சீனி வெடி போடுங்கள்!

நீங்களெல்லாம் தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவீர்கள்? மன்னிக்கவும். வெடி போடாதீர்கள். அதனால் சுற்றுச்சூழல் கெடுகிறது, அதில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி பிழிகிறார்கள், காசு கரியாகிறது என்றெல்லாம் சொல்லி உங்களை ஓட வைப்பது என் எண்ணமல்ல. வெடி தீபாவளியின் முக்கியமான ஒரு அங்கமாகும். போடுங்கள். ஏன் என்று கடைசியில் சொல்கிறேன்.

சிறுவயதில் இருந்து வெடி வெடித்தால் தான் தீபாவளி என்ற விஷயம் சால்னாவில் ஊறிக் கிடந்த பரோட்டா போல என் மனதில் ஊறிக் கிடந்தது. பள்ளிக்கல்வி முடியும் தருணத்தில் வெடி வெடிக்காவிட்டால் தான் கவுரவம் என்று மனதில் நினைத்ததுண்டு. எனக்கு கற்பிக்கப்பட்டது அப்படி. ஒரு பட்டாசின் பின்னால் உள்ள உழைப்பும் பயன்பாட்டு பொருளாதாரமும் விளங்காத அந்த வயதில் நான் அப்படி யோசித்தது தவறில்லை என்று நினைக்கிறேன்.

பணமற்று இருந்த நேரங்களில் கை நிறைய வெடிகளை சிலர் கொளுத்திக்கொண்டே இருப்பதை பார்ப்பேன். என் பட்டாசுகள் புஸ்ஸாகிவிடும். மனசு மட்டும் வெடிக்கும். பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நினைத்த வயதில் கையில் பணமில்லை. கையில் பணமிருக்கும் வயதில் பட்டாசு வெடிக்க மனமில்லை. இப்படியே தான் கடந்த பத்து வருடங்கள் கழிந்தன.

தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னமே சிறு சிறு பெட்டிக்கடைகளில் சிறுபட்டாசுகள் கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு பத்து என்று வாங்கி வெடிப்போம். தீபாவளி நெருங்க நெருங்க ஆவல் பெருகி அணைகட்ட முடியா அளவு பொங்கும் போது, வீட்டில் கேட்டு அழுது அதற்காய் அடி திட்டுகள் வாங்கி பிறகு அவர்களால் சமாளிக்க முடியாமல் காசை கொடுத்து வெடி வாங்கி தரும் அன்று ஜென்மம் சாபல்யம் அடையும். வெடி வாங்கினாலும் வெடிக்க முடியாது. தீபாவளி வரை அதை வைத்து அழகு பார்ப்போம். தீபாவளிக்கு முன் தினம் மெல்ல வெடிகள் போட ஆரம்பிப்போம். ஆர்வக்கோளாறில் தீர்த்து விடக்கூடாது. நேர மேலாண்மையையும் வள ஒதுக்கீட்டையும் அப்போதே நமக்கு சொல்லித்தந்தன வெடிகள்.

பிறகு வெடிகளை வகைப்படுத்தி வரிசைப்படுத்தி எந்த எந்த வெடிகளை முதலில் வெடித்து எவைகளை கடைசியில் வெடிக்க வேண்டும் என்ற பட்டியல் மனதினுள் தயார் செய்யப்படும். தனித்தன்மையான வெடி ஏதேனும் அதிர்ஷ்டவசமாக நமக்கு கிடைத்தால் அதுவே கடைசியாய் வெடிக்கப்படும் வெடியாய் இருக்கும். அதற்கு ஊரெல்லாம் சொல்லி நண்பர்கள் எல்லாம் கூடி அனைவரும் நோக்க பற்ற வைப்போம். சில நேரங்களில் அவை எதிர்பாராத பலன் தருபவையாக இருந்ததுண்டு. பகலானால் ஒலி தரும் வெடிகள். டாம் டூம் வெடிகள் அனைத்தும் அதிகாலை ஆரம்பித்து மாலை வரை வரும். இரவானால் ஒளி தரும் வெடிகள். வண்ணமயமாய் நம் வானை மாற்ற முனையும்.  இதற்க்கெல்லாம் மேலாய் சிறிது வெடிகள் பதுக்கப்படும். அவை கார்த்திகை தீபத்திற்காக.

வெடிகளை வெடிப்பதில் பல வகைகள். ஒரு சீனி வெடி பொட்டலம் வாங்கி வைத்துக் கொண்டு அதை ஒவ்வொன்றாய் வெடிப்பதில் நான் அன்று கண்ட சந்தோஷம் இன்று பல வண்ண வானவேடிக்கைகளை காட்டும் வெடிகளை வெடிக்கும் போது இல்லையே. நான் மிக விரும்பியவை சீனிவெடியும் ஓலை வெடியும் தான். வெங்காய வெடி கூட. என்ன இழவுக்கு அதை தடை செய்தார்கள் என்பது நியாபகமில்லை. சீனிவெடியை பிஜிலி வெடி என்று அசிங்கமாகவும் அழைப்பார்கள்.

அதுபோக குருவி வெடி, லட்சுமி வெடி, டபுள் ஷாட், செவன் ஷாட், அணுகுண்டு (“மூணு சுழி ண்-மா”, என் மனைவி பெயர் அனு. அவள் தப்பாக நினைத்துக்கொள்ள கூடாதே. முன்னெச்சரிக்கை), புல்லட் பாம், பாம்பு மாத்திரை, கார்ட்டூன் வெடிகள், சங்கு சக்கரம், ராக்கெட் என்றும் பலவும் வாங்கி வெடிக்க மனம் கிடந்தது தவிக்கும். லட்சுமி வெடியும் புஸ்வானமும், சங்கு சக்கரமும், சனியன் பிடித்த சாட்டையும் மட்டுமே கிடைக்கும். ராக்கெட் யாராவது ஓசியில் கொடுத்தால் உண்டு.

எங்கள் தெருவில் யாரிடம் சீனி வெடி பொட்டலங்கள் அதிகம் உண்டோ அவனே ராஜா! நிறைய சீனி வெடி பொட்டலங்கள் கிடைத்தால் அதிலேயே சிறு சரம் செய்து வெடிப்போம். சிறு சரம் என்றால் ரெண்டு மூணு சீனி வெடிகளை திரி கிள்ளி சேர்த்து சுற்றி பின் வெடிக்க விடுவது. முதல் வெடி வெடித்த பின் மற்றவை சிதறி கண்ட இடத்தில் வெடிக்கும். அதில் இருந்து தப்பிப்பதில் அலாதி இன்பம். பிறகு அவை சிதறி வெடித்ததால் கிடைக்கும் திட்டுக்களை தவிர்க்க அவற்றின் மேல் ஒரு சிரட்டையை கவிழ்த்தி வைப்போம். அது வெடித்து எவன் மேலாவது போய் விழுந்து தொலையும் போது எங்கள் வெடி வைபவம் ஒரு தற்காலிக முடிவை சந்திக்கும்.

அதிகாலை எழுந்து முதல் வெடி வெடிப்பது என்ன ஒரு சுகம். நாலு மணிக்கு எழுந்து எண்ணை வைப்போமா இல்லையோ வெடியை திரி கிள்ளி பற்ற வைப்போம். அடுத்த வீட்டுக்காரன் அலறி எழுவதில் அப்படியோர் ஆனந்தம் கண்டோம். இரவானால் மொட்டை மாடிக்கு போய் பணமுள்ளவர் வெடிக்கும் வான்வெடிகளை வேடிக்கை பார்த்தே பொழுது போகும். இன்றேன்னவோ மாலை முழுவதும் டிவியில் வரும் புதிய திரைப்படங்கள் ஆக்ரமித்து கொள்வதால் எனக்கு மொட்டை மாடிக்கு போக துணையொன்று இல்லை.

மாலை வரை திரி கிள்ளி திரி கிள்ளி விரல் நுனிகள் எல்லாம் கருப்படைந்து வெடி மருந்து அப்பிக் கிடக்கும். திரி கிள்ளாவிட்டால் வெடி சீக்கிரம் வெடித்து விடும். ஓட நேரம் இருக்காது. ராக்கெட்டுக்கு மட்டும் நான் திரி கிள்ள மாட்டேன். அதான் திரி மிகவும் மிருதுவானது. சற்று பலமாக இழுத்தால் கையோடு வந்து விடும். அப்பறம் ராக்கெட்டை ஷோ கேசில் தான் வைக்க வேண்டும். அணுகுண்டு திரியும் கிள்ளுவதில்லை. நீளம் அதனது திரி. கிள்ளி விட்டால் வெடிக்க ஒரு மாமாங்கம் ஆகும்.

இவையெல்லாம் என் மனதின் அடிஆழத்தில் ஒளிந்து கிடந்த நினைவுகள். வெடியோடு எனக்குள்ள தொடர்பை புதுப்பிக்க நான் உங்களுக்கு காரணம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நான் சிறுவயதில் அனுபவித்த அந்த சிறு சிறு சுகங்களை என் பிள்ளைக்கும் கொடுக்க வேண்டும் என்பது நான் சிறுபிள்ளையாய் இருந்த காலத்தே செய்யப்பட்ட ஒரு முடிவாகும். ஆகையால், மிக யோசித்து இந்த தீபாவளிக்கு வெடி வெடித்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். நானும் என் உறவுகளும் சிவகாசிக்கு அருகே சென்று ஒன்பதாயிரம் ரூபாய்க்கு வெடிகள் வாங்கி வந்தோம். சீனி வெடி வாங்கவில்லை. அது என் பிள்ளை சற்று பெரியவன் ஆனதும் இருவரும் சேர்ந்து வெடிப்போம். இப்போதைக்கு அவனால் ஒழுங்காக பார்க்க ரசிக்க முடியாது. ஆனாலும் பழக்க வேண்டும். பொத்தி பொத்தி வைக்க பிள்ளை என்ன பாங்க்கில் வைத்த தங்கமா?

வெடி போடுங்கள். நாலு குடும்பம் நன்றாக வாழும். வாழ்த்தும். சுற்றுச்சூழல் கெடுமே என்ற போலி கவலை உங்களுக்கு வேண்டாம். அவ்வளவு அக்கறை இருந்தால் நெகிழித்தாள், வாகனம் போன்றவற்றை அதிகம் உபயோகிக்காமல் தண்ணீர், மின்சாரம், கல்நெய் சேமித்து வாழப் பழகவும். நீங்கள் ஒரு நாள் வெடி வெடித்து மகிழ்ந்தால் ஓசோனில் ஓட்டை விழுந்து விடாது. நீங்கள் மனிதப்பக்கிகளாக தனி மனித ஒழுக்கத்தை எல்லாவற்றிலும் பேணி வந்தால் இயற்கை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். பட்டாசுக்கு மட்டும் ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மை?

காசு கரியாகிறது என்பதெல்லாம் உங்கள் சாக்கு. பிள்ளைகள் சந்தோஷத்திற்கு முன் உங்களுக்கு காசு ஒரு கேடா?

பாதுகாப்பாய் வெடி போடுங்கள். வயதானவர்கள், கைக்குழந்தைகள், உடல்நிலை சரியில்லாதோர் அருகிலிருந்தால் தயவு செய்து ஒலி உண்டாக்கும் வெடி வகைகளை தவிர்க்கவும். காவல்துறை சொல்லும் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கவும். உங்கள் பொறுப்பின்மையால் உங்களை காயப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. பிறரை காயப்படுத்தும் உரிமை யாருக்கும் அறவே கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெடி வாங்கும் காசை தானம் செய்கிறேன் என்று ஒருவர் வாய் சோற்றை பிடுங்கி இன்னொருவர் வாயில் போடாதீர்கள். தனித்தனியே கொடுங்கள். கை வலிக்காது.