குழப்பத்தை எங்கே விட!

தெருவில் மழை பெய்து தண்ணீர் நிறைந்து இருந்தது. ஓரத்தில் சிறிதுபோல் தண்ணீர் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது. மழை விட்டு நெடுநேரமாகியும் தண்ணீர் ஓடுவது நிற்கவில்லை. ஓடும் தண்ணீர் ஒருபுறமிருக்க, தேங்கி நின்ற தண்ணீரில் குழப்பம் ஒன்று குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.

மிக மகிழ்வாய் விளையாடிக்கொண்டிருந்த குழப்பத்தை பார்த்து சிரித்தபடி சென்றனர் சிலர். மேலும் சிலர், குழப்பத்தை கொஞ்சம் பிய்த்து தங்கள் பைக்குள் போட்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர். யார் எவ்வளவு எடுத்துச் சென்ற போதிலும் குழப்பம் தன்னளவில் இம்மி கூட குறையாமல் அப்படியே விளையாடிக் கொண்டிருந்தது.

குழப்பம் ஏன் தண்ணீரில் விளையாடுகிறது? அதற்கு விளையாட இடமா இல்லை? உலகெங்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடலில் மனமென்னும் மைதானம் வைத்து கொடுத்த போதிலும் குழப்பத்திற்கு தண்ணீரில் விளையாட தான் பிடிக்கிறதோ? இல்லை குழப்பம் கொஞ்சம் குழம்பி வெளியே வந்து விளையாடுகிறதோ?

சரி. குழப்பத்திடமே கேட்டு விடலாம் என்று அருகில் சென்றேன். சென்றவுடன் என்ன ஆனதென தெரியவில்லை. என் கை கட்டுப்பாட்டை இழந்து குழப்பத்தை கொஞ்சம் பிய்த்து என் பையில் போட்டு விட்டது. நான் பயந்து போய்விட்டேன். இப்போது அந்த குழப்பத்தை எடுத்து வெளியில் விடுவதா இல்லை அதை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போவதா? குழப்பத்தை வெளியில் விட்டால் மறுபடி அது பழைய குழப்பத்தோடு போய் சேர்ந்து விடுமா?

அப்படி அது சேராவிடில் ஒரு குழப்பத்தை அனாதையாக்கிய பாவமல்லவா என்னைச் சேரும்! இதுவரை யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத எனக்கு அப்படி ஒரு பழிச்சொல் தேவையா? ஆகையால் அந்த குழப்பத்தை வீட்டிற்கு எடுத்து சென்றேன். உள்ளே நுழையும் போதே பயம், என் மனைவி என்ன சொல்வாளோ என்று. நான் பயந்தபடியே நடந்தது.

குழப்பத்தை பார்த்தவுடன் என் மனைவி பயந்து விட்டாள். மறுபடி அதை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வரும்படி சொன்னாள். சமாதானம் செய்தும் ஏதும் பலனில்லை. மனைவி ஒத்துக்கொள்ளாத போது எவ்வாறு குழப்பத்தை வீட்டில் வைத்து வளர்ப்பது? மறுபடி விட்டுவிட்டு வர சென்றேன்.

மறுபடி சென்ற போது குழப்பத்தை பற்றி யோசித்துக் கொண்டே சென்றேன். அதை எடுத்து என் பையில் போடும் வரை எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத அந்த குழப்பம் பையில் போட்டவுடன் என் வாழ்வின் போக்கை மாற்ற கூடிய பலமுடையதானதை நினைத்து வியந்தேன். சில நிமிடமே ஆனாலும் குழப்பம் நம்மை எப்படி ஆட்கொள்கிறது பாருங்கள். யோசித்தபடி மெல்ல தெருவிற்கு வந்தேன்.

மழையால் நனைந்த அந்த தெரு இப்போது காய்ந்து கிடந்தது. நீர் ஓடிய அறிகுறியே இல்லை. குழப்பம் விளையாடித் திரிந்த அந்த நீர் நிரம்பிய குட்டை இப்போது வெறும் பள்ளமாய் காட்சியளித்தது. அதில் விளையாடிக்கொண்டிருந்த குழப்பத்தைக் காணோம். இப்போது நான் என்ன செய்ய? உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்களேன். மீ தி ஒரே கன்பூசன்!