இந்த பதிவு கும்பகோணத்தில் இருந்து வரும் அக்டோபர் மாத சஞ்சிகை சிற்றிதழில் வெளியிடப்பட்டது. சஞ்சிகை வலைப்பதிவிலும் வெளியிடப்பட்டது.
மதுரை தொன்மை நிறைந்த ஒரு ஊர் என்பது அனைவரும் அறிந்ததே. மதுரையின் தொன்மைக்கு பெரும் அடையாளமாய் விளங்குவது ஊரின் மத்தியில் உயர்ந்து நிற்கும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலே. கடவுள் மீது நம்பிக்கை இல்லாத என் போன்றோரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் உயர்ந்து நின்று இந்த ஊரின் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றிவரும் அக்கோயில் சிறப்பை தெளிவாய் எடுத்துரைக்க ஒரு நன்னூல் இல்லையே என்ற நிலையை உடைத்தெறிய உருவாக்கப்பட்ட படைப்பே பொற்றாமரை.
முனைவர் அம்பை.மணிவண்ணன் தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர். மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் தற்போது மேலூர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியராய் பணியாற்றி வருகிறார். பல்வேறு நூல்களை அவர் எழுதியிருந்தாலும் அவரது ஆகச்சிறந்த படைப்பு பொற்றாமரை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மதுரையின் வரலாற்றை மேம்போக்காய் விவரிக்கத் தொடங்கும் இந்நூல் மெதுவாய் நம்மை அதனோடே ஒரு காலப்பிரயாணத்திற்கு அழைத்துச் செல்கிறது. திருக்கோவில் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் மதுரைக் கோவிலின் தலவரலாற்றை உரைக்கும் நூல் அதன் பிறகு கோவிலுக்குள் நம்மை ஒரு வழிகாட்டி ஊரை சுற்றிக்காட்டுவது போல் கை பிடித்து அழைத்துச் செல்கிறது.
நுழைவுவாயில், அட்டசக்தி மண்டபம், வேடமண்டபம் என்று ஒவ்வொரு பகுதியாய் நாம் பார்த்துச்செல்ல அதனூடே வரலாற்றுத்தகவல்களையும் புராணக்கதைகளையும் வழங்கியிருப்பது சிறப்பு. கதை படிப்பது போல் வரலாறு படிப்பது எளிது. ஒவ்வொரு மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், அதை கட்டியது யார் என்ற தகவல்கள், சிற்பங்களின் சிறப்புகள், சிற்பங்களின் பெயர்கள், அவற்றை தெளிவாய் காட்டும் வண்ண புகைப்படங்கள் என இந்நூல் நம்மை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச்செல்கிறது.
அதேபோல் சிற்பக்கலை குறித்த தகவல்கள் ஆச்சயமூட்டுகின்றன. இதுகாறும் நான் அறியாத பல தகவல்களை இந்நூல் வழியே நான் அறிந்தேன். உதாரணம் வேடமண்டபத்தில் காணப்படும் வேட்டுவச்சி மற்றும் வேடன் சிற்பங்கள் கடவுளர்களுடையது என்பதை விளக்கும் போது:
“இவ்வேட்டுவச்சியும் வேடனும் உமையும் சிவனுமாகும். வேட்டுவச்சியின் கைகளில் சூலாயுதம் மற்றும் கபாலம் காணப்படுகின்றன. மார்பில் கச்சை காட்டப்பட்டுள்ளமை, இச்சிற்பம் இறைவிதான் என்பதை உணர்த்துவதாக உள்ளது. பெண் உருவங்களைச் சிற்பங்களில் காட்டும்பொழுது தேவலோகப்பெண்கள் எனில் அவர்களுக்கு மார்பில் கச்சை இடம் பெறும்.”
இத்தகவலை நான் இதற்கு முன் அறிந்திலன்.
அதேபோல் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தை சுற்றிச் செல்லும் பாதையில் நூலும் பயணிக்கிறது. இக்கோவில் பற்றிய எனது பார்வையை இந்த நூல் கண்டிப்பாய் மாற்றியது. ஏதோ ஒரு சிற்பம் என்று இத்தனை நாள் தாண்டிச்சென்ற என்னை ஆகா! இது வேட மண்டபம். இதில் இருக்கும் மோகினி சிற்பம் இதுதான் என்று நின்று பார்க்க வைத்தது.
மிகச்சிறப்பாய் இந்நூலை வழங்கியுள்ள பேராசிரியர் அம்பை.மணிவண்ணனுக்கும், இதைப்பதிப்பித்த ஏ.ஆர். பதிப்பகத்துக்கும் எனது வாழ்த்துக்கள். வண்ணமயமான புகைப்படங்களை இந்நூலிற்காய் வழங்கிய ஒளிப்பட கலைஞர்கள் திருநாவுக்கரசிற்கும், தென்னகக்கண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும் முனைவருடன் நான் பேசிய பொழுது இந்த புத்தகத்தின் மறுபதிப்பு கூடிய சீக்கிரம் வெளி வரும் என்றும் மேலும் ஒரு மலிவு விலை பதிப்பு ஒன்றும் வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.
மலிவு விலை பதிப்பு வராவிட்டாலும் கோவில்களை, சிற்பங்களை, தமிழ்க் கலைகளை, தமிழர் வரலாற்றை நேசிக்கும் அனைவரும் தங்கள் வீட்டில் வாங்கி வைக்கவேண்டிய நூலாகவே இதை நான் கருதுகிறேன். மதுரையை நேசிக்கும் அனைவர் கையிலும் தவழ வேண்டிய நூல் இது.
நூல் பெயர்: பொற்றாமரை
ஆசிரியர்: முனைவர் அம்பை.மணிவண்ணன்
விலை: ரூ. 955
பதிப்பகம்: ஏ.ஆர். பதிப்பகம்
நல்ல நூல் அறிமுகம். விலை தான் மலைக்க வைக்கிறது!
ஆம் அம்மா.. ஆனாலும் இவ்வளவு பணம் கொடுத்து நான் இதை வாங்கியதற்கு வருந்தவில்லை. அருமையான வண்ணப்புகைப்படங்களுடன் கூடிய புத்தகம் அது. மலிவு விலை பதிப்பு வந்தவுடன் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் அவற்றில் வண்ணப்படம் இருக்காது.. கருப்புவெள்ளை படங்கள் மட்டுமே இருக்கும். 🙂
மகிழ்கிறேன், வாழ்த்துகிறேன் Rajanna Venkatraman.
உங்கள் பதிவின் அமைப்பு அருமையாக மாற்றி விட்டீர்கள்; என்னை போன்ற முதியவர்களுக்கு படிக்க எளிதாக இருக்கும். பதிவின் அமைப்பு எளிமையாக இருக்க வேண்டும்; பதிவின் பொருள் (subject) பேச வேண்டும்.
புத்தகத்தைப் பற்றி எழுதினால் – முழு விபரங்களும் எழுதுங்கள்; உங்கள் உரையைப் படித்து புத்தகம் வாங்க முடிய வேண்டும்.
எத்தனை பக்கம், விலை, ஆசிரியர் யார், எங்கு கிடைக்கும் (முகவரி, தொலைபேசி எண், முடிந்தால் மின்னஞ்சல் முகவரி) – புத்தகம் வாங்கலாமா என்ற யோசனையும் இருக்க வேண்டும்.,
இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் – மதுரக்காரன்.
சரி அப்பா. இந்த பதிவை கொஞ்சம் மாற்றுகிறேன் நீங்கள் சொன்ன தகவல்களையும் சேர்த்து. பின்னூட்டத்திற்கும் தாங்கள் எப்போதும் அளிக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. 🙂
நல்லதொரு நூல் அறிமுகம்… நன்றி…
நன்றி அய்யா.. 🙂
பொற்றாமரை என்ற நூலை வாசிக்க வேண்டும்; சிற்பங்களின் கதைகளை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டுகிறது தங்கள் பதிவு. மேலும், தாங்கள் மதுரை வீதிகளையும், கோவிலையும் நிழற்படங்களாக எடுத்து இது போன்ற நூலாக வெளியிட வேண்டுமென்பது என் ஆசை.