நேற்று நெல்லை விரைவு வண்டியில் பயணம். உடன்வந்தோர் என் நண்பன் சுந்தரும், அவன் மனைவி கார்த்திகாவும், அவர்களது குட்டி பாப்பா காந்திமதியும். கிட்டத்தட்ட மூன்று வயதாகிறது அவளுக்கு.
எப்போதும் புத்தகங்களிலேயே கழியும் எனது ரயில் பயண இரவுகள், நேற்று சற்று வித்தியாசப்பட்டது. நானும் சுந்தரும் அமர்ந்து காந்திமதியுடன் பேசிக்கொண்டே வந்தோம். எங்கள் பரிபாஷையின் நோக்கம் எதுவுமில்லை. ஒரு குழந்தையின் மனதை புரிந்து கொள்ளும் என்னமோ, மழலைக்கு எதையும் புரிய வைக்கும் எண்ணமோ, எதுவுமில்லை. வாழும் உலகம் ஒன்று தான் என்றாலும் காணும் உலகம் வேறு வேறு என்று அருமையாய் புரிய வைக்கும் மழலை மொழி இன்னும் எனக்கு பிடிபடவில்லை. அதை அறிந்து கொள்ளும் தேடலே நான் மழலைகளோடு பேசும் பேச்சுக்கள். இன்னும் பேச வேண்டும்.. அதுவரை மழலை மொழி அறியேன்.
அவளோடு நானும் சுந்தரும் பேசிய சில கீழே:
நான்: சென்னைல உங்க வீடு எங்க இருக்கு?
பாப்பா: மேடவாக்கம்ல.
நான்: இப்போ எந்த ஊருக்கு போற?
பாப்பா: திருனேவேலிக்கு.
நான்: திருநெல்வேலில ஆரு வீட்டுக்கு போற?
பாப்பா: சியாமளாச்சி வீட்டுக்கு.
நான்: உன் சொந்த ஊரு எது?
பாப்பா: சென்னைவாக்கம்.
நான் முழிக்க….
சுந்தர்: சென்னையும் மேடவாக்கமும் சேர்ந்துட்டு..
அடுத்தது..
நான்: நீ அடம் பிடிச்சு அழுவியா?
பாப்பா: மாட்டேன்..
சுந்தர்: பொய் சொல்றா.. அவங்க அம்மாவ தூக்க சொல்லி அழுவா.
பாப்பா: ஆமா.
நான்: தூக்கச் சொன்னா தூக்குவாங்கல்ல.. அதுக்கு எதுக்கு அழுவுற?
பாப்பா: அழுதா தான் அம்மா தூக்குவா.
இதற்கு பிறகு, நான் என் மனைவியிடம் போன் பேசிக் கொண்டிருந்தேன். கை நீட்டி போன் வாங்கியவள் என் மனைவியிடமும் பேசினாள்.
பாப்பா: உங்க பேரு என்ன?
மனைவி: அனுஷ்யா. உன் பேரு என்ன?
பாப்பா: காந்திமதி. தம்பி நல்ல இருக்கானா?
மனைவி: நல்லா இருக்கான். நீ எப்டி இருக்க?
பாப்பா: நான் நல்லா இருக்கேன்.
இப்படியே ஒரு ஐந்து நிமிடங்கள் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்று மேற்கொண்டு கவனிக்கவில்லை.
பிறகு, நிலவை பார்த்து கத்தினாள். இரவை கைகாட்டி ஏதோ சொன்னாள். ரயிலை பற்றி கேட்டால் கோபப்பட்டாள். கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்டாள். என்னை புகைப்படம் எடுத்தாள். என்னுடன் சேர்ந்து புகைப்படத்தில் சிரித்தாள். அவள் அப்பாவின் கைபேசியை (ஐ-போன்) அவனைவிட அதிகமாய், அவனைவிட அழகாய் உபயோகித்தாள்.
பிஸ்கட் வேண்டாமென்று சொல்லிவிட்டாள். அவள் அப்பாவிற்கு ஒன்று குடுத்தேன். அவன் போன் பேசுகையில் அவனுக்கு தெரியாமல் அதை தொட்டு நக்கிப் பார்த்தாள். சாக்லட் பூசிய பிஸ்கட் என தெரிந்தவுடன் அவளுக்கும் ஒன்று வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பிட்டாள். என் பெயரை நியாபகமாய் சொன்னாள்.
நான் மிகவும் ரசித்த ரயில் பயணம் இது. புத்தகங்களோடு கழியும் பயணங்களை குற்றம் சொல்லவில்லை. ஆனாலும், நம்மோடு கலந்து உரையாடும் ஒரு குழந்தைக்கு எந்த புத்தகமும் இணையாகாது.
சில நேரங்களில் என்ன சொல்ல வருகிறாள் என்று எனக்கு புரியவில்லை. இன்னும் கற்க வேண்டும். தேவைப்படுகிறது.
அன்புள்ள டாக்டர்,
உங்களது இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இணைப்பு:http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html
வருகை தருக!
நன்றி!
அன்புள்ள அம்மா,
பகிர்வுக்கு நன்றி. சில நாட்களாய் மடிக்கணினி இல்லாத காரணத்தால் சரியாக பதில் சொல்ல இயலவில்லை. கணினி கிடைத்தவுடன் வலைச்சரத்தில் வந்து பங்கேற்கிறேன்.
Regards, Rajanna. connected via phone. Excuse spelling errors.