கொண்டக்கடலை சமோசாவும் ஒரு கப் ரோஸ்மில்க்கும்

நெல்லை கடைவீதியில் இருட்டு கடை அல்வா கடைக்கு மிக அருகில் உள்ள இருட்டான சந்தில் எதுவுமில்லை. அதற்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் சிறு பிள்ளைகள் படிக்கின்றனர். சிறு பிள்ளைகள் இடைவேளையில் அல்வா வாங்கி சாப்பிடுவதில்லை. அவர்களும் மாங்காயும், பிங்கர் அப்பளமும், கடுக்காயும், இலந்தைப்பழமும், கம்மர்கட்டும், மற்றும் சிலவும் கிடைத்தாலும் அவர்கள் அல்வா வாங்குவதில்லை. நெல்லையப்பர் கோவிலுக்கு வரும் வெளியூர் பிரயாணிகள் கம்மர்கட்டையும், கடுக்காயையும் கண்டு கொள்ளாமல் அல்வா வாங்கி தின்பதிலேயே என் முழு கவனம் உள்ளது. நான் பள்ளிச்சிறார்களை கண்டு கொல்வதில்லை. ஏனெனில் என் மனம் முழுதும் சமோசாவும் ரோஸ்மில்க்குமே உள்ளது.

கொண்டக்கடலை போட்டு சமோசா செய்வது வெங்காயமும் சேர்த்து. வெங்காயம் இன்றி செய்யப்பட்ட சமோசா விலை போனாலும், அது விலை அதிகம் என கருதப்படும். வெங்காயம் விலை குறைப்பிற்கான ஒரு காரணமாயினும் அது சமோசாவின் சுவையை அதிகரிக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. வெங்காயம் அற்ற கொண்டக்கடலையை மட்டும் உள்ளடக்கிய வெள்ளை சமோசா சுவைக்கும் போது சுவையற்று மாவை சவைப்பது போலும் இருப்பது இயற்கையின் திருவிளையாடல் அன்றி வேறென்ன?

ரோஸ்மில்க் குடிப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா என்று கேள்வி எழுப்பினால், முன் வரிசையில் நின்று நல்லதே என்று உரக்க கத்தும் கூட்டத்தில் உள்ள இருவர் ரோஸ்மில்க்கே குடித்ததில்லை. அதேபோல் கெட்டதே என்று கத்தும் கூட்டத்துள் இருக்கும் மூவர், யாரும் காணாத போது திருட்டுத்தனமாய் ரோஸ்மில்க் குடிக்கும் சுவை அறிந்தவர்களாய் இருக்கலாம். இது உண்மையில் ரோஸ்மில்க் பற்றிய ஒரு பதிவே. ஆனாலும் வெங்காயமும் கொண்டக்கடலையும் சேர்ந்த சுவை மிகுந்த சமோசா ஒரு பதிவில் அதற்கான இடத்தை எடுத்துக்கொள்கையில் அதை மறுக்கும் அதிகாரம் எனக்கு இல்லாமல் போய் விட்டது.

மின்னல் வெட்டும் ஒரு மழை இல்லாத நாளின் பகலில், போத்தீசில் மஷ்ரூம் வாங்க போன எனக்கு, இந்த சமோசாவும் ரோஸ்மில்க்கும் பரிச்சயமானது ஏதோ காரணத்தின் காரணமாகவே. சமோசா சாப்பிட்டு ரோஸ்மில்க் குடித்த இரவில் மின்னல் வெட்டி மழை பெய்யாதது யார் செய்த குற்றமோ? மின்னலுக்கும் வெங்காயம் சேர்த்த சமொசாவுக்கும் ஏதேனும் தொடர்புண்டோ? கொடும் மின்னலோடு கூடிய கொட்டும் மழை இரவில் சூடான சமோசா உண்பதில் உங்களுக்கு எவ்வளவு இன்பமுண்டோ, அந்த இன்பம் எனக்கும் உண்டு. ஆனால் மழை நாளில் உண்ணப்படும் ஒரு சமோசாவிற்க்கும் பளீரென்று வெயில் சுடும் நேரத்தில் குடிக்கப்படும் ஒரு ரோஸ்மில்க்கிற்க்கும் என்னவொரு இன்பம் இருக்கும்? சமோசா உண்ணப்படுவதும் ரோஸ்மில்க் குடிக்கப்படுவதும் அவற்றின் அழிவா இல்லை ஆக்கமா?

பதிலில்லை என்னிடம்.

ஆனால் எடுக்க எடுக்க குறையாத வெங்காயம் நிரம்பிய சமோசாவும் அதீதமாக குளிரூட்டப்பட்ட ரோஸ்மில்க்கும் என்னிடம் நிறைய உண்டு. அவைகளை நான் என் கனவிலிருந்து தானே தருவிக்கிறேன்.

4 thoughts on “கொண்டக்கடலை சமோசாவும் ஒரு கப் ரோஸ்மில்க்கும்

    • கண்டிப்பா. பேயொன் எனது இன்ஸ்ப்பிரேஷன் என்று சொல்லலாம். பெரிய பெரிய இயக்குனர்கள் சொல்வது போல, இது ரீமேக் அல்ல, ஒரு தழுவலே. ஆயினும், இதனுள் எனது கலர்க்கனவுகளை நான் கரைத்து ஊற்றி இருக்கிறேன். 🙂

    • நன்றி தனபாலன். 🙂 உங்கள் ரசனைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி. 🙂

Leave a reply to Dr.Rajanna Cancel reply