமைப்பை சீர்திருத்தியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துகள்.
  நல்ல தமிழில் எழுத முயற்சி செய்கிறீர்கள், எழுத எழுத தமிழ் வசப்படும். நல்ல
  முயற்சி. வாழ்த்துகள்.
  விமர்சனம் நன்றாக இருக்கிறது.
  உங்கள் எழுத்துக்காக எனது பக்கத்தில் பகிர்கிறேன். இன்னும் நிறைய
  எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • பின்னூட்டத்திற்கு நன்றி அப்பா..

   சில நல்ல படங்களை தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. 🙂

 3. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. படத்தோட தாக்கம் எனக்கு ரெண்டு நாள் இருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s