ஒரு பாட்டில் டொரினோ

சரியாக, மிகச்சரியாக இருபத்து மூன்று நாட்களுக்கு முன்னே, நான் ஒரு வெயில் கொளுத்திய மதிய வேளையில் குளிர்பானம் தேடி அலைந்தேன். வீடு காலி செய்யும் வேலை நடந்து கொண்டிருந்தது. வீடு ஏன் காலி செய்யப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழும். வீடு காலி செய்யப்படும் நேரம் ஆகி விட்டதன் காரணத்தால் அது காலி செய்யப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்.

குளிர்பானம் எனக்கு பிடிக்காது. இருந்தாலும், வெயில் கிளப்பிய சூட்டின் காரணமாக வழிந்த வியர்வையினால் உண்டான தாகத்தினை தணிக்கும் பொருட்டு எப்போதேனும் சிறிது அருந்துவதுண்டு. சில நேரங்களில் மது அருந்தும் பொருட்டு குளிர்பானம் அதனுடன் சேர்த்து அருந்தியதுண்டு. ஆயினும் குளிர்பானம் எனக்கு பிடித்ததில்லை.

எனக்கு குளிர்பானங்கள் பிடித்த காலம் ஒன்று இருந்தது. மறவோனாய், திறவோனாய், விடலையாய், காளையாய் திரிந்த பருவம் அது. அப்போது குளிர்பானம் குடிப்பது மதிப்பிற்குரிய ஒரு பழக்கமாக எனக்கு தோன்றியதுண்டு. அதன் காரணமாகவே நான் அவற்றை அருந்த ஆரம்பித்தேன். அதற்கு முன் குளிர்பானங்களோடு எனக்கு இருந்த ஒரே தொடர்பு எங்கள் வீட்டிற்கு உறவினர் வரும் போது அதை வாங்கி வந்து அவர்கள் பருகுவதை உற்று நோக்கி சப்புக்கொட்டுவதே ஆகும். மிகவும் அதிர்ஷ்டமான சில நேரங்களில் எனக்கும் சில கோப்பைகள் பருகக் கிடைத்ததுண்டு.

கல்லூரி வந்த காலத்தில் எங்களுக்கு கலவைக்கு கிடைத்தவை பெப்சியும் கோக்குமே. அப்போதெல்லாம் எனக்கு சந்தேகம் ஒன்று வந்ததுண்டு.. இவை எல்லாம் கிடைப்பதற்கு முன் நம் மக்கள் சாராயத்தை எதனுடன் கலந்து உண்டு வந்தனர் என்று. இன்று யோசித்து பார்த்தால் தெரிகிறது – ஏன் நமது அரசு உலகமயமாக்கலை தொடர்ந்து ஆதரித்து வந்ததென்று. அப்படியே குடித்த சாராயத்தை கூட கலந்து குடிப்பதற்கு வந்தேறிகள் வழிவந்த பானங்களை நாம் உபயோகிக்கும் நிலை வந்து விட்டதே.

அந்த உறவினர் வரும் காலத்தே கிடைத்து வந்த குளிர்பானங்கள் யாவுமே இன்று காணக்கூட கிடைப்பதில்லை. குடிப்பது இரண்டாம்பட்சமே. இன்றும் உறவினர் வந்தால் ஓடிப்போய் குளிர்பானம் வாங்கி வரும் கிராமத்து பண்பாடு மாறவில்லை என் வீட்டில். ஆனால் வாங்கி வரும் குளிர்பானம் மட்டும் மாறிப்போனது. அழகான ஆரஞ்சு நிறத்தில் கிடைத்து வந்த டொரினோவும் கோல்ட் ஸ்பாட்டும் காணமல் போனது. காளிமார்க் மட்டுமே இன்றைய கடும் போட்டியில் போவோண்டோ மூலமும் பன்னீர் சோடா மூலமும் மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கிறது.

டொரினோ அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த காலத்தில் அதை பற்றிய அருமை தெரியாமல் கோக்கும் பெப்சியுமான விஷங்களை அருந்திக்கொண்டிருந்த எனது மடமை எப்போது என்னை விட்டொழிந்து போனது என்றெனக்கு தெரியவில்லை. ஆயினும் கல்லூரி முடித்த காலத்தில் இருந்து எனது முதன்மையான பானம் போவோண்டோவாகிப் போனது. டொரினோ கிடைக்கவில்லை அப்போது. கோல்ட் ஸ்பாட் மாயமாய் மறைந்து போனது. இன்று முதுமகனாய் தேடி பார்க்கிறேன். இவையெல்லாம் எளிதாய் கிடைப்பதில்லை.

இன்று இவைகள் அழிவின் விளிம்பில் தத்தளித்தாலும் அது மீண்டு வரும் என்ற நம்பிக்கை உண்டு.  இரண்டு மாதங்களுக்கு முன்பு என் தங்கை எனக்கு ஒரு டொரினோ பாட்டில் பரிசளித்தாள். என் நண்பர்கள் எனக்கு வழங்கிய க்லேன்லிவட் 21 வருடங்கள் வாற்றப்பட்ட ஸ்காட்ச்சை விட பெரிய பரிசாக அந்த டொரினோ பாட்டில் எனக்கு தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன், திருநெல்வேலியில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அதில் வந்த ஒரு அலைவரிசையில், அந்த பழைய டொரினோ விளம்பரம் புது பொலிவுடன் ஓடிக்கொண்டிருந்தது. இளமையான விக்ரம் நடித்த விளம்பரப்படம் அது.

இன்றும் எனக்கு சில கேள்விகள் எழுவதுண்டு. நமது மக்கள் தயாரித்த அந்த பானங்களில் இல்லாத எந்த சுவையை நாம் இந்த வந்தேறிகள் கொடுத்த அக்காமாலாவிலும் கப்சியிலும் கண்டு விட்டோம்? நாக்கில் பட்டதும் ஜிவ்வென்று அன்னத்தை குளிர்வித்து இரைப்பையில் இறங்கும் வரை குளிர் தெரியும் டொரினோவையோ போவோண்டோவையோ இவைகள் மிஞ்சி விட்டனவா? இயற்கையான சர்க்கரை சேர்த்து காற்றின் அழுத்தம் ஏற்றி வந்த பன்னீர் சோடாவின் சுவையையோ சீரணிக்கும் ஆற்றலையோ 7 அப்போ மவுன்ட்டன் டியூவோ தருமா?

எதன் பின்னால் நாம் இப்படி அலைகிறோம்?

இன்றும் போவோண்டோவை மட்டுமே குளிர்பானமாய் கருதும் நண்பர்கள் எனக்குண்டு. மதுரை சென்றால் ஜிகர்தண்டாவும் பிற ஊர்களுக்கு சென்றால் கிடைக்கும் சர்பத்தும், இதர சில பானங்களும் நமக்கு வேறெங்கும் கிடைப்பதில்லை.

முடிவாய் ஒன்று சொல்கிறேன். இவை அழிவதற்கு முன் இவற்றை ருசித்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் வாழ்வில் நீங்கள் ஒரு முக்கியமான சுவையை அறியாதவராகி விடுவீர்கள்.

அது சரி. எனது தேடல் என்னவானது என்றதற்கு பதில் உங்களுக்கு இப்போது தேவை இல்லாததாகி விட்டது. ஆயினும் சொல்கிறேன்.. எனக்கு கிடைத்தது ஒரு பாட்டில் டொரினோ. முழு பாட்டிலையும் குடித்து விட்டு குப்புற கவிழ்ந்தேன்.

Advertisements

12 thoughts on “ஒரு பாட்டில் டொரினோ

 1. பவண்டோ மிகச் சிறந்த விசிறிகளை கொண்டது. இன்னும் பன்னீர் சோடா சென்னைப் போன்ற நகரங்களில் கிடைக்கின்றது. என்னதான் இருந்தாலும் ஊரில் வெயிலில் ஆடிய பிறகு குடிக்கும் பன்னீர் சோடாவின் சுவையை எந்த அக்கமாலாவும் கப்சியும் குடுக்க இயலாது. எவ்வளவு பெரிய நடிகர் அதை விளம்பரப்படுத்தினாலும், 2 ருபாயில் நம் தாகத்தைத் தீர்த்த பன்னீர் சோடாவின் சுவை கிடைக்காது. நம் மனதின் சற்று உள்நுழைந்தது பார்த்தால், பன்னீர் சோடாவை முடிக்கவே தயங்கிய மனம் பெப்சியையும் புருட்டியையும் கசக்கித் தூர எறியவே துடிக்கின்றன.

 2. லைக்கு! போவண்டோவை சுவைத்தவர் வேறு எதையும் சுவைக்க மாட்டார்கள். தம்ஸ் அப் கோகோ கொலாவிர்க்கு கொடுத்த அடி நினைவிற்கு வரவேண்டும் அனைவருக்கும். 🙂

 3. மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் நம்ம பன்னீர்சோடாவும், பவண்டோவும் இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றுவருகிறது. பன்னீர்சோடா செவன்அப் போல பிளாஸ்டிக் பாட்டில்களில் கிடைக்கிறது. மேலும், ஆரஞ்சு சுவை பானம் ஒன்றைப் புதிதாக காளிமார்க் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அன்றெல்லாம் காய்ச்சல் என்றால் டொரினோதான் வாங்கி கொடுப்பார்கள். அதற்காகவே காய்ச்சல் வரணும் என்று நினைத்த காலம் உண்டு. பவண்டோ விளம்பரத்தில் உள்ள வாசகம் கொண்டாடும் சுவைகளில்’. அது எவ்வளவு உண்மை. மதுரை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. பீட்சா வந்தாலும் பணியாரம் சூடாக மதுரையின் எல்லாப் பக்கமும் கிடைக்கிறது..

  • சரியாக சொன்னீர்கள் மதுரை வாசகன். நீண்ட நாட்களாய் உங்கள் பதிவுகளை படிக்கும் வாசகன் நான். மதுரை எனது சொந்த ஊர். பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே.

   ஒரு நாள் போவோண்டோ குடித்துக் கொண்டே வரலாறு பேச சீக்கிரம் சந்திப்போம்.. 🙂

 4. //நான் ஒரு வெயில் கொளுத்திய மதிய வேளையில் குளிர்பானம் தேடி அலைந்தேன். வீடு காலி செய்யும் வேலை நடந்து கொண்டிருந்தது.//

  இப்படி ஒரு சூழலில் அன்று நான் அடித்தது, கொரோனா (Mexican) பியர். சிறு துண்டு எலுமிச்சையை வெட்டி உள்ளே போட்டு சிப் அடித்தால்…. டிவைன்!

 5. //கோல்ட் ஸ்பாட் மாயமாய் மறைந்து போனது. இன்று முதுமகனாய் தேடி பார்க்கிறேன். இவையெல்லாம் எளிதாய் கிடைப்பதில்லை.//

  கோல்ட் ஸ்பாட், தம்ஸ் அப், லிம்கா மூன்றும் Parle Foods Ramesh Chauhanஆல் துவங்கப்பட்டது. 1993-ல் கோக் இந்தியாவில் திரும்ப வந்ததும் இப்பிராண்டுகளை வாங்கியது. லிம்கா, கோல்ட் ஸ்பாட் பிராண்டுகள் ஒழிக்கப்பட்டு பதிலாக ஃபாண்டா, 7அப் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் தம்ஸ் அப் பிராண்டு மாத்திரம் தாக்குப்பிடித்து தம்கட்டி ஓடிட்டிருக்கு.

  http://en.wikipedia.org/wiki/Thums_Up
  http://en.wikipedia.org/wiki/Gold_Spot

  • பின்னூட்டத்திற்கு நன்றி.

   தம்ஸ் அப் மற்றும் டொரினோ எளிதாய் கிடைக்கிறது.

   வோட்காவிற்கு லிம்காவை கலந்து அடித்தால் சூப்பராய் இருக்கும். என்ன செய்ய. லிம்காவிற்கு பதில் இப்போது நிம்பூஸ் தான் கிடைக்கிறது. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s