மலேசியன் பரோட்டா பாயிண்ட் – மடிப்பாக்கம்

புரோட்டான்னா நமக்கு உசுரு. புரோட்டா திங்காத மதுரைக்காரனும், அல்வா திங்காத நெல்லைக்காரனும், ப்ரைட் ரைஸ் திங்காத மெட்ராஸ்காரனும் நல்ல வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.

நான் எந்த ஊருக்கு போனாலும் அங்க பரோட்டாவும் சால்னாவும் தேடி அலைவேன். நெறைய ஊருல ஏகப்பட்ட கண்பீசன் ஆகிருக்கு. மொத மொதல்ல மெட்ராஸ் வந்து கடைல போயி உட்காந்துகிட்டு ரெண்டு புரோட்டா ஆர்டர் பண்ணினேன். பரோட்டா மட்டும் கொண்டு வந்து வச்சிட்டு போய்ட்டான். என்ன கருமம் இது.. சால்னா குடுங்க பாஸுன்னு கேட்டா முழிக்கிறான். அப்பறம் தான் தெரிஞ்சுச்சு – மெட்ராஸ்ல எல்லாரும் சால்னாவ சேர்வான்னு சொல்லுவாங்கேன்னு.

நம்ம கதைக்கு வரேன். ரொம்ப நாளா நல்ல புரோட்டா மெட்ராஸ்ல எங்க கெடைக்கும்னு தேடியும் நல்ல கடை எதுவும் கெடைக்கல. அப்போதான் மடிப்பாக்கத்துக்கு வீடு மாத்தி போனேன். அங்க ஒரு நாள் நைட் சாப்பாடு தேடி அலைஞ்சப்போ பாத்தது தான் இந்த மலேசியன் பரோட்டா பாயிண்ட்.

பூராம் மலேசியன் அயிட்டங்கள். ஆளுங்களும் மலேசியாவுல செட்டில் ஆன தமிழ் ஆளுங்க தான். இவங்க கிட்ட இருக்கதுலயே நல்ல அயிட்டம், அவங்க போடுற சிலோன் புரோட்டா தான். அடுத்து அவங்க போடுற மலேசியன் லெக் ப்ரை. ரெண்டும் அவ்ளோ அருமை. சிலோன் புரோட்டா 60 ரூபாவும் லெக் ப்ரை 80 ரூபாவும் ஆச்சு. முதல் தடவை சாப்பிட்டு அப்புறம் நெறைய தடவ போனேன்.

ஒரே பிரச்சனை – அங்க உட்காந்து சாப்புட பெரிய எடம் கெடையாது. மிஞ்சி போனா ஒரு 6-8 பேரு உட்காந்து சாப்புடலாம். ஏ.சியும் இல்ல. அதனால நான் எப்போவுமே பார்சல் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து சாப்புடுவேன்.

அடிக்கடி லீவு வேற விட்டுர்றாங்க. ஆனாலும் அந்த சுவை என்னை தேடி தேடி போக வைக்குது. நெறைய அயிட்டம் இருக்கு மெனுவுல.

சிக்கன் புரோட்டா, மட்டன் புரோட்டா, சிக்கன் கடுகு, வாழைப்பழ புரோட்டா, கொத்து புரோட்டன்னு – புரோட்டா வெறியர்களுக்கு ஒரு வேட்டை தான்!

எடம் ரொம்ப சின்னது. கரக்டா மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்ல இறங்குனா எதுத்தாப்புல இருக்கும். நல்லா விசாரிங்க, நல்லா சாப்புடுங்க! என்ஜாய்.

கொடுமை என்னன்னா, அங்க நெறைய தடவ சாப்புட்டு இருக்கேன்.. ஆனா ஒரு தடவ கூட எதையும் போட்டோ எடுக்கவே இல்ல. சீக்கிரமே எடுத்து போடணும். Smile

அணு உலை தேவையா?

அணுஉலை ஆதரவும் எதிர்ப்பும் அற்ற மனநிலையிலேயே இருந்து வந்த நான், மக்களின் வீரியமிக்க போராட்டத்தின் வாயிலாகவும், அரசின் அடக்குமுறை போக்கிற்கு எதிராகவும், அனுஉலைகளால் ஏற்படும் ஆபத்துக்களை முழுக்க அறிந்து கொண்டதாலும், இன்று முதல் அணுஉலை எதிர்ப்பு நிலைப்பாடு எடுக்கிறேன்.

ஆயிரம் வழிகள் உண்டு ஆற்றலை பெருக்க. ஆயினும், அழிக்கும் அணுஉலைகளே ஒரே வழி என்னும் அரசின் வாதத்தை அறவே என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. அணுஉலைகளால் உலகெங்கும் நடந்துள்ள விபத்துக்களின் மூலம் பாதிப்படைந்த மக்களின் புகைப்படங்கள், பேட்டிகள், அறிஞர்களின் ஆய்வறிக்கைகள் எல்லாம் இருக்கும் போதும், அணு உலை ஒன்றே தீர்வு என்றும், அதற்கு மக்கள் வழிவிட வேண்டும் என்றும் கூறும் அரசின் கூற்றுக்கு, நியாயம் எங்கனம் கற்பிப்பது?

சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெருக்கி மற்ற மாநிலங்களுக்கு அதை விற்பனை செய்த குஜராத் ஒரு பக்கம். அந்த மின்சாரத்தை காசு குடுத்து வாங்கினாலும் அதை இங்கு எடுத்து வர இயலாத அளவுக்கு கட்டமைப்புள்ள தமிழ்நாடு மற்றொரு பக்கம். இந்தியாவில் பல மாநிலங்கள் மின்மிகை மாநிலங்கள். அவை அணுசக்தியால் அந்த நிலையை அடையவில்லை.

ஆகையினால், அணு உலை ஒன்றே தீர்வு என்று கூறும் இந்த மத்திய அரசின் போக்கும், அதை ஆதரிக்கும் மாநில அரசின் கொள்கையும், தரகின் பாற்பட்டது என்றே நான் அவதானிக்க வேண்டியுள்ளது. அணு உலைகளை பற்றி நான் சில காலமாய் படித்து வந்த போதிலும், ஒரு ஆதரவு நிலையோ, இல்லை எதிர்ப்பு நிலையோ எடுக்கும் முன், அதை பற்றிய எனது அறிவை செறிவு செய்து கொண்டு, பிறகு ஒரு முடிவு எடுப்பதே சிறந்தது என்று நான் அனுமானித்தேன். அதன் பொருட்டு, பல புத்தகங்கள், பல கருத்தாய்வுகள், பல கட்டுரைகள் படித்து விட்டே இந்த எதிர்ப்பு நிலையை நான் எடுக்கிறேன்.

20 வருடங்கள் கழித்து, தமிழகம் சுடுகாடாய் போக வேண்டிய நிலைமை வரலாம். அணு உலையில் விபத்தென்றால், அதற்கு இழப்பீடு தரப்படும் என்றால், அதை வாங்கி வைத்து, அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நிலத்தில் வைத்து என் செய்வது? யார் செய்வது?விவசாயமா? நடவா? மீன் வளர்க்கவா? ஆடு வளர்த்தாலும் அது வளருமா? அதன் வளர்ச்சி வரம்பிற்குட்பட்டு இருக்குமா? இயற்கை இதையெல்லாம் தாங்குமா?

நாம் எது செய்தாலும், அதை விற்க முடியாது. அதுவே நிஜம். இழப்பீடு என்பது ஒரு கண்துடைப்பே. அதை ஒருவரும் தரப்போவதில்லை. அதை பெறவும் ஒருவரும் இருக்கப்போவதில்லை.

பிற முறைகளில் மின்சாரம் தயாரிப்பதில் நாம் நம் கவனத்தை செலுத்தினால், நிலைமை மாறலாம். அணு உலை வேண்டாம் என்ற எண்ணம் நிறைவேறலாம். அதுவரை, போராட்டமே வழி.

நான் இதற்காக படித்த சில புத்தகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் எங்கேனும் பதிவேற்றி விட்டு அந்த முகவரியை பகிர்கிறேன். நன்றி.