ரயில் பயணங்களில்…

ஏதேனும் கருத்து கதை தேடி இதை படிக்க விழைவோர், தயவு செய்து படிக்க வேண்டாம். அவ்வளவு முக்கியமான கருத்துக்கள் எதுவும் இதில் சொல்லப்படவில்லை. அதை நான் எப்போதுமே சொன்னதில்லை என்பது வேறு விஷயம். இந்த பதிவு ஒரு ரயில் பிரயாணத்தை பற்றியது.

நான் ரயிலில் அடிக்கடி பிரயாணம் செய்பவன். ரயில் எனக்கு ஒரு சிநேகிதன் போல. போல என்ன? சிநேகிதனே தான். ஒவ்வொரு முறை நான் பயணம் செல்லும் போதும் எனக்கு புதியதோர் அனுபவத்தை தரும் ரயிலை விட பெரிய சிநேகிதன் வேறு யார்? மதுரையில் இருந்து சென்னைக்கும் நெல்லைக்கும் பலமுறை செய்த பயணங்கள் அனைத்துமே மறக்க முடியாதவை. சென்னைப் பயணங்கள் பெரும்பான்மை இரவில் கழிந்து விடும் போதும் என் மற்றொரு தோழனான புத்தகத்தை ரயில் சிநேகிதனுடன் சேர்ந்து வாசிப்பதில் எனக்கு அலாதி இன்பம்.

ரயிலை முதன்முதல் பார்த்த தமிழன் என்ன நினைத்தான் என்று காவல் கோட்டத்தில் சு.வெங்கடேசன் தெளிவாய் சொன்னாலும், என்னை பொறுத்தவரையில் அந்த வார்த்தைகள் ஒவ்வொரு குழந்தையும் முதன்முதலில் ரயிலை பார்க்கும் போது என்ன நினைக்குமோ, அதையே விளக்குவனவாக உள்ளன. ரயிலுடன் எனது முதல் சந்திப்பு எனக்கு சுத்தமாய் நினைவில் இல்லை. ஆனால் சிறுவயதில் செய்த முதல் மற்றும் ஒரே ரயில் பயணம் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை குறுகிய ரயில் பாதையில் செல்லும் பயணிகள் ரயிலில் சென்றதே.

அப்போது ராமேஸ்வரம் மட்டுமல்ல எங்கே சென்றாலும் குறுகிய ரயில் பாதை தான். அகல ரயில் பாதை எல்லாம் நான் ரயில் பற்றி முற்றும் அறிந்த பின்னரே வந்தன. யாரோ கண்டுபிடித்து சொல்லியிருப்பார்கள். ரயில் பயணங்கள் ரசனையானவை. ஒவ்வொரு முறை ரயிலில் செல்லும் போதும் அழகான குழந்தையோ, அழகிய சிரிப்புடைய ஒரு பெண்ணோ, பொக்கைவாய் கிழவியோ, கதைப்பெட்டகமான ஒரு தாத்தாவோ கண்டிப்பாக கூட வருவார்கள். வெகு சில நேரங்களில் கடும் போதையில் தள்ளாடும் ஒருவர் சக பிராணியாய் வரக்கூடும். சில நேரங்களில் மேற்கூறிய நபர் நாமாகவே இருக்ககூடும்.

இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்கும் ஒரே இடம் இந்த ரயில்பெட்டி தான். ஒரு பக்கம் காசு வைத்து சீட்டாடும் கட்டதுரைகள், மறுபக்கம் ஏறியதில் இருந்து இறங்கும் வரை தூங்கிக்கொண்டே வரும் கும்பகர்ண மகாத்மாக்கள், இன்னொரு பக்கம் புத்தகங்களிலும் ஜன்னல் வேடிக்கையிலும் மூழ்கிக் கிடக்கும் என் போன்ற கிறுக்கர்கள், இன்னொரு பக்கம் அடுப்பை வைத்து சப்பாத்தி செய்து சாப்பிடும் வட இந்திய நாடோடி குடும்பம் என பல்வேறு முகங்களின் கதம்பமாய் இருக்கும் இந்திய ரயில் பெட்டி. சில நேரங்களில் வெள்ளையாய் சில முகங்கள் தெரியக்கூடும்.

டெல்லி வரை நான் சென்ற ஒரு பயணத்தில் சிலரோடு ஏற்பட்ட நட்பு இன்றும் தொடர்கிறது. திரும்பி வரும் போது கையில் 100 ரூபாயோடு டெல்லியில் ரயில் ஏறி சென்னை வரை பட்டினி கிடக்காமல் அதே நூறு ரூபாயோடு வந்து சேர்ந்தது எங்கனம்? காப்பி முதற்கொண்டு எனக்கு குடுத்தது சக தமிழர்கள் அல்லர். என்னோடு பிரயாணம் செய்த ஒரு வட இந்தியக்குடும்பமே. அவர்களுக்காக நான் எதுவுமே செய்யவில்லை. இடம் மாற்றிக் கொண்டு அவர்கள் குட்டிக் குழந்தைக்கு ஜன்னல் இருக்கையை விட்டுக்கொடுத்ததும், அந்த 36 மணி நேர பயணத்தில் தென்இந்தியாவில் சுற்றிப்பார்க்க இருக்கும் இடங்களை அவர்கள் மொழியில் சொல்லி வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். பிறகு சென்னையில் இறங்கி அவர்களுக்கு ஆட்டோ பிடித்துக் கொடுத்தேன்.

பெங்களூருவுக்கு பிரதி ஞாயிறு மதிய ரயில் பிடித்து நண்பர்களுடன் படிக்கட்டில் அமர்ந்து நண்பன் வாங்கித்தந்த பிரட் ஆம்லெட் சாப்பிட்டபடி சென்றது நான் காதலித்த பெண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை. குளிரூட்டப்பட்ட பெட்டியில் சினுவா அச்சீபே எழுதிய “சிதைவுகள்” படித்தபடி நான் அவளை பார்க்க வந்திருப்பேன் என்று அவள் நினைத்திருக்கக்கூடும். சொல்லாதது என் தவறுதான். காதலென்றாலும் சாதலென்றாலும் விளம்பரம் தேவைப்படுகிறது இந்நாளில்.

கல்லூரி படிக்கும் காலத்தே பொங்கலுக்கு ஊருக்கு போக முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி நிற்கக்கூட இடமின்றி வந்தேன். திண்டுக்கல் தொடருந்து நிலையத்தில் பசியால் மயங்க ஆரம்பித்த எனக்கு குடிக்க போவண்டோவும் கொறிக்க முறுக்கும் வாங்கித் தந்து காணாமல் போன அந்த நல்ல மனிதர் முகம் மட்டும் எனக்கு நினைவில் இல்லை.

நல்ல மனிதர்கள் சந்தித்த அளவு நல்ல மனிதர் அல்லாதவரையும் மிகுந்த கோபக்காரர்களையும் நான் சந்தித்து இருக்கிறேன். சமீபத்தில் என் நண்பன் விஷ்ணுவோடு நான் ரயிலில் சென்ற போது மிகுந்த கோபக்காரரான ஒரு சீட்டு பரிசோதகர் என்னை காவலரிடம் இட்டுச்சென்று புகார் செய்ததை மறக்க முடியுமா? அவசரமாக செல்வதால் முன்பதிவு செய்யவில்லை. நண்பன் வந்ததால் இந்தப் பெட்டியில் ஏறினேன் என்று நான் தண்டத்தொகை கட்ட தயாராய் இருந்தும் அதை ஒப்புக்கொள்ளாமல் அவர் என்மேல் புகார் செய்தார். அந்த நேரத்தில் தான் அமர்த்திருந்த இருக்கையை எனக்காக தந்த அந்த காவலர் அக்காவை இன்னும் பாண்டியன் விரைவு வண்டியில் செல்லும் போதெல்லாம் தேடுகிறேன்.

இரவு புத்தகம் படிக்க எனது அலைபேசி வெளிச்சத்தை நான் உபயோகித்தால் அது தன் தூக்கத்தை கெடுக்கிறது என்று காவலரிடம் புகார் சொல்லியவர் பிற்பாடு முன்பதிவு பயணசீட்டு இன்றி முன்பதிவு பெட்டியில் ஏறியதால் அதே காவலரால் கைது செய்யப்பட்டதை விதி என்று சொல்லலாமா?

சென்ற மாதம் அதே பாண்டியன் விரைவு வண்டியில் என்னோடு பயணித்த பரோடாவில் வட்டிக்கு விடும் தொழில் செய்யும் ஒருவரோடு நடந்த உரையாடல் இது..

அவர் – நீங்க என்ன வேல சார் பாக்குறீங்க?

நான் – நான் பல் மருத்துவரா இருக்கேன்..

அவர்- கேக்குறேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க சார். எவ்வளவு சம்பாதிப்பீங்க?

நான் – பிச்சையெடுத்தோ புடுங்கித் தின்னோ  தான் வாழணும்னுங்கற நிலைமை வராத அளவுக்கு சம்பாதிக்கிறேன்.

அவர் – சும்மா சொல்லுங்க சார்.

நான் – மாசம் ஒரு பதினஞ்சாயிரம் சம்பாதிப்பேன். அவ்வளவுதான்.

அவர் – நீங்க டாக்டருக்கு படிச்சு அவ்ளோ தான் சம்பாதிக்கிறீங்க.. நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் தெரியுமா?

நான் – தெரியாது

அவர் – மாசம் எட்டு லட்ச ரூபா சம்பாதிக்கிறேன்.

நான் – உங்க சீட் நம்பர் என்ன?

அவர் – சீட் நம்பர் எல்லாம் இல்ல சார். TTE வந்தா காசாலேயே அவர சமாளிச்சுடுவேன்.

நான் – சரிங்க. நீங்க உங்க சீட்ல போய் உட்காருங்க. நான் இங்க தூங்க போறேன்.

அவர் – சார். இது RAC. ரெண்டு பேரும் உட்காந்துட்டே தான் போகணும். நான் TTEகிட்டே உங்களுக்கும் ஒரு சீட்டு தர சொல்றேன்.

நான் – ஸாரி பாஸ். இந்த சீட்டு எனக்கு கன்பர்ம் ஆகிடுச்சு. உங்களுக்கு சீட்டு மட்டும் நீங்க வாங்கிக்கோங்க.

சிறிது நேரத்தில் TTE வந்தார்.

TTE: சீட்டு காட்டுங்க.

அவர்: சார். சீட்டு இல்ல சார். ஜெனரல் டிக்கட் தான் இருக்கு.

TTE: 650 ரூபா பைன் போடுவேன். இல்லாட்டி அடுத்த ஸ்டேஷன்ல எறங்கி ஜெனரல் கம்பார்ட்மென்ட் போயிடுங்க.

அவர்: சார். 50 ரூபா தரேன் சார். இப்படி ஓரத்துல படுத்துக்கிறேன். (என்னைப் பார்த்து) டாக்டர் சார்.. நீங்களும் கொஞ்சம் சொல்லுங்க சார்.

TTE: நக்கலா? ஒழுங்கா ஓடிடு. இல்லை இங்கே எறக்கி விட்டு உள்ள தள்ள சொல்லிடுவேன்.

அவர்: (என்னை பார்த்து) சார். உங்களைத்தான். கொஞ்சம் சொல்லுங்க சார்.

நான்: அவரு வேலைய அவரு செய்றாரு. இதுல நான் சொல்றதுல என்னங்க இருக்கு. இதுக்கு மேல கேட்டா நீங்க என்கிட்டே என்ன சொன்னீங்களோ அத தான் நான் அவருகிட்ட சொல்ல முடியும்.

TTE: கெளம்பு கெளம்பு. வண்டி கிளம்பப் போகுது.

என்னை முறைத்துக்கொண்டே அவர் தன் பெட்டிகளை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து போனார். TTE என்னை பார்த்து “பாத்து சார். ஆள் கொஞ்சம் சரியில்லை" என்றார்.

நான் இரவு முழுவதும் உயிர் பயத்தோடு புத்தகம் படித்தபடி மதுரை வந்து சேர்ந்தேன். நான் படித்த புத்தகம் சினுவா அச்சிபே எழுதிய “சிதைவுகள்" (Things fall apart).