மதுரை எந்த அளவு மல்லிக்கு பேமஸோ அதை விட அதிகமாக பரோட்டவுக்கு பேமஸ். மதுரை பரோட்டா சால்னாவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் எனக்கு தெரிந்து திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டும் தான் உள்ளது. மதுரையில் தேடித்தேடி பரோட்டா தின்பது ஒரு சுகம்தான். மதுரையிலேயே வாழ்வதால் எனக்கு மிகவும் பிடித்த சில கடைகளை பிறர் அறியச் செய்ய வேண்டும் என்றே இதை எழுதுகிறேன்.
மதுரை காலேஜ் ஹவுஸ் தெரியுமா? அதற்க்கு நேரெதிரே உள்ள வீதியின் பெயர் மேற்கு மாரட் வீதி. சின்னதோர் காலத்தின் பின்னோக்கிய பயணம் இங்கு.. மாரட் வீதி என பெயரிடப்பட்ட இந்த வீதிக்கு அருமையான வரலாறு உண்டு. பிளாக்பர்ன் மதுரை கலெக்டராக இருந்த 1800களின் மத்தியில் மதுரை கோட்டைசுவர்களால் சூழப்பட்டு இருந்தது. கோட்டையை இடித்தால் தான் மதுரை விரிவடையும் என்று நினைத்த பிளாக்பர்ன் கோட்டை சுவர்களை இடிக்கும் படி உத்தரவிட்டார். யாரும் அதைச்செய்ய முன்வராத நிலையில் இருவர் மட்டும் அந்த வேலையை முன்நின்று துவங்கினர். ஒருவர் கோட்டை சுவர் இடிப்பிலும் மற்றொருவர் நிலஅளவை வேளையிலும் ஈடுபட்டனர். ஒரு வழியாய் மக்களும் அதை ஏற்றுக்கொண்டு கோட்டை சுவரை இடித்தனர் பிற்பாடு. பிளாக்பர்ன் மதுரையை விட்டும் செல்லும் போது அவருக்கு உறுதுணையாய் இருந்த கோட்டையை இடித்த பெருமாள் முதலி பெயரையும் நிலஅளவை செய்த மாரட் பெயரையும் மதுரையில் இருந்த இரு தெருக்களுக்கு இட்டார். அவையே முறையே பெருமாள் மேஸ்திரி வீதிகளும், மாரட் வீதிகளும். பிளாக்பர்ன் நினைவாக அழகிய தூண் ஒன்று நடப்பட்டது (விளக்குத்தூண்).
சாப்பாட்டுக்கு வருவோம். அந்த மேல மாரட் வீதியில் மதுரை ரெசிடென்சி ஹோட்டலுக்கு எதிரே இருக்கிறது பாலாஜி ஈவ்னிங் மட்டன் ஸ்டால். சாயங்காலம் தான் திறக்கப்படும் ஒவ்வொரு நாளும். உட்கார சாதாரண பெஞ்சு தான். உள்ளே போய் உட்கார்ந்து வேர்க்க விறுவிறுக்க பரோட்டா தின்பதற்கு கூட்டம் அலைமோதும். காரணம் அவர்கள் போடும் பரோட்டா சாயங்காலமே தயாரிக்கப்படும். சில கடைகளில் மதியமே பரோட்டா தயார் செய்து விடுவார்கள். நாம் கேட்கும் போது கல்லில் சூடு செய்து போட்டு விடுவார்கள். இங்கே அப்படி இல்லை.
நான் ஒவ்வொரு முறை செல்லும் போதும் வாங்குவது 4 பரோட்டா, 1 சுக்கா வறுவல், 1 ஆப்பாயில், 1 பெப்பர் சிக்கன். மொத்தமே 150 ரூபாய்க்கு மேல் ஆகாது. ஒரு மாதத்திற்கு முன் மூன்று பேர் சென்று வயிறு முட்ட தின்று விட்டு மொத்தம் 300 ரூபாய் பில் செட்டில் செய்தோம். இங்கே கிடைக்கும் எனக்கு மிகவும் பிடித்த அயிட்டங்கள் – பரோட்டா, முட்டை பரோட்டா (கொத்து பரோட்டா என்றும் செட்டு என்றும் பிற ஊர்களில் அழைக்கப்படுவது), மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, போட்டி, முட்டை போட்டி (போட்டி என்றால் குடல்), மட்டன் மூளை, சிக்கன் 65, மற்றும் மட்டன் ஈரல்.
செல்ல வேண்டிய நேரம் – மாலை 7 மணிக்கு மேல். இரவு 12 மணிக்கு கூட சென்று சாப்பிட்டுள்ளேன். முடிந்தால் சாப்பிட்டு பாருங்கள்.
அடுத்த இடம் இன்னும் ஓரிரு வாரத்தில் – தல்லாகுளம் ஆறுமுகம் பரோட்டா கடை.
அடுத்து முறை மதுரை வரும் போது சென்று சுவைத்து பார்ப்போம்…! நன்றி…
போறப்போ கூப்புடுங்க சார்.. நானும் வந்துர்றேன். சூப்பர் எடம்.
எங்க காமராஜர் சாலையில் சௌராஷ்டிர மட்டன் கடை ஒன்று உள்ளது , அங்கு மாலை வேலையில் மட்டும் மட்டன் சுக்கா கரி, மட்டன் குழம்பு ,குடல், நாக்கு , கண், தலைக்கறி, சூப், தோசை , உத்தப்பம் கிடைக்கும். இது சௌராஷ்டிர சமையல் வகை. கரம் அதிகம் இருக்காது.
ஒரு தடவை ருசிச்சு பார்க்கவும் .
pls say addressan dkadai name
அய்யா மதுர,
நானும் ஒரு மட்டன் கடை பற்றி சொல்றேன் .
மதுரை காமராஜ் சாலை அரசமரம் அருகில் சௌராஷ்டிர மட்டன் கடை ஒன்று உள்ளது
அங்கு இரவில் மட்டும் தோசை, ஊத்தப்பம் ஆகியவற்றிற்கு மட்டன் கரி குழம்பு, சுக்கா,
குடல், நாக்கு, தலைக்கறி, ஈரல், கிட்னி , ஆட்டுக்கால் குழம்பு கிடைக்கும்.
மேலும் இவை சௌராஷ்டிர செய்முறை .அதிக காரம் இருக்காது .
அதே தெருவில் இருக்கும் சுல்தான் ஹோட்டல் பற்றியும் எழுதலாமே…மற்றும் அதே தெருவில் சில காலம் முன்பு வரை இருந்த அண்ணம் பரோட்டா ஸ்டாலும் அந்த பகுதியின் ‘பரோட்டா களஞ்சியமாக’ இருந்தது
பின்னூட்டத்திற்கு நன்றி பிரசன்னா!
பையப் பைய எழுதுவோம். 🙂