மாணிக்கவாசகரின் மண்ணில் – பசுமை நடை 26

விருட்சத்திருவிழா சிறப்பாய் நடந்து முடிந்த பிறகு நடந்த கூட்டத்தில் அடுத்த பசுமை நடை திருவாதவூரில் என்று முடிவெடுத்தோம். திருவாதவூருக்கு சிறப்புகள் பலவுண்டு. சைவ சமய குரவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த இடம். மேலும் சங்கப்புலவர் கபிலர், கபிலரின் பால்ய கால நண்பன் வள்ளல் பாரி ஆகியோர் பிறந்த இடமும் கூட. இத்தனை சிறப்பு மிக்க திருவாதவூருக்கு நான் சென்றது இல்லை என்பதால் தவற விடக்கூடாத நடை இது என்று முடிவு செய்து குறித்து வைத்துக் கொண்டேன். செல்லும் வழியெல்லாம் பெருவிருட்சங்களும் தோகை மயில்களும் குளங்களும் ஓடைகளுமாய், ஒரு புகைப்படக்கலைஞனின் கனவு தேசம் அது.

IMG_0096-2

IMG_0102_FB

மதுரைக்கு வடக்கே கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருவாதவூர். ஒத்தக்கடை சென்று அங்கிருந்து திருமோகூர் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். அதே சாலையில் இடையப்பட்டி மூக்கம்பட்டி தாண்டி சென்றால் திருவாதவூர்க்கு முன்னே மூன்று கல் தொலைவில்  வலதுபுறம் நீங்கள் ஓவா மலையை பார்க்கலாம். அருகில் இருக்கும் சமத்துவபுரத்தை ஒட்டிய சாலையில் சென்றால் பஞ்ச பாண்டவர் படுகையை அடையலாம்.

Ovamalai

மதுரை மாட்டுத்தாவனியில் இருந்து அதிகாலை 7 மணிக்கு இரு பேருந்துகள் மற்றும் ஐந்து கார்களில் சென்றோம். ஒவாமலைக்கு சற்று முன்பே வாகனங்களை நிறுத்து விட்டு நடக்கலானோம். ஒற்றைப்பாறை மலையோன்று வெயிலை மேல்வாங்கி எங்கள் மேல் அள்ளி இறைத்துக்கொண்டிருந்தது. மெல்ல நடந்து செல்கையில் இடப்புறம் ஓவாமலையின் அற்புத பாறை அமைப்புகளை ரசித்துக் கொண்டே சென்றோம். வலப்புறம் வன்புணர்ச்சி செய்யப்பட்ட இயற்கை எங்களை நோக்கி கதறிக் கொண்டிருந்தது.

சற்று தூரம் நடந்து சென்று பஞ்ச பாண்டவர் படுகையை அடைந்தோம். அதிகமானோர் கலந்து கொண்டதால் சமணர் படுகை கொள்ளவில்லை. இரண்டு குழுக்களாக அதை மேலேறிப் பார்த்தோம். திருவாதவூர் மற்றும் சமணர் படுகை பற்றிய சிறு கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொல்லியல் அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் இவ்விடத்தின் சிறப்பைப் பற்றி அனைவரும் அறியும்படி தெளிவாய் எடுத்துரைத்தார்.

“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்
வென்று எரிமுரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்! யாம் எந்தையும் இலமே”

என்ற பாரி மகளிர் பாட்டு நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை. மூவேந்தரின் வஞ்சகத்தால் கொலையுண்ட பாரி தன் மகள்களுக்கு மணமுடிக்கும் பொறுப்பை கபிலரிடம் விட்டுச்செல்ல அவரோ நண்பனின் மரணத்திற்கு தாமும் ஒரு காரணம் என்று எண்ணி பாரிமகளிரை மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு பெண்ணை ஆற்றங்கரையில் தீப்பாய்ந்து உயிர் விட்டார். இத்தகவலை திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத்

தென்கரை யுள்ளது; தீர்த்தத் துறையது;

மொய்வைத் தியலு முத்தமிழ்க் கபிலன்

மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப்

பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை

யலைபுன லழுவத் தந்தரிக்ஷஞ் செல

மினல்புகும் வீடுபே றெண்ணிக்

கனல்புகுங் கபிலக் கல்லது, புனல்வளர்

பேரெட் டான வீரட்டானம்

அனைத்தினு மநாதி யாயது.

சமணர் படுகை இருவர் அல்லது மூவர் தங்கும் வகையில் வெட்டப்பட்டு உள்ளது. இரண்டு தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் இங்கு காணக்கிடைக்கின்றன. இரண்டும் சிதைந்த நிலையில் இருப்பது மனதை வருத்துகிறது.

“பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்.”

“உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்.”

முதல் வரி அரிதன் என்பவரால் இந்தப்படுகை வெட்டப்பட்டது என்றும் இவர் பாங்காடு என்ற ஊரை சேர்ந்தவர் என்றும் பொருள் தருகிறது. இரண்டாம் வரி பரசு என்ற உபாசகரால் இந்த உறைவிடம் அமைக்கப்பட்டது என பொருள் தருகிறது. இக்கல்வெட்டுக்கள் கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவைகள்.

IMG_0126-2

சமணர் படுகையை பார்த்த பின் திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவிலுக்கு சென்றோம். எழுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உடையது இத்திருக்கோவில். ஆதி காலம் தொட்டு திருமறைநாதர் என்று வழங்கப்பட்டு வந்த இறைவன் இப்போது சிவன் என்று அழைக்கப்படுகிறார் அனைவராலும். திருவாதவூர் சிவன் கோவில் என்று அனைவரும் அழைக்கிறார்கள். இதற்கு அருகே இருக்கும் உலகளந்த சோழன் பேரேரியில் புருசா மிருகத்தின் சிலையொன்று இருக்கிறது.

IMG_0254_Flickr

IMG_0251

முனைவர் அம்பை மணிவண்ணன் எழுதிய பொற்றாமரை புத்தகத்தில் இந்த புருசா மிருகத்தின் கதையை படித்தேன். மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர் வனவாசம் செய்யும்போது யாகம் ஒன்றிற்கு புருசாமிருகத்தின் பால் தேவைப்பட்டது. புருசாமிருகமோ சிவபக்தன். விஷ்ணு பக்தர்களை வெறுப்பவர். ஆகவே இம்மிருகத்தின் பாலைக்கொண்டு வர தருமர் பீமனை அனுப்பினார். கிருஷ்ணன் இம்மிருகத்தின் பலத்தை பீமனுக்கு எடுத்துக்கூறி தேவைப்படும் போது பயன்படுத்த சில ருத்திராட்சங்களை வழங்கினார். பீமன் காட்டுக்குள் செல்லும் போது கோவிந்தா கோவிந்தா என்று கூறிச் செல்ல அதைக்கேட்ட புருசாமிருகம் அவனை விரட்டியது. பீமன் கையிலிருந்த உருத்திராக்கங்களில் ஒன்றை கீழே போட அது சிவலிங்கமாய் மாறியது. புருசாமிருகம் பூசை செய்துவிட்டு மீண்டும் விரட்டியது. ஒரு கட்டத்தில் பீமன் கையில் இருந்த உருத்திராக்கங்கள் தீர்ந்து போக, புருசாமிருகம் பீமனை பிடித்து விடுகிறது. பீமன் புருசாமிருகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லையில் ஒரு காலும் வெளியில் ஒரு காலும் வைத்திருந்ததனால் நான் உனக்கு சொந்தமில்லை என்று புருசாமிருகத்தோடு வாதிட்டான். இறுதியில் இருவரும் தருமரிடம் நீதி கேட்டனர். தருமர் தன் தம்பி என்றும் பாராது பீமனது ஒரு கால் உனது எல்லைக்குள் இருந்ததனால் அவன் இனி உனக்குரியவனே என்று தீர்ப்பளித்தார். தருமரின் நீதிக்கு தலைவணங்கி புருசாமிருகம் பீமனை விடுவித்தது. மேலும் அது பூசைக்கு தேவையான பாலையும் கொடுத்து விஷ்ணுபக்தர்கள் மேல் இருந்த வெறுப்பையும் விலக்கிக்கொண்டது.

கோவில் வரலாற்றை பற்றி சாந்தலிங்கம் அய்யா சொல்லியபின் நான் எடுத்த அய்யாவின் நிழற்படத்தை சமணர் பற்றிய ஆய்வு செய்து வரும் ஜெயஸ்ரீ அவர்கள் வழங்கினார். புத்தகத்தாத்தா முருகேசன் அய்யா மற்றொரு புகைப்படத்தை சாந்தலிங்கம் அய்யாவிடம் வழங்கினார். விருட்சத்திருவிழா நடைபெற்ற கீழக்குயில்குடியில் இருந்த பெருவிருட்சம் ஒன்றின் படத்தை ஓவியர் ரவி அற்புதமாக வரைந்து பசுமை நடைக்கு வழங்கினார். அதை ஓவியர் பாபு பெற்றுக்கொண்டார். நடை இனிதாய் முடிய, அனைவரும் சேர்ந்து கோவில் வெளிப்பிரகாரத்தில் உணவருந்தினோம். உண்டபின் அனைவரும் கிளம்பி மாட்டுத்தாவணி வந்து நன்றி சொல்லி கிளம்பினோம்.

IMG_0225

IMG_0230

IMG_0236IMG_0238

இங்கே குறிப்பிடத்தகுந்த விஷயம் – நெல்பேட்டை M.A.V.M.M மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இருபது பேரும் மூன்று ஆசிரியர்களும் இந்த முறை பசுமை நடையில் பங்கேற்றது. மாணவர்கள் பானிபட் போரைப் பற்றி படிக்கும் போது நாம் இருக்கு  இடத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. நான் இன்று வரை பானிபட் சென்றதில்லை. ஏன் அதை படித்தேன் என்றும் தெரியவில்லை. ஆனால் காவல் கோட்டம் படிக்கும்போது அந்த கால மதுரைக்கே சென்றது போன்ற ஒரு உணர்வு. மதுரையை புதியதாய் பார்த்தேன். அத்தகைய அனுபவங்கள் நம் இருப்பிடத்தின் சிறப்பை நமக்கு உணர்த்தும். அத்தகைய ஒரு அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எனது ஆசை. மாணவர்களை எங்களுடன் அனுப்பிய எம்.ஏ.வி.எம்.எம். பள்ளித்தலைமை ஆசிரியை திரு.கனகதுர்கா பாய் அவர்களுக்கும் உடன் வந்து ஒத்துழைத்த ஆசிரியர்கள் திரு.முத்துகணேசன் அவர்கள், திரு.விஸ்வநாதன் அவர்கள் , மற்றும் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் என் நன்றிகள் பல.

மாணவர்களை சிறப்பாய் அழைத்துச் சென்று நம் மதுரையின் மகிமையை எடுத்துச் சொல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்த பசுமை நடை குழுவுக்கும் எனது நன்றிகள்.

14 thoughts on “மாணிக்கவாசகரின் மண்ணில் – பசுமை நடை 26

  1. எழுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உடையது இத்திருக்கோவில். ஆதி காலம் தொட்டு திருமறைநாதர் என்று வழங்கப்பட்டு வந்த இறைவன் இப்போது சிவன் என்று அழைக்கப்படுகிறார் அனைவராலும். திருவாதவூர் சிவன் கோவில் என்று அனைவரும் அழைக்கிறார்கள். இதற்கு அருகே இருக்கும் உலகளந்த சோழன் பேரேரியில் புருசா மிருகத்தின் சிலையொன்று இருக்கிறது = அருமையான பின்னணி. எழுத்துகளின் அமைப்பு நன்றாக இருக்கிறது. பின்னணி நிறத்தை எடுத்து விடலாம். எழுத்துகள் கறுப்பு நிறத்திலும், பின்னணி வெள்ளையாகவும் இருக்கலாம் – Black & White – அருமையான எழுத்தாற்றல், வாழ்த்துகிறேன், பெருமைப் படுகிறேன் திரு Rajanna Venkatraman – எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    இன்னும் உடன் சென்ற எங்கள் நண்பர்கள் – Deepa Nagarani, சித்திரைவீதிக்காரன் – அவர்களின் பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் அனைவருக்கும்.

  2. எழுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உடையது இத்திருக்கோவில். ஆதி காலம்
    தொட்டு திருமறைநாதர் என்று வழங்கப்பட்டு வந்த இறைவன் இப்போது சிவன் என்று
    அழைக்கப்படுகிறார் அனைவராலும். திருவாதவூர் சிவன் கோவில் என்று அனைவரும்
    அழைக்கிறார்கள். இதற்கு அருகே இருக்கும் உலகளந்த சோழன் பேரேரியில் புருசா
    மிருகத்தின் சிலையொன்று இருக்கிறது = அருமையான பின்னணி. எழுத்துகளின் அமைப்பு
    நன்றாக இருக்கிறது. பின்னணி நிறத்தை எடுத்து விடலாம். எழுத்துகள் கறுப்பு
    நிறத்திலும், பின்னணி வெள்ளையாகவும் இருக்கலாம் – Black & White – அருமையான
    எழுத்தாற்றல், வாழ்த்துகிறேன், பெருமைப் படுகிறேன் திரு Rajanna Venkatraman –
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    இன்னும் உடன் சென்ற எங்கள் நண்பர்கள் – Deepa Nagarani, சித்திரைவீதிக்காரன் –
    அவர்களின் பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் அனைவருக்கும்.

    • வாழ்த்துக்களுக்கு நன்றி அப்பா.. இது படிக்க கஷ்டமாக உள்ளதா? நிறைய நேரம் இரவில் எழுதுவதால் கறுப்பு பின்னணி வைத்திருக்கிறேன். வீட்டில் இருக்கும் யாருக்கும் தொல்லையில்லை என்று. வாசிக்க சிரமமாய் இருக்கிறதா?

  3. உங்கள் நிழற்படங்களைப் பார்த்து திருவாதவூருக்கு இனி நிறைய பேர் வருவார்கள். அருமை. ஒவ்வொரு பத்தியும் மிகவும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
    – அன்புடன்,
    சித்திரவீதிக்காரன்.

    • வாருங்கள் அய்யா சித்திரவீதிக்காரரே. படங்களை பார்த்து நிறைய பேர் வந்தால் மகிழ்ச்சியே. உங்கள் பதிவின் அளவுக்கு தகவல்கள் அளிக்க முடியவில்லை. தொடர்பு சுட்டி ஒன்று போட்டு விடுகிறேன். அப்போ தான் சரியாக இருக்கும். 🙂

  4. Miga Arumaayaana Samudhaaya Thondai seyyum Pasumai Nadai Kuzhuvukku En Panivaarndha Vanakkangal. Needoozhi Vaazhvaangu vaazhz umai siram Thaazhndhu Vaazhtugiren

  5. Aduttha Nadai vibaram Please Tell me Mr Muthu sir, I’ll arrange noon meal for all participants —- Sridharan Appandairaj 9787300353

  6. “””””ஆனால் காவல் கோட்டம் படிக்கும்போது அந்த கால மதுரைக்கே சென்றது போன்ற ஒரு உணர்வு. மதுரையை புதியதாய் பார்த்தேன். அத்தகைய அனுபவங்கள் நம் இருப்பிடத்தின் சிறப்பை நமக்கு உணர்த்தும். அத்தகைய ஒரு அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எனது ஆசை””””

    காவல் கோட்டத்தின் கதை களத்தில் நடந்த விருட்ச திருவிழாவில்
    அந்த நாவல் குறித்து யாருமே பேசாமல் விட்டது சற்று வருத்தமாக இருந்தது.
    ஏனனெனில் என் போன்றவர்களுக்கு மதுரையை முழுமையாய் அறிமுகம் செய்தது காவல்கோட்டம் நாவலே. தாங்கள் இங்கு பகிர்தமைக்கு நன்றி.

Leave a reply to திண்டுக்கல் தனபாலன் Cancel reply