வாசல் வாசம் வாழ்க்கை!

நேற்று முன்தினம் வீட்டு வாசலில் படுத்திருந்தேன். அப்போது தான் ஆறிப் போன இரண்டு இட்லிகள் உண்டுவிட்டு சிறிது பால் அருந்திவிட்டு திண்ணையில் கண் அயர்ந்தேன். வாசலில் வீட்டு உரிமையாளரின் மனைவி வரைந்த பெரும் கோலம் பலர் காலில் மிதிபட்டு அலங்கோலமாய் மாறிக்கிடந்தது. நான் உண்ட மயக்கத்தில் அரைக்கண் மூடி அரைக்கண் திறந்து தெருவில் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மீன்வாசம் மூக்கை துளைத்தது. குழம்பா இல்லை பொறித்த மீனா என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. பொறித்த மீன் எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதுவும் மதுரை, நெல்லை பக்கங்களில் செய்வது போல் நன்றாக மசாலாவில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து நன்கு சூடான எண்ணையில் வறுத்து எடுத்த மீனை நினைக்கும் போதே நாக்கில் நீர் ஊறுகிறது. பொறித்த மீனின் சுவைக்கனவிலே அரைக்கண் தூக்கத்திலே வாசம் மூக்கை துளைக்க படுத்து கிடந்த நான் மெல்ல கண் விழித்தேன்.

நான் இருந்த வீடு மூன்று குடும்பங்களை உள்ளடக்கியது. மூன்றும் தனிக்குடித்தனங்கள். நான் முன்னாலே ஒரு சிறிய அறையில் தங்கி இருந்தேன். மூன்று வீட்டிற்கும் ஒரே வாசல். அந்த வீட்டில் எந்த வீட்டில் மீன் சமைத்தாலும் வாசம் அந்த ஒரு வாசல் வழியே தான் வெளியேற வேண்டும். நேற்றும் இப்படித்தான். இரவில் மீதம் இருந்த பழைய சோறைத் தின்றுவிட்டு படுத்திருந்த போது பக்கத்து வீட்டில் சூடான பரோட்டா வாசம் மூக்கை துளைத்தது. என்ன செய்வது? மனம் உண்டு. மார்க்கம்தான் இல்லை.

நான் கண் விழித்ததை பற்றி சொன்னேனில்லையா. கேட் கதவு திறக்கும் சத்தம் கேட்டு தான் கண் விழித்தேன். கால்சட்டையும் கலர் பனியனும் அணிந்த ஒரு இளைஞன் மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தான். இதற்கு முன் அவனை நான் அங்கு பார்த்ததில்லை. இதில் இன்னொரு குழப்பம் உண்டு. இந்த ஒரு கேட் கதவு தலா மூன்று வீடுகளைக் கொண்ட இரண்டு வீடுகளுக்கு பொதுவானது. இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் அநாவசியமான கேள்விகளை தவிர்க்க உதவும்.

அந்த இளைஞனை பார்க்க மிகவும் சந்தேகமாக இருந்தது. அவனும் அடி மேல் அடி எடுத்து வந்து மெல்ல வீட்டு ஓனர் வீட்டுக்கு அருகில் வந்தான். யாரும் இல்லையென்று எண்ணி வந்தவன் அங்கே கால் நீட்டி படுத்துக்கொண்டு பார்த்திருந்த என்னை பார்த்தவுடன் ஸ்தம்பித்து நின்று விட்டான். பிறகு, என்னை பார்த்து மெல்ல புன்னகைத்தான்.

இவன் கொள்ளைக்காரனா இல்லை கொலைகாரனா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு குரல் கொடுத்து அனைவரையும் அழைக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எனக்கு. அவன் திருடிவிட்டோ கொன்றுவிட்டோ போய் விடுவான். பின் எவன் அலைவது, அடி வாங்குவது, அவப்பெயரோடு வாழ்வது.. உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உங்களது சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தாலும், நடந்த பிறகு உலகம் உங்களை ஒரு சந்தேகக்கண்ணுடனே பார்க்கும்.

போன வாரம், பக்கத்து தெருவில் ஒரு கொலை நடந்தது. தனியாக வீட்டில் இருந்த ஒரு பெண்ணை ஒருவன் வன்புணர்ந்து அவளது நகைகளை களவாடி விட்டானாம். அப்போது வீட்டில் வேறு ஆட்கள் இருந்த போதும் வேறு வீட்டில் ஆட்கள் இருந்த போதும் அவன் எப்படி களவாண்டான் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடலாம். ஆனால் அதனால் மனைவியை இழந்த அந்த பக்கத்து தெரு வீட்டுக்காரர் இப்படித்தான் சம்பவம் நடந்த போது குரைக்காமல் இருந்த நாயை அரிவாளால் ஒரு போடு போட்டு கொன்று விட்டாராம். ரிஸ்க் எதற்கு. குரைத்து தொலைப்போம் என்று குரைத்து விட்டேன். அவன் ஓடியே போய்விட்டான்.

மதியம் ஒரு பொறித்த மீனை எனக்கு போட்டாள் அந்த வீட்டு ஓனரம்மா..

Advertisements

4 thoughts on “வாசல் வாசம் வாழ்க்கை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s